இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, November 17, 2018

ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 31.08.2018 -ல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்ய கால அட்டவணை வழங்கி இயக்குநர் உத்தரவு



நவ.25-க்குள் நீட் பதிவை முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு


அரசுப் பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பதிவுகளை நவ.25-ஆம் தேதிக்குள் முடிக்க அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சார்ந்த தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர முடியும்.

தமிழகத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அதிக கட்டணம் செலுத்தி தனியார் நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மொத்தம் 412 மையங்களில் நேரடி வகுப்பு, விடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பதிவை கடந்த நவ. 1-ஆம் தேதி தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. தொடங்கியது.

இதில், விண்ணப்பிப்பது தொடர்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என பள்ளிக் கல்வித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்தது. இதையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் விண்ணப்பத்தை, தலைமை ஆசிரியர்களே பதிவு செய்து தர பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவை பின்பற்றி நவ.25-ஆம் தேதிக்குள் நீட் பதிவு பணிகளை முடித்து மாணவர்கள் பட்டியலை ஒப்படைக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்

Friday, November 16, 2018

துணைத்தேர்வுகள் ரத்து: தனித்தேர்வர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல்


பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தனித் தேர்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:

பள்ளிக் கல்வித்துறை அண்மையில் வெளியிட்ட அரசாணையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளில் பொதுத் தேர்வெழுதி தோல்வியுறும் மாணவர்களுக்கு 2019-20-ஆம் கல்வியாண்டு முதல் மார்ச்-ஏப்ரல் பொதுத் தேர்வு, ஜூன்- ஜூலை பருவ சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தவும், பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகளில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு (தனித் தேர்வர்கள்) செப்டம்பர்- அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனவே 2019-ஆம் ஆண்டு செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் அந்த மூன்று வகுப்புகளுக்கும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது. தற்போதுள்ள நடைமுறையின்படி மார்ச்-ஏப்ரல் பருவத்தில் நடத்தப்படும் பொதுத் தேர்வை பள்ளி மாணவராகவும், தனித்தேர்வராகவும் எழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும் ஜூன், ஜூலை சிறப்பு உடனடித் தேர்வெழுத அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அரசாணையின்படி செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் நடத்தப்படும் துணைத் தேர்வு ரத்து செய்யப்படுவதால் வரும் 2019 ஜூன், ஜூலை முதல் மார்ச் பருவத்தில் நடத்தப்படும் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களும், ஜூன், ஜூலை பருவத்தில் நடத்தப்படும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 உடனடி சிறப்புத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வெழுதலாம் என கூறியுள்ளார்.

Special leave for gov servants


Monday, November 12, 2018

Morning prayer 13-11-18

13-11-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:84

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

உரை:
நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

பழமொழி :

Do i Rome as Romans do

ஊரோடு ஒத்து வாழ்

பொன்மொழி:

பிறரின் வீழ்ச்சியிலிருந்து,
நீ தவிர்க்க வேண்டிய
பாவங்கள் என்ன என்பதைக்
கற்றுக் கொள்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.பண்பாடுகளின் தாய்நகரம்?
பாரிஸ்

2.தண்ணீர் தேசம், மிதவை நகரம்?
வெனிஸ்

நீதிக்கதை

நான் கத்தவே இல்லை !

கண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்!” என்றார்.

கஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.

எப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே?” என்றார்.

“”சம்மதம்!” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.

வானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறிப் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.

கஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள்! என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது?” என்று கேட்டார் விமானி.

“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்!” என்றான் கஞ்சன்.

“”எப்போது?” என்று கேட்டார் விமானி.

“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது!” என்றான் கஞ்சன்.

மயங்கி விழுந்தார் விமானி.

