இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, July 22, 2015

பள்ளி பராமரிப்பு பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தினால் கடும் நடவடிக்கை

பள்ளிகளில் பராமரிப்புப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் தலைமையாசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிகளில் பாதுகாப்பற்ற, ஆபத்தான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வாயிலாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ளது. அதன் விவரம்:- பள்ளி வளாகங்களில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், பழைய கட்டட இடிபாடுகளை அகற்றுதல், கழிவுப் பொருள்களை அகற்றுதல், பள்ளி வளாகம், கழிவறைகளைச் சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை உரிய பணியாளர்களை நியமித்து செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் தலைமையாசிரியர் கூட்டங்களிலும் இது தொடர்பாக அறிவுரை வழங்க வேண்டும்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளிகளை பார்வையிடும்போதும், ஆண்டாய்வு மேற்கொள்ளும்போதும் இத்தகைய நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக்கு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களே 100 சதவீதம் பொறுப்பு என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள் இத்தகைய பணிகளில் ஈடுபடுத்தப்படுவது எதிர்காலத்தில் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இந்தத் தகவலை சுற்றறிக்கையாக, அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி அவர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் கற்கும் திறன் மாறுபடுகிறது

ஆசிரியர்களின் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்தது. மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து காந்திகிராம பல்கலை கல்வியியல் துறைத்தலைவர் ஜாகிதாபேகம் ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பிக்கும் முறையை கடைபிடிக்கின்றனர்.

இதனால் மாணவர்களின் கற்கும்திறன் மாறுபடுகிறது. இதற்கு ஒவ்வொருவரின் மூளையின் அடைவுத்திறன் வேறுபாடே காரணம்.இதை அறியாமல் பெற்றோர், ஆசிரியர்கள் 'படி, படி' என தொந்தரவு செய்வதால் மாணவர்களின் எண்ணங்கள் மாறுகின்றன. சிலர் தீய பழக்க வழக்கம், சினிமா போன்றவற்றுக்கு மாறிவிடுகின்றனர் என்பது ஆய்வில் தெரியவந்தது. பேராசிரியர் ஜாகிதாபேகம் கூறியதாவது:

ஒவ்வொரு மாணவரின் அடைவுத்திறனுக்கு ஏற்ப கற்பிக்கும் முறையிலும் மாற்றம் செய்ய வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது ஆசிரியர்களால் முழுமையாக கற்பிக்க முடியாது. இதனால் ஆசிரியர், மாணவர்கள் விகிதம் 1:25 க்குள் இருக்க வேண்டும். மாணவர்கள் விரும்பி கற்கும் வகையில் கல்வித்திட்டத்தை மாற்ற வேண்டும். கற்பிக்கும் முறையை சிறந்த ஆசிரியர்கள் தங்களுடைய அனுபவம், ஆய்வின் அடிப்படையில் கல்வியாளர்கள் தீர்மானிக்க வேண்டும், என்றார்.

ஜாதி வருமானச் சான்றிதழை கல்வி அலுவலரே வாங்கித் தருவார்

மாணவர்களுக்கு இருப்பிட, ஜாதி மற்றும் வருமானச் சான்றிதழ்களை, பள்ளிகள் மூலமே வாங்கித் தர, பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிய கல்வியாண்டில், 6ம் வகுப்பு, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு பல திட்டங்களுக்காக, ஜாதி, இருப்பிட மற்றும் வருமானச் சான்றிதழ் கேட்கப்படுகின்றன.

கல்வி உதவித் தொகை, இலவசத் திட்டங்கள் போன்றவற்றை வழங்க, இந்த சான்றிதழ்கள் அவசியம். ஆனால், இந்த சான்றிதழ்களை, 'ஆன் - லைன்' மூலம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, பள்ளிகள் மூலமே சான்றிதழ் வாங்கித் தர, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.எல்லாப் பள்ளிகளும், மாணவ, மாணவியரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை, தனித்தனி விண்ணப்பங்களில் பூர்த்தி செய்து, உரிய முகவரி ஆவணங்களுடன், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும், 31ம் தேதிக்குள், தமிழக அரசின் பொது இ - சேவைத் துறை மூலம் சான்றிதழ்களை பெற்றுத் தர, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

