இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, July 16, 2015

குரூப் 2முதன்மை தேர்வு ஹால்டிக்கெட் ஓரிரு நாளில் வெளியீடு

குரூப் 2 பதவியில் அடங்கிய 1,241 பணியிடங்களை நிரப்புவதற்கான முதன்மை எழுத்து தேர்வு வரும் 26ம் தேதி நடக்கிறது. சுமார் 6.2 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவியில் (நேர்முக தேர்வு உடையது) அடங்கிய 8 உதவி வணிக வரி அதிகாரி, சார்பதிவாளர் கிரேடு 2 (காலி பணியிடம் 23), ஜூனியர் எம்ப்ளாய்மென்ட் அதிகாரி (18), லோக்கல் பண்ட் ஆடிட் டிபார்ட்மென்ட் உதவி ஆய்வாளர் (78), இந்து சமய அறநிலையத்துறை ஆடிட்டிங் ஆய்வாளர் (28), கூட்டுறவுத்துறை சீனியர் இன்ஸ்பெக்டர் (333), வேளாண்மை துறை மார்க்கெட்டிங் ஜூனியர் கண்காணிப்பாளர் (72), வருவாய் உதவியாளர் (618) உள்ளிட்ட 18 வகையான பதவிகளில் அடங்கிய 1,241 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 30ம் தேதி வெளியிட்டது. அன்றைய தினமே தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது.

இதற்காக, விண்ணப்பிக்க மே 29ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தேர்வுக்கு போட்டிப்போட்டு பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரத்து 292 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு வரும் 26ம் தேதி நடக்கிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 114 மையங்களில் இந்த எழுத்து தேர்வு நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவு (டிகிரி தரம்) 150 மதிப்ெபண்ணும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலத்தில் 150 மதிப்பெண்ணுக்கும் வினாக்கள் கேட்கப்படும்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்படும். இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்னும் ஓரிரு நாட்களில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

பி.எட் சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு

நிகழ் கல்வியாண்டுக்கான ( 2015-16) பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயன்பாட்டு வேதியியல் (அப்ளைடு கெமிஸ்ட்ரி) துறையில் இளநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக இணையதளத்தில் இந்த நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன.

கணிதம், பயன்பாட்டு கணிதம், இயற்பியல், பயன்பாட்டு இயற்பியல், புவி இயற்பியல், உயரி இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், பயன்பாட்டு வேதியியல், தாவரவியல், விலங்கியல், உயிரித் தொழில்நுட்பம், தாவர உயிரியல், தாவர உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் அறிவியல், நுண் உயிரியல், வரலாறு, புவியியல், பயன்பாட்டு புவியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேஷன்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளநிலை பட்டங்களை முடித்தவர்கள் பி.எட். படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். ஓ.சி. பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணும், பி.சி, பி.சி.எம். பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீதமும், எம்.பி.சி. பிரிவினர் 43 சதவீதமும், எஸ்.சி, எஸ்.டி, எஸ்சிஏ பிரிவினர் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருப்பது அவசியம்.

பொருளாதாரம், வணிகவியல், மனை அறிவியல், அரசியல் அறிவியல், சமூகவியல், உளவியல், தத்துவவியல், இந்திய கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப் படிப்பு முடித்தவர்களும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். இதுவரை ஓராண்டாக இருந்துவந்த பி.எட். படிப்புக் காலம், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் (என்.சி.டி.இ.) வழிகாட்டுதலின்படி இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் நியமனத்தில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தகுதி தேர்வில் தேர்வு பெற்றோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அரசு பள்ளிகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட்டனர்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறனாளிகளை நியமிப்பதில்லை என, புகார் எழுந்தது. இதையடுத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதி்தேர்வில் தேர்வு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பணியிடம் ஒப்புதல் கிடைக்கும் வரை காலியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாற்றுத்திறனாளி ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

6.15 இலட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

நடப்பு கல்வியாண்டில், 6.15 லட்சம் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா, துவக்கி வைத்தார்.தமிழகத்தில், 2005 - 06 முதல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 11ம் வகுப்பு படிக்கும், அனைத்து பிரிவு மாணவ, மாணவியருக்கும், இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில், 223.17 கோடி ரூபாய் செலவில், 11ம் வகுப்பு படிக்கும், 2.73 லட்சம் மாணவர், 3.41 லட்சம் மாணவியர் என, மொத்தம், 6.15 லட்சம் பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா, தலைமைச் செயலகத்தில் நேற்று துவக்கி வைத்து, ஐந்து மாணவருக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சுப்ரமணியன், வீரமணி, அப்துல் ரஹீம் மற்றும் அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவர் மூலம் நோய் விழிப்புணர்வு

