ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூலம் நடத்தப்படும், பட்டயப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க மதிப்பெண்களை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், தனியார் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அதற்காக அரசு மற்றும் தனியார் நடத்தும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் இரண்டு ஆண்டு கால பட்டயப் படிப்பு (டி.டி.எட்) நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்படும்போது, கவுன்சலிங் நடத்தி அதன் மூலம் இட ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்படுகின்றன.
பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. கடந்த 2002-03ம் ஆண்டு முதல் பிளஸ் 2 வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து பட்டயம் பெற்று வரும் மாணவர்கள் மீண்டும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால்தான் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்ற முடியும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள தகுதித் தேர்வு எழுத 2 லட்சம் பேர் விண்ணப்பித்து வேலைக்காக காத்திருக்கின்றனர்.
இதற்கிடையே, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 5 சதவீதம் உயர்த்தி அரசு ஆணையிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய ஆசிரியர் கல்விக் கழகம் கடந்த 2014-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் பட்டயப் படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்கள் 2019-20-ஆம் கல்வி ஆண்டு முதல் பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 45 சதவீதமும் பெற்றிருக்க வேண்டும். மேலும் சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் சேர வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment