இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 22, 2017

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்களுக்கு எச்சரிக்கை


பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க தாமதமானால், தலைமை ஆசிரியர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ௧௫ ஆயிரம் சிறப்பாசிரியர்கள், பகுதி நேரமாக, மாதம், 7,700 ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு, வாரம் மூன்று நாட்களுக்கு வகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன.

இவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், சரிவர சம்பளம் வழங்குவதில்லை என, புகார்கள் எழுந்துள்ளன. அதனால், பகுதி நேர ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர். அதில், 'பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாதம் தோறும், ௨௫ முதல், ௩௦ம் தேதிக்குள், பகுதி நேர ஆசிரியர்களுக்கான சம்பளத்தை, மின்னணு முறையில் பெற்று, ௫ம் தேதிக்குள் வழங்கி விட்டு, அறிக்கை தர வேண்டும். '

தாமதமாக சம்பளம் வழங்கினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

துறைத்தேர்வு டிசம்பர் 2017

பழைய ஓய்வூதியம் பற்றி அக்.13ல் அரசு அறிவிக்காவிட்டால் போராட்டம் - அரசு ஊழியர்கள்


நீதிமன்ற உத்தரவுப்படி அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அறிவிப்போம் என்று ஜாக்டோ ஜியோ சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 7ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் டி.சேகரன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து நீதிமன்ற தடை உத்தரவை ஏற்று அரசு ஊழியர்கள் போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைத்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி கே.கே. சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேரில் ஆஜரானார். அரசு தரப்பு கருத்துகளை அறிக்கையாக அளித்தார். ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேலாகிறது.

இதற்காக மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழு ஓராண்டு ஆன பிறகும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. 1.4.2003க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களையும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்குள் கொண்டுவர வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட குழுவும் இதுவரை அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனால் 11 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பலமுறை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு ஏற்படாததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம். இடைக்கால நிவாரணம் வழங்க உத்தரவிட வேண்டும்" என்றார். அதற்கு பதிலளித்து வாதிட்ட அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன், தமிழகத்தில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த அலுவல் குழு அமைக்கப்பட்டு செப்டம்பர் 30க்குள் அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கை கிடைத்தவுடன் 4 அல்லது 5 மாதங்களில் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு அரசிடம் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கையை ஏற்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக தமிழக அரசு அக்டோபர் 13ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். அதற்குள் முடிவு எடுக்காவிட்டால், ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க வேண்டும். வேலைநிறுத்த நாட்களுக்கான சம்பளத்தை பிடித்தம் செய்யக் கூடாது.

அதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் வேலைக்குச் சென்று வேலைநிறுத்த காலத்தை சமன் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அடுத்த விசாரணையை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ சங்க நிர்வாகிகள், அக்டோபர் 8ஆம் தேதி மாவட்டம் தோறும் விளக்கக் கூட்டம் நடத்தப்படும். அக்டோபர்13ஆம் தேதி அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் அக்டோபர்15ஆம் ஜாக்டோ-ஜியோ கூட்டம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தை தொடருவோம் என்றும் கூறியுள்ளர்.

சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு


உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு எதிராக இருவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், கடந்த ஜூன் 26-ம் தேதி உடற்கல்வி ஓவியம், இசை, தையல் பயிற்சி போன்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டது. இதில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தகுதியில் மத்திய அரசின் என்.சி.டி.இ 2-வது அட்டவணை விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை மாறாக பொதுவான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ஏற்புடையதல்ல.

தமிழகத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளுக்கும் வெவ்வேறு தகுதிகளை என்.சி.டி.இ 2001 விதிப்படி நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெறாவிட்டால் மத்திய அரசின் விதிமுறையை மீறியதாக அமையும். எனவே, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுவான தகுதியை ரத்து செய்துவிட்டு மத்திய அரசின் என்.சி.டி.இ விதி 2001-ன் படி, ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, நாளை நடைபெறவுள்ள உடற்கல்வி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடைக்காலத்தடை விதித்தும், பள்ளி கல்வித்துறை தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரித்த நீதிபதிகள் தனிநீதிபதியின் இடைக்காலத்தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டனர். இதையடுத்து, முன்னர் அறிவித்திருந்தபடி நாளை ( 23-ம் தேதி ) சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வு நடைபெற உள்ளது.

Thursday, September 21, 2017

பங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்கள், அரசின் தொகைககள் வட்டியுடன் அரசுக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்கம்: அரசு பணியாளர்களிடம் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு பங்களிப்பாக அடிப்படை ஊதியம், அகவிலைப்படியில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசு அதற்குச் சமமான பங்குத் தொகையைச் செலுத்துகிறது.

