இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, January 02, 2015

பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து 7–ந் தேதி மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

  மாணவர்களின் வருகையை காரணம் காட்டி மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்து 7–ந் தேதி மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

சென்னை மாநகராட்சி பகுதியில் இதுவரை 54 பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சி பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி முழுவதும் முறையாக செலவிடப்படவில்லை. கடந்த 8 ஆண்டுகளில் கல்விக்காக வசூலிக்கப்பட்ட 2.5 சதவீதம் வரித்தொகையில் ரூ.175 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி பள்ளிகளில் 168 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. மாணவர்கள் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஆங்கில வழிக்கல்விக்கும் தேவையான மொழியாசிரியர்களை நியமிக்கவில்லை. 120–க்கும் மேற்பட்ட பள்ளிகளில் கழிவறைகளே இல்லை. எனவே மாநகராட்சி பள்ளிகள் மூடப்படுவதை கண்டித்தும், பள்ளியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் 7–ந் தேதி காலை 10 மணிக்கு மாநகராட்சியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்த போராட்டத்திற்கு நான்(ஜி.ராமகிருஷ்ணன்) தலைமை தாங்குகிறேன்.

எந்த பள்ளிகளிலும் ஏப்ரல் 4–ந்தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது என்றும் அவ்வாறு மாணவர்களை சேர்த்தால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் தமிழ்நாட்டில் நர்சரி மெட்ரிகுலேசன் பள்ளிகள், மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகள் என்று ஏராளமான பள்ளிகள் உள்ளன.

இவை அனைத்தும் சுயநிதி பள்ளிகள் ஆகும். இவற்றில் நர்சரி பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த இயக்கத்தின் இயக்குனராக பிச்சை இருக்கிறார். மெட்ரிகுலேசன் பள்ளிகள் பல ஜனவரி மாதத்திலேயே அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கி விடுகிறது. குறிப்பாக எல்.கே.ஜி. மாணவர்சேர்க்கை இப்போதே தொடங்கி விடுகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:–

ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக மாணவர் சேர்க்கை கூடாது தமிழ்நாட்டில் உள்ள எந்த மெட்ரிகுலேசன் பள்ளிகளிலும் இப்போது மாணவர்சேர்க்கை நடைபெறக்கூடாது. ஏப்ரல் 4–ந்தேதிக்கு பின்னர் தான் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும். அதற்கான விண்ணப்ப படிவங்களும் அதன் பின்னர்தான் வழங்கவேண்டும். முன்கூட்டியே எந்த பள்ளியும் மாணவர் சேர்க்கைக்கான எந்த முகாந்திரமும் தொடங்கக்கூடாது. அவ்வாறு எந்த பள்ளியாவது மாணவர் சேர்க்கை நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநகராட்சி மேயர்களை ‘‘மாண்புமிகு” என்ற அடைமொழியுடன் அழைக்கவேண்டும் அரசாணை

சென்னை, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச்செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:– மாநகராட்சி மேயர்கள் மற்றும் துணை மேயர்களை அழைப்பது குறித்தும், அவர்களுக்கு பதவிக்காலத்தில் வாங்க வேண்டிய வசதிகள் குறித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டன. 14.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் மாநகராட்சி மேயரை ‘மாண்புமிகு மேயர்’ அல்லது ‘மாண்புமிகு மன்றத் தலைவர்’ அல்லது மன்றத்தலைவி என்று அழைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

20.10.96 அன்று பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி, ‘மாண்புமிகு மேயர்’ என்று அழைக்கும் முறை ரத்து செய்யப்பட்டது. பழையபடி அவர்களை ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்று அழைக்கவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. தற்போது 10.12.14 அன்று பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைப்படி,, ‘வணக்கத்துக்குரிய மேயர்’ என்று அழைக்கும் நடைமுறைக்குப் பதிலாக ‘மாண்புமிகு மேயர்’ என்று அழைக்கவேண்டும் என்று அரசு கருதி அப்படியே ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வேலையில்லா பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு கல்வி உதவித் தொகை

வேலையில்லா இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு (ஒபிசி) புதிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதற்கு எப்போது விண்ணப்பிப்பது என்பன உள்ளிட்ட விவரங்கள் விரைவில் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு: பட்டப் படிப்பு முடித்து வேலை கிடைக்காத இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், புதிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒபிசி மாணவர்கள் 300 பேருக்கு முழு நேர பட்ட மேற்படிப்பு, எம்.ஃபில். அல்லது பிஎச்.டி. படிப்புகளை மேற்கொள்ள கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

உங்க மொபைல் ஹேங் ஆகாமல் தடுக்க இதோ சில டிப்ஸ்!