எம்.பி.ஏ,எம்.சி.ஏ கலந்தாய்வு

எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு- 26ம் தேதி முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் எம்,பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளுக்கான டான்செட் தரவரிசை பட்டியல் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது.
தேர்வெழுதிய மாணவர்கள் www.gct.ac.in என்ற அரசு இணையதளத்தில் தரவரிசை குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து எம்.சி.ஏ படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 26 ஆம் தேதியும், எம்.பி.ஏ படிப்பிற்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 2 ஆம் தேதியும் துவங்குகிறது.
கோவை மாவட்டம் தடாகம் சாலையில் அமைந்துள்ள ஜி.சி.டி கல்லூரியில் நடக்கும் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புக்களுக்கான கவுன்சிலிங்கில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, July 21, 2015

கடந்து வந்த பாதை

1988 ஜூலை 22 சென்னை முற்றுகை-நன்றி அய்யா Che Natesan
மத்திய அரசின் எட்டாவது நிதிக்குழு 20.6.1982ல் சவான் தலைமையில் அமைக்கப்பட்டது. இக்குழு அனைத்து மாநில அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஊதியவிகிதங்களை ஆய்வுசெய்தது.30.4.1984ல் தனது அறிக்கையை மத்திய அரசுக்கு அளித்தது. இந்த அறிக்கை 1984 ஆகஸ்ட் இறுதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது இந்த அறிக்கை அதிர்ச்சி அளிக்கும்வகையில் இந்தியாவிலேயே மிகக்குறைந்த ஊதியம் பெற்றுவந்தவர்கள் தமிழ்நாட்டு ஆசிரியர் அரசு ஊழியர்கள்தான் எனச்சுட்டிக்காட்டியது . இவர்களுக்கு அகில இந்திய சராசரி ஊதியமாவது அளிக்கப்பட அன்றிருந்த ஊதியத்தைக் குறைந்தபட்சம் 25% உயர்த்தவேண்டும் எனப் பரிந்துரைத்தது. இதற்காக மத்திய அரசு தமிழக அரசுக்கு ஊதிய உயர்வளிக்க ரூ.501.34கோடியும், அகவிலைப்படி உயர்வுக்காக ரூ.294.8 கோடியும் அளிக்கவேண்டும் எனவும் பரிந்துரைத்தது. நாடாளுமன்றத்திலும் இது ஏற்கப்பட்டது
ஆனால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்.அரசோ 26.5.1985ல் நான்காம் ஊதியக்குழுவில் வெறும் 7% ஊதிய உயர்வைமட்டுமே அளித்து வஞ்சித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய இயக்கங்கள் திருச்சியில் 28.7.1985ல் நான்குஆரம்பப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் ஜேக்டாவும், ஆகஸ்ட் 1985ல் கோவையில் ஜேக்டீயும் உருவாக வழியமைத்தது. 1985 நவம்பர் 3ல் ஆசிரியர்களை வஞ்சித்த அரசு ஆணை எண்.555ஐத் தீயிட்டுக்கொளுத்தும் போராட்டம் நடைபெற்றது.65,000 ஆசிரியர்கள் தீபாவளித்திருநாளிலும் சிறையிருந்த மாபெரும் போராட்டம் நடைபெற்றது.ஆனால்,தமிழக அரசோ ஒருநபர்குழுவை அமைத்து ஆசிரியர்களை ஏமாற்றியது. ஒற்றுமையைக் குலைக்க முயற்சிசெய்து ஓரளவு வெற்றியும் பெற்றது. ஆனால், 1.1.1986 முதல் நடைமுறைக்கு வந்த மத்திய அரசின் நான்காம் ஊதியக்குழுவின் ஊதியவிகிதங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்ற முழக்கத்தை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 1988ல் மதுரையில் நடைபெற்ற தனது மாநில மாநாட்டில் பிரகடனம் செய்தது. இந்த முழக்கம் ஜேக்டீயுடன் அரசு ஊழியர்களின் இயக்கங்களும் இணைந்த ஜேக்டீ பேரமைப்பு உருவாக வழிகோலியது.
‘மத்திய அரசுக்கு இணையான ஊதியம்’என்ற கோரிக்கையை நிறைவேற்றக்கோரி 1988 ஜூன் 22 முதல் தமிழ் நாட்டில் கால்வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் துவங்கியது. ஒருமாத காலத்திற்குப்பின்னும் அரசு கோரிக்கைகளை ஏற்காத நிலையில் ஜேக்டீ பேரமைப்பு 1988 ஜூலை 22ல் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தது. ஆனால் இதை ஒடுக்க எண்ணிய அரசின் கெடுபிடியால் இப்போராட்ட்ம் சென்னை முற்றுகையாக மாற்றப்பட்டது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் ந.வீரையன் சென்னை அண்ணாசாலையில் பெரியார்-அண்ணா சிலைகளுக்கு இடையில் சாலையின் நடுவில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களுடன் அமர்ந்தார். சென்னையே குலுங்கியது. குதிரைப்படையும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளும், அரசின் அடக்குமுறைகளும் தோற்றன. அரசு ஜேக்டீ-பேரமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி ‘மத்திய அரசுக்கு இணையான ஊதியம்’ என்ற கோரிக்கையை ஏற்றது.1.1.1988முதல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது
. தமிழ்நாட்டில் இந்தப்புதிய வரலாற்றை படைத்த நாள் 22 ஜூலை 1988.
.

