இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, May 07, 2018

ஆசிரியர், அரசு ஊழியர்கள் அதிரடி கைது


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், இன்று கோட்டை நோக்கி பேரணி நடத்துகின்றனர்.அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, சங்க நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து, ஊதிய முரண்பாடுகளை களைவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், மூன்றாண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு கட்டமாக, இன்று, கோட்டை நோக்கி பேரணி செல்ல போவதாக அறிவித்துள்ளனர்.

இந்த பேரணியில், ஆயிரக்கணக்கானோர் திரண்டால், முற்றுகைஇ போராட்டமாக மாறும் என, போலீசார் கணித்துள்ளனர்.எனவே, அசம்பாவிதங்களை தடுக்க, முன் எச்சரிக்கையாக சங்க நிர்வாகிளை போலீசார் கைது செய்து வருகின்றனர். வீடுகள், சங்க அலுவலங்களில், போராட்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்த, ஏராளமான நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தி, அதில், போராட்டத்துக்கு வருவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையால், ஜாக்டோ - ஜியோவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், சுப்ரமணியன் கூறுகையில், ''சென்னை செல்ல ஏற்பாடு செய்திருந்த, வாகன உரிமையாளர்களை போலீசார் மிரட்டி, ஆர்.சி., புத்தகத்தை பறிமுதல் செய்துள்ளனர். ஆனாலும், திட்டமிட்டபடி ஊழியர்கள் விடுப்பு எடுத்து, போராட்டத்தில் பங்கேற்பர்,'' என்றார்.இதனிடையே, அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில், சம்பளத்தின் அளவு, இரட்டிப்பாக காட்டப்பட்டுள்ளதாக, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Friday, May 04, 2018

புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களுக்கு முக்கியத்துவம்


தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் தொடர்பான தகவல்கள் மாணவர்களுக்கு விளக்கப்பட்டுள்ளன.

உங்களுக்குத் தெரியுமா?:  பாடநூல்களில் வழக்கமாக இடம்பெற்றிருக்கும் தகவல்களுடன் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதி பெட்டிச் செய்தி போன்று கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட பாடத்தில் உள்ள விஷயங்கள் நமது அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு மாணவர்களுக்கு எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

க்யூ.ஆர். குறியீடு: ஒவ்வொரு பாடத்துக்கும் இரண்டு க்யூ.ஆர்.குறியீடுகள் இடம்பெற்றுள்ளன. அதை ஆண்ட்ராய்டு வசதி கொண்ட செல்லிடப்பேசியில் ஸ்கேன் செய்வதன் மூலம் பாடம் குறித்து இணையதளத்தில் ஏற்கெனவே உள்ள கருத்துகள், காணொலிக் காட்சிகள் (யு-டியூப்), படங்கள் குறித்து அறிந்து கொள்ள முடியும்.

தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் (ஐசிடி): மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் 'டேப்லெட்', கணினி, கணினி தொடுதிரை போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்காக 'இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி' என்ற தொழில்நுட்பம், வகுப்பறைகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இணையதள விவரங்கள்: பாடநூல்களில் ஒவ்வொரு பாடங்கள் தொடர்பாகவும் கூடுதல் விவரங்களைப் பெறுவதற்காக இணையதள முகவரிகள் இடம்பெற்றுள்ளன.

சொற்களஞ்சியம்: பாடநூலின் பின்பகுதியில் முக்கிய கலைச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் சொற்களஞ்சியம் பகுதியில் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக கார்ட்டூன் என்ற வார்த்தைக்கு நேராக கருத்துப்படம் என கொடுக்கப்பட்டுள்ளது.

பாடத்தின் இலக்கு: இந்தப் பகுதியில் அந்தப் பாடம் இடம் பெற்றதற்கான காரணம், பாடத்தில் குறிப்பிட்டுள்ள விஷயம் தொடர்பாக உயர் கல்வியில் என்னென்ன வாய்ப்புகள் உள்ளன என்ற தகவல் இடம்பெற்றுள்ளன.

