இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, January 03, 2014

10ம் வகுப்பு மாணவர்களுக்கு முப்பருவ முறை கல்வி: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தகவல்

எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு, முப்பருவ முறை அமல்படுத்துவது குறித்து, தீவிரமாக ஆலோசித்து வருவதாக, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் வீரமணி தெரிவித்தார். தமிழகத்தில், முப்பருவ முறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. சமச்சீர் பாடத்திட்டத்தை, மூன்றாக பிரித்து, ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக, அக, புற மதிப்பீட்டின் படி தேர்ச்சி கணக்கிடப்படுகிறது. அக மதிப்பீட்டின் படி மாணவர்களின் தனித்திறனுக்கு 40 மதிப்பெண்களும், எழுத்து தேர்வுக்கு 60 மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.

மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் "கிரேடு' மதிப்பிடப்படுகிறது. அரசாணையின் படி, 2013- 14 கல்வியாண்டில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும், 2014- 15ம் கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கும் முப்பருவ முறை அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுகுறித்த இறுதியான தகவல்களை பள்ளிக்கல்வித்துறை இதுவரை வெளியிடவில்லை. இதுகுறித்து, பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின் அரசு ஒப்புதலுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது. மேலும், முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டாலும், எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தற்போதைய முறையிலேயே, நடத்தப்பட வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் வீரமணி கூறுகையில், "" எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவமுறை அமல்படுத்துவது குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் கல்வியாண்டில் அமல்படுத்தப்படுமா என்ற இறுதி முடிவு மேற்கொள்ளப்படவில்லை, '' என்றார்.

மார்ச் இறுதியில் பள்ளிகளில் அடிப்படை வசதி: பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் உத்தரவு

மார்ச் இறுதிக்குள் அனைத்துப்பள்ளிகளிலும் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். கோவை, கரூர், திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு ஆய்வுக்கூட்டம் கோவை ஜி.டி., அரங்கில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமையில், நேற்று நடந்தது

  இக்கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், 347 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 27 பள்ளிகளில் முழுமையான கழிப்பறை வசதி, திருப்பூர் மாவட்டத்தில் 235 பள்ளிகளில் குடிநீர் வசதிகளும், 113 பள்ளிகளில் போதுமான கழிவறை வசதிகளும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் உச்சநீதிமன்ற உத்தரவின் படி வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையே இதன் முழு பொறுப்பும் சேரும். வரும் கல்வியாண்டில், கரூர், கோவை, திண்டுக்கல், திருப்பூர், ஊட்டி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் மட்டும் 70 நர்சரி பிரைமரி பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட உள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை தவிர்க்க முன்நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் 95 சதவீத இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவசியம். இவ்வாறு, சபிதா பேசினார். இக்கூட்டத்தில் 100 சதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள், ஆசிரியர்களுக்கு கேடயங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வீரமணி வழங்கினார்.

Thursday, January 02, 2014

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், மூத்த விரிவுரையாளர் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 21

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

01. Superintendent (Legal) - 01

02. Professor of Political Theory & Constitutional Law - 01

03. Senior Lecturer (Biochemistry) - 03

04. Senior Lecturer (Dentistry) - 01

05. Senior Lecturer (Tuberculosis and Respiratory Diseases) - 01

06. Professor in Civil Engineering (Technical) - 01

07. Associate Professor in Civil Engineering (Technical) - 05

08. Associate Professor in Information Technology (Technical) - 05

09. Associate Professor in Mechanical Engineering (Technical) - 01

10. Assistant Professor in Information Technology (Technical) - 02

வயதுவரம்பு: 55 வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் M.D, MBBS, BDS, M.Sc, B.E., B.Tech , M.E, M.Tech, Ph.D முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை Net banking ,master credit,debit card போன்ற முறைகளில் செலுத்தலாம். தாழத்தப்பட்டோர், பழங்குடியினர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.01.2014

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட நகல் சென்று சேர கடைசி தேதி: 17.01.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை 2015 வரை ஓய்வுபெறும் முதுகலை ஆசிரியர் விபரம் மீண்டும் சேகரிப்பு

காலி பணியிடங்களை நிரப்பும் நடவடிக்கையாக வரும் இரண்டாண்டுகளில் ஓய்வு பெறும் முதுகலை ஆசிரியர் விபரங்களை வரும் 2015ம் ஆண்டுவரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கல்வித்துறையில் ஆசிரியர்கள் நிலையில் ஆயிரக்கணக் கில் காலியிடங்கள் ஏற்பட்டு வருகிறது. இதனை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங் களை நிரப்பிட காலி பணியிடங்கள் பற்றிய உத்தேச மதிப்பீட்டை அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டி கடந்த நவம்பர் மாதம் சேகரிக்கப்பட்டது.