"ஹேங்" - சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கடுப்பேற்றும் விஷயம் இது!

இன்றைய யுகத்தில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத ஆட்களைக் காண்பது மிக மிக அரிது. அந்தளவிற்கு ஸ்மார்ட் போன்களின் மோகமும் பயன்பாடும் இன்று அதிகரித்துவிட்டது. ஆனால் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் அனைவருக்கும் தலைவலி கொடுக்கும் விஷயம் ’ஹேங்’ ஆவதுதான்.

இப்பிரச்னை ஆண்டிராய்டு மொபைல்களில் மட்டுமன்றி, ஐஓஎஸ் மொபைல்கள் வரை எல்லாப் போன்களிலும் சகஜமான விஷயம் தான்! கணினிகளும் ஹேங் ஆவது உண்டு!
நாம் அனைவரும் பல நேரங்களில் அவசரநிலையில் தான் இருப்போம். ஆனால் நம் மொபைல் போன் நாம் சொல்லும் பேச்சை என்றுமே கேட்பதே இல்லை. சரியான நேரம் பார்த்து திடீரென்று ஹேங் ஆகி விடும். இதனால் பலரும் அடிக்கடி மொபைல் போனை திட்டியது கூட உண்டு. அப்படிப்பட்ட ஹேங் மொபைல்களை எப்படிப் பழையபடி வேகமாகச் செயல்பட வைப்பது என்று இனி பார்ப்போம்.



*தேவையில்லாத ஆப்ஸ்களை அன் இன்ஸ்டால் செய்யவும்.

*எந்த ஆப்ஸ்களையும் அன் இன்ஸ்டால் செய்யும் செட்டிங்கில் டேட்டாவை க்ளியர் செய்துவிட்டு அன் இன்ஸ்டால் செய்யவும்.

*போன் செட்டிங்கில் சென்று ரன்னிங்கில் இருக்கும் அப்ளிகேஷன்களை Force stop கொடுக்கவும்.

*ஆண்டிராய்டு அசிஸ்டன்ட், க்ளீன் மாஸ்டர் போன்ற அப்ளிகேஷன்களைக் கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து Cache, thumbnails போன்றவற்றை க்ளீன் செய்யவும்.

*முடிந்த வரை ஸ்மார்ட் போன்கள் வாங்கும் போது 1ஜிபி ரேம் மற்றும் 1.2GHz பிராசசர் கொண்ட மொபைலை வாங்கவும்.

*மொபைல் போன்-க்கு வரும் எஸ்.எம்.எஸ்கள் மற்றும் மெயில்களைப் படித்துவிட்டு தேவையில்லை என்றால் உடனடியாக டெலீட் செய்யுங்கள்.

*மொபைலில் முடிந்தவரை தேவையான காண்டாக்ட்களை மட்டும் வைத்துக் கொண்டு மீது உள்ளவற்றை டெலீட் செய்து விடுங்கள்.

*ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்தால் மெமரி கார்ட்டில் இன்ஸ்டால் செய்யவும். போன் மெமரியில் செய்யாதீர்கள்.

*போன் மெமரியை எப்போதும் கால் பங்கு காலியாகவே வையுங்கள்.

*2 மாதத்திற்கு ஒரு முறை மொபைலை பேக்டரி ரீசெட் செய்யுங்கள். அப்படி ரீசெட் செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது மிக மிக முக்கியம். ஒருமுறைக்கு இரண்டு பேக் அப் எடுக்கப்பட்டுள்ளதா எனச் சோதித்துப் பார்த்துவிட்டு ரீசெட் செய்யுங்கள்.

*3 நாளைக்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது மொபைலை ஸ்விட்ச் ஆப் செய்து போடுங்கள்.

