இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, June 22, 2019

உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்கள்: கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவு


தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பொது மாறுதல், பணி நிரவல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் அதற்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை முதல், வரும் 28-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்திற்குள் மாறுதல் பெற விரும்பும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ஆம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூலை 9-ஆம் தேதியன்று காலை, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலையில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.

ஒன்றியத்திற்குள் பணி நிரவல் கோரி விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10-ஆம் தேதி காலையிலும், வருவாய் மாவட்ட அளவில் பணி நிரவல் கோரியவர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது. பொதுமாறுதல்கள் வழங்குவதற்கான நெறிமுறைகள் கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் (எமிஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2, 279 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17,147 பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களை வரும் ஜூலை 9-இல் தொடங்க உள்ள கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்கி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்துவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களுக்கு அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள்ளேயே கட்டாய பணி மாறுதல் வழங்கப்படவுள்ளது.

தமிழ்வழிக் கல்வியைப் பொருத்தவரையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 6 முதல் 8 வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும் ஆசிரியர் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலவழிக் கல்வியைப் பொருத்தவரையில்15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி நிரவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

No comments:

Post a Comment