இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 07, 2015

துபாய் வந்தது எப்படி? ருசிகரத்தகவல்

பிளஸ் 2 தேர்வில் துபாய் வந்தது எப்படி? ருசிகர தகவல்கள்!
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக மாணவ மாணவியரின் தேர்ச்சி விகிதம் குறித்த பட்டியல்  பற்றிய தகவல்கள் வெளியாகின.

அதில் ‘ துபாய் ’ என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

கேலியும்  கிண்டலுமாக   நம்ம 'நெட்டிசன்கள்' வடிவேல் பாணியில் துபாய் எங்கே இருக்கிறது...?  அது  தூத்துக்குடி பக்கம் ... உசிலம்பட்டி பக்கம் இருக்கு... என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.

அத்தோடு வாட்ஸ் அப் மூலம் அரசுத் தேர்வுத்துறையைக் கிண்டல் அடித்து கலாய்க்கிறார்கள்.

ஆனால் இதில் பலருக்கு தெரியாத உண்மை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை துபாயில் வாழும் தமிழர்களின் வாரிசுகள்  நமது அரசு தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள் என்பதே அது.

இந்த சுவாரஸ்ய தகவல்கள் குறித்து  பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரி, டாக்டர் ராஜராஜேஸ்வரியைத்  தொடர்பு கொண்டு கேட்டோம்.

"இந்தியா மற்றும் தமிழகத்தைச்  சேர்ந்த பலர் வேலை நிமித்தமாக துபாய்க்கு போய் செட்டில் ஆகிறார்கள். ஆனால் துபாய் நாட்டில் பாடத்திட்டங்கள் அனைத்தும் அரேபிய மொழி மற்றும் உருது மொழியில் இருப்பதால் தமிழர்கள் பலரும் நம் தமிழ்நாட்டு பாடத்திட்டத்தைப்  பின்பற்றி தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். துபாயில் ‘ கிரசண்ட் ’ என்ற தனியார் பள்ளி ஒன்று அங்குள்ள தமிழர்களால் நடத்தப்படுகிறது. அங்கு ஆங்கில மீடியம் மூலம் தமிழ் பாடங்களை நடத்துகிறார்கள். கடந்த 2007 ஆம்  ஆண்டு வரை கிரசண்ட் பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்து வந்தது.

இப்போது மேல்நிலைப்பள்ளியாகத்  தரம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அங்கு படிக்கும் தமிழ் குடும்பங்களைச்  சேர்ந்த மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 தேர்வை ஆண்டு தோறும் அரசுத்தேர்வுத்துறை மூலம் எழுதுகிறார்கள். இங்கே எப்படி தமிழகம் தவிர பாண்டிச்சேரிக்கும் நாம் தேர்வு நடத்துகிறோமோ, அதே மாதிரிதான் துபாய் பள்ளி மாணவர்களுக்கும் தேர்வு நடத்துகிறோம். துபாயில் பள்ளி தொடங்கியதுமே நமது ஆங்கிலம் மீடியம் பாட நூல்களை கூரியர் மூலம் அனுப்பி வைத்து விடுவோம்.

அதே நேரம் அந்தப்  பள்ளியில் ஆர்ட்ஸ் குரூப் படிப்புக்கு மட்டுமே அனுமதி. அறிவியல் பாடத்திட்டத்திற்கு அனுமதி கிடையாது. ஏனென்றால் அறிவியல் பாடத்திட்டம் என்றால் பிளஸ் 2 தேர்வின் போது சயின்ஸ் பிராக்டிக்கல் செய்முறைத்தேர்வு நடத்த வேண்டும்.

அதைக்  கண்காணிக்க இங்கிருந்து அதிகாரிகளை அனுப்பி வைக்க வேண்டும். இதுவெல்லாம் சாத்தியம் இல்லை என்பதால் கணக்கு, வரலாறு, வணிகவியல் பாடத்திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி. எனவே   பொதுத்தேர்வு எழுத துபாயில் இருந்து பள்ளி மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள். இங்கிருந்து ஹால் டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்படும்.  பிறகு எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள்களை இந்திய தூதரகத்திற்கு கூரியர் மூலம் அனுப்பி வைப்போம்.

தமிழகத்தில் தேர்வு தொடங்கும் அதே நாளில் இந்திய தூதரகக் கண்காணிப்பாளர் கண்காணிப்பில் தேர்வுகள் நடக்கும். விடைத்தாள்களை இந்திய தூதரக  அதிகாரிகள் தமிழக அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை துபாய் கிரசண்ட் பள்ளி மூலம் 20 மாணவர்கள் எழுதினர். அதில் 19 பேர் மட்டுமே பாஸ் ஆனார்கள். ஒருவர் தோல்வி அடைந்து விட்டார். எனவே இந்த ஆண்டு துபாய் பள்ளியின் தேர்ச்சி சதவீதம் 95 சதவீதம். இந்திய தூதரகம் மூலம் அவர்களுக்கான மார்க் சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படும்" என்றார் அவர்.

12ம் வகுப்பில்.90.6 சதவிகிதம் பேர் தேர்ச்சி

12 ஆம் வகுப்புத் தேர்வில் 90.6 சதவிகிதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் இன்று வெளியான பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 90 புள்ளி 6 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

எட்டு லட்சத்து 82 ஆயிரத்து 260 பேர் எழுதிய பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்வு பெற்று உள்ளனர்.

இதன் மூலம் 90 புள்ளி 6 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இதில் மாணவிகள் 93 புள்ளி 4 சதவிகிதம் பேரும், மாணவர்கள் 87 புள்ளி 5 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இதனால் இந்த ஆண்டிலும் தேர்ச்சி சதவிகிதத்தில் மாணவர்களை மாணவிகள் முந்தி உள்ளனர். தேர்ச்சி பெற்று உள்ளவர்களில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 318 பேர் 60 சதவிகித மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளனர்.

மேலும் தமிழ் பாடத்தில் 229 பேரும், கணிதப் பாடத்தில் 9710 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இயற்பியல் பாடத்தில் 124 பேரும், வேதியியல் பாடத்தில் 1049 பேரும், உயிரியல் பாடத்தில் 387 பேரும் நூறு சதம் மதிப்பெண்களை பெற்று உள்ளனர்.

தாவரவியலில் 75 பேரும், விலங்கியலில் 4 பேர் மட்டும் 100 சதம் மதிப்பெண் எடுத்துள்ளனர். புள்ளியியல் பாடத்தில் 47 பேரும், வரலாறு பாடத்தில் 31 பேரும், பொருளாதாரத்தில் 179 மாணவ, மாணவியரும் 100 சதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 5167 பேர் அக்கவுன்டன்சியிலும், 1036 பேர் வணிக கணிதத்திலும், 577 பேர் கம்ப்யூட்டர் சயின்சிலும் 100 சதவித மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

==============
பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் :

7 லட்சத்து 60 ஆயிரத்து 569 பேர் தேர்வு எழுதினர்

மாநில அளவில் மொத்த தேர்ச்சி சதவிகிதம் 90.6

மாணவிகள் 93. 4%, மாணவர்கள் - 87.5%தேர்ச்சி

இந்த ஆண்டிலும் தேர்ச்சி சதவிகிதத்தில் மாணவிகளுக்கே முதலிடம்

5,03,318 பேர் 60% மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்
=========================

==============================================
பாடவாரியாக 100 சதம் மதிப்பெண் பெற்றவர்கள் :
==============================================
தமிழ் - 229

கணிதம் - 9,710

இயற்பியல் - 124

வேதியியல் - 1049

உயிரியல் - 387

தாவரவியல் - 75

விலங்கியல் - 4

புள்ளியியல் - 47

வரலாறு - 31

பொருளாதாரம் - 179

அக்கவுன்டன்சி - 5167

வணிக கணிதம் - 1036

கம்ப்யூட்டர் சயின்ஸ் - 577

Wednesday, May 06, 2015

பி.இ விண்ணப்பதுடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கல்

பொறியியல் படிப்புகளில் சேரப்போகும் மாணவர்களின் வசதிக்காக பி.இ. கலந்தாய்வு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள், சான்றிதழ்கள் அவற்றை எங்கே பெறுவது என்பன குறித்த விவரங்களை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அனைத்து விண்ணப்பதாரர்களும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், மாற்றுச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் ஆகியவற்றுடன் பிளஸ் 2 தேர்வு நுழைவுச் சீட்டு ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். 2015 மார்ச் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கலந்தாய்வின்போது அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இருந்தபோதும் விண்ணப்பத்துடன் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழைச் சமர்பித்தால் போதுமானது.

எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்று: 8-ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகியவற்றில் ஏதாவது ஒரு படிப்பையோ அல்லது இந்தப் படிப்புகள் அனைத்தையும் தமிழகத்தில் படிக்காத தமிழகத்தைச் சொந்த மாநிலமாகக் கொண்ட மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழையோ விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது கட்டாயம். இந்தச் சான்றிதழை அந்தந்தப் பகுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுச்சேவை மையங்களில் பெற வேண்டும். அதுவும் டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் இருப்பிடச் சான்றிதழை (இ-சர்ட்டிபிகேட்) மட்டுமே இம்முறை சமர்ப்பிக்க வேண்டும்.

முதல் தலைமுறை மாணவர் சான்று: குடும்பத்தில் வேறு யாரும் பட்டப் படிப்பு படிக்காத நிலையில், பொறியியல் படிப்பில் சேரப்போகும் மாணவருக்குக் கல்விக் கட்டணம் செலுத்துவதிலிருந்து தமிழக அரசு விலக்கு அளித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் மட்டுமல்லாமல் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் சேரப்போகும் மாணவர்களும் இந்தச் சலுகையைப் பெற முடியும். இந்தச் சலுகையைப் பெற விரும்பும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள், அதற்கான சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பொதுச்சேவை மையங்களில் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இதுவும் டிஜிட்டல் கையெழுத்துடன் கூடிய எலெக்ட்ரானிக் சான்றிதழாக (இ-சர்ட்டிபிகேட்) இருக்க வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

இடஒதுக்கீடு சிறப்பு சலுகைகள்: இதர படிப்புகளைப் போன்று பொறியியல் படிப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத சிறப்பு இடஒதுக்கீடும், விளையாட்டு வீரர்களுக்கு 500 இடங்களும் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படுகின்றன. இதில் 12 இடங்கள் அண்ணா பல்கலைக்கழக துறைகளில் ஒதுக்கப்படும். இதுதவிர, ராணுவத்தினரின் வாரிசுகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள், கை அல்லது கால் ஊனமுற்றவர்கள், காது கேளாதவர்கள், பார்வை பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவர்கள் அது சார்ந்த சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இவர்களுக்கான சான்றிதழ் படிவங்கள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தொடக்ககல்வி பட்டயத்தேர்வு மே 8,9 தேதியில் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் மே 8, 9 தேதிகளில் சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்துகொண்டு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுகள் மே 18 -ஆம் தேதி முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

ஆங்கில வழிக்கல்வியை விளம்பரம் செய்ய உத்தரவு

அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வி இருப்பது தொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என, தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும், தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

* தமிழக அரசின், கல்வித்துறை சார்ந்த நலத்திட்டங்களை முன்னிலைப்படுத்தி, அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.

* தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக, உதவி மற்றும் கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.

* அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், உடனடியாக முதல் வகுப்பு மாணவர் சேர்க்கையை துவங்குமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

* தீவிர மாணவர் சேர்க்கை தொடர்பாக, ஊர்வலம் நடத்த வேண்டும்.

* அரசு பள்ளிகளில், ஆங்கில வழிக் கல்வி நடத்தப்படுகிறது என்பதை, சுவரொட்டிகள் ஒட்டியும், ஊர்வலங்கள் நடத்தியும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங் ஜூலை 1ல் துவக்கம்

அண்ணா பல்கலைக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளின் பி.இ., - பி.டெக்., படிப்புக்கான பொது கவுன்சிலிங், ஜூலை, 1ம் தேதி துவங்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்குட்பட்ட, 590 பொறியியல் கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, நேற்று துவங்கியது.

சென்னையில், அண்ணா பல்கலை உட்பட தமிழகம் முழுவதும், 60 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. அண்ணா பல்கலையில், வரும், 29ம் தேதி வரையிலும், மற்ற, 59 மையங்களில் வரும், 27ம் தேதி வரையிலும், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 29ம் தேதி மாலை, 6:00 மணிக்குள், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இந்நிலையில், ரேண்டம் எண், தர வரிசைப் பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

* ஜூன், 15 - 'ரேண்டம்' எண்.

* ஜூன், 19 - 'கட் - ஆப்' மற்றும் ரேண்டம் எண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல்.

* ஜூன், 28 - விளையாட்டுப் பிரிவுக்கான கவுன்சிலிங்

* ஜூன், 29 - மாற்றுத்திறனாளிகளுக்கான கவுன்சிலிங்.

* ஜூலை, 1 - பொது கவுன்சிலிங் துவக்கம்.

* ஜூலை, 31 - அனைத்துப் பிரிவினருக்கும் கவுன்சிலிங் முடிவு. இந்தப் பட்டியலில் உள்ள சேர்க்கை நடவடிக்கைகளில், தேவைக்கேற்ப தேதி மாற்றங்கள் இருக்கும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

மதிப்பெண் மட்டுமே அல்ல வாழ்க்கை!

ஏதோ சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வந்தது போல,  பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் சொன்னவுடன்  பெற்றோர்கள் பயத்துடன் மாணவர்களையும் பயமுறுத்தி, வாழ்க்கையே மதிப்பெண்கள்தான் என்பதுபோல  மன அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தேர்வில் எவ்வளவு  மதிப்பெண்கள்  எடுத்தாலும்,  வெற்றியோ,தோல்வியோ எதுவாக இருந்தாலும் வாழ்வின் வெற்றியை அது நிர்ணயிக்காது. தேர்வு  முடிவுகள், தேர்வின் மதிப்பெண்கள்  வாழ்வின் முதல்படிதான். அதுவே வாழ்வின் முடிவு அல்ல என்பதையும் பெற்றோர்கள் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதை விட்டு விட்டு, அவர்களும் மாணவர்களை குழப்புவது என்பது வாடிக்கையான ஒன்று தான்.

மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை நிர்ணயம் செய்வதாக நினைத்தால் அதிக மதிப்பெண் பெற்றும் வாழ்வில் தோல்வி அடைந்தவர்களது நிலைக்கு எது காரணம்?. மதிப்பெண் குறைவாக இருந்தால் முட்டாள் என்றோ,அதிகம் என்றால் அறிவாளி என்றோ நினைப்பது பெரும் தவறாகும். இன்றைய உழைப்பு மட்டுமே மதிப்பெண்களை நிர்ணயிக்கிறது. கவனக்குறைவால் மதிப்பெண் இழப்பு ஏற்படுகிறது என்பதே

உண்மை. சில நேரங்களில் பெற்றோர் பேசுவதை மாணவர்கள் தவறாக   எடுத்துக்கொண்டு  அன்பை இழந்தும் ,மது,புகை ,போதைக்கு அடிமையாவதும்,வாழ்வின் அடுத்த கட்டத்தைத்  தவற விடுவதும், சிலர் தற்கொலை செய்து கொள்வதும் காலம் காலமாக நடக்கும் அவலமாகவே உள்ளது.

தேர்வு முடிவுகள் வரும் காலங்களில் பெற்றோர் மத்தியில், "என் கௌரவமே  போச்சு...உன் வாழ்க்கையை போச்சு, தெருவில் தலை காட்ட முடியல,எவ்வளவு பணம் கொட்டி உன்னை படிக்க வைத்தேன்,    நீயெல்லாம் இனி எப்படி உருப்படுவே, தண்டச் செலவு...!" என்ற புலம்பல்கள் அதிகம் கேட்கும்.

ஆனால் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு பெரியவர்களான பெற்றோர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டியாக மாறி அவர்களின் மனதிற்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசவேண்டும். அவர்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் உற்சாகத்தை வழங்கும் சக்தி பெற்றோர்களுக்கே உண்டு என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

ஆகவே  பெற்றோர்களே மாணவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கும்  விதமாகவும்,  அடுத்தவர்களுடன் ஒப்பிட்டு பேசாமலும் அடுத்த நடக்க வேண்டிய காரியத்தை பார்ப்பது மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு நல்லது.

படிப்பு வரவில்லை என்றாலும் தொழில் மூலம் சாதித்தவர்கள் மிக அதிகம். ஆரம்ப காலத்தில் குரல் வளம் சரி இல்லை என நிராகரிக்கப்பட்ட ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனின் குரலுக்கு இன்று பல கோடி ரூபாய் மதிப்புண்டு.  செய்யும்   தொழிலில்  வித்தியாசம் காட்டி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து சம்பாதித்தவர்கள் அதிகம்.

உடலை வளைக்கும் உடற்பயிற்சியான  யோகா மூலமும் சம்பாதித்தவர்கள் அதிகம். தமிழ் தானே என்று ஏளனமாக பார்த்தவர்கள் மத்தியில் தமிழுக்கும் தனி மரியாதை உண்டு என நிரூபித்து இலக்கியம்,கதை,பட்டி மன்றம், கட்டுரைகள் என பல வகையில் புகழ் பெற்றவர்கள் அதிகம்.

ஆகவே  வாழ்வின்  வெற்றிக்கு தேவை மதிப்பெண்ணை விட கடின உழைப்பும் , தனித்துவமும், உலக அனுபவமுமே என்பதை பெற்றோர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

இந்தத் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலும் உயர் கல்வியில் மதிப்பெண் பெற்று சாதிக்க முடியும். மாவட்ட ஆட்சியர்  தேர்வுக்கு கூட ஏதாவது ஒரு பட்ட படிப்பும்,நுண்ணறிவும்,சமயோசித புத்தியுமே தேவை .

ஆகவே மாணவர்களை கஷ்டப்படுத்தாமல் அவரவர் ஆசைப்படி விரும்பிய பாடப்பிரிவை   படிக்கவும், பெற்றோர்கள் வழிகாட்டியாக இருக்கவும் வேண்டியது மாணவர்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும்.

எஸ் .அசோக்

பிஎட், பட்டதாரிகளுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு

இந்திய ராணுவத்தின் கல்வி பிரிவில் காலியாக உள்ள ஹவில்தார் (‘x’ and ‘y’) பணிகளுக்கு திருமணமாகாத தகுதியுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் விவரம்:

Havildar Education:

மொத்த காலியிடங்கள்:

அ. அறிவியல் பிரிவு - 200.
ஆ. கலைப் பிரிவு- 134.

வயது:

மேற்குறிப்பிட்ட 2 பிரிவுகளுக்கும் 20 முதல் 25க்குள்.

தகுதி:

அறிவியல் பிரிவுக்கு:(குருப் X): பி.ஏ., பி.எட்., அல்லது பி.எஸ்சி., பி.எட் அல்லது பிசி ஏ/ பிஎஸ்சி (ஐடி) பி.எட்., அல்லது எம்.ஏ.,/ எம்.எஸ் சி/ எம் சிஏ.

கலைப் பிரிவுக்கு:(குருப் Y):பி.ஏ.,/ பிஎஸ் சி/ பிசி ஏ/ பி.எஸ்சி (ஐடி) படிப்பில் ஏதேனும் ஒன்றில் பட்டப்படிப்பு.

பாடப் பிரிவுகள் விவரம்:

அ. பி.எஸ்சி/ பிசிஏ பாடப்பிரிவுகள்:

கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ்.

ஆ. பிஏ பாடப்பிரிவுகள்:

ஆங்கில இலக்கியம், இந்தி இலக்கியம், உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், கணிதம், சமூகவியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.ஏ. பட்டம்.

உடற்தகுதி:

ராணுவத்தில் Soldier (Clerk) பணிக்கான உடல் தகுதிகளை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கு ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். ஸ்கிரீனிங் தேர்வு, உடல் தகுதி தேர்வு, உடல் திறன் தேர்வு, மருத்துவ சோதனை, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

உடற் திறன் தேர்வு:

இத்தேர்வில் 6.20 நிமிடங்களுக்குள் 1.6 கி.மீ தூரத்தை ஓடி கடக்க வேண்டும்.

புல் அப் (பீம் - 6), சிக் - சாக் பேலன்ஸ், 9 அடி பள்ளத்தை தாண்டுதல். மருத்துவ பரிசோதனை ஆகிய தேர்வுகள் நடைபெறும். இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

எழுத்துத் தேர்வு ஜூலை 26ம் தேதி சம்பந்தப்பட்ட மண்டல ஆள்சேர்ப்பு தலைமையகம் (சென்னை) அல்லது டில்லியில் நடைபெறும்.

எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு கற்பித்தல் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மத்திய பிரதேசம், பச் மாரி என்ற இடத்தில் நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பச்மாரியில் உள்ள AEC பயிற்சி கல்லூரியில் ஓராண்டு ராணுவம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி கள் அளிக்கப்படும்.

சம்பளம்:

வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800 பிளஸ் ராணுவ சேவை ஊதியம் ரூ.2 ஆயிரம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indianarmy.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

HQ Rtg Zone,
Fort Saint George,
CHENNAI- 600009.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.5.2015.

Tuesday, May 05, 2015

பிளஸ் 2வில் 100% பெற புதிய தந்திரம்

பிளஸ்–2 தேர்வில் 100 சதவீத மதிப்பெண் பெற மாணவர்கள் மேற்கொண்ட புதிய தந்திரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 200–க்கு 200 மதிப்பெண் தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 5–ந்தேதி பிளஸ்–2 தேர்வு தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைந்தது. மாணவர்கள் மருத்துவம் அல்லது முன்னணி கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு கட் ஆப் மதிப்பெண் 200–க்கு 200 பெறவேண்டும் என்று நினைப்பது வழக்கம். சில மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் தேர்வுகளில் 150–க்கு 140 மதிப்பெண் எடுக்கும் சூழ்நிலையில் தேர்வு எழுதினார்கள். 150–க்கு 150 மதிப்பெண் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டால் சரியாக எழுதிய விடைத்தாள் அனைத்தையும் அடித்துவிடுங்கள்.

அவ்வாறு செய்தால் விடைத்தாளை திருத்துபவர்கள் நீங்கள் அடித்த பகுதியை மதிப்பீடு செய்யாமல் 0 மதிப்பெண் போட்டு விடுவார்கள் என்று சில பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனை கூறியிருக்கிறார்கள். அதற்கு காரணம், பெயிலான மாணவர்களுக்கு உடனடியாக தேர்வு நடத்தப்படும். அப்போது கேள்விகள் எளிதாக இருக்கும். 150–க்கு 150 மதிப்பெண் எடுத்துவிடலாம். அப்படி எடுத்தால் மருத்துவத்துப்படிப்பில் அல்லது என்ஜினீயரிங் கல்லூரிகளில் முன்னணி கல்லூரிகளில் சேர முடியும் என்று அந்த மாணவர்களின் ஆசிரியர்கள் சொன்னதாக கூறப்படுகிறது. விடைத்தாளில் கோடு போட்டனர் ஆசிரியர்கள் சொன்னது போலவே, குறைவான மதிப்பெண் கிடைக்கும் என்று நினைத்து மாணவர்கள் விடைத்தாள்களில் சரியாக எழுதியதை கோடு போட்டு அடித்துவிட்டு அந்த தாளை தேர்வு கண்காணிப்பாளரிடம் கொடுத்துள்ளனர்.

அவ்வாறு கோடு போட்டால் அதை திருத்தாமல் விடுவது வழக்கம். இவ்வாறு கோடு போட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்த ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் இந்த தகவலை அரசு தேர்வுத்துறைக்கு தெரிவித்துள்ளார். எனவே அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவேண்டாம் என்று முதன்மை கல்வி அதிகாரி வழியாக அரசு தேர்வுத்துறை அதிகாரி வாய்மொழியாக கூறியதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரியிடம் கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

பெற்றோர்கள் கேட்டுக்கொண்டதால் சில பிளஸ்–2 மாணவர்கள் விடைத்தாள்களில் எழுதியது அனைத்தையும் அடித்து உள்ளனர். இது பெரிய பிரச்சினை ஆகும் என்று கருதி அந்த மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் வந்து எங்கள் பிள்ளைகள் தெரியாமல் விடைத்தாளில் கோடு போட்டுவிட்டனர். அந்த விடைத்தாள்களை மதிப்பீடு செய்யுங்கள் என்று வேண்டி கேட்டுக்கொண்டனர். இதையொட்டி அந்த விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தப்பட்டன. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். தேர்வுத்துறை விடைத்தாள்களை திருத்திவிட்டதால் பெயிலாகி மீண்டும் தேர்வு எழுதி 100 சதவீத மதிப்பெண் எடுக்கலாம் என்று கனவு கண்டவர்களின் கனவு தவிடு பொடியாகிவிட்டது இந்த தந்திரம் தான் தற்போது கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.