1,000 ஆசிரியர்கள்- 500 மொழிபெயர்ப்பாளர்கள்: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி வளாகத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி-பயிற்சி மையம் உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இரவு பகலாக பாடத் திட்ட உருவாக்கப் பணிகள் நடைபெற்றன. இதில் 200 பேராசிரியர்கள், 1,000 ஆசிரியர்கள், 500 மொழி பெயர்ப்பாளர்கள், 75 ஓவிய ஆசிரியர்கள், 5 வடிவமைப்பு நிறுவனங்கள் ஈடுபட்டன.

ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி, வாட்ச் அணிய தடை : 'நீட்' தேர்வு மாணவர்களுக்கு கட்டுப்பாடு


நீட் தேர்வு எழுதுவோருக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன் விபரம்:•

தேர்வு மையத்திற்குள், புத்தகம், காகிதம், பேனா, சிறு குறிப்பு காகிதம், கணித உபகரண பெட்டி, கால்குலேட்டர், பென்சில், பிளாஸ்டிக் பவுச், ஸ்கேல், எழுதும் அட்டை, பென் டிரைவ், அழி ரப்பர், லாக் அட்டவணை, எலக்ட்ரானிக் பேனா, ஸ்கேனர் என, எந்த வித பொருட்களையும் கொண்டு செல்லக்கூடாது.• மொபைல் போன், 'ப்ளூடூத்' கருவி, காதில் பொருத்தும் ஸ்பீக்கர், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த் பேண்ட், பர்ஸ், தோள்பை, கைப்பை, பெல்ட், தொப்பி, கேமரா, வாட்ச் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை•

மோதிரம், காது வளையம், ஜிமிக்கி கம்மல், மூக்குத்தி, செயின், நெக்லஸ், தொங்கட்டான், பேட்ஜ் மற்றும் உடல் அலங்கார ஆபரணங்கள் அணிந்து வந்தால், தேர்வு எழுத அனுமதி கிடையாது• தண்ணீர் பாட்டில், ஜூஸ், ஸ்நாக்ஸ், நொறுக்கு தீவனங்கள் உள்ளிட்ட எந்த உணவு பொருளுக்கும் அனுமதி இல்லை. தேர்வு மையத்தில் குடிநீர் வசதி உண்டு. நீரிழிவு பிரச்னை இருப்பவர்களுக்கு, வசதிகள் செய்து தரப்படும்.

முதல்வர் ஆணை

Wednesday, May 02, 2018

புதிய பாடநூல்கள் நாளை வெளியீடு


புதிய பாடத் திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான பாட நூல்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 4) வெளியிடுவார். இந்தப் பாடத்திட்டங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்தப் பயிற்சிகள் வரும் ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறும்.

தமிழகப் பள்ளிகளில் மாணவர்- ஆசிரியர் விகிதம் குறித்து கணக்கிட்டு வருகிறோம். இதையடுத்து எந்தெந்த மாவட்டங்களில் ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர் என கணக்கெடுத்து அதன் அடிப்படையில் அரசுப் பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதேபோன்று சிறப்பு ஆசிரியர்களுக்கான தேவை குறித்த விவரங்களை அரசு சேகரித்து வருகிறது. அடுத்த 15 நாள்களுக்குள் இது தொடர்பான பட்டியல் தயார் செய்யப்பட்டு ஜூன் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என்றார்.

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மே 7 முதல் விண்ணப்ப விநியோகம்


அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (மே 7) முதல் தொடங்குகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டது.

அரசு கல்லூரிகள் பக்கம் மாணவர்களை ஈர்க்கும் வகையில், கடந்த ஆண்டு வரை தனியார் கல்லூரிகள் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்குவதற்கு முன்பாகவே, அரசுக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகத்தை தொடங்கிவிட்டன. நிகழ் கல்வியாண்டுக்கான (2018-19) விண்ணப்ப விநியோகத்தை தனியார் கலை-அறிவியல் கல்லூரிகள் புதன்கிழமை (மே 2) தொடங்கி விட்ட நிலையில், அன்றைய தினம்தான் அரசு கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான அரசு கல்லூரிகள், வரும் திங்கள்கிழமை முதல் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க உள்ளன. பிள்ஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி அடுத்த 10 வேலை நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். அன்றைய தினமே பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாகவும் நிர்ணயிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம்: இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையின்படி, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 48, பதிவுக் கட்டணம் ரூ. 2 சேர்த்து, ஒவ்வொரு மாணவரிடமும் ரூ. 50 மட்டுமே வசூலிக்கவேண்டும். தாழ்த்தப்பட்ட (எஸ்.சி..), பழங்குடியின (எஸ்.டி.) மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

