தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் குழப்பத்தில் உள்ளனர். ஆசிரியர்களுக்கான சம்பள முரண்பாடு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை அளித்த "மூன்று நபர் கமிஷன்' பரிந்துரைப்படி, பத்து ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றிய தேர்வுநிலை ஆசிரியர்களுக்கும், 20 ஆண்டுகள் பணியாற்றிய சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கும், 3 சதவீதமாக இருந்த ஊக்க சம்பளம் 6 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
அரசு உதவி பெறும் பள்ளிகளில், அரசு முதுநிலை ஆசிரியர்கள் புகாரின்றி 30 ஆண்டுகளை கடந்து பணியாற்றும் "சூப்பர் கிரேடு' ஆசிரியர்களுக்கான ஊக்க சம்பளம் தொடர்பாக எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை. மாநிலத்தில் 10 ஆயிரம் "சூப்பர் கிரேடு' (30 ஆண்டுகள் பணியாற்றிய) ஆசிரியர்கள் மனஅழுத்தத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் ஓய்வு வயதை எட்டியுள்ளனர். மேல்நிலை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவண முருகன் கூறியதாவது:
ஆசிரியர்கள் சம்பள முரண்பாடுகளை களைய தமிழக அரசு இதுவரை 89 அரசாணைகள் வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித் துறை சார்பில் மூன்று அரசாணைகள் வெளியிடப்பட்டன. இதில் அரசாணை 23ன் படி, தேர்வு நிலை, சிறப்பு நிலை ஆசிரியர்களுக்கு ஊக்க சம்பளம் அளிக்கப்பட்டது. ஆனால், அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணியாற்றி, பதவி உயர்வு இல்லாத "சூப்பர் கிரேடு' ஆசிரியர்களுக்கு, "மூன்று நபர் கமிஷன்' பரிந்துரையின்படி ஊக்க சம்பளம் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்நிலை அரசு மேல்நிலை பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கும் நீடிக்கிறது. கமிஷன் பரிந்துரை 30 ஆண்டு பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் பொருந்துமா? என அரசு விளக்கமளித்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றார்.