இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, September 09, 2015

இரண்டாம் பருவத்துக்கான புத்தகங்கள்: செப். 14 முதல் பள்ளிகளுக்கு விநியோகம்


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான இரண்டாம் பருவ புத்தகங்கள் வருகிற 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவம் என்றும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாம் பருவம் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முதல் பருவம் செப்டம்பர் மாதத்தோடு நிறைவடையும் நிலையில், இரண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை அச்சடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இரண்டாம் பருவத்துக்கு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மொத்தம் 2.15 கோடி புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான 1.33 கோடி புத்தகங்கள் மாநிலம் முழுவதும் உள்ள 67 மையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் செப்டம்பர் 14 முதல் 19-ஆம் தேதி வரை அரசுப் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன.

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கும்போது முதல் நாளிலேயே மாணவர்களுக்கு இந்தப் புத்தகங்கள் விநியோகம் செய்யப்படும். அத்துடன், இரண்டாம் பருவத்துக்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச நோட்டுப் புத்தகங்களும் செப்டம்பர் 14-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தனியார் பள்ளி மாணவர்கள்:

தனியார் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 82 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

மாணவர் சேர்க்கை: திண்டாடும் சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள்

பி.எட்., எம்.எட். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பது, மாணவர் சேர்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் 30 முதல் 40 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின் படி, பி.எட்., எம்.எட். ஆகிய ஆசிரியர் கல்வியியல் படிப்புகளின் படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதலை எதிர்த்து தமிழக சுயநிதி கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், படிப்பு காலம் ஓராண்டாக இருக்குமா அல்லது இரண்டு ஆண்டுகளாக இருக்குமா என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதனால், பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கை தாமதமாகி வந்தது. இந்த நிலையில், தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், 2015-16-ஆம் கல்வியாண்டு முதல், இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான பாடத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி அளித்தது. அதோடு, நிலுவையில் உள்ள வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவையும் பின்பற்ற வேண்டும் எனவும் அதில் தமிழக அரசு தெரிவித்தது.

மேலும், வழக்கு நிலுவையில் உள்ளபோதும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான நடவடிக்கைகளை தொடங்க அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து இரண்டு ஆண்டு பி.எட். படிப்புக்கான முதலாமாண்டு பாடத் திட்டத்தை தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் வெளியிட்டது. அதோடு, பி.எட்., எம்.எட். படிப்புகள் நிகழாண்டில் 2 ஆண்டுகள்தான் என அரசு கல்லூரிகளுக்கும், சுயநிதி கல்லூரிகளுக்கும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, பி.எட். படிப்பு காலம் நிகழாண்டில் 2 ஆண்டுகள் என்பது உறுதியாகியுள்ளது. இந்தக் குழப்பம் காரணமாக நிகழாண்டில் மாணவர் சேர்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு சுயநிதி கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்க நிர்வாகி நடராஜன் கூறியது:

பி.எட். படிப்பு காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டிருப்பது மாணவர் சேர்க்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாடு முழுவதும் 30 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பியிருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, பிற மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர் என்றார். இடங்களை ஒப்படைக்க முன் வந்த 5 கல்லூரிகள்: சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் ஒரு மாதத்துக்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கையைத் தொடங்கி விட்டன. படிப்பு காலம் தொடர்பான குழப்பம் காரணமாக நிகழாண்டில் மாணவர்களிடையே வரவேற்பு வெகுவாகக் குறைந்துள்ளது. இதன்காரணமாக, 5 சுயநிதி கல்லூரிகள் அரசு சார்பில் நடத்தப்படும் ஒற்றைச் சாளர கலந்தாய்வில் தங்களுடைய நிர்வாக பி.எட்.

இடங்களை ஒப்படைக்க கடிதம் அனுப்பியுள்ளன.ஆனால், இந்த இடங்களை கலந்தாய்வில் சேர்க்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து கலந்தாய்வு அதிகாரிகள் கூறியது: கடந்த ஆண்டு பல்கலைக்கழகம் சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது பல்கலைக்கழகம் தனது அதிகாரத்தின் மூலம் தன்னிச்சையாக முடிவெடுத்து, சுயநிதி கல்லூரிகளின் எம்.எட். இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்தியது. ஆனால், இப்போது அரசு கல்லூரி சார்பில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தன்னிச்சையான முடிவு எதையும் எடுக்க முடியாது. இதற்கென அரசு ஆணை பிறப்பித்து அனுமதி அளித்தால் மட்டுமே, சுயநிதி கல்லூரிகளின் பி.எட். இடங்களை கலந்தாய்வில் சேர்த்துக்கொள்ள முடியும் என்றனர்.

11,000 மாணவர்களுக்கு அறிவியல் விருது மத்திய அரசு ரூ.2.40 கோடி ஒதுக்கீடு

நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், 11 ஆயிரம் மாணவர்களுக்கு அறிவியல் விருது வழங்க, மத்திய அரசு, 2.40 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில், அறிவியல் கண்காட்சி போட்டிகள் நடத்தி, 'இன்ஸ்பயர்' விருது வழங்கப்படுகிறது.மாவட்ட விருதுக்கு, 2,000 ரூபாய்;

மாநில விருதுக்கு, 2,500 ரூபாய் மற்றும் சான்றிதம் வழங்கப்படும். மாநில அளவில் தேர்வு பெறுவோர், தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுவர். இந்த விருதையும், அதற்கான நிதியையும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்குகிறது.நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்திற்கு, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், 2.40 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இந்த நிதியில், 11 ஆயிரம் பேருக்கு விருதுகள் வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.'இன்ஸ்பயர்' விருதுகள் வழங்குவது தொடர்பாக, பரிந்துரை செய்யப்படும் பள்ளிகளின் பட்டியலை, வரும், 15ம் தேதி வரை, 'ஆன் - லைனில்' அனுப்பலாம் என, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் விவரங்களை, inspirea wards-dst.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

சத்துணவு மாணவர்கள் கணக்கெடுப்பு துவக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியர் குறித்த கணக்கெடுப்பு துவங்கி உள்ளது.இதுதொடர்பாக சத்துணவு துறை அதி காரிகள் கூறியதாவது: ரூ.2 கோடிதமிழகத்தில், 43 ஆயிரம் பள்ளிகளில், சத்துணவு கூடங்கள் உள்ளன. கடந்த கல்வி ஆண்டில், 5.40 லட்சம் மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிட்டனர். சத்துணவுக்காக மாதம்தோறும், 2 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இச்செலவை கட்டுப் படுத்தவும், உணவு வீணாகாமல் தடுக்கவும், சத்துணவு சாப்பிடும் மாணவ, மாணவியரின் குறித்த கணக்கெடுப்பு, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் நடக்கும். இதன் மூலம், இடைநிறுத்தம், புதிய மாணவர் சேர்க்கை போன்ற விவரங்கள் சேகரிக்கப்படும்.

பள்ளி கல்வித்துறை மூலம் நடத்தப்படும், இந்த கணக்கெடுப்பு சத்துணவுத்துறைக்கு அனுப்பப்படுகிறது. கட்டுப்படுத்தப்படும்அதன் அடிப்படை யில், சத்துணவு செலவு கட்டுப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். முட்டை முதல் பிரியாணி வரை சத்துணவில் முதல் மற்றும், மூன்றாவது வாரத்தில், திங்கள் - வெஜ் பிரியாணி, முட்டை; செவ்வாய் - கொண்டக்கடலை புலாவ், முட்டை; புதன் - தக்காளி சாதம், முட்டை; வியாழன் - சாம்பார் சாதம், முட்டை; வெள்ளி - கருவேப்பிலை அல்லது கீரை சாதம், முட்டை. இரண்டாவது மற்றும், நான்காவது வாரத்தில் பிசிபேளாபாத், மசாலா முட்டை; மீல் மேக்கர், முட்டை; புளி சாதம், தக்காளி முட்டை; எலுமிச்சை சாதம், முட்டை; சாம்பார் சாதம் உருளைக்கிழங்கு வறுவல், முட்டை வழங்கப்படுகிறது.

Central govt anounce DA 6%

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 6 சதவீத உயர்வுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

கடந்த ஏப்ரலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி முதல் கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 119 சதவீதமாக அதாவது 6 சதவீதம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன்மூலம் 48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் 55 லட்சம் ஓய்வூதியர்களும் பலன் அடைவார்கள்.

Tuesday, September 08, 2015

தமிழக அஞ்சல் துறையில் பணி வாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் உள்ள அஞ்சலக கோட்டம் மற்றும் அஞ்சலக பிரிப்பக கோட்டங்களில் நிரப்பப்பட உள்ள 143 தபால்காரர், மெயில்கார்டு பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தபால்காரர் - 143
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: மெயில்கார்டு: 01
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
வயதுவரம்பு: 04.10.2015 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.09.2015
மேலும், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.dopchennai.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தமிழகத்திலும் பி.எட். படிப்புக்கு இரண்டு ஆண்டுகள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழகத்திலும் பி.எட், எம்.எட். ஆசிரியர் கல்விப் படிப்புகளின் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகள் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இதில் பி.எட். படிப்புக்கு இந்தக் கல்வியாண்டு (2015-16) மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி 6 நாள்கள் நடத்தப்பட உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய (2014) வழிகாட்டுதல்படி, பி.எட், எம்.எட். படிப்புகளின் படிப்புக் காலம் இந்தக் கல்வியாண்டு (2015-16) முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. இதை, பிற மாநிலங்கள் அனைத்தும் ஏற்று நடைமுறைப்படுத்திய நிலையில், தமிழகம் மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. தமிழகத்திலுள்ள சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரி நிர்வாகிகள் சங்கம் இந்தப் புதிய வழிகாட்டுதலை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் நிகழாண்டில் பி.எட். படிப்புக் காலம் ஓராண்டா, இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் நீடித்து வந்தது. மேலும், இந்தப் படிப்பில் நிகழாண்டு மாணவர் சேர்க்கையும் தாமதமாகி வந்தது.

இதனிடையே, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் வெளியிட்டது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோதும், மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டது. இந்த நிலையில், பி.எட், எம்.எட். படிப்புக் காலம் நிகழாண்டில் தமிழகத்திலும் இரண்டு ஆண்டுகள்தான் என்பதை தமிழக அரசு இறுதி செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதுகுறித்து விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வரும், பி.எட். மாணவர் சேர்க்கை செயலருமான ஆர்.பாரதி கூறியது: என்.சி.டி.இ. வழிகாட்டுதலின் படி, தமிழகத்திலும் நிகழாண்டு முதல் பி.எட். படிப்புக் காலத்தை இரண்டு ஆண்டுகளாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து, உத்தரவிட்டுள்ளது.

எனவே, நிகழாண்டில் பி.எட், எம்.எட். படிப்புகளில் சேரும் மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் படித்தாக வேண்டும். மேலும், பி.எட். படிப்புக்கான கலந்தாய்வு வரும் 28-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதல் நாளில் காலையில் மாற்றுத் திறனாளிகளுக்கும், மதியம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். செப்டம்பர் 29-ஆம் தேதி கணிதப் பாடப் பிரிவினருக்கும், 30-ஆம் தேதி இயற்பியல், வேதியியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். அக்டோபர் 1-ஆம் தேதி தாவரவியல், விலங்கியல் பிரிவினருக்கும், 3-ஆம் தேதி தமிழ், ஆங்கிலப் பாடப் பிரிவினருக்கும், 5-ஆம் தேதி காலையில் வரலாறு, புவியியல் வணிகவியல் பிரிவினருக்கும், மதியத்தில் பொருளாதாரம், மனை அறிவியல் பிரிவினருக்கும் கலந்தாய்வு நடத்தப்படும். இதுதொடர்பான அறிவிப்பு கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றார்.

தமிழகத்தில் அன்னிய முதலீடு 3.8% அதிகரிப்பு

தமிழகத்தில் கடந்த 2009-10-ஆம் ஆண்டைக் காட்டிலும், இப்போது அன்னிய நேரடி முதலீடுகளின் அளவுகள் அதிகரித்திருப்பதாக தொழில் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக, ஒரு சதவீதத்துக்கும் குறைவாக இருந்த முதலீடுகளின் அளவு படிப்படியாக உயர்ந்து இப்போது 3.8 சதவீதம் என்ற நல்லதொரு நிலையை எட்டியிருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமாக, இந்த அன்னிய நேரடி முதலீட்டின் அளவு மேலும் உயரும் என அவர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். தமிழகத்தில் முதலீடுகளின் அளவுகள் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் அதிகரிக்கத் தொடங்கின. "ஃபோர்டு', "நிசான்', "செயின்ட் கோபைன்' எனப் பல்வேறு நிறுவனங்கள் தங்களது புதிய-விரிவுபடுத்தப்பட்ட ஆலைகளைத் துவக்கின.

2006-ஆம் ஆண்டு முதல் குறிப்பாக 2009-10-ஆம் ஆண்டு காலகட்டங்களில் முதலீடுகளின் அளவு, குறிப்பாக அன்னிய நேரடி முதலீடுகளின் அளவு வெகுவாகக் குறைந்தன. குறிப்பாக 2009-10 ஆம் நிதியாண்டில் 0.8 சதவீதமாக இருந்தது. இது கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, 2012-13-ஆம் நிதியாண்டில், 1.4 சதவீதமாக இருந்த முதலீட்டின் அளவு அடுத்தடுத்த நிதியாண்டுகளில் உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் (2014-15) முதலீடுகள் 3.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை பல்வேறு தொழில் துறையைச் சேர்ந்த பல்வேறு முக்கிய பிரமுகர்கள் தெரிவித்தனர். ஹூண்டாய் மோட்டார் துணைத் தலைவர் பி.சி.தத்தா:

