இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, June 26, 2015

பி.எஃப் எண் வைத்திருப்பவர்க்கு ஆதார் எண் கட்டாயம்

பிஎப் கணக்கு எண் வைத்திருப்பவரா? ஆதார் எண் கட்டாயம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்த ஒரு மாத காலத்திற்குள் ஒவ்வொரு தொழிலாளியிடமிருந்தும் உறுதி ஆவண படிவம் - 11ஐ (புதியது) நிறுவன உரிமையாளர்கள்  கட்டாயமாக பெறவேண்டும். மற்றும் படிவத்திலுள்ள விவரங்களை நிரந்தர கணக்கு எண் (யுஏஎன்.) இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் 25 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். தொழில் நிறுவனங்களில் உரிமையாளர்கள் தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் நடப்பு உறுப்பினர்களின் பொது கணக்கு எண் (யுஏஎன்) விவரங்களை 15 நாட்களுக்குள் தெரிவித்து அதற்கான ஒப்புகை பெற்றுக் கொள்ளவேண்டும். உறுப்பினர்களின் கேஒய்சி-ல் அளிக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு, பான் எண், ஆதார் எண்ணை ஒரு மாதத்திற்குள் பதிவு செய்யவேண்டும். ஆதார் எண்  இல்லாத உறுப்பினர்களிடம்  இருந்து ஒரு மாதத்திற்குள் ஆதார் எண் பெறவேண்டும். உறுப்பினரது ஆதார் எண் பெறப்பட்டவுடன் நிரந்தர கணக்கு எண் (யுஏன்) இணையதளத்தில் 15 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்.

உறுப்பினரின் கணக்கு எண் விவரம், இதர உரிய விவரங்களையும் முழுமையாக அளிக்கப்பட்டதை உறுதி செய்து கொண்ட பிறகே தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன அலுவலகத்தில் நிறுவன உரிமையாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.  தொழில் நிறுவனங்களின் தொழிலதிபர்கள் சட்டப்படி செலுத்தப்பட வேண்டிய பங்களிப்பு தொகையினை கட்டாயமாக மின்னணு பரிமாற்ற முறையிலான இணையதள வங்கி சேவையின் மூலமாக செலுத்தவேண்டும்.
ஒரு லட்சத்திற்கும் குறைவாக பங்களிப்பு தொகை செலுத்தும் நிறுவனங்கள் தொடர்ந்து வங்கி காசோலைகளின் மூலமாக தொகையினை செப்டம்பர் 2015 வரை செலுத்தலாம். அதன் பின்னர் மின்னணு பரிமாற்ற முறையிலான இணையதள வங்கி சேவையின் மூலமாக செலுத்த வேண்டும் என்று சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி. பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பி.எஃப் நிதி பங்குச்சந்தையில் முதலீடு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.
        தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் வேலைகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக வருங்கால வைப்பு நிதி ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக ரூ.5,000 கோடியை எக்ஸ்சேஞ்ச் டிரேடர் பண்டுகளில் நடப்பாண்டுக்குள் முதலீடு செய்ய உள்ளது.
        இந்த பண்டுகளில் முதலீட்டை அடுத்த மாதம் தொடங்க உள்ளது.  வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் ஆணையர் கே.கே.ஜலான் குறிப்பிடும்போது  வருங்கால வைப்பு நிதியின் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியிலிருந்து 5 சதவீத தொகையை நடப்பாண்டில் இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்ய உள்ளதாகக் கூறினார்.  வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்புநிதி நடப்பாண்டில் ஒரு லட்சம் கோடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது. இதிலிருந்து ரூ.5000 கோடியை இடிஎப் திட்டங்களில் நடப்பாண்டில் முதலீடு செய்யப்படும் என்றார்.  வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் 6 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதற்கு முன்பு மாநில அரசு மற்றும் மத்திய அரசு பத்திரங்களில் வைப்பு நிதி ஆணையம் முதலீடு களை மேற்கொண்டு வந்தது.  தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய அனுமதியின்படி ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வருங்கால வைப்பு நிதியிலிருந்து குறைந்தபட்சம் 5 சதவீதம் முதல் அதிகபட்சம் 15 சதவீதம் வரையிலான தொகையை பங்கு மற்றும் பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்யலாம். இதனடிப்படையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் வைப்பு நிதியின் 5 சதவீதத்தை நடப்பாண்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.  மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யப்படும். முதலீட்டு தேதி நிலவரப்படி ரூ.5,000 கோடிக்கும் குறைவான சந்தை மதிப்பை அந்த நிறுவனம் கொண்டிருக்க கூடாது.  மேலும் செபியின் அனுமதி பெற்ற மியூச்சுவல் பண்டுகளிலும் முதலீடு செய்யலாம். பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ சந்தைகளில் குறைந்தபட்சம் 65% முதலீடுகளை செய்துள்ள பண்டு நிறுவனங்களில் முதலீடு செய்யலாம்.

