4 மாணவர்கள் பலி
மதுரை திருநகர் சி.எஸ்.ராமாச்சாரி மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவ–மாணவிகள் தூத்துக்குடி, திருச்செந்தூருக்கு சுற்றுலா சென்றனர். தூத்துக்குடி கடற்கரைக்கு சென்ற அவர்களில் சில மாணவர்கள் கடலுக்குள் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அதில், விஷ்ணுதரன், தேவ் ஆனந்த், சதீஷ்குமார், பரமேசுவரன் ஆகிய 4 மாணவர்கள் அலைக்குள் சிக்கி மூச்சுத்திணறி இறந்தனர். சிலரை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரணையில், பள்ளியில் இருந்து சுற்றுலா செல்வதற்கு பள்ளிக்கல்வித்துறையினரிடம் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.
பள்ளி மீது நடவடிக்கை இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அமுதவல்லி கூறியதாவது:– பள்ளிகளில் இருந்து கல்விச்சுற்றுலா செல்வதற்கு பள்ளி கல்வித்துறையினரிடம் முறையான அனுமதி பெற வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த உத்தரவை மீறி திருநகர் பள்ளியில் இருந்து சுற்றுலா சென்று உள்ளனர். மேலும் சுற்றுலா செல்ல இருப்பது குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. கடற்கரை, நீர்நிலைகள், வனப்பகுதிகள், பாதுகாப்பு இல்லாத பகுதிகள் போன்ற இடங்களுக்கு மாணவ–மாணவிகளை அழைத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. பொதுவாக சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்த பின்னரே சுற்றுலாவிற்கு அனுமதி வழங்குகிறோம்.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மாணவ–மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும் என்பதால் அவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வதில்லை. எச்சரிக்கை ஆனால் அதிலும் இந்த பள்ளி நிர்வாகம் விதியை மீறி உள்ளது. இறந்த மாணவர்கள் 4 பேரும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 படிப்பவர்கள். அத்துடன் 113 மாணவ–மாணவிகளுக்கு 4 ஆசிரிய–ஆசியைகள் மட்டுமே உடன் சென்றிருக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது. துறை ரீதியாகவும் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் எந்த பள்ளியும் அனுமதியின்றி சுற்றுலா சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.