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளன. அந்தக் கார்களுக்கு பல்வேறு மதிப்புமிக்க நாடுகளில் இருந்து விருதுகள் கிடைத்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலையில் இருந்து மட்டும் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன. கார் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைப்பதற்கு கடந்த 1995-ஆம் ஆண்டு, அப்போதைய அதிமுக ஆட்சியில் முடிவு செய்து அதற்கான பணிகளைத் தொடங்கினோம். இருங்காட்டுக் கோட்டையில் ஆலை அமைத்து கார் உற்பத்தி தொடங்கியது. இரண்டு ஆலைகள் மூலமாக, இப்போது ஆண்டுக்கு 6.30 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. காக்னிசன்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன்:

சென்னையில் காக்னிசன்ட் நிறுவனத்தைத் தொடங்க, கடந்த 1994-ல் முடிவு செய்தோம். இதற்கு மிக முக்கியக் காரணம், தமிழகத்தில் சிறப்பான கல்வியும், அதிக திறன்களைக் கொண்ட மென்பொருள் வல்லுநர்கள் இருப்பதும்தான். மேலும், மாநிலத்தில் அப்போது முதலீட்டுக்கு ஏற்ற சூழலும், தமிழக அரசின் பல்வேறு பிரிவுகளில் இருந்து கிடைத்த அளப்பரிய ஆதரவும் எங்களை பெரிதும் ஈர்த்தது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் நிறுவனங்களைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். மாநிலத்தில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடியாக வேலைவாய்ப்புகளை அளித்து வருகிறோம். எச்.எல்.எல். ஃலைப் கேர் இயக்குநர் பாபு தாமஸ்: சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதால், மருத்துவத் துறை சார்ந்த தயாரிப்புகளை உற்பத்தி செய்ய தமிழகத்தை குறிப்பாக சென்னையைத் தேர்ந்தெடுத்தோம்.

இங்கு துறைமுகம், சாலை உள்கட்டமைப்பு, மிகச்சிறந்த-தேர்ந்த மனித வளங்கள், திறன்மிக்க பணியாளர்கள் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. இந்த மருத்துவத் துறை சார்ந்த பூங்காவை செங்கல்பட்டு அருகே 330 ஏக்கரில் அமைத்துள்ளோம். இதன் மூலம், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுபோன்று, தமிழகத்தில் தொழிலுக்கு ஏற்ற சூழல்கள் குறித்து பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தோரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகரிக்கும்: தமிழகத்தில் ஏற்கெனவே செய்யப்பட்ட முதலீடுகளின் மூலம் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி பெருகின. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் (செப்டம்பர் 9) மூலமாக மேலும் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக தொழில் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். மாநாட்டின் இலக்கான ரூ.1 லட்சம் கோடி முதலீடு என்பதைத் தாண்டி இப்போது ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் வரக்கூடும் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் தமிழகத்தின் தட்பவெப்ப சூழல், முதலீட்டுக்கான வாய்ப்புகள் மாநாட்டின் மூலமாக அறிந்த பிறகு மேலும் அதிகளவு முதலீடுகள் வரலாம் என்றும் தொழில் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

Monday, September 07, 2015

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது?

பட்டதாரி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என ஆசிரியர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, இடமாறுதல் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 6,402 ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் குறைவாக இருந்ததால் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. உபரியாக இருந்த பட்டதாரி ஆசிரியர்கள் 2,307 பேர் பணி நிரவல் மூலம் இடமாறுதல் செய்யப்பட்டனர்.

நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியவற்றுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 800 காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கோருகின்றனர். ஆனால், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 4, 5 மாவட்டங்களில் மட்டுமே அதிகக் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், பிற மாவட்டங்களில் ஓரிரு இடங்கள் மட்டுமே காலியாக உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பணி நிரவல் கலந்தாய்வின் போதே அனைத்து காலியிடங்களும் காட்டப்பட்டு, வெளிப்படையாக இடமாறுதல்கள் வழங்கப்பட்டன. இப்போது குறைவான காலியிடங்களே உள்ளதால், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வை இந்த ஆண்டு நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். எனினும், கலந்தாய்வு குறித்து இதுவரை இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள், சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதியில் தொடங்க உள்ளன. இந்தத் தேர்வுகளுக்கு உரிய காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், இப்போது சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:-

சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் பிளஸ் 2 தனித்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தங்களது மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் சேவை மையத்துக்கு நேரில் சென்று செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இவர்களுக்கு சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000, பதிவுக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். அதேபோல், பத்தாம் வகுப்பு தனித்தேர்வுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்களுக்கு திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, வேலூர், கடலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தலா 2 தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

இவர்கள் தேர்வுக் கட்டணத்துடன் சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500, பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.