இன்றைய செய்தி துளிகள்:

1.நவம்பர் 15ம் தேதி கடலூர் - வேதாரண்யம் இடையே பலத்த காற்றுடன் கஜா புயல் கரையை கடக்கும் எனத் என தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

2.LKG, UKG பாடப்பிரிவுகளுக்கு சிறப்பாசிரியர்கள் விரைவில் நியமனம் - அமைச்சர் செங்கொட்டையன்

3.ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு : வரும்15ம் தேதி ஆலோசனை

4.பள்ளிகளில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகளை ஏன் அறிமுகப்படுத்தக் கூடாது? உயர் நீதிமன்றம்

5.ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடர்: லீக் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Sunday, November 11, 2018

ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' பதிவு : வரும் 15ம் தேதி ஆலோசனை


அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு 'பயோ மெட்ரிக்' வருகை பதிவு திட்டத்தை அமல்படுத்துவது குறித்து, பள்ளி கல்வி துறை வரும், 15ம் தேதி ஆலோசனை நடத்துகிறது. அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், பயோமெட்ரிக் வருகை பதிவு திட்டத்தை அமல்படுத்த, பள்ளி கல்வி அமைச்சர்செங்கோட்டையன் உத்தரவிட்டார்.

இது தொடர்பாக, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், 15.30 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீட்டு அறிக்கை அளித்தார். இதையேற்று, இத்திட்டத்தை செயல்படுத்த, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் அரசாணை பிறப்பித்துஉள்ளார்.இதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும், 3,688 உயர்நிலை மற்றும், 4,040 மேல்நிலை பள்ளிகளில், ஜனவரிக்குள் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தில், முதல் கட்டமாக, 1.63 லட்சம் ஆசிரியர்களின் ஆதார் எண்ணை பயன்படுத்தி, மின்னணு பயோமெட்ரிக் வருகை பதிவு செய்யப்படும்.

இது தொடர்பாக, வரும், 15ம் தேதி, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், ஆலோசனை கூட்டத்தை அறிவித்துள்ளார். இதில், மாவட்ட வாரியாக, பள்ளி கல்வி அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணிகள் தெரிந்த ஆசிரியர்கள் அல்லது பணியாளர்கள், வீடியோ கான்பரன்சில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Saturday, November 10, 2018

அறிவியல் ஆசிரியர் 10 பேருக்கு விருது


தமிழ்நாடு அறிவியல் நகரம் சார்பில், நடப்பாண்டு முதல், பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், பரிசுத் தொகையுடன், 'சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது' வழங்கப்பட உள்ளது. கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில், சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும், 25 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என, ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.

அதை செயல்படுத்த, பரிசுத் தொகைக்கு, 2.50 லட்சம் ரூபாய்; இதர செலவினங்களுக்கு, 1.30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, பட்டியலை நவ., 30க்குள் அனுப்பும்படி, தமிழ்நாடு அறிவியல் நகரம் துணைத் தலைவர் சகாயம், பள்ளிக் கல்வித் துறைக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டுமே, இவ்விருது வழங்கப்பட உள்ளது.

சிறப்பு ஆசிரியர் தேர்வில் முறைகேடு?


சிறப்பு ஆசிரியர்கள் பணி நியமன நடவடிக்கையில், ஜாதி உட்பட, தனி நபர் விபரங்களில் குளறுபடி நடந்துள்ளதாக, புகார் எழுந்துள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், காலியாக உள்ள, 1,325 காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017ல் போட்டி தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கான விடை திருத்தம் முடிந்து, இரண்டு மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டது.

இறுதி பட்டியல், அக்டோபரில் வெளியானது.இந்த பட்டியலில் தகுதியுள்ள பலர், புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஓவியம், தையல், உடற்கல்வி போன்ற பிரிவில், ஆசிரியர் பணிக்கு, தேர்வர்கள் தமிழ் வழி சான்றிதழ் சமர்ப்பிப்பதில் பிரச்னை ஏற்பட்டது. அரசு தரப்பில், தமிழ் வழி சான்றிதழ் வழங்காத நிலையில், தனியார் நிறுவனங்களில் பெறப்பட்ட சான்றிதழ் ஏற்று கொள்ளப் பட்டதாக, தேர்வர்கள் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலில், ஒரு பெண் தேர்வரின் ஜாதி ஒன்றாகவும், இறுதி பட்டியலில் வேறு ஒன்றாகவும் குறிப்பிட்டுஉள்ளது.

