இந்திய தபால்துறையை தபால் பரிமாற்ற சேவையை தவிர மற்ற சேவைகளை 5 பிரிவுகளாக பிரித்து கார்ப்பரேட் நிறுவனங்களாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 333 தபால் நிலையங்கள் உள்ளன. இதில் அடர்ந்த வனப்பகுதிகளில் கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களும் அடக்கம்.
தனியார் தபால் சேவையும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் இந்திய தபால் துறையை தபால் சேவையுடன் வணிகம் சார்ந்த சேவைகளில் இறங்க வைத்தது. அந்த வகையில், இன்சூரன்ஸ் சேவை, வங்கி சேவை, விண்ணப்பங்கள் விற்பனை, தங்க காசு விற்பனை, சரக்கு போக்குவரத்து, அந்நிய செலாவணி மாற்றம், காப்பீட்டுத்துறை, தொலைபேசி மற்றும் மின்கட்டணம் செலுத்தும் வசதி, பல்நோக்கு சேவை மையம் ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது. இதன் அடுத்த கட்டமாக ஏடிஎம் வசதியையும் அளிக்க உள்ளது. தற்போது நாட்டில் 90 சதவீத தபால் நிலையங்கள் கம்ப்யூட்டர் மற்றும் ஆன்லைன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல், வெஸ்டர்ன் யூனியன், மணிகிராம் போன்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து சர்வதேச பண மாற்றம் என்கிற உலகின் எந்த மூலையில் இருந்தும் பணத்தை உடனடியாக உள்நாட்டில் நமது செலாவணியாக மாற்றும் சேவையை செய்து வருகிறது. மேலும், உள்நாட்டு உடனடி மணியார்டர் சேவையையும் வழங்கி வருகிறது. இதனால் இந்திய தபால் துறை தனியார் கார்கோ சேவை மற்றும் கூரியர் நிறுவனங்களை போன்றே லாப பாதையில் நடைபோட்டு வருகிறது.
அதோடு நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வைத்துள்ள சேமிப்பு கணக்குகளை விட அதிகளவிலான சேமிப்புக்கணக்குகளை இந்திய தபால்துறை கொண்டுள்ளது. இத்தகைய வலுவான கட்டமைப்பில் செயல்பட்டு வரும் தபால்துறையை தபால் மற்றும் தகவல் பரிமாற்ற சேவையை மட்டும் அதன் வசம் விட்டுவிட்டு பிற சேவைகளை 5 பிரிவுகளாக பிரித்து அவற்றை தனித்திறன் வாய்ந்த வர்த்தக நிறுவனங்களாக அறிவிப்பதுடன், அவற்றை கார்ப்பரேட் நிறுவன சட்டத்தின் கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓய்வு பெற்ற காபினெட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான செயல்முறை கமிட்டியின் சிபாரிசை முழுமையாக ஏற்று அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
அதேநேரத்தில் மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவும் தபால் ஊழியர் சங்கங்கள் முடிவெடுத்துள்ளன.