*அதிகக் கிளாரிட்டி மற்றும் அதிக MB ரிசொலியூசன் கொண்ட புகைப்படங்களை மெயின் ஸ்கிரீன்னில் வால்பேப்பராக வைக்காதீர்கள்.

*மெயின் ஸ்க்ரீன்னில் முடிந்த வரை எந்த icon-னின் shortcut-ம் வைக்காதீர்கள்.

*சில மொபைல்களில் மெமரி கார்டு-ல் புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் அதிகம் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புண்டு.

*மொபைலில் வைரஸ் இருந்தாலும் ஹேங் ஆக வாய்ப்புகள் அதிகம். மொபைலில் நிறுவப்பட்டுள்ள ஆண்டிவைரஸ் ஆப்ஸ்கள் சரியாக ஸ்கேன் செய்வதில்லை. இதற்கு மாற்றாக ஆண்டிவைரஸ் மென்பொருளை கணினியில் நிறுவி மாதமொரு முறை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.

*ப்ளே ஸ்டோரில் அங்கீகரிக்கப்பட்ட ஆப்ஸ்களை மட்டுமே இன்ஸ்டால் செய்யவும்.

*மொபைலின் மென்பொருளை தொடர்ந்து அப்டேட் செய்து கொண்டு வரவேண்டும்.

"இனியும் உங்க மொபைல் ஹேங் ஆனால் கம்மின்னு இத தூக்கி போட்டுட்டு வேற மொபைல் வாங்கிடுங்க பாஸ்!"

- ஜி.கே.தினேஷ்

Thursday, January 01, 2015

அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வருவார்களா? Dinamalar


தொழில் நகரமான திருப்பூரில், அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அதற்கு, தொழில் அமைப்புகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பனியன் ஏற்றுமதியில், ஆண்டுக்கு 18 ஆயிரம் கோடி, அன்னிய செலாவணி ஈட்டித்தரும் தொழில் நகரமாக திருப்பூர் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், பனியன் தொழில் அபரிமிதமான வளர்ச்சிப்பாதையில் சென்ற நிலையில் சாயக்கழிவு நீர், டாலர் மதிப்பு சரிவு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. எனினும், பிரச்னைகளில் இருந்து மீண்டு(ம்) எழுந்து, தற்போது வெற்றிப்பாதையில் பயணிக்கிறது.பனியன் வர்த்தகத்தில், உலகளவில் திருப்பூர் முக்கிய நகரமாக சிறக்க, தொழிலதிபர்களின் தீவிர முயற்சியும், திட்டமிடலும், தொழிலாளர்களின் அயராத உழைப்பும் அடித்தளமாக அமைந்தது. அதேநேரத்தில், நகர வளர்ச்சிக்காக, தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

நொய்யல் கரையை சுத்தப்படுத்துதல், வளம் ரோடு, ஆண்டிபாளையம் குளம் தூர்வாரும் பணி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், நலத்திட்ட உதவி வழங்குதல் என சமூக பணி தொடர்கிறது. தொழில் அமைப்பினரை நிர்வாகிகளாக கொண்டிருக்கும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மூலமாகவும், கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகளும் கட்டித்தரப்படுகின்றன.இதேபோல், திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளை, தத்தெடுக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தனியார் பள்ளிகளைபோல், அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த அரசு தரப்பில் திட்டங்களை செயல்படுத்தினாலும், அதற்கேற்ற கட்டமைப்பு வசதி, பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், வகுப்பறை, கழிப்பிட வசதி செய்தாலும், ஆண்டுதோறும் அதிகரிக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்பறை அவசியமாகிறது. மேலும், சமையல் கூடம், கலையரங்கம், சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி, பெஞ்ச், நாற்காலி, மேஜை, மின்விளக்கு மற்றும் மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், கம்ப்யூட்டர் வசதி, ஆய்வக உபகரணங்கள் உள்ளிட்ட பலவிதமான தேவைகள், அரசு பள்ளிகளில் போதுமானதாக இல்லை.