மதிய உணவில் மாணவர்களுக்கு பால் மத்திய அரசு பரிந்துரை

அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவில் மாணவர்களுக்கு பால்:மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை
        அரசு பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

         தமிழ்நாடு, பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு அந்த கடிதத்தில் மாணவர்களின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தும் வகையில் மதிய உணவு திட்டத்தின் கீழ் பால் மற்றும் பால் பொருட்களான பாலாடை கட்டி, தயிர் உள்ளிட்டவற்றை மாணவர்களுக்கு வழங்க மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

        ஏற்கனவே மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்கும் திட்டத்தை கர்நாடக அரசு அமல்படுத்தியுள்ளது. எனவே அதே போன்று பிற மாநிலங்களும் அந்த நடைமுறையை பின்பற்றி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பால் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து பாலை கொள்முதல் செய்வது தொடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கால்நடைத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் எழுதிய அந்த கடிதத்தில், மாநில அரசுகளின் இந்த நடவடிக்கையின் மூலம் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் ஏராளமானோர் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

P.F சந்தாதாரர்களுக்கு விரைவில் இணையத்தில் கணக்கு அறிக்கை

தமிழக அரசு ஊழியர்களின் 2014-2015 நிதி ஆண்டுக்கான பொது வருங்கால வைப்புநிதி (ஜி.பி.எஃப்.) ஆண்டு கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காயரின் நிர்வாக வலைதளத்தில் ஜூலை முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது. சந்தாதாரர்கள் பொது வருங்கால வைப்பு நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே இந்த வலைதளத்தில் இருந்து தங்களது 2014-2015-ஆம் ஆண்டு கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

சந்தாதாரர்கள் தங்களது செல்லிடப்பேசி எண்ணை இந்த வலைதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த ஆண்டில் இருந்து, ஆண்டு கணக்கு அறிக்கை சீட்டு அலுவலகத்திலிருந்து விநியோகிக்கப்பட மாட்டாது. சந்தாதாரர்களின் கணக்கு அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களில் ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலோ அல்லது விடுபட்ட சந்தா தொகை அல்லது விடுபட்ட கடன் தொகை ஆகியவற்றுக்கு விவரங்கள் இருப்பின் தங்களது அலுவலகத்தின் மூலம் கீழ்க்கண்ட தகவல் முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, மாநில கணக்காயர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள் விவரம்: துணை மாநில கணக்காயர், தமிழ்நாடு முதன்மை கணக்காயர் அலுவலகம் (கணக்கு, பணி வரவு), 361, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை, 600018 என்ற முகவரியிலும், 044-24314477, 24342812 என்ற தொலைபேசி எண்களிலும், www.agae.tn.nic.in என்ற வலைதளத்திலும், aggpf@tn.nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

இடைநிற்றல் உதவித்தொகைக்கு ஜீரோ பேலன்ஸ்

2015--16-ம் கல்வி ஆண்டிற்கான 10, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விபரங்களை 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்து, 'ஜீரோ பேலன்ஸில் அவர்கள் வங்கி கணக்கு துவக்க பள்ளி கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர், மேல்நிலை பள்ளிகளில் 10, பிளஸ் 2-வில் பயிலும் மாணவர்கள், “இடை நிற்றலை நீக்கும்” பொருட்டு சிறப்பு ஊக்க தொகை வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு வரை மாணவர்களின் விபரங்கள், வங்கி கணக்கு எண், ஆகியவை கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, மாவட்ட அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டது. இதில் மாணவர்களின் விபரங்கள், வங்கி கணக்கு எண்களில் பிழைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கால தாமதமும் ஏற்பட்டு வந்தது.பிழைகள் மற்றும் கால தாமதத்தை களைய, சிறப்பு ஊக்கத்தொகை பெறும் மாணவர்களின் விபரங்களை, dse.ssasoft.in என்ற இணையதளத்தில், பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' மூலம், நேரடியாக 'ஆன்லைனில்' பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பணிகளை வரும் ஜூலை 3-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும், எனவும் கூறப்பட்டுள்ளது.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டுகளில், மாணவர்கள் வங்கி கணக்கு ஆரம்பிக்கும்போது, கணக்கு துவங்க சம்பந்தப்பட்ட வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட, குறைந்த பட்ச தொகை கேட்கப்பட்டது. அதுமட்டுமன்றி, ஆறு மாதத்துக்கு மேல், எவ்வித பரிவர்த்தனையும் இல்லாமல் இருந்தால், வங்கிகள் அக்கணக்குகளை முடக்கி வைத்தன. இதனால், மாணவர்களுக்கு அனுப்பப்படும் தொகை சென்று சேருவதில் சிக்கல் இருந்தது. இதை களைய, அவர்களுக்கு 'ஜீரோ பேலன்ஸில்' வங்கி கணக்கு துவக்கி, வங்கிகளால் அக்கணக்குகள் முடக்கப்படாதவாறு, நடவடிக்கை எடுக்குமாறு, பள்ளி கல்வித்துறை உத்தர விட்டுள்ளது, என்றார்.

டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி

தமிழக அரசின், இ - சேவை மையங்களில், 'டெபிட் கார்டு' மூலம் பணம் செலுத்தும் திட்டம், விரைவில் அறிமுகமாகிறது. இதுகுறித்து, தகவல் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள, இ - சேவை மையங்களில், ஆன் - லைன் மூலம் அரசுத் துறைகளின் பல சேவைகள், மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

இந்தத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை, மாவட்ட அளவில் கண்காணிக்க, மேலாளர் பதவியில் பொறியியல் பட்டதாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். அவர்கள், மாவட்டங்களில் உள்ள அனைத்து, இ - சேவை மையங்களுக்கும் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்த மையங்களில், ஜாதி, வருமானம் உட்பட, 11 சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டணம், 50 ரூபாய். அதை பயனாளிகள் ரொக்கமாக செலுத்துகின்றனர். இனி, அந்தக் கட்டணத்தை, 'கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, இ - வாலட் கார்டு' மூலம் செலுத்தும் வசதி அறிமுகமாக உள்ளது.

அதற்கான பணி வேகமாக நடந்து வருகிறது. 'டெபிட் கார்டு' இல்லாத வங்கி வாடிக்கையாளரே இல்லை என்ற நிலை உருவாகி உள்ளது. அதனால் இந்த வசதியை, ஏராளமானோர் பயன்படுத்துவர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

PF எண்ணை 15 நாட்களுக்குள் பயன்படுத்த உத்தரவு

பி.எப்., மண்டல ஆணையர் பிரசாத் தொழிலதிபர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:பி.எப்., திட்டத்தில், தொழிலாளர்கள் உறுப்பினரான, ஒரு மாதத்துக்குள், உறுதி படிவத்தை பெற்று, 25 நாட்களுக்குள், நிரந்தர எண் பெற பதிவு செய்ய வேண்டும்.

நிரந்தர பி.எப்., எண் அளிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு, அவற்றை 15 நாட்களுக்குள் பயன்படுத்த அறிவுறுத்தி, அதற்கான ஒப்புதலை பெற வேண்டும்; அவர்களின், ஆதார் மற்றும் பான் எண்களை, பதிவு செய்ய வேண்டும். ஆதார் எண் இல்லாத தொழிலாளர்களிடம், அதற்கான ஒப்புகையைப் பெற வேண்டும். இத்தகவல்கள் அனைத்தையும், பி.எப்., அலுவலகத்தில் தொழிலதிபர்கள் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு, தொழிலதிபர்கள் செலுத்தும் பங்கு தொகையை, இணையதள வங்கி சேவை மூலமே செலுத்த வேண்டும்.

1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான பங்களிப்புள்ள நிறுவனங்கள், 2015 செப்டம்பர் வரை, காசோலை மூலம், பங்களிப்பு தொகையை செலுத்தலாம். அதன்பின், இணையதள வங்கி சேவை மூலமே அவர்களும் பங்களிப்பு தொகையை செலுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Chess game competition schedule