பதிவுக் கட்டணம் ரூ. 2 மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்தச் சலுகையைப் பெற மாணவர்கள் சாதிச் சான்றிதழ் நகலைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஈ கலந்தாய்வுக்கு இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை இந்த ஆண்டு முதல் இணையதளம் மூலம் நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.அதன்படி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே www.annauniv.edu, www.tnea.ac.in என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கையேட்டில் குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை மாணவர்கள் சரிவர பின்பற்ற வேண்டும்.இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாதவர்களுக்காக, அரசுக் கல்லூரிகளில் இணைய சேவை மையங்கள் அமைக்கப்படுகிறது. இன்று முதல் ேம 30ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய முரண்பாடு விவகாரம் மே 15க்குள் மனு அளிக்கலாம்


அரசு ஊழியர் ஊதிய முரண்பாடு குறித்து, மனு அளிக்க விரும்புவோர், மே, 15க்குள் அளிக்க வேண்டும்' என, ஒரு நபர் குழுத் தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை களைய, நிதி செலவினம் துறை செயலர் சித்திக் தலைமையில், ஒரு நபர் குழு, பிப்., 20ல், அமைக்கப்பட்டது.

இக்குழு, தங்களிடம் வரும் கோரிக்கைகளை பரிசீலித்து, தேவையான பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்கும்.கமிட்டி கேட்கும் அனைத்து தகவல்களையும், துறைத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சித்திக் தலைமையிலான குழு, ஊதிய முரண்பாடு தொடர்பான, கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறது. 'கோரிக்கை மனுக்களை, நேரிலோ, தபாலிலோ அல்லது இ - மெயில் முகவரி, omc_2018@tn.gov.in வழியாவோ, மே, 15க்குள், அனுப்ப வேண்டும்' என, அதன் தலைவர், சித்திக் தெரிவித்துள்ளார்.

Tuesday, May 01, 2018

7 புதிய கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு அனுமதி


தமிழகத்தில் முதல்கட்டமாக 7 புதிய தனியார் கலை -அறிவியல் கல்லூரிகள் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. புதிய கலை-அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதிக்கக் கோரி 65 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆள்குறைப்பு நடவடிக்கைகள், ஊதியக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பொறியியல் படிப்பிகள் மீதான மாணவர்களின் ஆர்வம் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் குறையத் தொடங்கியது. இது இப்போதும் தொடர்கிறது. மாணவர் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருவதன் காரணமாக, பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் 13 முதல் 20 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை முழுமையாக நிறுத்த அனுமதி கோரி விண்ணப்பித்து வருகின்றன. 200 பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையைப் பாதியாகக் குறைக்க விண்ணப்பிக்கின்றன. அதுபோன்று, இந்த ஆண்டு விண்ணப்பித்த கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 19 பொறியியல் கல்லூரிகள் சேர்க்கையை முழுமையாக நிறுத்த உள்ளதாக ஆன்-லைன் பொறியியல் சேர்க்கை அறிமுக நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். பொறியியல் படிப்புகள் மீது ஆர்வம் குறைந்து வரும் நிலையில், கலை அறிவியல் படிப்புகள் மீதான மாணவர்களின் ஆர்வம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் ஒவ்வொரு ஆண்டும் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது.

இதனால் புதிய கலை-அறிவியல் கல்லூரி தொடங்க விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதற்காக கடந்த ஆண்டு 67 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 2018-19 ஆண்டுக்கு 65 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. மேலும் அதிகரிக்கும்: இதில் முதல்கட்டமாக 7 புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என உயர் கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறினார். இவற்றில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் மட்டும் 3 கல்லூரிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இந்த நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கல்லூரி கல்வி இயக்குநரக அதிகாரிகள் தெரிவித்தனர்