மொபைல் போனில் வாக்காளர் விபரம்

வாக்காளர் பட்டியலில் இணைக்க, ஆதார் எண் வழங்கியவர்களுக்கு, அவர்கள் குறித்த விவரம், அடுத்த வாரம் முதல், மொபைல் போனில் தெரிவிக்கப்படும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:

வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த, வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் எண், இ - மெயில் முகவரி போன்ற விவரங்கள் சேகரிக்கும் பணி, மார்ச்சில் துவக்கப்பட்டு, மே மாதம் முடிக்கப்பட்டது. ஆதார் எண்:தமிழகத்தில், 2.79 கோடி வாக்காளர்கள், ஆதார் எண் வழங்கி உள்ளனர். இவ்விவரம் கணினியில் பதவிவேற்றம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்களுடன், ஒப்பிட்டு பார்க்கப்பட்டு உள்ளது.

இவ்விவரங்கள், சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., இ - மெயில், மொபைல் 'ஆப்ஸ்' மூலம் தெரிவிக்கப்படும்.இ - மெயில் தகவலுடன், வாக்காளர் பட்டியல் இணைப்பு வழங்கப்படும். வாக்காளர் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை, அதில் பார்த்துக் கொள்ளலாம். தவறு இருந்தால், அவர்கள் இ - மெயில், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கலாம்; உடனடியாக அவை சரி செய்யப்படும். தமிழகத்தில், கடந்த மாதம், 30ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி, 9.61 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில், 9.25 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; 31 ஆயிரம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.பெயர் நீக்க கோரி, 1.62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 1.59 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன; 12 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. திருத்தம் மேற்கொள்ள, 3.86 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 3.75 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன.

பரிசீலனை:முகவரி மாற்றக் கோரி, 1.41 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 1.28 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 12 ஆயிரம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளன. மற்ற விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன.பெயர் நீக்க வந்துள்ள விண்ணப்பங்கள், சம்பந்தப்பட்ட வாக்காளரின் குடும்பத்தில் இருந்து பெறப்பட்டு உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கு முன், பெயர் நீக்கம் செய்யப்படும். வாக்காளர் பட்டியலில், புதிதாக சேர்க்கப்படுவோருக்கு, உடனடியாக, வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மத நல்லிணக்க கட்டுரைப் போட்டி

மாணவர்கள் மத்தியில், ஜாதி, மத மோதல்களைத் தவிர்க்கும் வகையில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற தலைப்பில், கட்டுரைப் போட்டி நடத்த, அரசுப் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.அனைத்து மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில், மத நல்லிணக்க கட்டுரைப் போட்டி நடத்த, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.இதையடுத்து, தமிழகத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில், 'தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம்' என்ற பெயரில், கட்டுரைப் போட்டி நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிகளில் மாணவர்கள் அளவில், ஆக., 14ல், போட்டி நடத்தப்படும். இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும். இந்தப் போட்டிகளில், 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்கலாம்.

ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விஷயங்கள், மக்களிடம் ஒற்றுமையை உருவாக்குவது போன்ற தகவல்கள் அடிப்படையில், கட்டுரை எழுத, மாணவ, மாணவியருக்கு ஆசிரியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்

ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு இரண்டாம் கட்ட சேர்க்கை அறிவிப்பு

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 90 சதவீத இடங்கள் காலியாக இருப்பதால், இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில், 600 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்தக் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில், 10 சதவீத இடங்கள் மட்டுமே நிரம்பின. இதையடுத்து, இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கவுன்சிலிங் ஆகஸ்ட், 7ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பத்தை, நாளை முதல் இம்மாதம் 31ம் தேதி வரை கொடுக்கலாம். விண்ணப்பங்களை, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பெற்றுக் கொள்ளலாம் என, மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

Monday, July 20, 2015

RMSA புதிய இணை இயக்குநர்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கு புதிய இணை இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பில் இருந்த பி.ஏ. நரேஷ், பள்ளிக் கல்வித் துறையின் இணை இயக்குநராக (இடைநிலைக் கல்வி) மாற்றப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த குமார், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். நாமக்கல், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் இவர் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் பள்ளிகள்:ஒரு புள்ளி விபரம்


* தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 45,366 உள்ளன.
* இப்பள்ளிகளில் 87,68,231 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

* தமிழக அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 14 இலவச திட்டம் அறிவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில், முக்கியமானது இலவச பாடநூல்.