பள்ளி மாணவர் உதவியுடன், தொற்று நோய் குறித்து, மக்கள் இடையே, விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க, பள்ளி மாணவர்கள் மூலம், அவர்களின் பெற்றோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, உள்ளாட்சி அமைப்புகள், நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இதற்காக, சுகாதார உறுதிமொழி விண்ணப்பப் படிவம் தயார் செய்யப்பட்டு உள்ளது. இதை மாணவர்களிடம் வழங்கி, அவர்களின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரும்படி வலியுறுத்தப்படுகிறது.இதன் மூலம், அப்படிவத்தில் உள்ள கருத்துகளை, மாணவர்களும், பெற்றோரும் அறிந்து கொள்வர். அவர்களும் சுகாதார நடவடிக்கையில் ஈடுபடுவர் என, உள்ளாட்சி அதிகாரிகள் நம்புகின்றனர்.எனவே, தமிழகம் முழுவதும், இப்பணியை மேற்கொள்ள, உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

NMMS exam results 2014

Click below

http://doozystudy.blogspot.in/2015/07/nmms-2014-exam-results.html

Wednesday, July 15, 2015

பாடநூல் கல்வியியல் செயலாளராக திரு.கார்மேகம் பொறுப்பேற்பு

தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக எஸ்.கார்மேகம் புதன்கிழமை பொறுப்பேற்றார். பள்ளிக் கல்வி (இடைநிலை) இணை இயக்குநராக இருந்த அவர், இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநர் அளவிலான தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநர், மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குநர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளையும் அவர் முன்னதாக வகித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்காக புதிய இணையதளம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் புதிய இணையதளம் (www.kovaischools.net) தொடங்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசுப் பள்ளிகள், மாணவர்கள், ஆசிரியர்களின் விவரங்கள், மாணவர்கள் - ஆசிரியர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய இணையதளம் (https:tnschools.gov.in) செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளின் விவரங்கள், மின்னஞ்சல் முகவரி, கல்வி அதிகாரிகளின் விவரங்கள் அடங்கிய புதிய இணையதளத்தை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை வடிவமைத்துள்ளது. இந்த இணையதளத்தை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் புதன்கிழமை தொடக்கிவைத்தார். இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் என்.அருள்முருகன் கூறியதாவது: கோவை, பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்குத் தேவையான கையேடுகள், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான மாதிரி விடைத் தாள்கள், பாடத் திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்படும்.

மேலும் ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகளுக்குத் தேவையான விவரங்கள், பணி வரன்முறை விவரங்கள், தேவையான விண்ணப்பப் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேவைப்படும் படிவங்களை அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல, கல்லூரிக் கல்வி பயில விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான வழிகாட்டி விவரங்கள், கோவை மாவட்டத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தகவல்கள், கல்வியுடன் தொடர்புடைய பிற துறைகளின் இணையதளங்களுக்கான இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய இணையதளம் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உதவியாக இருப்பதுடன் கல்வித் துறை அதிகாரிகளை பள்ளிகளுடன் இணைக்கும் பாலமாகவும் இருக்கும் என்றார்.

இடம் பெயர்ந்த இறந்த வாக்காளர் பட்டியல் ஜூலை 18ல் வெளியீடு

வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்தும் வகையில், தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்த, இறந்தவர்களின் தகவல்கள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரிகளின் அலுவலகங்களில் உள்ள தகவல் பலகைகளில் அந்த விவரங்கள் ஒட்டப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி, விவரங்களை உறுதிப்படுத்தும் திட்டம் தமிழகத்தில் கடந்த மார்ச் 3-ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது. வாக்காளர் பட்டியலில் உள்ள தகவல்களை உறுதிப்படுத்தும் நடவடிக்கை தமிழகத்தில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தகவல் பலகையில் ஒட்டப்படும்: இந்தப் பணியின் போது, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் 16.40 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களின் அடிப்படையில் கள ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், அந்த இடத்தில் இல்லாதவர்கள், இடத்தை வேறொரு இடத்துக்கு மாற்றியவர்கள், இறந்தவர்கள், பல இடங்களில் பெயர் பதிவு போன்றவற்றை கண்டறியவும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

இந்தப் பணிகளை ஜூலை 15-ஆம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த விவரங்கள் அனைத்தையும் தொகுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி அதிகாரியின் அலுவலகத்தில் வரும் 18-ஆம் தேதி ஒட்டப்பட உள்ளது. ஒரு மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள இறந்த, இடமாற்றம் செய்த வாக்காளர்களின் விவரங்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியின் (ஆட்சியர் அலுவலகம்) அலுவலக தகவல் பலகையில் ஒட்டப்படும். மேலும், இதற்கான தகவல்கள் அடங்கிய குறுந்தகடு தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு அளிக்கப்படும். அத்துடன், தலைமைத் தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும் (www.elections.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்படும் என்று சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.

Tuesday, July 14, 2015

ஒரே பள்ளியில் 3ஆண்டுகள் பணி புரிந்தால் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கலாம்

ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது. பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார்.