அதில், முதுகலை ஆசிரியர்களில் 2014 மே மாதம் 31ம் தேதி ஓய்வு பெறுகின்றவர்கள், 2015ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி ஓய்வுபெறுகின்றவர்கள் விபரத்தை சேகரித்து அனுப்ப முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். இதில் தற்போது முதுகலை சிறுபான்மை மொழி மற்றும் சிறுபான்மை மொழிவழி முதுகலை பாடங்களில் காலியாக உள்ள பணியிடங்க ளின் விபரங்களையும், மொழிவாரியாக பாடவாரியாக தனித்தனியே சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என்றும் புதிதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளியின் பெயர், ஓய்வுபெறும் ஆசிரியர், பாடம், மொழி, எந்த தேதி முதல் காலியாக உள்ளது, காலியேற்பட காரணம், யாரால், எதனால் பணி ஓய்வு, பணியிடம் அனுமதிக்கப்பட்டுள்ள அரசாணை எண் மற்றும் நாள், உபரி பணியிடம் நிரப்ப தகுதியில்லை எனில் அது தொடர்பான விபரம் போன்றவற்றையும் முழுமையாக சேகரித்து அனுப்ப வேண்டும் என பள்ளி கல்வி இணை இயக்குநர் (மேல்நிலை கல்வி) பாலமுருகன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

பொது தேர்வில் தேர்ச்சி பெற வினா விடை கையேடு

    பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களில், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, பாட வல்லுனர் குழுவினர் 'சிறப்பு வினா விடை கையேடு' தயாரித்துள்ளனர். இதைகொண்டு, காலை, மாலை வேளைகளில், மாணவர்களுக்கு படம் நடத்தி, அரசு பொது தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி அடைய செய்யும் முயற்சியில், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச்., 26, பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 3 ல் அரசு பொது தேர்வு துவங்க உள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற, வினா விடை கையேடு தயாரிக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதை தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரைப்படி, பள்ளிகளில் 20 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்து, 100 சதவீத தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்கள், ஒவ்வொரு பாடத்திற்கும் வினா விடை கையேடு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதை, தமிழ், ஆங்கிலம் என,இரண்டு மொழிகளில் தயாரித்து, புத்தகமாக வெளியிட்டுள்ளனர். இதன் மூலம், தேர்ச்சியில் பின் தங்கிய மாணவர்களுக்கு, காலை, மாலை வேளைகளில், சிறப்பு வகுப்பு எடுக்க உள்ளனர். 'இதன்படி மாணவர்கள், அரசு பொது தேர்வில், 100 சதவீத தேர்ச்சி அடைய முடியும்,' என, கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரட்டைப்பட்ட வழக்கு மீண்டும் வழக்கம் போல வாய்த்த வாங்கியதால் 7.1.2014-க்கு ஒத்திவைப்பு


  இன்று (2.1.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் விசாரணைக்கு வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதிமன்றத்திற்கு முதல் வேலை நாள் என்பதால் வழக்கு தன் நிலையை காலையிலேயே எட்டிப்பிடித்தது. ஒரு வருட வழக்கறிஞர் வழக்கம் போல வாய்த்த வாங்கியதால் வருகிற 7.1.2014, செவ்வாய் கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Wednesday, January 01, 2014

மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி 16–ந்தேதி நடக்கிறது

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நாடு தழுவிய அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அதே தேதியில் தேர்வு நடத்தப்பட உள்ளது. 1–வது வகுப்பு முதல் 5–வது வகுப்புவரை பாடம் சொல்லிக்கொடுக்க தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–1 எழுதவேண்டும். 6–வது வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை பாடம் நடத்த தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–2 எழுதவேண்டும். இரு தாள்களும் எழுத விரும்புவோர் இரு தாள்களையும் எழுதலாம்.

2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி  உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்....

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் வரிசை எண் 50 ல்  வழக்கு விசாரணைக்கு வருகிறது. மேலும் ஏற்கனவே அரசு சார்பில் மூன்று வருட பட்டப்படிப்பே சிறந்தது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.இனி வருங்காலங்களில்  மூன்று வருட பட்டப்படிப்பு  வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு எடுத்துகொள்ளப்படும் என்று அரசு முடிவு எடுத்துள்ளதால் நாளை வழக்கு முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு

'அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை, http://tamilvu.orgல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.

கிறுக்கல் நோட்டுகளை வங்கிகள் ஏற்கும்: வதந்திகளை மறுத்து ஆர்.பி.ஐ., அறிவிப்பு

'ரூபாய் நோட்டுகளில், ஏதேனும் எழுதப்பட்டிருந்தாலோ அல்லது கிறுக்கியிருந்தாலோ, அந்த நோட்டுகள், ஜனவரி, 1ம் தேதி முதல் செல்லாது; அந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளும் ஏற்காது' என, சில மாதங்களுக்கு முன், தவறான செய்தி, சிலரால் பரப்பப்பட்டது. இதையடுத்து, ஏராளமான பொதுமக்கள், புத்தாண்டிற்கு முன், தங்களிடம் இருந்த கிறுக்கல் ரூபாய் நோட்டுகளை, வங்கிகளில் கொடுத்து, புதிய நோட்டுகளை பெற்று வந்தனர். 'நீட் அண்டு கிளீன் பாலிசி': மக்களிடையே ஏற்பட்ட பீதியை தணிக்கும் விதத்தில், ரிசர்வ் வங்கி, நேற்று விளக்கம் அளித்துள்ளது. அறிக்கையில், ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது:

ரூபாய் நோட்டுகளை சுத்தமாகவும், அழுக்குபடாமலும் பாதுகாக்க, கடந்த ஆகஸ்ட் மாதம், ஆர்.பி.ஐ., அனைத்து வங்கிகளுக்கும், 'நீட் அண்டு கிளீன் பாலிசி' சுற்றறிக்கை அனுப்பியது. அதில், வங்கி ஊழியர்களுக்கு சில குறிப்புகள் சொல்லப்பட்டிருந்தன. ரூபாய் நோட்டுகளை சுத்தமாக வைத்திருக்கவும், அசிங்கப்படுத்தாமலும் இருக்க, 'வாடிக்கையாளர்களை அதில் எவ்வித எழுத்துக்களையும் எழுத வேண்டாம்' என, அறிவுறுத்துமாறு ஆர்.பி.ஐ., கூறியிருந்தது. மேலும், சில வங்கி ஊழியர்களிடம், ரூபாய் நோட்டுகளில் எழுதும் பழக்கம் உள்ளது. அவர்களை இனி, அவ்வாறு எழுத வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டடனர். நம்ப வேண்டாம்: இந்த நடவடிக்கைகளின் மூலம், எதிர்காலத்தில் அழுக்கற்ற ரூபாய் நோட்டுகளை பராமரிக்க முடியும். எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகள், வங்கிகளில் வாங்கப்படாது என்ற வதந்தியை, பொதுமக்கள் நம்ப வேண்டாம். அனைத்து வங்கிகளும், அவ்வகை நோட்டுகளை பெற்றுக் கொள்ளும். இவ்வாறு, ஆர்.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளிகளும் இன்று திறப்பு

   ஒன்பது நாள் விடுமுறைக்குப்பின், மாநிலம் முழுவதும், பள்ளிகள், இன்று திறக்கப்படுகின்றன. அரையாண்டு தேர்வுக்குப்பின், பள்ளிகளுக்கு, கடந்த, 24ம் தேதி முதல், நேற்று வரை, ஒன்பது நாள், விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று, அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பில், செய்முறை தேர்வு குரூப் கொண்ட மாணவர்களுக்கு, இம்மாத இறுதிக்குள், தேர்வு பதிவு எண் வழங்கப்பட உள்ளது. பிப்ரவரி, முதல் வாரத்தில் இருந்து, செய்முறைத் தேர்வு துவங்கிவிடும் என்பதால், இந்த ஒரு மாதம் வரை மட்டுமே, பள்ளிகள், முழுமையான அளவில் செயல்படும்.

Monday, December 30, 2013

தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசாணை விவரம்:-  பேரவையில் 2013-14-ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது, அரசு ஊழியர்களுக்காக தனியாக உடல்நல காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த திட்டத்தை ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் ஆகியோருக்கும் விரிவுபடுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய காப்பீட்டு திட்டம் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் வரை ரூ.2 லட்சம் அளவுக்கு ஓய்வூதியதாரர் மற்றும் அவரது வாழ்க்கைத் துணை அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் பயனடையலாம். ஒரு குடும்பத்தில் இரண்டு அரசு ஊழியர் இருந்தால், அதில் ஒருவர் மட்டும் இந்த திட்டத்துக்கான பிரிமியம் செலுத்தினால் போதுமானது. இந்தத் திட்டம், அரசு கருவூலம் மற்றும் கணக்கு ஆணையர் அலுவலகம் மூலம் அமலாக்கப்படும்.

காப்பீட்டு நிறுவனத்தை தேர்வு செய்த பிறகு, இந்த திட்டத்தில் ஓய்வூதியதாரரின் பங்களிப்பு எவ்வளவு என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

டிட்டோஜாக் தலைவர்கள் அதிகாரிகளுடன் சந்திப்பு, இன்றைய சந்திப்பின் போது தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் கலந்து கொண்டது

இன்று சென்னையில் டிட்டோஜாக்கில் உள்ள 7 சங்க தலைவர்களும் தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் சந்தித்து மனு அளித்தனர். பின்பு தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே முடிவின் படி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து இன்றும், நாளையும் மனு கொடுக்க இருந்தனர்.

இதையடுத்து இன்று அதிகாரிகள் சந்திப்பு நடந்தது, நாளை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சந்திப்பின் போது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் உடன் இருந்தது.

Sunday, December 29, 2013

குரூப் - 1 தேர்வு ஏப்., 26ம் தேதி நடக்கிறது

டி.எஸ்.பி., உள்ளிட்ட பணியிடங்களுக்கான, டி.என்.பி.எஸ்.சி., குருப் 1 முதல்நிலை தேர்வு, ஏப்., 26ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் காலியாக உள்ள, துணை கலெக்டர் 3, டி.எஸ்.பி., 33, வணிக வரித்துறை உதவி ஆணையர் -0 33, உதவி இயக்குனர் 10 ஆகிய பணியிடங்களுக்கு, தகுதியானவர்களை நியமிப்பதற்கான, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வுக்கு, ஜன., 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த ஜன., 30ம் தேதி கடைசி நாள். முதல்நிலை தேர்வு ஏப்., 26ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Saturday, December 28, 2013

பல்கலைக்கழக மானியக் குழு நடத்தும் தேசியத் தகுதித் தேர்வு-நெட்' நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது

   இந்தத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்வதற்கான தகுதியைப் பெறுவர். டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் 47 மையங்கள்: சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ், எத்திராஜ், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கல்லூரி, புதுக் கல்லூரி, ஜஸ்டிஸ் பஷீர் அகமது சயீத் பெண்கள் கல்லூரி என 13 மையங்களிலும், கோவையில் 9 , திருச்சியில் 10 மற்றும் மதுரையில் 15 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறுகிறது.

தனியார் பள்ளிகளின் விதிமீறலை தடுக்க பிளஸ்1வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை

'தனியார் பள்ளிகள், அரசு விதிமுறைகளை மதிக்காமல், பிளஸ் 1 வகுப்பில், முழுக்க முழுக்க, பிளஸ்2 பாடத்தையே நடத்துகின்றன. இதை தவிர்க்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், முப்பருவ கல்வி முறையை, தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்' என, கல்வித் துறை வலியுறுத்தி உள்ளது. பிரமாண்ட வளர்ச்சி: தனியார் பள்ளிகளின் வளர்ச்சி யில், பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள், 100 சதவீத பங்கை வகிக்கின்றன. 100 சதவீத தேர்ச்சி மற்றும் மாநில அளவில், குறிப்பிடத்தக்க இடங்களை பெறுவதன் மூலம், நாமக்கல், கிருஷ்ண கிரி, ஈரோடு உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகள், பிரமாண்ட வளர்ச்சியை பெற்றுள்ளன.

வட மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், தங்கள் பிள்ளைகளை, இந்த மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் சேர்த்து, லட்சக்கணக்கில் செலவழிக்கின்றனர். தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும், பிளஸ்1 வகுப்பிலும், அந்த வகுப்பிற்குரிய பாடங்களுக்கு, முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒன்பதாம் வகுப்பில், 10ம் வகுப்பு பாடத்தை நடத்துவதை யும், பிளஸ்1 வகுப்பில், பிளஸ்2 பாடத்தை நடத்துவதையும், பல ஆண்டுகளாக, கடைப்பிடித்து வருகின்றனர். இரு ஆண்டுகள், ஒரே பாடத்தை படிப்பதன் மூலம், மாணவர்களுக்கு, பாடப் பகுதிகள், நன்றாக மனப்பாடம் ஆகிவிடுகின்றன. தேர்வில், சாதிப்பதற்கு, இதுவே காரணமாக உள்ளது. இதுபோன்ற விதிமீறலை தடுக்கவும், பிளஸ்1 வகுப்பிற்கு, உரிய முக்கியத்துவம் அளிக்கவும், இந்த வகுப்பிலும், முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தலாம் என, கல்வித் துறை கருதுகிறது. அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பிளஸ்1 வகுப்பு, பெயர் அளவிற்குத் தான் உள்ளது. பாடமும், சரியாக நடத்துவதில்லை; தேர்வும், முறையாக நடப்பதில்லை. முப்பருவ கல்வி முறையை அமல்படுத்தினால், தனியார் பள்ளிகள் உட்பட, அனைத்து வகை பள்ளிகளிலும், முறையாக, பிளஸ்1 வகுப்புகள் நடக்கும். குழப்பம்: அந்தந்த பருவ பாடங்களை, ஆசிரியர் நடத்துவர்; தேர்வும் முறையாக நடக்கும். இதனால், முன்கூட்டியே, பொது தேர்வு பாடங்களை நடத்துவதையும் தடுக்க முடியும். தற்போது, ஒன்பதாம் வகுப்பிலும், முப்பருவ கல்வி முறை அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால், அனைத்து பள்ளிகளிலும், ஒன்பதாம் வகுப்பு பாடங்கள், சரியாக நடக்கின்றன. 10ம் வகுப்பு பாடத்தை, முன்கூட்டியே நடத்துவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

பத்தாம் வகுப்பிற்கு, முப்பருவ கல்வி முறை வருவதே, பெரும் குழப்பத்தில் உள்ள நிலையில், பிளஸ்1 வகுப்பிற்கு வருமா என்பது, கேள்விக்குறியே.

முதுகலை ஆசிரியராக 733 பேருக்கு "புரமோஷன்'

முதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, நேற்று நடந்த கலந்தாய்வில், பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன. பட்டதாரி ஆசிரியரில், முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த, 897 பேருக்கு, பதவி உயர்வு வழங்க, மாநிலம் முழுவதும், நேற்று, கலந்தாய்வு நடந்தது. 3,000 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலியாக இருந்தும், கடைசியில், 733 பேர் மட்டுமே, பதவி உயர்வு பெற, முன் வந்தனர். இவர்களுக்கு மட்டும், பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன. பதவி உயர்வு இடம், எதிர்பார்ப்பிற்கு மாறாக, நீண்ட தொலைவில் இருந்ததால், 164 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 40, திருவள்ளூரில், 31, வேலூரில், 47, சேலத்தில், 48 பேர், பதவி உயர்வு பெற்றனர். சென்னை மாவட்டத்தில், ஐந்து காலி பணியிடங்கள் மட்டுமே இருந்தன. கலந்தாய்வில், 26 பேர், பங்கேற்றபோதும், "சீனியர்' ஐந்து பேர், காலியிடங்களை தேர்வு செய்தனர். இதனால், 21 பேர், பதவி உயர்வை புறக்கணித்தனர்.

TNPSC Group I Notification

Friday, December 27, 2013

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது. ரூ.177 கோடி ஒதுக்கீடு பின்தங்கிய ஒன்றியங்களில் மாதிரி பள்ளிகளை தொடங்கும் மத்திய அரசின் திட்டப்படி, தமிழ்நாட்டில் 44 மாதிரி பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் 11 பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டும் பணி முடிந்துவிட்டது. 7 பள்ளிகளுக்கு கட்டிட பணி முடியும் நிலையில் உள்ளது. 2–வது கட்டமாக 26 பள்ளிகளுக்கும், விடுதிகளுக்கும் கட்டிடம் கட்டப்பட உள்ளது.

இதற்காக மத்திய அரசு கொடுத்த நிதியுடன், கட்டிட செலவு அதிகரித்துள்ளதால் மத்திய அரசு கொடுத்த நிதி போக, தேவைப்படும் எஞ்சிய நிதியையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. அதன்படி ரூ.177 கோடியே 44 லட்சத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழங்கி உள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 500 பள்ளிகளை தரம் உயர்த்த இடைநிலை கல்வி திட்டத்தின்படி வருகிற கல்வி ஆண்டில் 500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம் என்றும் அவர் கூறினார்.