இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, October 20, 2015

"வினா வங்கிகளுக்கு பதிலாக புத்தகங்களைப் படிக்க வேண்டும்'


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினா வங்கிகளுக்குப் பதிலாக புத்தகங்களை முழுமையாகப் படிக்குமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் வாயிலாக பள்ளிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:- மாணவர்கள், புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படித்து புரிந்து தேர்வுகளுக்கு தயார் செய்வதற்குப் பதிலாக, ஏற்கெனவே கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெற்றுவிடலாம் என்ற தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. அதனால், வினாத்தாள் கட்டமைப்புக்கு உட்பட்டு புத்தகத்தில் உள்ள பகுதிகள் தொடர்பாக வினாக்கள் வரும்போது மாணவர்கள் மத்தியில் அச்சம் ஏற்படுகிறது.

இதனை களையும் பொருட்டு, அனைத்து வினாக்களுக்கும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக புத்தகத்தில் உள்ள கருத்துகளை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கையை அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிப்பதோடு, அதற்கு ஆதாரமாக பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் கையெழுத்தையும் தலைமையாசிரியர்கள் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வு புதிய பாடத்திட்டம் வெளியீடு


ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை உயர் பதவிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., சார்பில், மூன்று கட்ட 'சிவில் சர்வீசஸ்' தேர்வு நடத்தப்படுகிறது. ஆகஸ்டில் நடந்த முதல்நிலை தகுதித் தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியாகின. இதில், 4.60 லட்சம் பேர் எழுதியதில், தமிழகத்தை சேர்ந்த, 500 பேர் உட்பட, 15 ஆயிரம் பேர், முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு டிச., 8ல் தேர்வு நடக்கிறது. தேர்வு அட்டவணை, அடுத்த வாரம் வெளியாகலாம். தேர்வுக்கான பாடத்திட்டம், தற்போது வெளியாகி உள்ளது.

மொத்தம், ஒன்பது தாள்களுக்கு, 2,625 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கிறது. மாநில மொழி, ஆங்கிலம் என, இரண்டு தாள்களில், ஒவ்வொரு தாளுக்கும் தலா, 300 மதிப்பெண் வழங்கப்படும். இதில், குறைந்தது, 25 சதவீத மதிப்பெண் கட்டாயம். மாநில மொழியில் தமிழ் உட்பட, 13 மொழிகள் பட்டியல் இடப்பட்டுள்ளன. மற்ற ஏழு தாள்களில், கட்டுரை, பொதுப் பாடம், 4 தாள்கள்; தேர்வுப் பாடங்கள் இரண்டு, தலா 250 மதிப்பெண்களுக்கு எழுத வேண்டும்.

இதுதவிர பெர்சனாலிட்டி தேர்வுக்கு, தனியாக, 275 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. மேலும், இரண்டு சிறப்புப் பாடங்கள் எழுத வேண்டும்; அதற்கு, 26 பாடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய வரலாறு, கலாசாரம், சர்வதேச மற்றும் சமூக வரலாறு மற்றும் புவியியல் ஆகியவை முதல் பொதுப்பாடம்; நிர்வாகம், அரசியல் அமைப்பு, சமூக நீதி மற்றும் சர்வதேச தொடர்புகள் இரண்டாவது பொதுப் பாடம். தொழில்நுட்பம், பொருளாதார வளர்ச்சி, உயிரி தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை, 3வது பாடம்; மனித ஒழுக்கம், அரசியல் எண்ணங்கள், சமூக ஒற்றுமை, வாழ்வியல் நெறிகள் போன்றவை நான்காவது பாடமாகவும் வெளியிடப்பட்டு உள்ளது. பாடத்திட்டத்தை, http://www.upsc.gov.in/exams/notifications/2015/CSP_2015/CSP_2015_eng.pdf என்ற இணையதள இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்

குரூப் 2ஏ தேர்வு தேதி மாற்றம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 27ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 2 தேர்வு, ஜனவரி மாதம் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) ஆண்டுக்கு இருமுறை ஜூன், டிசம்பர் மாதங்களில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

