பள்ளி ஆய்வக உதவியாளர் பணி: எழுத்துத்தேர்வை கணக்கில் கொள்ளாமல் பணியிடங்களை நிரப்ப உயர்நீதிமன்றம் தடை
அரசுப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணிக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளாமல் பணி நியமனம் செய்யும் நடைமுறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும், ஆய்வு உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு விரும்பினால், தற்போது இந்த உத்தரவில் பரிந்துரைத்துள்ள ஏதேனும் ஒரு முறைப்படி பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பி.சதீஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது.
அதில் ஐந்து நபருக்கு ஒருவர் என்ற விகிதத்தின் அடிப்படையிலும், நேர்காணலின்போது பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலும் பணியிடம் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கருத்தில் கொள்ளப்படாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செய்யும் முறையில் கடுமையான முரண்பாடுகள் உள்ளன. இது சட்ட உரிமைகளை மீறுவதாக உள்ளது. இந்தத் தேர்வு நடைமுறை அரசு வெளியிட்ட முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக உள்ளது.
இந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 31-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. எனவே, பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதிக்க வேண்டும். மேலும், கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரினார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-4, குரூப்-2 பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வை மட்டுமே நடத்தி பணி நியமனம் செய்கிறது. இத்தேர்வு விடைத்தாள் கணினி மூலம் மதிப்பீடு செய்யப்படுவதால் இத்தேர்வு நியாயமாகவும், வெளிப்படையாகவும் உள்ளது.
எனவே, அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் போன்ற கீழ்நிலைப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி நேரம், சக்தி போன்றவற்றை அரசு செலவிட தேவையில்லை. எனவே, அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணி நியமனத்தின்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண்களைக் கருத்தில் கொண்டு பட்டியல் தயாரிக்க வேண்டும்.
அப்போது எழுத்துத் தேர்வு மதிப்பெண் 150 உடன், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்புக்கு 10 மதிப்பெண், உயர் கல்வித் தகுதிக்கு 5 மதிப்பெண், பணி முன் அனுபவத்துக்கு 2 மதிப்பெண் என மொத்தம் 167 மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். அல்லது அதற்கு மாற்றாக நேர்முகத் தேர்வுக்கு 8 மதிப்பெண்களைச் சேர்த்து மொத்தம் 175 மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யலாம். இந்தத்தேர்வைப் பொருத்தவரை, எழுத்துத் தேர்வு மதிப்பெண்ணை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். அவ்வாறு கணக்கில் கொள்ளாத தேர்வு நடைமுறைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு விரும்பினால், தற்போது இந்த உத்தரவில் பரிந்துரைத்துள்ள ஏதேனும் ஒரு முறைப்படி பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.