தமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, மேலும், ஏழு நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தில், மருத்துவக்கட்டணமாக தலா, ஒரு ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்நிதி நீண்டநாட்களாக பயன்படாமல் வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளுக்கு முன், நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. தமிழகம் முழுவதும், 10 வாகனங்களில், தலா ஒரு உளவியல் ஆலோசகர் நியமிக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, படிக்கும் மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, மூன்றுமாவட்டங்களுக்கு, ஒரு ஆலோசனை வாகனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், மேலும் ஏழு வாகனங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இரண்டு மாவட்டங்களுக்கு, ஒரு நடமாடும் ஆலோசனை வாகனம் என்ற நிலை மாறும். இதன் மூலம், இன்னும் கூடுதலாக மாணவ, மாணவியருக்கு ஆலோசனை வழங்கும் நிலை உருவாகியுள்ளது.