அதேபோல், 'மற்றொரு பெண் தேர்வரின்சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியலிலும், இறுதிபட்டி யலிலும், கணவனை இழந்தவர் என்றும், மற்றொன்றில், பொது பிரிவு என்றும் உள்ளது' என, குற்றம் சாட்டப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் கூறுகையில், ''சிறப்பு ஆசிரியர் பணி நியமன நடவடிக்கை குளறுபடிகள் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Friday, November 09, 2018

morning prayer 10-11-18

10-11-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:



திருக்குறள்:82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

உரை:
விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

பழமொழி :

Distance lends enchantment to the view

இக்கரைக்கு அக்கரை பச்சை

பொன்மொழி:

பழக்க, வழக்கங்களும்
சம்பிரதாயங்களும்
வேறுபடலாம்.
ஆனால்,  மனிதனின்
இயற்கை குணம் ஒன்றுதான்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.இந்தியாவின் சுவிட்சர்லாந்து?
காஷ்மீர்

2.புனித பூமி?
பாலஸ்தீனம்

நீதிக்கதை

குரங்கு அறிஞர் !





ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான்.

“”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான்.

“”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார்.

“”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க வேண்டும். நான் உன்னைக் குரங்காக மாற்றி விடுவேன். அதுதான் உனக்குத் தண்டனை!” என்று அந்த அரக்கன் கூறினான்.

அடுத்த கணம், அந்தக் அறிஞர் குரங்காக மாறிவிட்டார். அவர் விம்மி விம்மி அழுதார். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தார். குரங்குகளைப் போல் பழங்களைத் தின்று வந்தார்.


அவர் நகரத்தை அடைந்தார். அங்கு ஒரு கப்பல் பாக்தாத் பட்டணத்திற்குப் புறப்பட இருந்தது. அவர் அதில் தாவி ஏறினார். அதிலிருந்த பயணிகள் கூச்சலிட ஆரம்பித்தனர்.

“”குரங்கை வெளியே அனுப்புங்கள்; கொன்றுவிடுங்கள்!” என்று கத்தினர்.
கப்பலின் தலைவன் அந்த விலங்கிற்காக வருத்தப்பட்டுச் சொன்னார்.

“”வேண்டாம். அதுவும் நம்முடன் வரட்டும். யாருக்கும் அது தொந்தரவு தராதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்!”

அந்தக் குரங்கு கப்பல் தலைவனுக்கு நன்றி உடையவனாய் இருந்தது. பாக்தாத்தில் ஒரு செய்தி பரவி இருந்தது. அரசருக்கு ஆலோசனை கூறுபவர் இறந்துவிட்டதாகவும், அரசர் அந்த இடத்திற்குத் தகுந்த ஆளைத் தேர்ந்தெடுக்க விரும்புவதாகவும் அறிவித்திருந்தார். இப்பதவியை விரும்புவோர் ஏதேனும் ஒரு செய்தியைத் தகுந்த முறையில் எழுதி அனுப்பலாம். அவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளதோ, அதை எழுதியவர் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

அந்தக் குரங்கு அறிஞரும் செய்தியை எழுதினார். அரசருடைய சேவகர்களும், மற்றவர்களும் நகைத்தனர். “”இங்கே வேடிக்கையைப் பார். இந்தக் குரங்கு அரசருக்கு ஆலோசகராகப் போகிறதாம்!” என்று கேலி செய்தனர். ஆனால், எல்லாச் செய்திகளும் அரசரிடம் எடுத்துச் செல்லப்பட்டன. அரசர் எல்லாவற்றையும் படித்தார். அந்தக் குரங்கின் செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அந்தக் குரங்கை நேர்முகத் தேர்விற்காக அரசர் வரச் சொன்னார். அக்குரங்கு நல்ல கம்பீரமாக உடையணிந்து குதிரைமேல் ஏறி, பாக்தாத் தெருக்களில் ஊர்வலமாக வந்து அரசரைச் சந்தித்தது. அரசவையில் அதனிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன. அது எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான சரியான விடைகளைக் கூறியது. அரசருக்கு அதை மிகவும் பிடித்து விட்டது. ஆனால், மந்திரிகள் தடுத்தனர்.

“”எப்போதும் அதனால் பேச முடியாது. எப்படி ஒரு குரங்கு தலைமை ஆலோசகர் ஆகமுடியும்?” என்றனர்.

