இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 18, 2016

ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை


பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் இந்த ஆண்டும்  தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகள் வருகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் தொடக்க  கல்வித்துறையின் கீழ் வருகின்றன. மேற்கண்ட பள்ளிகளில் மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கான  புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்  மாணவ மாணவியருக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒவ்ெ்வாரு ஆண்டும் இதற்காக 52 தலைப்புகளில் 6 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான  புத்தகங்கள் விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், பாடத்திட்டங்களை வகுத்து அதற்கேற்ப பாடங்களை எழுதும் பொறுப்பு மாநில கல்வி ஆராய்ச்சி  மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு 1 முதல் 9ம் வகுப்பு வரை சமச்சீர்  கல்வியை அறிமுகம் செய்தது. அது படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கு அறிமுகமானது.

இதற்கு முன்னதாக ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வழங்குவார்கள்.  இதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கடந்த 2005ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு அச்சிட்டு வழங்கினர். அதில் கணக்கு, அறிவியல் பாடங்களில்  கடினமான பகுதிகள் அதிக அளவில் இடம் பெற்று இருந்ததால் மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு கடந்த முறை  ஆட்சியில்  இருந்த திமுக அரசு கடினப் பகுதிகளை நீக்கியது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, புதிய பாடத்திட்டத்தின்படி புதிய  பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கி இருக்க வேண்டும்.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் என்சிஇஆர்டி(தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின்) வரைவு பாடத்திட்டத்தின்படி  புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பிளஸ் 1 பிளஸ் 2 பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த புதியபாடப்புத்தகம் அச்சிட  அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த கல்வி  ஆண்டு தொடங்க  இன்னும் 40 நாட்கள் உள்ள நிலையில் புதிய பாடப்புத்தகம் அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வரும் கல்வி ஆண்டில் பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளுக்கு பழைய பாடப்புத்தகங்களே தொடரும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, தனியார்  பள்ளிகளில் இப்போதே பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை நடத்த தொடங்கிவிட்டனர்.

ஏப்.30 வரை வகுப்புகள் : அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் கொளுத்தும் வெயிலால் அவதி


அரசு தொடக்க பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 வரை வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ெகாளுத்தும் வெயிலால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் 2015-16ம் கல்வி ஆண்டில் ஏப்ரல் 21 வரை செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிவடைந்து ஏப்ரல் 22 முதல் பள்ளிளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. அதே போன்று தொடக்க, நடுநிலை பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிந்து மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது.

2016-17ம் கல்வியாண்டில் ஜூன் 1ம் புதன் கிழமை அன்று அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தொடக்க பள்ளிகளில் கொளுத்தும் வெயிலிலும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மாணவ மாணவியரை அவதிப்பட வைத்துள்ளது.

Wednesday, April 13, 2016

பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்


2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. முதல் முறையாக இந்த வசதியை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்ப விநியோகம் கிடையாது. பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து -"செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 10 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த அவகாசம் நீட்டிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுகுறித்து பதிவாளர் கணேசன் கூறியது: பதிவு செய்யும் முறையில் சந்தேகம் எழும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 60 உதவி மையங்கள் செயல்படும். இங்கு சந்தேகங்களை அறிவதோடு, விவரங்களை பதிவையும் செய்து கொள்ள முடியும். இதுதவிர, அரசு இ-சேவை மையங்கள் மூலம் விவரங்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டணம்: கலந்தாய்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். அல்லது கடன் அட்டை, பற்று அட்டைகள் மூலமாக ஆன்-லைனிலும் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றார். 486 இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க வசதிக்காக ஆன்-லைன் விவரங்கள் பதிவை அரசு இ-சேவை மையங்களில் மூலமும் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகம், மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் ஆகியவற்றில் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்


புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 2003 ஏப்.,1 ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தலுக்கு முன் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய வல்லுனர் குழுவை அரசு அமைத்தது. மேலும் இறந்த ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வு பெற்றோருக்கு, அவர்கள் செலுத்திய சந்தா தொகை, வட்டி, இதர பணப்பலன்களை வழங்க அரசு உத்தரவிட்டது. ஆனால் பாதிக்கப்பட்டோர் அனுப்பிய விண்ணப்பங்களை ஏதாவது ஒரு காரணம் கூறி கருவூல கணக்குத்துறை திருப்பி அனுப்பி வருகிறது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய பென்ஷன் திட்ட போராட்ட ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது: விண்ணப்பங்களை அரசின் புள்ளி விபர தொகுதி மையத்திற்கு அனுப்பினால் போதும். அங்கிருந்து கருவூல கணக்குத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஒரே மாதத்தில் பணப்பலன் கிடைக்கும் என, அரசு தெரிவித்தது. தற்போது விண்ணப்பங்களை ஏதாவதொரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரித்து வருகிறது.மேலும் ஊழியர்கள் பற்றாக்குறையால் ஒரு மாதத்தில் பணப்பலன் தர முடியாது. சீனியாரிட்டி படி தான் தரமுடியும் எனவும் கூறியுள்ளது, என்றார்