பி.இ. கலந்தாய்வு: நாளை முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு


பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வில் பங்கேற்க வியாழக்கிழமை (மே 3) முதல் ஆன்-லைனில் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான இணையதள பக்கம் செவ்வாய்க்கிழமை காலையில் முடங்கியிருந்தது. பிற்பகலில் சீர் செய்யப்பட்டது. ஆனாலும், இணையதளம் அடிக்கடி முடங்கினால், வீட்டில் இருந்தபடியே ஆன்-லைனில் விரைவாக விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் முதன் முறையாக அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் மாணவர்கள் தங்களுடைய வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப்பிக்கத் தெரியாத மாணவர்களுக்காகவும், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்களை கலந்தாய்வை நடத்தும் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ளது. இம்மையங்களில் கட்டணமின்றி இலவசமாக சேவையைப் பெற முடியும். ஜூலை முதல் வாரத்தில் ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது.

இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு வியாழக்கிழமை (மே 3) தொடங்கப்பட உள்ளது. ஆன்-லைன் விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்த விவரங்கள் புதன்கிழமை (மே 2) வெளியிடப்பட உள்ளது. காலையில் முடங்கியது-பிற்பகலில் சீரானது: விண்ணப்பப் பதிவு தொடங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், பி.இ. சேர்க்கை விண்ணப்பத்தைப் பதிவு செய்வதற்கான www.annauniv.edu/tnea2018 என்ற இணையதள பக்கம் செவ்வாய்க்கிழமை காலையில் திறக்க முடியாமல் முடங்கியிருந்தது. பிற்பகலில் நிலைமை சீரடைந்தது. விண்ணப்பப் பதிவு தொடங்கிய பிறகு ஆயிரக்கணக்கான மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு இந்த இணையதள பக்கத்தை திறக்க முற்படுவார்கள் என்பதால், வீட்டிலிருந்தபடியே ஆன்-லைனில் விரைவாக விண்ணப்பிக்க முடியுமா என்ற சந்தேகம் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறுகையில், 'செவ்வாய்க்கிழமை சில தொழில்நுட்பப் பணிகளுக்காக விண்ணப்பிப்பதற்கான இணையதள பக்கத்தை ஊழியர்கள் ஆஃப் செய்து வைத்திருந்தனர். வேறு எந்த பாதிப்பும் இல்லை' என்றார்.

இளையராஜா, ரஹ்மான் குறித்து பிளஸ் 1 வகுப்பில் தமிழ் பாடம்


பிளஸ் 1 புதிய பாடப் புத்தகத்தில், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய பாடம் இடம்பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு குறித்தும், 'வாடி வாசல்' என்ற தலைப்பில், புதிய பாடம் சேர்க்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு பின், ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, புதிய பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

'ஆஸ்கர் தமிழர்' : இதில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடப்புத்தகங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.அதில், பிளஸ் 1 தமிழ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பொது தமிழ் என்ற, பிளஸ் 1 புத்தகத்தில், 'இசைத் தமிழர் இருவர்' என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளது. 'சிம்பொனி தமிழர்' என்ற பெயரில், திரைப்பட இசை அமைப்பாளர், இளையராஜா குறித்தும், 'ஆஸ்கர் தமிழர்' என்ற பெயரில், ஏ.ஆர்.ரஹ்மான் குறித்தும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், கவிஞர் அப்துல் ரஹ்மான் எழுதிய, ஜப்பானிய வகை கவிதை, பிரபஞ்சனின் சிறுகதை, புதுமைப்பித்தன் கவிதை என, நவீன இலக்கியத்திற்கு, அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய, 'யானை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி' குறித்த பாடமும் இடம்பெற்றுள்ளது. தமிழக கலாசாரம் மற்றும் நாகரிகத்தின் அடையாளமாக விளங்கும், ஜல்லிக்கட்டு குறித்து, 'வாடி வாசல்' என்ற தலைப்பில், ஒரு பாடம் இணைக்கப்பட்டுள்ளது. பொதுவுடைமையை வலியுறுத்திய ஜீவானந்தம், இயற்கை வேளாண்மை, சிந்துவெளி நாகரிகத்தில், தமிழ் பெயர் தாங்கிய ஊர்கள் குறித்த அம்சங்களும் உள்ளன.

