பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்ட அட்டவணையில் திருத்தமோ மாற்றமோ செய்யவில்லை என்று தேர்வுத் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19ம் தேதியும் தொடங்கும் என்று கடந்த 4ம் தேதி அரசுத் தேர்வுகள் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு நாளிதழ் நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டு இருந் தது. அதில் 24ம் தேதி நடக்க உள்ள தமிழ் 2ம் தாள் தேர்வு 20ம் தேதியே நடக்கும் என்று குறிப்பிட்டு இருந்தது.
இதனால் மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்து, தேர்வுத்துறைக்கு மாணவர்கள் மட்டுமின்றி சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் தொடர்பு கொண்டு தகவல் கேட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தேர்வுத்துறை நேற்று மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் மறுப்பு அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒன்று. எனவே தேர்வுகள் தொடர்பான சரியான செய்திகள் மாணவர்களை சென்றடைவது மிக அவசியம். தவறான செய்திகள் பெற்றோர், மாணவர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தும். தேர்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளுமே தேர்வுத்துறையால் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் வாயிலாக பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்.
தேர்வுக்கால அட்டவணை போன்ற அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் மட்டும் கூடுதலாக பத்திரிகை, டிவி வாயிலாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும். 10ம் வகுப்பு தேர்வுக்கான அட்டவணையில் மாற்றம் இல்லாத நிலையில் கடந்த வாரத்தில் ஒரு சில நாளிதழ்களில் 10ம் வகுப்பு கால அட்டவணை மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியிட்டன. இது தவறான செய்தி. பத்தாம் வகுப்பு தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு தேர்வுத்துறை இயக்குநர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.