இதில், பணியிட மாறுதல் கோருவதற்காக குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன. எனவே, பணி நிரவலுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும்.

அதுவரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:- பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு அலகுவிட்டு அலகு மாறுதல், ஆசிரியர் மாறுதல் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் வழங்குவதும் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.

தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற அனுமதிக்கப்பட வேண்டும். விதிகளில் மாற்றம்:- அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இப்போது, ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்றால், அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லையென்றால் பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது.
இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்படி, ஆண், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கலந்தாய்வு எப்போது? இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவலுக்குப் பிறகே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைய ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் வெளியிடுவர்.

அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலாம் வகுப்பில் 13,573 பேர் தமிழ் வழிக் கல்வியிலும், 8,067 பேர் ஆங்கில வழிக் கல்வியிலும் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும். ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமையில் பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

குறிப்பாக, பெரும்பாலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறமை (ஸ்போக்கன் இங்கிலீஷ்) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு பயனுள்ளதாக அமைந்தது. இந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழியில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஆங்கில எழுத்தின் சரியான உச்சரிப்பு, ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் அர்த்தம் ஆகியவை அடங்கிய படத்துடன் கூடிய சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

இதன் மூலம், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை மேம்படுவதுடன், மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளரும். இதனால், தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் விளங்குவார்கள். இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் தனியார் பள்ளி மோகம் தணிந்து, அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களின் பார்வை திரும்பும் என்பது கல்வித் துறையின் நம்பிக்கை. மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விரும்பமும்; அரசுப் பள்ளி மூலம் இது நிறைவேறினால், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி

ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஜூலை 13 முதல் 17 வரையும், ஜூலை 21 முதல் 25 வரையிலும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பிரிட்டன்-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டம், தேசிய கல்வி திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் போது, பள்ளி மேலாண்மை, ஆசிரியர்களின் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது, ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை எவ்வாறு திருத்துவது உள்பட பல்வேறு பயிற்சிகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 வேலைவாய்ப்பு பதிவிற்கு ஆதார் எண் கட்டாயமில்லை

“பிளஸ் 2 மாணவர்கள் வேலைவாய்ப்பிற்காக கல்வித்தகுதியை பதிவு செய்ய ஆதார் எண் சமர்ப்பிக்க கட்டாயமில்லை,”என, பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இன்று முதல் 29ம் தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே அவர்கள் வேலைவாய்ப்பிற்காக கல்வித்தகுதியை 'ஆன்லைன்' மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக மாணவர்கள் 10ம் வகுப்பு வேலைவாய்ப்பக பதிவு அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை போன்றவற்றை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தற்போது ஆதார் அட்டை இல்லாத மாணவர்களை கட்டாயப்படுத்தாமல் அவர்களின் கல்வித்தகுதியை பதிவு செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

“பிளஸ் 2 கல்வித்தகுதி பதிவுக்காக வரும்போது மாணவர்களின் ஆதார் எண் கேட்டு கட்டாயப்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான புகைப்படம் எடுக்க அறிவுரை கூறி கல்வித்தகுதியை பதிவு செய்துதரவேண்டும். இதில் சர்ச்சை கூடாது,”என்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து கல்வி வளர்ச்சி நாள் செலவு செய்ய அனுமதி

அனைத்து பள்ளிகளிலும் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படஉள்ளது.இந்த கல்வி வளர்ச்சி நாள்கொண்டாட்டத்துக்கு மேல்நிலைப் பள்ளிகள் 500 ரூபாய்; மற்ற பள்ளிகள் 250 ரூபாயை பெற்றோர் - ஆசிரியர் கழக நிதியிலிருந்து செலவு செய்யலாம் என கல்வித்துறை அனுமதி அளித்து உள்ளது

Monday, July 13, 2015

GO 232 transfer norms

Click below

https://docs.google.com/uc?id=0B5Op1AjDFZGcd2ozUWh0d0NpZzg&export=download

அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1க்கு புதிய பாடத்திட்டம்

பிளஸ் 1 வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டில் (2016-17) புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குரிய 25 பாடங்களுக்கான பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்காக, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் நாகபூஷணராவ் தலைமையில் துணைக் குழு அமைக்கப்பட்டது.

இந்தத் துணைக் குழு மேல்நிலைக் கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்துவதற்காக 25 பாடங்களுக்குரிய குழுக்களைத் தேர்வு செய்து புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. இந்தப் பாடத்திட்டத்துக்கு வல்லுநர் குழு கடந்த 2013-ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கியது. அதன் பிறகு, பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டங்கள் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், பல மாதங்களாக இந்தப் பாடத்திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால், அடுத்தக் கல்வியாண்டிலிருந்து பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டம் அமலாக வாய்ப்புள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய பாடத்திட்டத்தில் கணிதம், வேதியியல், இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட உள்ளது.