வரும் டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு அறிவிப்பை, கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. தேர்வானது டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வை தமிழகம் உள்பட நாடு முழுவதும் இருந்து 7 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆண்டுக்கு ஆண்டு எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த வாரம் வெளியிட்டது. அதில், இந்தத் தேர்வு டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு இளநிலை பட்டப் படிப்பு குறைந்தபட்ச கல்வித் தகுதியாகும்.
முதுநிலை பட்டப் படிப்பை முடித்து நெட் தேர்வை எழுதுபவர்களில் பலரும், அரசுப் பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப்-1, குரூப்-2 தேர்வுகளையும் எழுதுவது வழக்கம். ஆனால், இம்முறை நெட் தேர்வும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வும் ஒரே நாளில் வந்ததால், இரண்டு தேர்வில் எதை எழுதுவது என்ற குழப்பம் இளைஞர்களிடையே ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து டிசம்பர் 27ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த குரூப் 2 தேர்வு, ஜனவரி மாதம் 24ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 19, 2015

வங்கிகளுக்கு புதன், வியாழன் மட்டுமே விடுமுறை


சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கி,இந்தியன் வங்கி உள்பட அனைத்து வங்கிகளுக்கும் புதன்கிழமை (அக்.21), வியாழக்கிழமை (அக்.22) ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே விடுமுறை என வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை (அக். 23) அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும். அரசு தலைமை ஹாஜியின் தகவலைத் தொடர்ந்து மொஹரம் தினத்தின் விடுமுறையை வெள்ளிக்கிழமையிலிருந்து (அக்.23) சனிக்கிழமைக்கு (அக்.24) மாற்றி தமிழக அரசு திங்கள்கிழமை ஆணை பிறப்பித்துள்ளது.

இதையடுத்து வங்கிகள் அனைத்தும் வரும் வெள்ளிக்கிழமை (அக்.23) செயல்படும் என உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். வரும் சனிக்கிழமை (அக்.24) 4-ஆவது சனிக்கிழமை என்பதால், அன்றைய தினம் வங்கிகள் அனைத்துக்கும் விடுமுறை நாளாகும்.

மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு உறுதிமொழி: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு


அனைத்துப் பள்ளிகளிலும் வழிபாட்டுக் கூட்டத்தில் வாரத்தில் ஒரு நாள் சாலை பாதுகாப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி, இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் சாலை விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

சாலை பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினால், அவர்கள் பெற்றோர், உறவினர் மட்டுமில்லாது சமூகத்திலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். இதற்காக பள்ளிகளில் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த பள்ளிக் கல்வித் துறை விரும்புகிறது. அனைத்துப் பள்ளிகளிலும் வாரத்தில் ஒருநாள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் இந்த உறுதிமொழி எடுப்பதை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் ஆவன செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "நான் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவேன்.

ஓட்டுநர் உரிமம் பெற்ற பிறகே வாகனம் ஓட்டுவேன். எனது பெற்றோரும், ஓட்டுநர்களும் சீட் பெல்ட், ஹெல்மெட் அணிய வேண்டும் என வலியுறுத்துவேன். பேருந்தின் படிக்கட்டில் பயணிக்க மாட்டேன்' உள்ளிட்ட சாலைப் பாதுகாப்பு உறுதிமொழிகள் மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்களுக்குஓவிய போட்டி


அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:நீர் வளத்தை பாதுகாத்தல், நதிகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி நடத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் மாசுபடுதல், அதன் அபாயங்கள், தடுத்தல் மற்றும் புனித நதி போன்ற தலைப்புகளில் நடத்தப்படும் போட்டியில், தேசிய அளவில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, அரசு, அரசு உதவி பெறும்மற்றும் தனியார் பள்ளிகளில், 6, 7 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு,ஓவியப் போட்டிகளை, 25ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு சம்பளம் 'கட்

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 8ம் தேதி, வேலைநிறுத்த போராட்டம் நடந்தது; 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்; 50 ஆயிரம் பள்ளிகளில், வகுப்புகள் நடக்கவில்லை.போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், விடுப்பு எடுத்தனர். சில ஆசிரியர்கள், அனுமதி பெற்று போராட்டத்தில் பங்கேற்றனர். பெரும்பாலானோர் விடுப்பு கடிதமும் அளிக்காமல், பள்ளிக்கும் செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்.இதில், விடுப்பு கடிதம் கொடுக்காத ஆசிரியர்களுக்கு மட்டும், ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்ய, கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

Painting competition

Click below

https://app.box.com/s/i7i856kgrqnlgbzx4cac8217v4wzggec

Sunday, October 18, 2015

பட்டதாரி ஆசிரியர்களுக்கு 26, 27- இல் இடமாறுதல் கலந்தாய்வு


பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. 3 ஆயிரத்துக்கும் அதிகமான உபரி ஆசிரியர்கள் இருந்ததால், அவர்களை பணி நிரவல் செய்த பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. பணி நிரவல் முடிக்கப்பட்டுள்ளதால், காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடத்த பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்குள் இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 26-ஆம் தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கான கலந்தாய்வு 27-ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளது.

மேலும், உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2-இல் உள்ளவர்களுக்கும் இந்த நாள்களில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. 30-இல் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு: இதேபோல், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பட்டதாரி ஆசிரியர்களாகப் பதவி உயர்வு செய்வதற்கான ஆன்-லைன் கலந்தாய்வு அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. புதிதாகவும் விண்ணப்பிக்கலாம்: இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பணியிட மாறுதல் கலந்தாய்வும், பதவி உயர்வு கலந்தாய்வும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மனமொத்த மாறுதல் கோரும் தகுதியுள்ள ஆசிரியர்களுக்கு மேற்கண்ட நாள்களிலேயே இடமாறுதல் வழங்க வேண்டும். பணியிடமாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன. புதிதாக விண்ணப்பித்தாலும், கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு சரி செய்ய அரசு திட்டம்


போராட்டம் எதிரொலியாக, ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பது உட்பட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான, 'ஜாக்டோ' சமீபத்தில் நடத்திய, ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம், தமிழக அரசுக்கு கடும் நெருக்கடியானது. அதனால், ஆசிரியர்களில் ஒரு தரப்பினரை மட்டுமாவது சரிக்கட்டும் வகையில், ஆறாவது சம்பளக் கமிஷன் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும், ஏற்கும் நிலையில் அரசு இல்லை. ஆனாலும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து, முதல் கட்ட பரிசீலனை நடத்தப்பட உள்ளது.இதற்கான பட்டியலை அனுப்பும்படி, நிதித்துறையிலிருந்து, கல்வித்துறைக்கு கடிதம் வந்துள்ளது. நாங்களும் நிதித்துறைக்கு அனுப்ப கோப்புகளை தயார் செய்து வருகிறோம்; விரைவில், முடிவு தெரியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, October 17, 2015

அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆங்கிலம் பேச பயிற்சி


அரசு பள்ளி மாணவர்கள், தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேச முடியாததால், வேலைக்கான நேர்முக தேர்வில் பங்கேற்று பதில் சொல்வது, பொது இடங்களில் ஆங்கிலத்தில் பேசுவது போன்றவற்றில் பிரச்னைகளைச் சந்திக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, தமிழக பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி மற்றும் உச்சரிப்பு பயிற்சி போன்றவை, பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக தரப்படுகின்றன. அடுத்த கட்டமாக, பெங்களூரில் உள்ள தென்னிந்திய ஆங்கில பயிற்சி மண்டல மையத்தில், ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு திறன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நவ., 2 முதல் டிச., 1 வரை, ஒரு மாதம் பயிற்சி தரப்படுகிறது. 1 முதல், 5ம் வகுப்பு வரையுள்ள பள்ளிகளில் இருந்து, தமிழகம் முழுவதும், 150 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த பயிற்சிக்கு அனுப்பப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'அரசு உதவிபெறும் பள்ளி' போர்டு வைக்க உத்தரவு


அரசு உதவி பெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 5,000 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது. பல பள்ளிகள் அரசின் உதவியை பெற்றாலும், தனியார் சுயநிதி பள்ளிகள் போல, பொதுமக்களிடம் காட்டிக் கொள்கின்றன. இந்நிலையில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளின் நுழைவு வாயிலில், 'அரசு உதவிபெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு வேண்டும்' என, பா.ஜ., மாநில சட்டப்பிரிவு செயலர் சந்தர், சென்னை முதன்மை கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார்.இதை பரிசீலித்த முதன்மை கல்வி அதிகாரி அனிதா, அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளும், அரசு உதவிபெறும் பள்ளிக்கூடம் என, பள்ளி வாசலில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.