Tuesday, April 12, 2016

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி: 16-இல் தொடக்கம்


பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணி சனிக்கிழமை தொடங்குகிறது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 11-ஆம் தேதி நிறைவு பெற்றது. 10,72,000 பேர் எழுதினர். இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி சனிக்கிழமை தொடங்க உள்ளது.

இதற்காக, மாவட்டந்தோறும் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைத்தல், ஆசிரியர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட முதல் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். முதல் நாளில், தலைமை திருத்துநர்கள், கூர்ந்தாய்வாளர்களும், அதைத் தொடர்ந்து, 18-ஆம் தேதி முதல் உதவி விடை திருத்துனர்கள், முழு அளவில் திருத்தும் பணியில் ஈடுபடுவர்.

மே 16-க்கு முன்பே பிளஸ் 2 தேர்வு முடிவு: இதற்கிடையே, 64 மையங்களில் நடைபெறும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மே 16-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், அதற்கு முன்னதாக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Monday, April 11, 2016

தேர்தலில் ஓட்டுப்போட வேண்டுமா? புதிய வாக்காளராக சேர இன்னும் 4 நாள்தான்...


தமிழகத்தில் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்தி வருகிறது. கடந்த மாதம் 15ம் தேதி தொடங்கப்பட்டு இந்த மாதம் 15ம் தேதி வரையிலும் 18 வயதை அடைந்த அனைத்து வாக்காளர்களும் புதிதாக தங்களது வாக்குகளை சேர்த்துகொள்ளலாம்.

25 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் சேர்த்து கொள்ளும் வகையில் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகிறது. இதில் பதியப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் உடனடியாக விசாரணை செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும்.உரிய ஆதாரங்கள், குடியிருப்பு சரியாக இருந்தால் வரக்கூடிய சட்டசபை தேர்தலில் வாக்களித்துகொள்ளலாம். எனவே இளம் வாக்காளர்கள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் புதிய வாக்காளர் சேர்க்கை, திருத்தம், முகவரி மாற்றம், உள்ளிட்ட பணிகளுடன், வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போய் இருந்தாலோ, டேமேஜ் ஆக இருந்தாலோ பணம் கட்டி மாற்றிக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதற்கான பணிகள் முடிய இன்னும் 4 நாட்களே உள்ளநிலையில் தகுதியான வாக்காளர்கள் இச்சேவை மையத்தை பயன்படுத்தி கொள்ள தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் ஆணையம் வாக்காளர் சேவை மையம் மூலமாக தகுதியான வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதேபோல் புதிய வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர்பட்டியலில் திருத்தம், முகவரிமாற்றம், உள்ளிட்டவைகள் செய்து சேர்த்துகொள்ள இன்னும் 4 தினங்களே உள்ளன' என்றனர்.

Friday, April 08, 2016

தேர்தல் அலுவலருக்கு பயிற்சி 24ல் துவங்குகிறது


தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி, 24ல் துவங்குகிறது; மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என, 11 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

ஓட்டுப்பதிவு அலுவலர், உதவி பதிவு அலுவலர்கள் என, நான்கு பேர், பூத் சிலிப் வழங்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்கு, ஓட்டுப்பதிவு இயந் திரங்களை கையாள்தல், படிவம் பூர்த்தி செய்தல், ஓட்டுப்பதிவு துவங்கும் முன், முடிந்ததும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி, மூன்று கட்டமாக அளிக்கப்படும். தேர்தல் பிரிவினர் கூறியதாவது:

தேர்தல் பணியாற்றும் அலுவலர் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. முதல்கட்ட பயிற்சி, 24ல் அளிக்கப்படும். படிவங்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கையாள்தல் உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளும், வழிகாட்டி மற்றும் தேர்தல் நடைமுறை, விதிமுறை குறித்த புத்தகங்கள் வழங்கப்படும்.

