இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, August 03, 2013

டி.ஆர்.பி., புதிய தலைவராக விபு நய்யார் பதவியேற்றார்

டி.ஆர்.பி., புதிய தலைவராக, விபு நய்யார், பதவியேற்றார். டி.ஆர்.பி., தலைவர் பதவியில், இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த சுர்ஜித் சவுத்ரி, மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டு, தேசிய சிறுபான்மை ஆணையத்தின் செயலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., பதவியில் இருந்து, விடை பெற்றார். இவரது காலத்தில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களைக் கொண்டு, ஏழு லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் பங்கேற்ற டி.இ.டி., தேர்வை, வெற்றிகரமாக நடத்தினார். இரு டி.இ.டி., தேர்வுகள், முதுகலை ஆசிரியர் தேர்வு உட்பட, பல வகையான தேர்வுகளை, வெற்றிகரமாக நடத்தினார். டி.ஆர்.பி., புதிய தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி விபு நய்யார், நேற்று முன்தினம், பதவி ஏற்றுக் கொண்டார். வரும், 17, 18ம் தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வு, புதிய தலைவர் மேற்பார்வையில் நடக்க உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக 30 ஆயிரம் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பிளஸ் 2 தேர்வில் ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட சில பாடங்களில் அதிகளவில் மாணவர்கள் தொடர்ந்து தோல்வியடைகின்றனர். இதையடுத்து, மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் முடிவு எடுத்தது. தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து செப்டம்பர் 15 வரை பயிற்சிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாடப்புத்தகங்களை எழுதிய ஆசிரியர்கள், நிபுணர்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட அளவிலான தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் சென்னையில் வரும் 12-ம்தேதி வரை பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து 2 கல்லூரி பேராசிரியர்கள், 2 மூத்த முதுநிலை ஆசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி நிறுவன விரிவுரையாளர் என 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 30 மாவட்டங்களையும் சேர்த்து மொத்தம் 160 பேருக்கு பயிற்சி வழங்கப்படும். இவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களோடு ஆலோசனை நடத்தி மாவட்டத்தில் உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்க உள்ளனர்.

என்ன மாதிரியான பயிற்சி? ஒவ்வொரு பாடத்திலும் உள்ள கடினமான பகுதிகள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு விளக்கம் தரப்படும். மாணவர்களுக்கு அந்தப் பகுதிகளை எப்படி எளிமையாகப் புரியவைப்பது, அந்தப் பகுதி பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதன் நோக்கம், தேர்வில் அந்தப் பகுதியின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கப்படும். ஆசிரியர்களுக்கான இந்தப் பயிற்சி மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதற்கும், கிராமப்புற மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெறவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் சார்பில் முதல் முறையாக முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு புதிதாக பணி நியமனம் பெற்றுள்ள 2,881 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட்டப்படிப்பு முடித்த இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோருக்கு உயர் கல்வித்தகுதிக்காக வழங்கப்படும் 2 ஊக்க ஊதியங்களை ரத்துசெய்து தமிழக அரசு உத்தரவு

2 ஊக்க ஊதியம் தமிழக அரசில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், பதிவுறு எழுத்தர்கள் ஆகியோர் பட்டப் படிப்பு முடித்திருந்தால் அவர்களின் உயர்கல்வித்தகுதியை கருத்தில் கொண்டு 2 ஊக்க ஊதியங்கள் வழங்கப்படுகின்றன. (இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்–4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர் பணியில் சேரும் பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.8,060 ஆக இருக்கும். அதேநேரத்தில், குரூப்–2 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக உதவியாளர், கணக்காளர் பணியில் பட்டதாரிகளின் அடிப்படை சம்பளம் ரூ.8,000 தான்.

நேரடி உதவியாளர்களுக்கு பாதிப்பு நேரடியாக உதவியாளர், கணக்காளர் பதவியில் சேருவோரின் தரம் ஊதியம் ரூ.2800 ஆக இருந்தாலும் (இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு தர ஊதியம் ரூ.2400) இரண்டு ஊக்க ஊதியம் காரணமாக பட்டதாரி இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் அடிப்படை சம்பளம் 60 ரூபாய் அதிகமாக இருக்கும். குரூப்–2 தேர்வில் வெற்றிபெற்று நேரடியாக உதவியாளர் பணியில் சேர்ந்தாலும் குரூப்–4 தேர்வில் தேர்ச்சி பெற்று தங்களுக்கு கீழ் பணிபுரியும் பட்டதாரி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் தங்களை காட்டிலும் அதிக சம்பளம் பெறுவது நேரடி உதவியாளர்களையும், கணக்காளர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து அரசிடம் அவர்கள் தொடர்ந்து முறையிட்டு வந்தனர். ரூ.60 தனி ஊதியம் இந்த நிலையில், நேரடி உதவியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை சரிசெய்ய 6–வது ஊதியக்குழு குறைபாடு நிவர்த்திக்குழு நடவடிக்கை மேற்கொண்டது. அந்த குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–

நேரடி உதவியாளர்கள் மற்றும் பட்டதாரி இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் இடையே அடிப்படை ஊதிய வித்தியாசத்தை ஈடுகட்டும் வகையில் நேரடி உதவியாளர்களுக்கு ரூ.60 தனி ஊதியமாக வழங்கப்படும். இது 1.1.2006 முதல் கணக்கிடப்படும். எனினும் இதற்கான பணப்பயன் 1.4.2013 முதல் கணக்கிட்டு அளிக்கப்படும். திட்டம் ரத்து மேலும், பட்டம் பெற்றுள்ள இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களுக்கு 2 ஊக்க ஊதியம் வழங்குவது வாபஸ் பெறப்படுகிறது. இந்த உத்தரவு அரசாணை வெளியான நாள் முதல் அமலுக்கு வருகிறது. எனினும் 1.4.2013 முதல் 22.7.2013 வரையிலான காலத்தில் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் மற்றும் பதிவுறு எழுத்தர்களுக்கு பட்டப் படிப்புக்காக வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தொகை பிடித்தம் செய்யப்பட மாட்டாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

தேர்வு நிலை /சிறப்பு நிலை 3% - அரசாணை 237 நாள்22.7.2013 ஊதிய நிர்ணய மாதிரி படிவங்கள்

Friday, August 02, 2013

இறுதியானது பிளஸ் 1, பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம்

பிளஸ் 1, பிளஸ் 2 வரைவு பாடத்திட்டம், இறுதி செய்யப்பட்டு உள்ளது. இவை, விரைவில், தமிழக அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. தற்போதுள்ள மேல்நிலைக் கல்வி பாடத்திட்டம் அமலுக்கு வந்து, ஆறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இதனால், புதிய பாடத்திட்டத்தை உருவாக்க, தமிழக அரசு, நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக, சென்னை, ஐ.ஐ.டி., ஓய்வு பெற்ற பேராசிரியர் நாகபூஷணம் தலைமையில், பாட வாரியாக நிபுணர் குழு அமைக்கப்பட்டு, தலா, 24 தலைப்புகளில், வரைவு பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பொதுமக்கள், கல்வியாளர்கள் உட்பட பல தரப்பிலும் இருந்த வந்த கருத்துகள் அடிப்படையில், தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. தற்போது, பாடத்திட்டத்தில், ஏதாவது எழுத்துப் பிழைகள், பொருள் பிழைகள் இருக்கிறதா என, சரிபார்க்கும் பணி நடந்து வருவதாகவும், இந்தப் பணி முடிந்ததும், வரைவு பாடத்திட்டத்திற்கு அனுமதி கோரி, தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசின் அனுமதி கிடைத்ததும், பாடப் புத்தகங்கள் எழுதும் பணி துவங்கும். வரும், 2015-16ம் கல்வி ஆண்டில், பிளஸ் 1 பாடத்திட்டங்களும், 2016-17ல், பிளஸ் 2 பாடத்திட்டங்களும், அமலுக்கு வரும்.

முதுகலை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி : தோல்வியை குறைக்க அதிரடி நடவடிக்கை

பிளஸ் 2 தேர்வில், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களில், மாணவர்கள் அதிகளவில், தோல்வி அடைவதை தவிர்க்கும் வகையில், முதுகலை ஆசிரியர்களுக்கு, பயிற்சி அளிக்கும் பணியில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முக்கிய பாடங்களில் தோல்வி : ஒவ்வொரு ஆண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வில், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட சில முக்கிய பாடங்களில், மாணவர்கள், அதிகளவில் தோல்வி அடைவதை, கல்வித்துறை கண்டறிந்துள்ளது.

இதையடுத்து, பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர் குழு மூலம், முதுகலை ஆசிரியர்களுக்கு, டி.பி.ஐ., வளாகத்தில், சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில், தோல்வி அதிகமாக உள்ளது. இந்த பாடங்களுடன், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணக்குப் பதிவியல் ஆகிய பாடங்களை எடுக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு, கடந்த மாதம், 30ம் தேதி முதல், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக, ஒரு மாவட்டத்திற்கு, இரண்டு பேராசிரியர்கள், இரண்டு முதுகலை ஆசிரியர்கள், ஒரு, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன பேராசிரியர் என, ஐந்து பேருக்கு, பாடத்திட்டங்களை எழுதிய ஆசிரியர் குழுவினர், பயிற்சி அளிப்பர். பாடத்திட்ட குழுவினர் பாடங்களில், கடினமான பகுதி எது, அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், தேர்வுகளில், அந்த பகுதியில் இருந்து, எந்தெந்த வகையில் கேள்விகள் வரலாம், அதற்கு, எந்த வகையில் பதிலளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு வழிமுறைகளை, பாடத்திட்ட குழுவினர் விளக்குகின்றனர்.

மாவட்டத்திற்கு, ஐந்து பேர் வீதம், 160 பேர், பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ளனர். ஆக., 15ம் தேதி வரை, தொடர்ந்து பயிற்சி நடக்கிறது. அதன்பின், இந்த ஐவர் குழு, மாவட்டங்களுக்குச் சென்று, அங்குள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும். இது, தோல்வி சதவீதத்தை, கணிசமாக குறைக்க, கை கொடுக்கும் என, நம்புகிறோம். இவ்வாறு, இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

வரும் 2014 லோக்சபா தேர்தலுக்காக செப்.1ல் வரைவு வாக்காளர் பட்டியல் : தேர்தல் கமிஷன் உத்தரவு

""வரும் லோக்சபா தேர்தலுக்கான, வரைவு வாக்காளர் பட்டியல், செப்.,1 ல் வெளியிட உள்ளதால், வீடுவீடாக சென்று, வாக்காளர்களை சேர்க்க,'' தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா தேர்தலுக்காக, சட்டசபை தொகுதி வாரியாக, அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள், புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை பெற்றவர்கள், அதில் பிழை இருந்தால், அவற்றை திருத்தி வழங்கவும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மேலும், புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பணிகளை செய்து, லோக்சபா தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் பொருட்டு, செப்.,1 ல் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அந்தந்த ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்த மனுக்களுடன், ஆக.,15 வரை வீடு வீடாக சென்று, அப்பணிகளை செய்ய வேண்டும். அதற்கு பின், 15 நாட்களுக்குள், மாநில அளவில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட 58 ஆயிரத்து 761 புதிய ஓட்டுச்சாவடிகளையும், ஒருங்கிணைத்து வாக்காளர் பட்டியல் தயாரித்து, கமிஷனுக்கு அனுப்பவேண்டும். இதைவைத்து, 2014 லோக்சபா தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் செப்.,1ல் வெளியிடப்படும், என, கலெக்டர்களுக்கு விடுத்துள்ள உத்தரவில், தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான உயர் பதவிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை யு.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்தி வருகிறது. தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுதலாம். மெயின்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத்தேர்வுக்கு செல்லலாம். மெயின் தேர்விலும், நேர்முகத்தேர்விலும் சேர்த்து எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் வெற்றி நிர்ணயிக்கப்படுகிறது.

அதிக மார்க் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். முடிவு வெளியீடு இந்த வருடம் கடந்த மே மாதம் 26–ந்தேதி இந்திய அளவில் உள்ள 1000 பணியிடங்களுக்கு இந்த முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுதினார்கள். நாடு முழுவதும் 46 நகரங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 136 மையங்களில் 27 ஆயிரம் பட்டதாரிகள் இந்த தேர்வை எழுதி இருந்தனர். முதல் நிலை தேர்வு முடிவு நேற்று இரவு வெளியிடப்பட்டது. இதில் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் 14 ஆயிரத்து 959 பேர் தேர்ச்சி பெற்றனர்.

மனிதநேய மையம் சென்னையில் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் பட்டதாரிகளுக்கு இலவசமாக ஐ.ஏஸ்.எஸ். படிப்பிற்கான பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ். முதல் நிலை தேர்வில் 193 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மை தேர்வுக்கு மனிதநேய மையத்தில் பதிவு செய்து இலவசமாக பயிற்சி பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மெயின் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும். மெயில் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு மார்ச் மாதம் நேர்முகத்தேர்வு டெல்லியில் நடைபெறும்.

3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது

100 உதவி வணிக வரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், 1,000–க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பதவிகள் உள்பட 3,500 காலி பணி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும். குரூப்–2 தேர்வு நகராட்சி கமிஷனர் (கிரேடு–2) தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி (ஏ.எஸ்.ஓ.), சார்–பதிவாளர், உதவி வணிக வரி அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், பேரூராட்சி நிர்வாக அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, கூட்டுறவு தணிக்கை அதிகாரி, உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர், ஊராட்சி உதவியாளர் உள்பட பல்வேறு விதமான பதவிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வு நடத்தப்படுகிறது.

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் குருப்–2 தேர்வு எழுதலாம். பொதுப்பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பு 30 என்று நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மற்ற அனைத்து வகுப்பினருக்கும் விதவைகளுக்கும் (பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் உள்பட) எவ்வித வயது வரம்பும் கிடையாது. குறிப்பிட்ட சில பதவிகளுக்கும் மட்டும் அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ஓரிரு நாளில் அறிவிப்பு கடந்த ஆண்டு 3,631 காலி இடங்களை நிரப்ப குரூப்–2 தேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஏறத்தாழ 3,500 காலி இடங்களை நிரப்புவதற்காக விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது. காலி இடங்களில், 100 உதவி வணிகவரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளும் அடங்கும்.

மேலும், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, நகராட்சி கமிஷனர் போன்ற பதவிகளும் கணிசமான எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளன. குரூப்–2 தேர்வுக்கான அறிவிப்பினை டி.என்.பி.எஸ்.சி. அடுத்த ஓரிரு நாளில் வெளியிட உள்ளது. பொதுவாக அறிவிப்பு வெளியிட்டு தேர்வு எழுத 2 மாதங்கள் காலஅவகாசம் கொடுக்கப்படும். அதன்படி, எழுத்துத்தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்படக்கூடும். மெயின் தேர்வு உண்டா? நேர்முகத்தேர்வு கொண்ட பணிகளுக்கு கூடுதலாக மெயின் தேர்வு நடத்தப்படும் என்று அண்மையில் டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. முதல்கட்ட தேர்வு அதன்பிறகு மெயின் தேர்வு நடத்தி அதைத் தொடர்ந்து நேர்முக தேர்வு நடத்தினால் காலதாமதம் ஆகும். எனவே, முன்பு இருந்துவந்ததை போல மெயின் தேர்வு இல்லாமல் ஒரே தேர்வு மூலம் மட்டுமே அனைத்து விதமான பதவிகளையும் நிரப்பிவிடலாமா? என்றும் டி.என்.பி.எஸ்.சி. பரிசீலனை செய்து வருகிறது.

STFI - Inaguration of 1 crore Signature Movement for Women and Women Protection



Thursday, August 01, 2013

TNTEU results B.ed Results may/june 2013

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான முதல்வரின் தகுதி பரிசுத்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதிதிராவிடர், பழங்குடியினர், மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த முதல் ஆயிரம் மாணவர்கள், முதல் ஆயிரம் மாணவிகளுக்கு இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி அறிவித்துள்ளார். பிளஸ் 2 தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு பயின்ற மாணவர்களின் மேற்படிப்புக்காக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் வீதம் 5 ஆண்டுகளுக்கு இந்தப் பரிசுத்தொகை வழங்கப்படும். 2012 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் 1,069 மதிப்பெண் அல்லது அதற்குமேல் எடுத்த மாணவர்கள், 1,082 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவிகள் இந்தப் பரிசுத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

2013 மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் 1,074 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுத்த மாணவர்கள், 1,085 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்த மாணவிகள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட மதிப்பெண்ணைப் பெற்று கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் நகல், ஜாதி சான்றிதழ் நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு தங்களது கல்லூரியின் மூலம் இந்தப் பரிசுத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 2 முடித்த உடனேயோ, அல்லது ஓராண்டு இடைவெளி விட்டு மேற்படிப்பைத் தொடரும் மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். 2011-12-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் இந்தப் பரிசுத்தொகையைப் பெற்று புதுப்பிக்கும் மாணவர்கள் 2012-13-ஆம் ஆண்டு முதல் ரூ.3 ஆயிரம் உதவித் தொகையைப் பெறலாம்.

பிளஸ் 2 தேர்வு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பார்வையற்ற தனித்தேர்வர்களுக்கு தேர்வு கட்டணத்தில் முழுவிலக்கு

  கடந்த 2012 அக்டோபரில் இருந்து பிளஸ் 2 தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டுமென அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து 2012 அக்டோபர் மற்றும் 2013 மார்ச்சில் தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகை குறித்த விவரம் இடம் பெறவில்லை.

இதனால் பார்வையற்ற தனித்தேர்வர்கள் முழு தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுதினர். இதையடுத்து ஆன்லைன் விண்ணப்பத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை குறிப்பிட வேண்டும். பள்ளியில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகளை போல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பார்வையற்ற தனித்தேர்வர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிக் கல்வி செயலர் சபிதா வெளியிட்ட அரசாணை:

பள்ளியில் பயிலும் பார்வையற்ற மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை போல், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கண்பார்வையற்ற தனித்தேர்வர்களுக்கும் தேர்வு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள் 2013 செப்டம்பர் முதல் ஆன்லைன் விண்ணப்பத்தில் இடம்பெறும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எட்., படிப்பிற்கு 6ம் தேதி முதல் விண்ணப்ப வினியோகம்

பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படுகின்றன. தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், 3,000 பி.எட்., இடங்களும், தனியார் கல்லூரிகளில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.எட்., இடங்களும் உள்ளன.

ஒற்றை சாரள முறை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள இடங்கள், ஒற்றை சாரள முறையில், பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். தனியார் கல்லூரிகள், விருப்பப்பட்டு ஒப்படைக்கப்படும் இடங்களும், கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்படுகின்றன. பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லூரி கல்வி இயக்ககம், நேற்று அறிவித்தது. படிப்பிற்கான விண்ணப்ப படிவம், 6ம் தேதி துவங்கி, 13ம் தேதி வரை வழங்கப்படும். சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும், காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 3:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

சென்னையில், திருவல்லிக்கேணி, லேடி வெலிங்டன் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், சைதாப்பேட்டையில் உள்ள கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும், விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்ப கட்டணம், 300 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., மாணவருக்கு, 175 ரூபாய். விண்ணப்ப கட்டணத்தை, பணமாகவோ, "டிடி'யாகவோ செலுத்துவோர், "செயலர், தமிழ்நாடு பி.எட்., அட்மிஷன், சென்னை - 5' என்ற பெயரில், விண்ணப்பத்தை பெறலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், விண்ணப்பங்களை, ஜாதி சான்றிதழ் நகலை செலுத்தி, பெற்று கொள்ளலாம்.

இக்னோவில் கல்வியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க ஆக.,8 கடைசி

் புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட், எம்.எட்., ஆகிய படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பி.எட்., எம்.எட்., பி.எஸ்சி (நர்சிங்), மேலாண்மை ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட தகவல்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.