Friday, October 16, 2015

"ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு தாமதிக்காமல் பெற வேண்டும்'


ஊதியக் குழு அறிக்கையை மத்திய அரசு தாமதிக்காமல் பெற வேண்டுமென அகில இந்திய மாநில அரசுப் பணியாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலர் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினார். கடலூரில் அவர் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய அரசின் ஊதியக்குழு தனது அறிக்கையை தயாராக வைத்துள்ள நிலையில், அதனை காலதாமதமாகப் பெறுவதற்கு டிசம்பர் வரையில் மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இது ஊதிய மாற்றத்தை தள்ளிப்போடும் உள்நோக்கத்துடன் மத்திய அரசு செயல்படுவதைக் காட்டுகிறது. மாநில அரசுகளைப் பொறுத்தவரை ஊதியக் குழு அறிவிக்கும் சலுகைகளை மத்திய அரசுக்கு இணையாக வழங்குவதில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. மத்திய அரசுக்கு இணையான வீட்டுவாடகைப்படி, கல்விப்படி, போக்குவரத்துப்படி உள்ளிட்டவை வழங்கப்படுவதில்லை.

நிரந்தர ஊதிய விகிதம் பெறாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சிச் செயலர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், ஊராட்சி, கல்வித் துறை, காவல் துறை, ஆதிதிராவிடர் நலத்துறையின் துப்புரவுப் பணியாளர்கள், பட்டுவளர்ச்சித் துறை தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு காலமுறை ஊதியம் அளிக்க வேண்டும். 30 ஆண்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் முதல்கட்டமாக குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மிகைப்பணிக்கு மிகை ஊதியம், பணி விதிகள் நிர்ணயிக்க வேண்டும். பதவி உயர்வுப்பெற்ற அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் தொடர்பான பாதிப்புகள், ஊதிய மாற்றத்தில் மத்திய அரசின் போக்கு, அரசுப் பணியில் பணியாளர்களிடம் நிலவி வரும் பணிச்சூழல் தொடர்பான கருத்தரங்கம் கடலூரில் வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது. இதே போன்று சங்கத்தின் தேசிய செயற்குழு வரும் 18-ஆம் தேதி தில்லியில் கூடி அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதித்து, அடுத்தக் கட்ட போராட்டம் குறித்து அறிவிக்க உள்ளது என்றார்.

2016-ல் பி.எஃப். பணத்தை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி: கே.கே.ஜலன்

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஊழியர் வருங்கால வைப்பு நிதியை ஆன்லைன் மூலம் எடுக்கும் வசதி செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
பி.எஃப். தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற்றவுடன் 3 மணி நேரத்துக்குள் உரியவர்களுக்கு பணம் கிடைக்குமாறு இந்த ஆன்லைன் வசதி செய்யப்படவிருக்கிறது.

இது நடைமுறைக்கு வந்தவுடன் பி.எஃப். சந்தாதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பிறகு உரிய தொகை சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
இது குறித்து மத்திய வருங்கால வைப்பு நிதி ஆணையர் கே.கே.ஜலன் கூறுகையில், ஆன்லைன் பி.எப். பண எடுப்பு முறையை அனுமதிக்க மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியுள்ளோம்.

மார்ச் மாத இறுதியில் இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
பிஎஃப் பண எடுப்பு முறையை அறிமுகம் செய்வதற்காக சில அனுமதிகளை நாங்கள் கோரியுள்ளோம். இத்திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு முன்பாக தங்கள் ஆதார் விவரங்களைக் குறிப்பிடும் சந்தாதாரர்களின் விண்ணப்பங்களை மிகவிரைவில் சரிபார்க்க உறுதி அளிக்கிறோம்.
இந்தக் காலக்கட்டத்தில் ஆதார் எண்கள் உள்ள பிஎப் சந்தாதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு 3 நாட்களுக்குள் பணம் அளிக்கப்படும் என்று கூறினார்.

Thursday, October 15, 2015

540 பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பதவி உயர்வு கலந்தாய்வு


தமிழகம் முழுவதும் உள்ள 540 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான இணையவழி கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இந்தக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. ஆங்கிலம், தமிழ், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். பட்டதாரி ஆசிரியர்கள் பல இடங்களில் அதிக எண்ணிக்கையில் இருந்ததால், இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. அதற்குப் பதிலாக பணி நிரவல் கலந்தாய்வு மட்டுமே நடைபெற்றது. இப்போது, பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறுகிறது.

மாணவர்களுக்கு சான்றுகள் வழங்க பள்ளிகள் ஒருங்கிணைப்பு மையம்


மாணவர்களுக்கான சான்றுகள் வழங்க, சில பள்ளிகளை ஒருங்கிணைத்து தனி மையங்கள் அமைத்து, 'ஆன்-லைனில்' சான்றுகள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.பள்ளிகளில் 6,10, பிளஸ்2 படிக்கும் மாணவர்களுக்கு ஜாதி, இருப்பிடம், வருமான சான்றுகள் அந்தந்த பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து, தாலுகா அலுவலகங்களில் மொத்தமாக பெற்று வினியோகிக்கப்படுகிறது. இதற்காக, மாணவர்களிடம் ஆகஸ்ட், செப்டம்பரில் மனுக்கள் பெறப்பட்டு, அந்தந்த தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அங்கு வி.ஏ.ஓ.,க்கள், ஆர். ஐ.,க்கள், தாசில்தார் கையெழுத்து பெற்று, டிசம்பரில் சான்றுகள் வழங்கப்படும்.

சான்றுகள் பெற தாலுகா அலுவலகங்களுக்கு தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பலமுறை அலைய நேரிடும். இதனால் கல்விப்பணி பாதிக்கப்படும். தற்போது, வருவாய் துறையில் சான்றுகள் 'ஆன்-லைனில்' வழங்கும் நடைமுறை உள்ளது. இதனால் மாணவர்களுக்கு சான்றுகள் பெற, தலைமை ஆசிரியர்கள் தாலுகா அலுவலகத்திற்கு அலைவதை தவிர்க்க, 10 முதல் 12 ம் வகுப்பு பள்ளிகளை ஒருங்கிணைத்து ஏதாவது ஒரு பள்ளியில் பொதுமையம் அமைக்கப்படுகிறது. இப்பொது மையங்களுக்கு தனி 'பாஸ் வேர்டு, ஐ.டி.' வழங்கப்படும். இந்த பொது மையத்திற்கு உட்பட்ட பள்ளிகள், மாணவர்களுக்கான சான்று பெற மனுக்களை வழங்க வேண்டும். அவை 'ஸ்கேன்' செய்யப்பட்டு, 'ஆன்-லைன்' மூலம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்படும். 'ஆன்-லைனில்' வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மனுவை பரிசீலித்து, தகுதியானவர்களுக்கு தாசில்தார் டிஜிட்டல் கையெழுத்துடன் சான்று வழங்க பரிந்துரை செய்வார். தாசில்தார் வழங்கும் 3 வகையான சான்றுகளை அந்தந்த பள்ளியிலேயே 'பிரின்ட் -அவுட்' ஆக சான்றுகளை பெற்று கொள்ளலாம். இப் புதிய நடைமுறை யால் தலைமை ஆசிரியர்களுக்கு அலைச்சல் குறையும். சிரமமின்றி பள்ளி மாணவர்கள் சான்றுகள் பெற முடியும்.

ஆசிரியர் போராட்டத்தால்அகவிலைப்படி தாமதம்


அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தாமதம் ஆவதால், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. கடந்த மாதம், 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.

இந்த உயர்வு, ஜூலை மாதம் முதலே கணக்கிட்டு வழங்கப்படும். பொதுவாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படியை உயர்த்தியதும், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும். ஆனால், ஒரு மாதமாகியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து, தலைமைச் செயலக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அகவிலைப்படியை உயர்த்துவதற்கான கோப்பில், முதல்வர் கையெழுத்து போட்டு விட்டார். அறிவிப்பு வெளியாக இருந்தபோது, ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்; எனவே, அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது; முதல்வரிடம் இருந்து, உத்தரவு வந்தபிறகே, அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு அவர் கூறினார்