மூன்றாம் கட்டமாக, ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான, 15ம் தேதி காலையில், பயிற்சி அளிக்கப்படும். சம்மந்தப்பட்ட அலுவலர் எந்த தொகுதியில், எந்த ஓட்டுச்சாவடியில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்ற உத்தரவு வழங்கப்படும்; அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு சென்று உடனடியாக பணி ஏற்க வேண்டும்; தேர்தல் பொருட்கள், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், வாகனங்களில் அனுப்பப்படும். இவ்வாறு, அவர்கள் தெரி வித்தனர்.

Thursday, April 07, 2016

தேர்தலுக்கு பின் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'ஆதார்' அட்டை நகல் வாங்க முடிவு


சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கு வதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவற்றில் உள்தாள் ஒட்டப்பட்டு செல்லத்தக்க காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல முறைகேடுகள் நடக்கின்றன. இதை தடுக்க கண், விரல் ரேகை மற்றும் புகைப்படத்துடன் கூடிய 'ஸ்மார்ட்' வடிவில் ரேஷன் கார்டு வழங்க உணவு துறை முடிவு செய்தது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கின. ஆனால் அரசியல் குறுக்கீடு காரணமாக செயல்படுத்த முடிய வில்லை.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்ததும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்குவதற்காக மக்களிடம் இருந்து 'ஆதார்' அட்டை நகலை வாங்க உணவு துறை முடிவு செய்துள்ளது.அரியலுார், பெரம்பலுாரில் முதலில் தரப்படும். இதுகுறித்து உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க பொது மக்களிடம் இருந்து தனியாக விவரங்களை சேகரித்தால் தாமதம் ஏற்படும். தற்போது அதிகம் பேர் 'ஆதார்' அட்டை வாங்கி வருகின்றனர். எனவே அதன் நகலை வாங்கி, ரேஷன் கடைகளில் 'ஸ்கேன்' செய்து அந்த விவரங்கள் அடிப் படையில் 'ஸ்மார்ட்' வடிவில் ரேஷன் கார்டு வழங்கப்படும்.

ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனரோ, அவர்கள் அனைவரின் ஆதார் அட்டை நகலும் வாங்கப்படும். ஆதார் அட்டையில் இல்லாத விவரம் மக்களிடம் இருந்து நேரடியாக பெறப்படும். இந்த பணி தேர்தல் முடிந்ததும் துவங்கப்படும். முதல் கட்டமாக ஜூலை மாதம் அரியலுார், பெரம்பலுாரில் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன் பின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tuesday, April 05, 2016

நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்


மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

வருகிற 12-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு http://cbsenet.nic.in/cbsenet/welcome.aspx என்ற இணையதளம் மூலம் வருகிற 12-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு துவக்கம்


தமிழகம் முழுவதும், பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியது. வீடு, வீடாக சென்று, ஆசிரியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 6 முதல், 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும், இலவச கட்டாய கல்வி கிடைக்க வேண்டும். இதற்காக, ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு பல கோடி ரூபாய் ஒதுக்குகிறது.

மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வின் கீழ், இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரலில், மாவட்டம் வாரியாக, பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுத்து, அந்த பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்படும். அந்த குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி அளிக்க, ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளி மேலாண் குழு அமைக்கப்படும். இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் பணிகளால், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்தது.

இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும், எஸ்.எஸ்.ஏ.,வின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டு, கணக்கெடுப்பு பணி, நேற்று துவங்கியது.கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோர், வீதி, வீதியாக, வீடு வீடாக சென்று, பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள், வெளி மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் குறித்து, கணக்கெடுத்து வருகின்றனர். கடந்த ஆண்டில், இந்த கணக்கெடுப்பின் மூலம், 2,188 பேர் கண்டறியப்பட்டு, பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர்

Monday, April 04, 2016

மே 9-இல் பிளஸ் 2 தேர்வு முடிவு?


தமிழகம், புதுச்சேரியில் மே 16-இல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுவதால், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே மே 9-இல் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-இல் தொடங்கி ஏப்ரல் 1-இல் முடிவடைந்தது.

தமிழகம், புதுச்சேரியில் 6,550 பள்ளிகளைச் சேர்ந்த 3 லட்சத்து 91 ஆயிரத்து 806 மாணவர்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 891 மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர். இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள்களை திருத்தும் பணி மார்ச் 14-இல் தொடங்கிவிட்டது. தற்போது தமிழ், ஆங்கிலம் விடைத்தாள்களை திருத்தும் பணி முழுமையாக முடிவடைந்துள்ளது.விடைத்தாள்களை திருத்தும் பணியை வருகிற 20-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம் என கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம், புதுச்சேரியில் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு மே 16-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 19-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதனால், பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை முன்கூட்டியே வெளியிட கல்வித் துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கு இந்த முறை இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மே 2-ஆவது வார இறுதியிலோ அல்லது அதற்கு பிறகோ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவது பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே, பிரச்னைகளைத் தவிர்க்க, முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி மே 9-ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Department exam dec 2015 results

Click below

http://www.tnpsc.gov.in/Resultget-dec2k15.html

Sunday, April 03, 2016

'15 நாட்களுக்கு பிறகே வாக்காளர் அடையாள அட்டை'


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தற்போது ஆன்லைனில் விண்ணப்பிப்போருக்கு மட்டும், வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. விண்ணப்பம் நேரடியாக கொடுத்தால் தாமதமாகும். புகைப்படம் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு விண்ணப்பித்தால், புதிய வாக்காளர் அடையாள அட்டை வர, குறைந்தது, 15 நாட்களாகும்.

வாக்காளர் மேற்கொள்ள விண்ணப்பித்த மாற்றங்கள், முறையாக மேற்கொள்ளப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும். அதன்பின் அவர்கள், வாக்காளர் சேவை மையத்திற்கு சென்று, புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ்., வருவதற்கு முன் சென்றால், பழைய வாக்காளர் அடையாள அட்டை விவரம் அடிப்படையில் புதிய அட்டை வழங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, April 01, 2016

வீட்டுக்கடனுக்கான வட்டி குறைகிறது

புதிய வட்டி விகிதம் முறையால் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைகிறது
  

வங்கிகள் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வந்திருப்பதால் வீட்டுக்கடனுக்கான வட்டி குறைகிறது.

வங்கிகள் கொடுக்கும் டெபாசிட் வட்டி விகிதம், வாங்கும் கடனுக்கான வட்டி விகிதம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்கின்றன. அதாவது சராசரியாக எவ்வளவு வட்டிக்கு வங்கிகள் கடன் வாங்குகின்றன என்பதை பொறுத்து அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த முறையில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்ய அறிவுறுத்தியது.

இதன் அடிப்படையில் குறுகிய காலம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு கால அளவிலும் எந்த தொகையில் வங்கிகளுக்கு பணம் கிடைக்கிறது அதனை அடிப்படையாக வைத்து அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய வங்கிகள் முடிவெடுத்தது. இதற்கு மார்ஜினல் காஸ்ட் ஆப் லெண்டிங் ரேட் (எம்சிஎல்ஆர்) என்று பெயர்.

முன்பு அடிப்படை வட்டி விகிதத்தில் இருந்து கூடுதலாக கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும் இப்போது எம்.சி.எல்.ஆர். அடிப்படையில் கடன்களுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும்.

முன்பு எஸ்பிஐ வங்கியின் அடிப்படை வட்டி விகிதம் 9.30 சதவீதம். அதிலிருந்து கூடுதலாக 0.25 சதவீதம் வைத்து 9.55 சதவீதமாக வீட்டுக்கடனுக்கான வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது ஒரு வருட கால எம்.சிஎல்ஆர் விகிதம் 9.20 சதவீதம் என்பதால் வீட்டுக்கடனுக்கான வட்டி 9.45 சதவீதமாக குறைகிறது என்று ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் கூறினார்.

இது இன்று முதல் வழங்கப்படும் கடன்களுக்கு பொருந்தும். ஏற்கெனவே இருக்கும் வாடிக்கையாளர்களும் இந்த விகிதத்துக்கு மாறிக்கொள்ளலாம்.

ஒரு வருட எம்.சி.எல்.ஆர் விகிதம் போல, இரண்டு வருட கால விகிதம் 9.3 சதவீதமாகவும், மூன்று வருட விகிதம் 9.35 சதவீதமாகவும் எஸ்பிஐ நிர்ணயம் செய்திருக்கிறது. இதேபோல ஒவ்வொரு மாதமும் பல வேறு காலத்துக்கான எம்சிஎல்ஆர் விகிதத்தை வங்கிகள் நிர்ணயம் செய்யும்.

பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகளும் புதிய வட்டி விகித முறையில் மாற்றி அமைத்திருக்கின்றன