Click below

https://app.box.com/s/9s11nl86euua4rvojy66fr9tf3g5x1ra

B.ed school teaching practice

Click below

https://app.box.com/s/ry2swy9i0412ldk75s7eexy9zcgxvwna

Thursday, June 25, 2015

25% CPS அரசு ஊழியர்களின் பங்களிப்பு தொகையைப் பெறலாம்

CPS -புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய நிதியில் இருந்து 25 சதவீத தொகையை திரும்பப் பெறலாம் என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
பயன்பெறுவார்கள். மத்திய அரசுப் பணியில் கடந்த 1.1.2004-க்கு பிறகு சேர்ந்த அனைத்து ஊழியர்களும் (முப்படையினர் தவிர) புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (Contributory Pension Scheme-CPF) என்று அழைக்கப் படுகிறது. தமிழகத்தில் 1.4.2003-க்குப் பின்னர் அரசு பணியில் சேர்ந்த ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி, அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம், தர ஊதியம் (கிரேடு பே), இவற்றுக்கான அகவிலைப்படி ஆகிய கூட்டுத்தொகையில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்குச் சமமான தொகையை அரசு தன் பங்காக செலுத்தும். இதற்கென ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் பிரத்யேக சிபிஎஃப் எண் கொடுக்கப்பட்டு அந்த கணக்கில் இந்த தொகை வரவு வைக்கப்படும். சிபிஎப் கணக்கில் உள்ள தொகைக்கு ஆண்டுக்கு 8.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இவ்வாறு ஊழியரின் கணக்கில் சேரும் தொகை, அவர் ஓய்வுபெறும்போது 60 சதவீதம் திருப்பிக் கொடுக்கப்படும். எஞ்சிய 40 சதவீத தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வூதியமாக வழங்கப்படும். தமிழகத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தைப் பொறுத்தவரையில், ஊழியர்கள் தங்களின் பொது வருங்கால வைப்புநிதியில் (ஜிபிஎப்) இருந்து 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு கடன்பெறலாம். கடனை திருப்பி செலுத்திய பிறகு மீண்டும் கடன் பெறமுடியும். மேலும் 15 ஆண்டு பணி முடிவடைந்ததும் ஜிபிஎப் நிதியில் இறுதித்தொகையின் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். ஆனால், புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஜிபிஎப் போன்று கடன்பெறும் வசதியோ, பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியோ இல்லாமல் இருந்துவந்தது. இந்த நிலையில், புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள ஊழியர்கள் 10 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால் அவர்கள் சிபிஎப் கணக்கில் தாங்கள் செலுத்திய தொகையில் இருந்து 25 சதவீதத்தை திரும்ப எடுத்துக்கொள்ளலாம் என்று புதிய ஓய்வூதிய திட்டத்தை கவனித்து வரும் அமைப்பான ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. எனினும், இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப் பட்டுள்ளன. அதன்படி, சந்தாதா ரர்கள், தங்கள் பணிக் காலத்தில் 3 முறை சிபிஎப் தொகையை திரும்ப எடுத்துக்கொள்ளலாம். பிள்ளைகளின் படிப்பு செலவு, திருமண செலவு, வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பு வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு, மருத்துவ செலவினங்களுக்கு (புற்றுநோய், சீறுநீரக குறைபாடு, இதய நோய் போன்றவை) இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறைக்கும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இடைவெளி இருக்க வேண்டும். இருப்பினும், மருத்துவ செலவினத்துக்கு இந்த கட்டுப்பாடு பொருந்தாது என்று ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள் ளது. இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். எனினும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிபிஎப் திட்டத்துக்கு வரவேற்பு இல்லை. இதுகுறித்து திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் பிரடெரிக் ஏங்கல்ஸ் கூறும்போது, “2003-க்கு முன்பு அரசுப் பணியில் சேர்ந்த ஊழியர்களைப் போல சிபிஎப் திட்டத்திலும் 6 மாதங்களுக்கு ஒருமுறை கடன்பெறவும், 15 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் இறுதித் தொகையில் ஒரு பகுதியை திரும்ப எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்” என்றார்.

6முதல் 10ம் வகுப்பு வரை நீதிபோதனை பாடம் அறிமுகம்

அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை இந்த ஆண்டு முதல் மீண்டும் நீதி போதனை பாடத்திட்டம் அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு நீதிபோதனை என்ற சிறப்பு பாடத்திட்டம் இருந்தது. வாரத்தில் ஒருநாள் இவ்வகுப்புகள் நடத்தப்படும். இதில் கதைகள் மற்றும் அன்றாடம் நடக்கும் சம்பவங்கள் மூலமாக நல்ல பழக்க வழக்கங்கள், பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்தல், கீழ்படிதல், நீதி, நேர்மை, உண்மை குறித்து சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் இத்திட்டம் சில வருடங்களுக்கு முன்பு முடங்கியது.

இத்தகைய சூழலில், வகுப்பில் தங்களை அடிக்கும் ஆசிரியர்களை மாணவர்கள் திருப்பி அடிப்பது, வகுப்பில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை கேலி செய்வது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடக்க தொடங்கின. இதை மாற்ற, பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் நீதிபோதனை வகுப்பை மீண்டும் கொண்டுவர அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டிலிருந்து 6 முதல் 10ம் வகுப்பு வரையில் நீதி போதனை வகுப்பு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

முதல்கட்டமாக 6 முதல் 8ம் வகுப்பு வரை நடைமுறைப் படுத்தப்படும். மாணவர்களின் பாடப் புத்தகத்தில் இடம்பெறும் விஷயங்களை அடிப்படையாக கொண்டும் வகுப்புகள் நடத்தப்படும் என்பதால் படிப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். நீதி போதனை வகுப்புக்கென ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதத்தில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், நீதி போதனை வகுப்புக்காக சிறப்பு கையேடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்புகளை தொடர்ந்து, 2வது கட்டமாக 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 6ம் வகுப்பு ஆங்கில வழி சேர்க்கை

தமிழகத்தில் அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழி பிரிவுகளைத் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அந்த இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: கிராமப் பகுதி மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்காக கடந்த 2012-13 கல்வியாண்டில் 165 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

2013-14 கல்வியாண்டில் 1,048 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும், 2014-15 கல்வியாண்டில் 1,485 பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், 2015-16 கல்வியாண்டில் 6-ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிப் பிரிவுகளில் மாணவர்களின் சேர்க்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு அலுவலர்களின் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், 2015-16 கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் தேவைப்படும் அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பில் ஓர் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கலாம்.

ஆங்கில வழிப் பிரிவுகளில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க உரிய நடவடிக்கைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். நிகழாண்டில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்ட பள்ளிகளின் எண்ணிக்கை, ஆங்கில வழிப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பள்ளிக் கல்வி இணை இயக்குநருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்ப வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GPF account statement

Click below

http://www.agae.tn.nic.in/onlinegpf/

தமிழகம் முழுவதும் 85லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு

தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் ஏறத்தாழ 85 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகமும், சென்னை மற்றும் மதுரையில் மாநில தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகங்களும் உள்ளன. சென்னை மாவட்டத்தில் கூடு தலாக தொழில்நுட்பப்பிரிவு, மாற்றுத் திறனாளிகள் உள்பட 3 சிறப்பு வேலைவாய்ப்பு அலு வலகங்கள் இயங்குகின்றன.

புதுப்பித்து வர வேண்டும்

பட்டப் படிப்பு வரையிலான கல்வித்தகுதியை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலகத்திலும், முதுகலை மற்றும் பொறியியல், மருத்துவம், விவ சாயம் உள்ளிட்ட தொழில்கல்வி படிப்புகளுக்கான கல்வித் தகுதியை அமைவிடத்துக்கு ஏற்ப சென்னையில் அல்லது மதுரையில் உள்ள மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவுதாரர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் பதிவினை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும். அப் போது பதிவுமூப்பு (சீனியாரிட்டி) நடப்பில் இருக்கும்.

பெண்கள் அதிகம்

இந்த நிலையில், 31.3.2015 வரையில் மாவட்ட, மாநில மற்றும் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய் துள்ள பதிவுதாரர்களின் எண் ணிக்கை தொடர்பான புள்ளி விவரத்தை மாநில வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நேற்று வெளியிட்டது. அதன்படி, அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் சேர்த்து பதிவுதாரர்களின் எண்ணிக்கை 84 லட்சத்து 97 ஆயிரத்து 402. இதில் பெண் பதிவுதாரர்கள் மட்டும் 43 லட்சத்து 24 ஆயிரத்து 881 ஆகும். இது ஆண்களைவிட அதிகம்.

இடைநிலை ஆசிரியர்கள் 81 ஆயிரத்து 777 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 816 பேரும், பொறியியல் பட்டதாரிகள் 2 லட்சம் பேரும் கலை பட்டதாரிகள் 4.26 லட்சம் பேரும், அறிவியல் பட்டதாரிகள் 5.69 லட்சம் பேரும், வணிகவியல் பட்டதாரிகள் 3.22 லட்சம் பேரும் பதிவுசெய்துள்ளதாக வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.