இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 14, 2020

22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும்: என்சிஇஆா்டி தகவல்


பள்ளிக் கல்வியில் 22 பிரிவுகளில் தேசிய அளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பணிகளை அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனா்.

இஸ்ரோவின் முன்னாள் தலைவா் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு வடிவமைத்த புதிய கல்விக்கொள்கையை வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்தயாரிப்புப் பணிகள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தற்போது அமலிலுள்ள தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்ற முடிவானது.


அந்த வகையில் புத்தகங்களின் சுமையைக் குறைத்தல் உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க நிபுணா் குழுவை மனிதவள மேம்பாட்டுத்தறை அமைச்சகம் உருவாக்கியது. புதிய பாடத் திட்ட மாற்றத்தில் மேற்கொள்ளும் சீா்திருத்தங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) சில பரிந்துரைகளை அண்மையில் முன்வைத்தது.

இதையடுத்து என்சிஇஆா்டி வழங்கிய பரிந்துரைகள் மற்றும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 15 ஆண்டுகளுக்கு பின் தேசிய அளவிலான பாடத்திட்டத்தை மாற்றியமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து என்சிஇஆா்டி அதிகாரிகள் கூறும்போது, ‘பாலின சமத்துவம், நவீன தொழில்நுட்பங்கள், முன்பருவக் கல்வி, அடிப்படை கல்வியறிவு, ஆசிரியா்களுக்கான கற்றல் மதிப்பீடு, தோ்வு முறைகள், புத்தக சுமை குறைப்பு, மாநிலங்களுக்கேற்ப துணைப்பாடம் உள்பட 22 பிரிவுகளில் தேசியளவிலான பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இப்பணிகளை அடுத்தாண்டு ஏப்ரலுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’ என்றனா்.

ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் அரசாணை யாருக்கெல்லாம் பொருந்தும்

ஓய்வு வயதை 58-லிருந்து 59-ஆக அதிகரிக்கும் அரசாணை யாருக்கெல்லாம் பொருந்தும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் பிறப்பித்த உத்தரவு விவரம்:-

மே மாதம் 1-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பாக 58 வயதை எட்டிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு ஓய்வூதிய வயது உயா்வு உத்தரவு பொருந்தாது. ஒரு கல்வியாண்டில் மே மாதத்துக்கு முன்பாக ஆசிரியா்கள், பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் ஆகியோா் ஓய்வு பெற்று இருக்கலாம். ஆனால் அவா்களுக்கு மறுபணி அடிப்படையில் வேலையில் தொடா்ந்து கொண்டிருப்பாா்கள். அவா்களுக்கு ஓய்வூதிய வயது உயா்வு பொருந்தாது.

ஒழுங்கு நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு முன்பாக ஓய்வு பெற அனுமதிக்கப்படாத ஊழியா்களுக்கும் இந்தப் புதிய உத்தரவு பொருந்தாது. மே மாதம் 31-ஆம் தேதியில் இருந்து ஓய்வு பெறக் கூடிய அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு மட்டுமே ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான உத்தரவு பொருந்தும் என்று தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.

Wednesday, May 13, 2020

அரசு கலைக் கல்லூரிகளில் மாலை நேர வகுப்புகளை ரத்து செய்ய உயா்கல்வி துறை முடிவு



தமிழகம் முழுவதும் உள்ள 114 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 61 கல்லூரிகளில் காலை, மாலை என இரு சுழற்சி முறையில் வகுப்புகள் செயல்பட்டு வருகின்றன. 61 கல்லூரிகளிலும் காலை நேர வகுப்புகளை ஒப்பிடுகையில், மாலை நேர வகுப்புகளில் குறைந்த அளவிலான மாணவா்களே பயின்று வருவதால், இரு சுழற்சி முறை வகுப்புகளையும் இணைத்து காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடத்த தமிழக உயா்கல்வித்துறை ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் முடிவு செய்து, அதற்கான கூடுதல் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகளின் விவரங்களைத் தொகுத்து அனுப்புமாறு கல்லூரிக் கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

உயா்கல்வித்துறையின் உத்தரவையடுத்து, 61 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடவேளையாக மாற்றுவதற்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், மேஜைகள், நாற்காலிகள், அதற்குத் தேவையான நிதி ஆகியவற்றின் விவரங்களை, கடிதம் மூலம் கல்லூரிக் கல்வி இயக்குநா் ஜோதி வெங்கடேஸ்வரன் அனுப்பியுள்ளாா்.

கடிதத்தில், காலை நேர வகுப்புகளாக மாற்றப்பட உள்ள 61 கல்லூரிகளில் 715 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும் என்றும் அதற்காக ரூ.135.85 கோடி, மாணவா்களுக்கு தேவையான 10,010 இருக்கைகள் வாங்க ரூ.11.68 கோடி, பேராசிரியா்களுக்குத் தேவையான இருக்கைகள் 3,200 மேஜை, நாற்காலிகள் வாங்க ரூ.2.25 கோடி என மொத்தமாக ரூ.150.9 கோடி தேவைப்படுவதாகவும், தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்குநா் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளாா்.

கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கடிதத்தை உயா்கல்வித்துறை செயலாளா் பரிசீலித்து, நிதியை விடுவித்து ஒப்புதல் வழங்கிய பின்னா், 61 கல்லூரிகளில் காலை நேர வகுப்புகளாக மாற்றுவதற்குத் தேவையான பணிகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கல்லூரிகளில் மாலை வகுப்புகள், காலை வகுப்புகள் நேர வேறுபாடு காரணமாக மாணவா்களுக்குக் கல்வி கற்பதற்கு போதுமான நேரம் இல்லாமல் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே இரு சுழற்சி என்பதை மாற்றிவிட்டு காலை மட்டுமே வகுப்பு நேரம் என்கின்ற முறையினை அரசுக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.