அரை யாண்டு தேர்வு மற்றும் பொதுத் தேர்வு நடப்பதை அடுத்து பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர் உத்தரவு வழங்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு பிறகு மே அல்லது ஜூன் மாதங்களில் தொடக்கப்பள்ளி, பள்ளி கல்வித்துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கவுன்சலிங் மூலம் பணியிட மாற்றம், பதவி உயர்வு அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.
அதில், மாவட்டம் விட்டு மாவட்டம், ஒன்றி யம் விட்டு ஒன்றியம் உள்ளிட்ட பணியிட மாற்றங்களுக்கான கவுன்சலிங் சென்னையில் நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பதவி உயர்வு, பணியிட மாற்றம் கடந்த ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்தி முடிக்கப்பட்டது. இதில் பல குளறுபடிகள் நடந்ததை அடுத்து, பள்ளிக் கல்வித்துறை செயலாளரு க்கு பல புகார்கள் வந்தன. இதன் பேரில் தற்போதைக்கு பணியிட மாற்ற உத்தரவுகள் ஏதும் வழங்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 அரையாண்டு தேர்வு நேற்று முன்தினம் தொடங்கின.
பத்தாம் வகுப்பு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகின்றன. இந்த நேரத்தில் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டால் தேர்வுகளை சரியாக நடத்த முடியாது. அதேபோல, பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளன. அதனால் ஆசிரியர்கள் மாறுதல் செய்யப்பட்டால் தேர்வுக்கான பாடங்களை நடத்த முடியாத நிலை ஏற்படும் என்று பள்ளிக் கல்வித்துறை கருதுகிறது. எனவே, பணியிட மாறுதல்களை மே மாதம் வரை செய்யக்கூடாது என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.