இத்திட்டத்தின் கீழ், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த காலத்தில் சுமார் 4 லட்சத்து 62 ஆயிரத்து 327 அரசு, உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனப் பணியாளர்களின் பங்களிப்புத் தொகை, அரசின் பங்களிப்பு, வட்டி உள்பட மொத்தம் ரூ.18 ஆயிரத்து 16 கோடி பொதுக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் அவரது பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்கள், பணிதுறப்பு, இறந்த 3 ஆயிரத்து 288 பேருக்கு இறுதியாகச் சேர வேண்டிய ரூ.125.24 கோடியை வழங்க அரசு அனுமதித்துள்ளது. எனவே, பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களின் பங்குத் தொகை, அரசு பங்களிப்பு ஆகியன வட்டியுடன் அரசின் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

ஜாக்டோ - ஜியோ இன்று ஆலோசனை


அடுத்த கட்டம் குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு, மதுரையில், இன்று கூடி முடிவு எடுக்கிறது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், செப்., 7 முதல், 15 வரை தொடர் வேலை நிறுத்தம் நடந்தது. பின், உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்த வழக்கில், நேற்று அரசு தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகி, விளக்கம் அளித்தார். இதையடுத்து, அக்., 23க்கு, வழக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ உயர்மட்ட குழு நிர்வாகிகள் கூட்டம், இன்று பிற்பகல், 3:00 மணிக்கு, மதுரையில் நடக்கிறது. அதில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு எடுக்கப் படுகிறது.

SSA-SPD PROCEEDINGS-கிராமக்கல்விக் குழுவை பள்ளிமேலாண்மைக் குழுவாக மாற்றித் தலைவர்களை நியமிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுரை!!


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன்  மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக் கால தடை விதித்தனர். தடையை மீறி போராட்டம் தொடர்ந்ததால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கடந்த 15-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன் பேரில் நிர்வாகிகள் சுப்பிரமணியன்,  தாஸ், மோசஸ்  ஆஜரானார்கள். அவர்களிடம் போராட் டத்தை வாபஸ் பெற்று உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள்  சசிதரன், சுவாமிநாதன் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்காக  தமிழக அரசின் தலைமைச்
செயலாளர் 21-ந்தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டனர். அதன்படி தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.

12.30 மணியளவில் வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ஜாக்டோ-ஜியோ சார்பில் மூத்த வக்கீல் பிரசாத் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்த சரியான கால அளவு குறித்து ஆலோசனை நடத்தி தெரிவிக்குமாறு அரசு தரப்பிடம் கூறினர். 

வேலை நிறுத்ததில் ஈடுபட்ட  அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிறுத்திவைக்கவும்  என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது. வேலை நிறுத்த நாட்களை வேலை செய்து ஈடாக்கி கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்த நாட்களை சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்ய வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் 7ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த எத்தனை நாட்களாகும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அக். 13ஆம் தேதிக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு  உள்ளது.

இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்த 6 துணை வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த 6 வங்கிக் கிளைகளிலும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்திய பினான்சியல் சிஸ்டம் (IFS) கோட் கொண்ட புதிய காசோலைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

பாரதிய மகிலா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதில்லாமல், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஆறு வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆறு வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து விட்டதால், வங்கிகளின் பழைய காசோலைகளும், அதன் ஐஎஃப்எஸ் கோட் எண்களும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 20, 2017

ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்


ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடுகளை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டப் போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தியது. இந்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும், இந்தப் பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரும் 21 -ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை ஆஜராகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு


தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும், ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது.

எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி


தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன.

இதற்கான வரைவு கலை திட்ட அறிக்கை தயாரித்து, ஆய்வு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கணினி பாடத்தை, அறிவியல் பாடத்துடன், தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் ஊதிய பிடித்தம்,ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகள்

Tuesday, September 19, 2017

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை


மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்.

இப்படி, மாணவர் விகிதத்தை விட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உத்தரவு : இது குறித்து, 22ம் தேதி, சென்னையில், மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாணவர் சேர்க்கை விபரம், மூடப்பட்ட, செயல்படாத பள்ளிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மின் வசதியில்லாத பள்ளிகள், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை, 'ஸ்மார்ட்' பள்ளி தேர்வு பட்டியல் என, ௩௬ வகை அம்சங்களுடன் கூட்டத்தில் பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்


'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரை, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நுாலகங்கள் மேம்பாடு மற்றும் புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுதோறும், ௨௫ ஆயிரம் ரூபாய் நிதி தரப்படுகிறது. இந்த நிதியில், நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்படும். ஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாத புத்தகங்களை, தனியாரிடம் வாங்கி கொடுத்ததால், பண விரயம் ஏற்பட்டதுடன், மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி சரியாக கிடைக்கவில்லை.

இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த ஆண்டு, அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிகளிலும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நுழைவுத் தேர்வு பயிற்சி புத்தகங்களை வழங்க, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.