இன்றைய காலகட்டத்தில், கம்ப்யூட்டர் சார்ந்த அறிவு அவசியமாக மாறி விட்டதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பது மிக முக்கியமாகிறது; பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் வசதி போதிய அளவில் இல்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உடற்கல்வி ஆசிரியர்களும் இருப்பதில்லை; விளையாட்டில் ஆர்வம் இருந்தும், சரியான பயிற்சியின்றி பாதிப்படைகின்றனர். முறையாக விளையாட்டு பயிற்சி அளிக்கும் பட்சத்தில், விளையாட்டு கோட்டாவில், பணி வாய்ப்பு பெற முடியும்.
திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் பனியன் தொழிலாளர் குழந்தைகள். தொழில் அமைப்புகள், அப்பள்ளிகளை தத்தெடுத்தும் பட்சத்தில், பள்ளிக்கு செய்யும் நலத்திட்ட உதவிகள் மூலம், மறைமுகமாக தங்கள் நிறுவன தொழிலாளியின் குடும்பத்துக்கு உதவும் சூழலும் உருவாகும்.

திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம் கூறுகையில், ""தொழில் அமைப்புகள், அரசு பள்ளி களை தத்தெடுத்தால் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுக்கு சமுதாயத்துடன் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படும். தொழில் அமைப்பு ஆதரவு, பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்,'' என்றார். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; தொழில் அமைப்புகள், தங்கள் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியை தத்தெடுத்து, அதன் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

முயற்சிக்கலாமே!
திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும், தற்போது, தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், டாக்டர், வக்கீல்களாக திருப்பூரிலேயே வசிக்கின்றனர். முன்னாள் மாணவர் சங்கங்களிலும், பங்கு வகிக்கின்றனர். முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, முக்கிய தொழில் அமைப்புகளை அணுகி, பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.

பாடநூல்- கல்வியியல் கழக செயலராக அறிவொளி நியமனம்

தமிழ்நாடு பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளர் பொறுப்பு க.அறிவொளியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் இயக்குநராக அறிவொளி உள்ளார். பாடநூல்-கல்வியியல் பணிகள் கழகத்தின் செயலாளராக இருந்த அன்பழகன், கடந்த 31-ஆம் தேதியன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பொறுப்பு கூடுதலாக, அறிவொளியிடம் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் ஜன 5ல் வெளியீடு

வாக்காளர் இறுதி பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது. புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வாக்காளர் தினமான 25ம் தேதி அடையாள அட்டை வழங்கப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 2015ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியை அடிப்படையாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வந்தது. இதில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய அக்டோபர் 15ம் தேதி முதல் நவம்பர் 10ம் தேதி வரை (மொத்தம் 25 நாட்கள்) வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டன. மேலும், அக்டோபர் 26, நவம்பர் 2ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் புதிதாக வாக் காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 16,28,600 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், ஆன்லைன் மூலம் 62,303 பேரும், முகாம்களுக்கு நேரில் வந்து 15,66,297 பேரும் விண்ணப்பித்திருந்தனர். 6ஏ(வெளிநாடுவாழ் இந்தியர்) விண்ணப்பிக்க 225 பேரும், பெயரை நீக்க 42,832 பேரும், திருத்தம் செய்ய 2,86,208 பேரும், தொகுதி விட்டு தொகுதி மாற 1,10,555 பேர் என மொத்தம் 20,68,420 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

பின்னர், விண்ணப்பத்தில் அளிக்கப்பட்டுள்ள விவரங்களை வைத்து வீடு, வீடாக சென்று கள விசாரணையை தேர்தல் அதிகாரிகள் நடத்தினர். கள விசாரணையின் போது விவரங்கள் தவறானவை என சிலருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர் ந்து சம்பந்தப்பட்ட வாக் காளர் பதிவு அதிகாரிகளால் உரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன. இந்நிலையில், புகைப்படத்து டன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 5ம் தேதி வெளியிடப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அமைவிடங்கள், அந்தந்த மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொது மக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். புதிதாக விண்ணப்பித்தோருக்கு வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் தினமான வரும் 25ம் தேதி வழங்கப்படும். இது குறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 5ம் தேதி வெளியிடப்படும். அதன் பின்னரும் வாக்காளர்கள் பட்டி யலில் சேர்க்கும் பணி நடைபெறும். வாக்காளர் பட்டியலில் அனைத்து வாக்காளர்களையும் சேர்க்க நடவ டிக்கை எடுக்கப்படும். இதற்காக பிரசாரம் மேற்கொள்ளப்படும்‘ என்றனர்.

பள்ளி பாதுகாப்பு குறித்து தொடக்ககல்வி இயக்குநரின் செயல்முறைகள்

அகஇ - தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு BRITISH COUNCIL மற்றும் அகஇ இணைந்து "EARLY LITERACY PROGRAMME (DEVELOPING READING, WRITING SKILLS IN ENGLISH) என்ற தலைப்பில் 4 நாட்கள் வட்டார அளவில் பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 05.01.2015 அன்று கலந்துகொள்ளும் ஆசிரியர்கள் பள்ளிகளில் நடைமுறைபடுத்தி
அடுத்தபடியாக 19.01.2015, 27.01.2015 மற்றும் 03.02.2015 ஆகிய தேதிகளில் கலந்துகொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரிய புதிய நடைமுறை

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வு முறையில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. போட்டித்தேர்வு எழுதுவோரின் புகைப்படம், அவர் தேர்வு எழுதும் பதிவு எண், அவருடைய பெயர் ஆகியவை தேர்வு எழுதும் முதல் தாளில் அச்சாகிறது.

இந்த புதிய முறை வருகிற 10–ந் தேதி நடக்கும் முதுகலை பட்டதாரிகளுக்கான தேர்வில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

புதிய முறை
சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் ஆசிரியர் தேர்வு மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் தலைவராக விபுநய்யர் என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி உள்ளார்.

அரசின் வழி காட்டுதலின் படி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் புதிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அதன்படி தேர்வு எழுதுவோரின் ஓ.எம்.ஆர்.சீட்டில் ஒரு முறை ஒரு பதிலை எழுதிவிட்டு மறுபடி அதை அவரே நினைத்தாலும் திருத்தி எழுத முடியாது.

மேலும் தேர்வு எழுதுவோரின் புகைப்படம், தேர்வு எழுதுவோரின் பெயர், பதிவு எண் ஆகியவை ஓ.எம்.ஆர்.சீட்டின் முதல் பக்கத்தில் அச்சாகி இருக்கும்.

தேர்வு எழுதுவோர் எந்த காரணத்தை கொண்டும் அவரது பெயரையோ, அவரது தேர்வு எண்ணையோ எழுதத் தேவை இல்லை.

10–ந்தேதி அறிமுகம்
இந்த புதிய முறை வருகிற 10–ந்தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகக் கிடக்கும் 1,807 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு போட்டித்தேர்வு ஜனவரி 10–ந்தேதி நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது.

மாணவியர்கள் பள்ளிக்கு குழுவாக வந்து செல்ல வேண்டும்: தொடக்கக்கல்வி இயக்குநர் அறிவுரை

மாணவியர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்கள் குழுவாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்று அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது. இதுகுறித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கும் தொடக்கக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கடிதம் அனுப்பியுள்ளார்.

கடித விபரம்: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை தொடக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு வருகை தரும்போதும் தனித்தனியாக செல்லாமல், மாணவிகள் சிலர் சேர்ந்து குழுவாக பாதுகாப்பாக செல்லவேண்டும். இது குறித்து பெற்றோர்களை கூட்டி, தக்க அறிவுரைகள் வழங்கும்படியும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூட மாணவர்கள் பேருந்துகளில் பயணம் செய்யும்போது உயிருக்கு பாதுகாப்பற்ற நிலையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

ஆட்டோ ரிக்க்ஷாக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் மாணவர்கள் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது குறித்து இறைவணக்க கூட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். டெங்கு, சிக்குன் குன்யா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் மூலம் தக்க அறிவுரை வழங்கப்பட வேண்டும். பள்ளிக்கூட வளாகத்தில் மாணவர்களுக்கு எட்டக்கூடிய வகையில் மின்சாதன பொருட்கள் இருக்கக்கூடாது.

மின்சார வயர்கள் செல்வதை அனுமதிக்கக்கூடாது. மாணவ-மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தையும், நல்ல நெறிமுறைகளையும் பின்பற்ற ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளுக்கு உடற்பயிற்சி, யோகா கற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும். மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லும்போதும், வீட்டுக்கு செல்லும்போதும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை தலைமை ஆசிரியர் எடுக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

CPS statement

Click below

http://218.248.44.123/auto_cps/