அரசர் தீர்மானமாக இருந்ததால் அவர் குரங்கையே தலைமை ஆலோசகராக நியமித்தார். அவருடைய புதல்வி, இளவரசி இந்தக் குரங்கு உண்மையில் குரங்கு அன்று. ஏதோ அரக்கர்களின் மாயத்தால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தாள். அரக்கர்கள், அவர்களின் மந்திர வித்தைகள் போன்றவற்றை அவள் படித்துள்ளாள். அந்த மந்திரத்தால் குரங்குத்தன்மை மாறும்படி செய்தாள். அறிஞர் தன் பழைய நிலையை அடைந்தார்.

அவர் இளவரசிக்கு நன்றி கூறினார். பல ஆண்டுகள் அங்குத் தங்கி நன்றியறிதலோடு அரசருக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

நீதி: அறிவுடையோர் எவ்வுருவில் இருந்தாலும் மதிக்கப்படுவர்.

இன்றைய செய்தி துளிகள்:

1.சிறப்பாசிரியர் தகுதி பட்டியலில் நிலவும் தொடர் குழப்பங்கள் விரைவில் சரிசெய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

2.வரும் ஆண்டு பாடத்திட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் வாழ்க்கை வரலாறு: தமிழக அரசு தகவல்

3.மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை

4.பூமிக்கு மேலும் இரண்டு நிலாக்கள் இருப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

5.நியூஸிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டி ஒன்றில் பந்துவீச்சாளர்கள் உதவியுடன் ஓரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து நார்த்தர்ன் டிஸ்ட்டிரிக்ட்ஸ் அணி வீரர்கள் உலக சாதனை படைத்துள்ளனர்

Thursday, November 08, 2018

அரசு ஊழியர்களுக்கு 'ஐ.டி., கார்டு' கட்டாயம்


தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பெரும்பாலும், தங்கள் அடையாள அட்டையை அணிந்திருப்பதில்லை. இதனால், ஊழியர்கள் யார், பொதுமக்கள் யார் என, பிரித்து பார்க்க முடியவில்லை. இந்நிலையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும், ஊழியர்கள் அடையாள அட்டை அணிந்தே பணியாற்ற வேண்டும் என, இந்த ஆண்டு, ஜூலையில், சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது.

இந்த உத்தரவை பின்பற்றி, அனைத்து பள்ளி, கல்லுாரி அலுவலகங்கள் மற்றும் அரசின் பிற துறை அலுவலகங்களில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிந்து, பணியாற்ற வேண்டும் என, அரசு சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் வட்டி உயர்வு

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கான வட்டி, உயர்த்தி அறிவிக்கப்பட்டுஉள்ளது.புதிதாக பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ், பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு, ஜூலை, 1 முதல், செப்., 30 வரையிலான காலத்திற்கு, 7.6 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

தற்போது, அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர், சண்முகம் வெளியிட்டுள்ளார்.

Wednesday, November 07, 2018

குழந்தைகள் தினம்: பள்ளிகளுக்கு இலவச டிவிடி


குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளுக்கு இலவச டி.வி.டி. வழங்கும் திட்டத்தை குழந்தைகளுக்கான இந்திய திரைப்பட சமூகம் (சி.எஃப்.எஸ்.ஐ.) அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் சிஎஃப்எஸ்ஐ, குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறது.

இந்தத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டுமின்றி இளம் மனங்களில், நீதி போதனைகளை வளர்ப்பதற்கும் உதவுகின்றன. குழந்தைகள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, பள்ளிகளில் குழந்தைகள் தொடர்பான திரைப்படங்களை திரையிட வசதியாக இலவச டி.வி.டி.-க்களை சி.எஃப்.எஸ்.ஐ. வழங்கவுள்ளது. விருப்பமுள்ள பள்ளிகள் 044 -2498 1159 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரு பிறந்தநாள்: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்து அட்டை வழங்க ஏற்பாடு


முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 -ஆம் தேதி, பள்ளிக் குழந்தைகளின் புகைப்படத்துடன்கூடிய வாழ்த்து அட்டைகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 -ஆம் தேதி, ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதிய திட்டம் ஒன்றை பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த உள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 5,000 அரசுப் பள்ளிகளில் தொடக்க கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட உள்ளன. அதில் அந்தந்த குழந்தைகளின் புகைப்படங்களை இணைத்து அவர்களுக்கே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாழ்த்து அட்டைகளை பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்குவார்கள். முதல்கட்டமாக 32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு வாழ்த்து அட்டைகளை பள்ளிக் கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது.