இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, August 24, 2015

பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் நீர்தேக்கப் பள்ளங்கள் இருந்தால் அவற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி ஆகியவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திலுள்ள மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன், குறையிருந்தால் உடனடியாக அதைச் சீரமைக்க வேண்டும்.

மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் அறிவியல், கணினி ஆய்வகங்களில் அறுந்த நிலையில் அல்லது பாதுகாப்பற்ற நிலையில் மின்சார வயர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பயன்பாடற்ற, சிதிலமடைந்த கட்டடங்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் உயரழுத்த மின் கம்பிகள் சென்றால் அதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தலைமையாசிரியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையிலுள்ள மரங்களை அப்புறப்படுத்துவதுடன், புதர்களையும் அகற்ற வேண்டும். முக்கியமாக பள்ளிகளில் முதலுதவிப் பெடடி பயன்படுத்தக்கூடிய வகையில் தயாராக இருக்க வேண்டும்.

மாணவர்களுக்கு அறிவுரை: மழைக் காலங்களில் இடி, மின்னல் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது. பள்ளிகளுக்கு வெளியே உள்ள நீர்நிலைகளுக்கு மாணவர்கள் செல்லக் கூடாது. பள்ளியைவிட்டுச் செல்லும்போது அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகே செல்லக் கூடாது. குளம், குட்டை, கடல் போன்றவற்றில் குளிக்கக் கூடாது என மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் எனவும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு

முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையுள்ள ஆசிரியர்கள், பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டு பெற்றுள்ளது.

அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 முதல் 50 பணியிடங்கள் தேவையுள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன. நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது. இதில் திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் குறைவாகவே இருந்தன. இதனால் பெரும்பாலானோருக்கு வடமாவட்டங்களில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

சிலர் வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் பதவி உயர்வை மறுத்துள்ளனர். இதையடுத்து புதிய பணியிடங்கள் அறிவிக்கும் போது மீண்டும் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: முதுநிலை ஆசிரியர் புதிய பணியிடங்களை அறிவிக்காமல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தியதால் பல ஆண்டுகளாக பணிபுரிந்தோர் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். எனவே புதிய பணியிடங்கள் அறிவித்ததும் பாதிக்கப்பட்டோருக்காக மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டும், என்றார்.

How to install vanavil avvaiyar font

How to instal Vanavil Avvaiyar Font in Android Phone
How to instal Vanavil Avvaiyar Font in Android Phone
1.முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.
2.பின்னர் Vanavil Avvaiyar Font ஐ தரவிறக்கம் செய்யவும்  அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

3.WPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
3.பின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும்.  அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும்.
4.Vanavil Avvaiyar  Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font உள்ள Folder ஐ Open செய்து பிறகு Font ஐ Copy  செய்து கொள்ளவும்.
5.WPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும்.  கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.
Android
data
cn.wps.moffice_eng
.cache
KinsoftOffice
.fonts
பின்னர் Copy செய்த Font ஐ Paste (CLICK PASTE HERE BUTTON)செய்யவும்.
Paste செய்த Font ஐ இரண்டு முறை Tap செய்யவும்.
கடைசியாக தங்களுடைய Phone ஐ Reboot செய்யவும்.
பின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.
Android Lollipop (Version 5.0)ல் இயங்கவில்லை அதற்கான Solution விரைவில்...

Sunday, August 23, 2015

சுமார் 800 விஏஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப் 2 பணியிடக் கலந்தாய்வின் நிலவரத்தை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் அறிந்து கொள்ளும் வசதி அறிந்து அறிமுகப்படுத்தப்படும். யார், யார் எந்த துறையை தேர்ந்தெடுத்தனர், காலி இடம் குறித்து இணையத்தில் அறியலாம்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரேசன் கார்டு கட்டாயம்

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ரேஷன் அட்டை நகல்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2016ல் தொடங்க உள்ளது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான சான்றுகள் தயாரிக்கும்போது அதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருக்க பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.

இதற்கான படிவங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டு அதை பெற்றோரே நேரில் வந்து பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும், தேர்வு எழுத உள்ள மாணவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருந்தால் அதையும் கொண்டு வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகம் முழுவதும், பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. ரேஷன் அட்டை கொண்டு வந்து அதன் நகல் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், ரேஷன் அட்டையின் எண்ணை கணினியில் பதிவு செய்து கொள்ளுவார்கள்.

அத்துடன் மாணவரின் தேர்வு விவரங்களும் அதில் பதிவு செய்யப்படும். அப்படி செய்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்தில் ஆன்லைன் மூலம் அந்தந்த மாணவர்களின் ரேஷன் எண்களை ஆன்லைன் மூலம் வருவாய் துறைக்கு அனுப்பி சாதிச் சான்று, வருவாய் சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றை பள்ளிகளே பெற்றுத் தரும். தவிரவும், பொதுத் தேர்வுக்கு பிறகு அதே ரேஷன் அட்டை எண்ணைப் பயன்படுத்தி அந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவையும் பள்ளிகளில் செய்து கொடுப்பார்கள் என்றனர். இது குறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது, ‘ சில பெற்றோரிடம் ரேஷன் கார்ட் இல்லை. சில இடங்களில் ரேஷன் அட்டையில் மாணவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.

எனவே, எந்த அடிப்படையில் ரேஷன் கார்டை தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகின்றனர் என தெரியவில்லை என்றனர். இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: ரேஷன் அட்டையின் நகல்களை இப்போது வாங்கி வைத்துக் கொள்வோம். தேர்வுக்கு பிறகு ஆன்லைனில் ரேஷன் எண்ணை கணினியில் பதிவு செய்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு செய்வோம். இதனால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, தமிழக எல்லையோரங்களில் இருக்கும் அண்மை மாநில மாணவர்கள் தமிழகத்தில் படித்து அவர்களின் ரேஷன் அட்டைகள் வேறு மாநிலத்தில் இருந்தால் அந்த வகை மாணவர்கள் தமிழகத்தில்வேலை வாய்ப்பு பதிவு செய்ய முடியாது. வெளி மாநிலத்தில் அந்த மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் தமிழகத்தில் அவர்களுக்கு மற்ற பிரிவினர் என்றுதான் சான்று தருவார்கள். ஆனால் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அதே பிரிவிலேயே வழங்குவார்கள். எனவே ரேஷன் அட்டை முக்கியமாக வேண்டும். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

24-8-15 Dinamani news

Dinamani.news

பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்க ஆசிரியர் கூட்டணி முடிவு

செப்டம்பர் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பது என ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.
திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருப்பூர் கே.ஆர்.சி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணசாமி, பொறுப்பாளர் அருள்ஜோதி செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் மலர்விழி சிறப்புரையாற்றினார்.
ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக் குழு முரண்பாடுகளை முற்றிலும் நீக்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை பங்கு விற்பனை, தொழிலாளர் விரோதச் சட்டங்கள், கல்விக்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதற்கு எதிர்ப்பு, கல்வி உரிமைச் சட்டம், மானியம் ரத்து உள்ளிட்டவற்றால் சாமானிய ஏழை மக்களும், அரசு ஊழியர்களும் கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பெரும் திரளாகக் கலந்துகொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளதோடு, தேசிய பசுமைப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சந்தைகள், கடைகள், வணிக வளாகங்களில், பிளாஸ்டிக் பைகள், 'யூஸ் அன்ட் த்ரோ' பொருட்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளாகத் தேங்கி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. கழிவுநீர், மழைநீர் சேகரிப்பு குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதுடன், பல இடங்களில் நீர் நிலைகளையும் மாசு படுத்துகின்றன.

எனவே, பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசுத்துறைகளும் வலியுறுத்துகின்றன. இந்நிலையில், சென்னை யில் உள்ள பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு பள்ளிக் கல்வித்துறை தடை விதித்து உள்ளது.சென்னை முதன்மைக் கல்வி அதிகாரி அனிதா, மாவட்ட கல்வி அதிகாரிகள் வாயிலாக, அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதன் விவரம்:பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள், ஆபத்துகள் குறித்து, மாணவி, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

பிளாஸ்டிக் பைகளுக்குப் பதில், துணிப்பை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.'துணிப்பையை கையில் எடுப்போம்; பிளாஸ்டிக் பையை கைவிடுவோம்' என்ற செய்தியை, பள்ளி பிரார்த்தனைக் கூட்டத் தில் தெரிவிக்க வேண்டும்.மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளிகளில், 'எக்கோ க்ளப்' சுற்றுச்சூழல் மன்ற ங்கள், 'நேஷனல் க்ரீன் கமிட்டி' என்ற தேசிய பசுமைப் படை அமைக்க வேண்டும்.பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவிய போட்டிகள், விவாதம், நாடகம், கண்காட்சிகள் நடத்தி, பிளாஸ்டிக்கின் அபாயம் மற்றும் மறுசுழற்சி முறை குறித்து, மாணவர், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அறியச் செய்ய வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு

பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், பல நேரங்களில், மானிய சிலிண்டர் மட்டும் உணவு தயாரிக்க போதுமானதாக இருப்பதில்லை. இதனால், சந்தை விலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன.அவற்றிற்கான பணத்தை, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு திரும்ப வழங்கி வந்தது.

கடந்த ஏப்ரல் முதல், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், 'மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை தர முடியாது' என தெரிவிக்கப்பட்டது. செலவினங்களை குறைக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, மாணவர்களுக்கு போதுமான உணவு தயாரிக்க முடியாத நிலையை ஏற் படுத்தி விடுவ தால், உன்னதமான மதிய உணவு திட்டம் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக, மாநில அரசுகள் கருதுகின்றன.இதுகுறித்து, அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையிலான, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை மற்றும் அருண் ஜெட்லி தலைமையிலான நிதித் துறைக்கு கடிதம் எழுத மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.

மதிய உணவு திட்டம் :

* நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, 10 கோடி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

* இதற்கான செலவில், 90 சதவீதத்தை, வட கிழக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குகிறது. பிற மாநிலங்களுக்கு, 75 சதவீத செலவுத்தொகையை வழங்குகிறது.

* 2014 - 15ல், 13 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. நடப்பு நிதியாண்டில், 9,000 கோடி ரூபாயாகக் குறைத்துள்ளது. மதிய உணவு திட்டத்தில், பீகாரில், 1.38 கோடி மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். எவ்வித முறைகேடுகளும் நடைபெறாத வகையில் திறம்பட நடத்தி வருகிறோம். இந்நிலையில், மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை வழங்க மத்திய அரசு மறுப்பதால், மாற்று முறைகளை நாட வேண்டியிருக்கும். அதனால் குழப்பங்கள் ஏற்படும். பி.கே.ஷாஹி கல்வி அமைச்சர், பீகார்

படிப்பு காலம் 2 ஆண்டுகளாக அதிகரித்ததால் பி.எட் கல்வி கட்டணத்தை.உயர்த்த முடிவு

படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக அதிகரித்ததால் சுயநிதி கல்லூரிகளில் பி.எட். கல்வி கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு

  
பி.எட்., எம்.எட். படிப்புக்காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அப்படிப்புகளுக் கான கல்விக்கட்டணத்தை திருத்தி யமைக்க நீதிபதி என்.வி.பால சுப்பிரமணியன் கமிட்டி முடிவுசெய்துள்ளது.

தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 650-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. அரசு கல்லூரிகளில் பி.எட். படிப்புக்கு ரூ.2,250-ம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ரூ.10 ஆயிரமும் கல்விக்கட்டணமாக வசூலிக்கப் படுகிறது.

தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனியார் சுயநிதி தொழில்கல்வி கல்லூரிகள் கட்டண நிர்ணயக்குழு கட்டணத்தை முடிவு செய்கிறது. அந்த வகையில், 2014-2015-ம் கல்வி ஆண்டில் பி.எட்., படிப்புக்கு தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சில் (நாக்) அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கு ரூ.46,500 ஆகவும், மற்ற கல்லூரிகளுக்கு ரூ.41,500 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. எம்.எட்., படிப்புக்கு கட்டணம் ரூ.47,500 ஆகும்.

இந்த ஆண்டு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) உத்தரவின்படி தமிழ்நாட்டில் 2015-16-ம் கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு ஓராண்டிலிருந்து 2 ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று தமிழக அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் தனியார் கல்லூரிகளில் பி.எட்., எம்.எட். உள்ளிட்ட படிப்புகளுக் கான கல்விக் கட்டணத்தை திருத்தி யமைக்க நீதிபதி பாலசுப்பிர மணியன் கமிட்டி முடிவுசெய் துள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகிகள் தங்கள் கருத்துகளை தேவையான ஆவணங்களுடன் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் சமர்ப் பிக்குமாறு அனைத்து தனியார் சுயநிதி ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களின் முதல்வர் களுக்கும் நீதிபதி பாலசுப்பிரமணி யன் கமிட்டி உத்தரவு பிறப் பித்துள்ளது. அவர்களின் கருத்து கள் கிடைக்கப்பெற்ற பின்னர் கல்லூரி நிர்வாகிகளிடம் கல்விக் கட்டணத்தை திருத்தியமைப்பது தொடர்பாக விரைவில் ஆலோ சனை நடத்தப்படும் என்று கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்தன.

Friday, August 21, 2015

தத்கால் ரயில் முன்பதிவில் புதிய மாற்றம்: அடையாளச் சான்று இனி வேண்டாம்

தத்கால் ரயில் பயணச் சீட்டு முன்பதிவில் புதிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, இனி தத்கால் முன்பதிவு பயணச் சீட்டு பெறும்போது அடையாளச் சான்று நகலை சமர்ப்பிக்க தேவையில்லை. அதேபோல, இணையத்தில் முன்பதிவு செய்யும் அடையாள அட்டையின் எண்ணை பதிவு செய்ய தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பயணத்தின்போது அசல் அடையாள சான்றிதழ்களை கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரயில் நிலையக் கவுன்ட்டர்களில் தத்கால் முன்பதிவின்போது, அடையாளச் சான்று நகலை இணைப்பது வழக்கமாக இருந்தது.

இனி, தத்கால் முன்பதிவு பயணச் சீட்டு பெறும்போது அதை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், தத்கால் முன்பதிவில் சமர்ப்பிக்கும் அடையாள அட்டையைத்தான் பயணத்தின் போதும் காண்பிக்க வேண்டும் என்ற நடைமுறைக்குப் பதிலாக, இப்போது பிற அடையாள அட்டையைக் காண்பிக்கலாம். 30 சதவீதம்: ரயில்களில் முன்பதிவு செய்யும்போது, 30 சதவீத பயணச் சீட்டுகள் தத்கால் முன்பதிவுக்கு ஒதுக்கப்படுகின்றன. பயண தேதிக்கு, ஒரு நாளுக்கு முன், ரயில் நிலைய முன்பதிவு மையங்கள், இணையதளத்தின் மூலம் தத்கால் முன்பதிவு செய்து கொள்ளலாம். அப்போது சமர்ப்பிக்கும் புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டையை, பயணத்தின்போதும் எடுத்துச் செல்ல வேண்டும். பிற அடையாள அட்டை காண்பித்தால், பயணச் சீட்டு பரிசோதகர் ஏற்பதில்லை. இதனால், பல நேரங்களில் பயணிகள், அபராதம் செலுத்த வேண்டி இருந்தது. இப்போது மாற்று வசதியாக, தத்கல் முன்பதிவின்போது சமர்ப்பிக்கும் அடையாள அட்டையின்றி, புகைப்படத்துடன்கூடிய வேறு அடையாள அட்டை கொண்டு பயணிக்கும் வசதியை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

என்னென்ன அடையாள அட்டைகள்?: வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசு வழங்கும் புகைப்படத்துன்கூடிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லுôரி அடையாள அட்டை, தேசிய வங்கி கணக்குப் புத்தகம், புகைப்படத்துடன்கூடிய கிரெடிட் கார்டு, ஆதார் அட்டை உள்ளிட்ட, 10 வகையான அடையாள அட்டைகளைக் காண்பித்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

1,390 ஆசிரியர்களுக்கு இடமாற்றம் உபரி ஆசிரியர்களை மாற்றுவதில் குளறுபடி

தமிழக அரசு தொடக்கப் பள்ளித் துறையில், கலந்தாய்வு மூலம், 1,390 ஆசிரியர்கள் இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும், ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு, கடந்த, 8ம் தேதி முதல் நடந்து வருகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர் கலந்தாய்வு, பல கட்டங்களாக நடக்கிறது. இதில், 230 நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், 376 பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 105 பட்டதாரி ஆசிரியர், 108 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதேபோல், 145 பட்டதாரி ஆசிரியர், 426 இடைநிலை ஆசிரியர், தொடக்கப் பள்ளிகளின், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளதாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பணி நிரவலில் குளறுபடி: தொடக்கக் கல்வியில் மாணவர் குறைவாக இருக்கும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாற்றும் கலந்தாய்வில், பல குளறுபடிகள் நடந்துள்ளன. இந்த பணி நிரவலில், பல பள்ளிகள் போலி மாணவர் எண்ணிக்கையைக் காட்டி, இடமாறுதலை தவிர்த்ததாக புகார்கள் எழுந்துள்ளன. இந்தப் பிரச்னையால், கோவை மாவட்டம், சூலுார் வட்டத்தில் நடந்த கலந்தாய்வு, சில மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆசிரியர் கூறும் மாணவர் எண்ணிக்கை, பள்ளிகளில் உண்மையில் உள்ளதா என, அதிகாரிகள் நேரடியாக பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். இதன் பிறகே, ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டனர்.

மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை?

மது ஒழிப்பு உள்ளிட்ட போராட்டங்களில் பள்ளி மாணவர்கள் பங்கேற்றால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் எச்சரித்துள்ளார். தமிழகத்தில், மதுவிலக்கு அமல் செய்யக்கோரியும், வேறு காரணங்களை முன் வைத்தும் நடத்தப்படும் போராட்டங்களில், அரசியல் கட்சிகள், நலச்சங்கங்கள், சமூக ஆர்வலர்களுடன், பள்ளி, கல்லுாரி மாணவர்களும் பங்கேற்பது வழக்கமாகி விட்டது.

போராட்டங்களில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்பதை தடுக்க, தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, பள்ளி மாணவர்கள், போராட்டங்களில் பங்கேற்க தடை விதித்தும், மீறி பங்கேற்றால், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பிறப்பித்துள்ளார். பள்ளிகளில் நடக்கும் இறைவணக்க கூட்டங்களில், மாணவர்களுக்கு தகுந்த முறையில் அறிவுரை வழங்கும்படியும், இயக்குனரது உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், 'மதுவிலக்கு உள்ளிட்ட போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால், அவர்கள் மனதில் எதிர்மறை சிந்தனைகள் எழும் என்பதாலும், பாதுகாப்பு கருதியும், போராட்டங்களில் பங்கேற்காத வகையில் அறிவுரை வழங்கும்படி கூறியுள்ளனர்' என்றார்.

மேலும், அவர், 'பெற்றோர் அனுமதியின் பேரில் மாணவர்கள் பங்கேற்றால், தலைமையாசிரியர்கள் எவ்வாறு பொறுப்பேற்க இயலும்? அறிவுரைகள் மட்டுமே வழங்க முடியும். போராட்டங்களில் மாணவர்கள் பங்கேற்றால், தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை என்பது ஏற்புடையதல்ல' என, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.