குற்றால குறவஞ்சி : தமிழர்களின் கல்வி வரலாறு, திண்ணைப் பள்ளி, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் கட்டடக் கலை, குற்றால குறவஞ்சி நாடகம் போன்றவையும், இடம்பெற்றுள்ளன.இலங்கை, யாழ்ப்பாணத்தை சேர்ந்த எழுத்தாளர், வில்வரத்தினம் எழுதிய, 'யுகத்தின் பாடல்' என்ற கவிதையும், 'ஆறாம் திணை' என்ற தலைப்பில், எழுத்தாளர் முத்துலிங்கம் எழுதிய புதினமும், பாட புத்தகத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.

தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 9 பள்ளிகளை மூட ரெயில்வே நிர்வாகம் உத்தரவு


தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 9 ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதனால் அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தெற்கு ரெயில்வே சார்பில் பெரம்பூர், ஜோலார்ப்பேட்டை, அரக்கோணம், மதுரை, திருச்சி பொன்மலை, விழுப்புரம், போத்தனூர், ஈரோடு, மற்றும் பாலக்காடு (கேரளா) ஆகிய 9 இடங்களில் ரெயில்வே பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதில் சென்னையில் உள்ள பெரம்பூர், மதுரை, திருச்சி பொன்மலை மற்றும் பாலக்காட்டில் உள்ள ரெயில்வே பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகும்.

குறைந்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் இந்த பள்ளிகளில் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் ரெயில்வே ஊழியர் அல்லாதவர்களின் குழந்தைகள் என 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மதுரை மற்றும் பெரம்பூர் ரெயில்வே பள்ளிகளில் மட்டும் தலா ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 9 ரெயில்வே பள்ளிகளையும் மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில் எந்த மாணவர் சேர்க்கையும் கூடாது என்று ரெயில்வே பள்ளி முதல்வர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும் ரெயில்வே பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு, பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் வாயிலாக மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

அதேபோல ரெயில்வே பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ரெயில்வேயின் பிற பணிகளில் மறுபணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 30-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

ரெயில்வே பள்ளிகள் மூடப்படும் உத்தரவு மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் விவேக் தேப்ராய் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ‘திடீர்’ முடிவு காரணமாக ரெயில்வே பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு செல்ல இருக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். புதிய பள்ளியில் எந்த அணுகுமுறையுடன் கல்வியை தொடருவது? பிற பள்ளிகளில் இடம் கிடைக்குமா? என்ற கலக்கம் அடைந்து உள்ளனர். ரெயில்வே பள்ளிகளை மூடும் இந்த நடைமுறைக்கு அங்கீகரிக்கப்பட்ட ரெயில்வே தொழிற்சங்கமான சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அத்தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:-

2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்தது. தவிர ரெயில்வே ஊழியர் அல்லாதவர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களாலும் ரெயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

இதனால் ரெயில்வே பள்ளிகளை ஏன் நடத்தவேண்டும்? என்று கேள்வி எழுந்துவந்த சூழ்நிலையில், விவேக் தேப்ராயின் பரிந்துரையை காரணம் காட்டி ரெயில்வே பள்ளிகளுக்கு முழுக்கு போட ரெயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்து இருக்கிறது.

விவேக் தேப்ராய் பரிந்துரைகளில் ரெயில்வே பள்ளிகள், ரெயில்வே ஆஸ்பத்திரிகள் போன்றவற்றை ஏன் நடத்தவேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆக ரெயில்வே துறையை தனியார் மயமாக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இது மிகவும் தவறான முடிவு ஆகும்.

ஏற்கனவே ரெயில்வே பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும், சி.பி.எஸ்.இ. பாடமுறையை அனைத்து ரெயில்வே பள்ளிகளிலும் அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே சூழ்நிலைகளையும், மாணவர்-பெற்றோர் நலனையும் முன்னிறுத்தி ரெயில்வே பள்ளிகள் மூடும் முடிவை கைவிடவேண்டும். ரெயில்வே பள்ளிகள் தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே நிர்வாகத்தின் ஒருமித்த கொள்கை முடிவுகள் எனும் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு ரெயில்வே மண்டலங்களில் உள்ள ரெயில்வே பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

தற்போது தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்வே பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதின் மூலம் ரெயில்வே பள்ளிகள் மூடப்படுவது உறுதியாகி உள்ளது