தொழிற்கல்வி மற்றும் முதுநிலை பட்டதாரிகள், கல்வித் தகுதியை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (மதுரை) "ஆன்லைனில்' பதிவு செய்யலாம். சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்த அலுவலகத்தின் கிளை, மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மாடியில் உள்ளது.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, நீலகிரி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், புதுக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்தினர், இங்கு பதிவு செய்ய வேண்டும். இதனால், பதிவு செய்வோருக்கு அலைச்சல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க "ஆன்லைன்' பதிவு திட்டம் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், பலர் இம்முறையை அறியவில்லை. புதிதாக பதிவு செய்வோர், "www.tnvelaivaaippu.gov.in' என்ற முகவரியில் சென்று, "நியூ யூசர் ஐ.டி., ரெஜிஸ்ட்ரேசன்' என்பதை "கிளிக்' செய்து விபரங்களை பதிவு செய்யலாம்.
பழைய பதிவுதாரர்கள், "யூசர் ஐ.டி.,' யாக தங்கள் பதிவெண்ணையும், "பாஸ்வேர்டு' ஆக, பிறந்த தேதியையும் பதிவு செய்து, புதுப்பித்தல், கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். இதில் "யூசர் நேம்' இடத்தில் "பதிவு எண்ணை' ஆண்டுடன் இணைத்து, "ஆண், பெண்' என்பதன் முதல் எழுத்தை சேர்த்து 16 இலக்கமாக மாற்றி, பதிய வேண்டும். உதாரணமாக, "1998எம்டி1928' என்ற பதிவு எண் கொண்டவர், "யூசர் ஐ.டி.,' யில் "எம்டிபி1998எம்00001928' என, பதிவு செய்து, அவரது பிறந்த தேதியையும் பதிய வேண்டும். ""ஏற்கனவே, பதிவு செய்து குறித்த காலத்திற்குள், புதுப்பிக்கத் தவறியவர்கள், 18 மாத கால அவகாச சலுகையில், "ஆன்லைன்' மூலம் புதுப்பிக்கலாம்.
இதற்காக, அலுவலகத்திற்கு நேரில் வரத்தேவையில்லை,'' என, வேலைவாய்ப்பு அலுவலர் எம்.கருணாகரன் தெரிவித்தார்.