அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வக கூடம், கழிப்பிடம், குடிநீர் தேக்க தொட்டி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட கட்டுமான பணிகளை ெதாடங்காமல் பொதுப்பணித்துறை இழுத்தடித்து வந்ததால், மத்திய அரசின் ரூ.100 கோடி நிதியை பெற முடியாமல் போன தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அனைவருக்கும் மேல்நிலைக்கல்வி கிடைப்பதை எளிதாக்கவும், கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிதியுதவியின் மூலம் ரூ.295.54 கோடி செலவில், 344 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்ட கடந்த 2011ல் முடிவு செய்யப்பட்டது.
இதில், 1,335 வகுப்பறைகள், 184 ஆய்வக கூடம், 603 கழிப்பறைகள், 99 குடிநீர் தேக்க தொட்டி, பள்ளிகளை சுற்றி 50 ஆயிரத்து 110 மீட்டர் சுற்றுப்புற சுவர் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறையின் மூலம் மேற்கொள்ள தீர்மானித்தது. பொதுவாக, மத்திய அரசு நிதியை பெறுவதற்கு முன்னர் மாநில அரசு தனது சொந்த நிதியின் மூலம் அதற்கான பணிகளை முடித்து விட்டு நிதியை பெற்றுக்கொள்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த திட்டத்திற்கு அரசு தரப்பில் கடந்த 2012ல் தான் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.இதைதொடர்ந்து உடனடியாக இப்பணிக்கு டெண்டர் விட்டு கட்டுமான பணிகளை 30 நாட்களுக்குள் பொதுப்பணித்துறை தொடங்கி இருக்க வேண்டும்.
ஆனால், தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்த நிலையிலும், திட்ட அறிக்கை தயாரிப்பதிலும் தாமதம் காட்டியதன் விளைவாக 7 மாதங்களுக்கு பிறகே பொதுப்பணித்துறை டெண்டர் விட்டு கட்டுமான பணிகளை தொடங்கியது. இந்நிலையில், கடந்தாண்டு 126 பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்களுக்கான பணிகள் முடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து மத்திய அரசு தேசிய இடைநிலை கல்வி திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.195 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியது.
தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக திருப்பூர் மாவட்டத்தில் 6 பள்ளிகள், கடலூர் 13, பெரம்பலூர் 7, நாமக்கல் 6, சேலம் 9, தர்மபுரி 20, விருதுநகர் 15, புதுக்கோட்டை 17, திண்டுக்கல் 10, கரூர் 9 உட்பட 118 பள்ளிகளின் மேம்பாட்டு பணிகளுக்கு பொதுப்பணித்துறை தரப்பில் கடந்தாண்டு டெண்டர் விடப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
தற்போது இத்திட்டப்படி குறிப்பிட்ட காலத்துக்குள் நிதியை பெற தவறியதால் அந்த நிதியாண்டு முடிந்தது எனக்கூறி மத்திய அரசு ரூ.100 கோடி நிதியை தர மறுத்து விட்டது. இதனால், தற்போது பள்ளிகளின் மேம்பாட்டு பணிகளுக்காக தமிழக அரசு தனது சொந்த நிதியின் மூலம் பணிகளை மேற்கொண்டு வருவதால் அரசுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.