* 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முப்பருவ கல்வி முறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 5 பாட புத்தகம் ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படுகிறது.

* 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் மாதம் ஒரே தவணையாக 6 பாட புத்தகங்களும் வழங்கப்படுகின்றன. தமிழ், ஆங்கிலம் பாடத்துக்கு தலா ஒரு துணை பாடநூல் வழங்கப்படுகிறது.

ப்ளே ஸ்கூல் திருத்திய வழிமுறைகள் வெளியீடு

ப்ளே ஸ்கூல்' நடத்துவதற்கான, திருத்திய விதிமுறைகளை, தமிழக அரசு வெளியிட்டுஉள்ளது.தமிழகத்தில், ப்ளே ஸ்கூல் புற்றீசல் போல் அதிகரித்து வருகிறது. இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்தது. இது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையில், புதிதாக திருத்திய விதிமுறைகளை, அரசு அறிவித்துள்ளது.முன், ப்ளே ஸ்கூல் விதிமுறையில், 'ப்ரி கே.ஜி.,' வகுப்பு மட்டும் சேர்க்கப்பட்டிருந்தது. தற்போது, புதிதாக, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., நடத்தவும், அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,
*ப்ளே ஸ்கூல் வகுப்பறைகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
*குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும்.
*அறைகளை துாய்மையாக வைத்திருக்க வேண்டும்.
*மாணவர், 15 பேருக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
*தகுதி வாய்ந்த ஆசிரியைகளை மட்டும் நியமிக்க வேண்டும்.
*ஒவ்வொரு வகுப்பிற்கும், இரண்டு வழிகள் இருக்க வேண்டும். *வகுப்பறைகள் தரைதளத்தில் மட்டும் இருக்க வேண்டும். இவ்வாறு, அரசு விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருத்திய விதிமுறைகளை, அரசு இணையதளத்தில் (tn.gov.in) பார்வையிடலாம்.

Sunday, July 19, 2015

மாணவர் சேர்க்கையில் மாற்றம் பொறியியல் பட்டதாரிகளும் பி.எட் படிப்பில் சேரலாம்


*2015-16 ல் வழிகாட்டு நெறிமுறையில் பி.இ,பி.டெக் பட்டதாரிகளும் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் எனக் கூறப்பட்டுள்ளது.

*அறிவியல் (இயற்பியல்,வேதியியல்,கணித ) பாடத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்

*பி.இ பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு குறைந்துவருவதை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது

*ஓரிரு வாரங்களில் விண்ணப்பம் விநியோகிக்கப்படும்

IGNOU B.ed anounced-prospect as

Click below

http://ignou.ac.in/userfiles/Prospectus%20BED%202016%20English%20Corrected%206.pdf

Saturday, July 18, 2015

செப் 2 வேலை நிறுத்த போராட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கலந்து கொள்ளும்

தமிழகம் ஆசிரியர் கூட்டமைப்பு குற்றச்சாட்டு:1200 பள்ளிகளை மூட தமிழக அரசு முயற்சி பதிவு செய்த நேரம்:2015-07-19 02:23:55 திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நேற்று தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் போராட்ட ஆயத்த கூட்டம் நடந்தது. கூட்ட முடிவில் மாநில பொதுச்செயலாளர் பாலசுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஆக.1ல் தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இதில் ஆரம்பப்பள்ளிகளை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வர். தேவையான பணியிடங்களை நிரப்பிய பின்னரே உபரி பணியிடங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

இடைக்கால மாறுதல் வழங்குவதில் அமைச்சர்கள் தலையீட்டை தவிர்க்க வேண்டும். ஒளிவு மறைவின்றி கலந்தாய்வு மாறுதல் நடத்த வேண்டும். சுயநிதி பள்ளிகளுக்கு வரைமுறையில்லாமல் அனுமதி வழங்கி வருகின்றனர். அதே நேரம் 1200க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை முட அதிமுக அரசு முயற்சித்து வருகிறது. தேர்தலின் போது ஆசிரியர் சங்கங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை. செப்.2ல் நடைபெறவுள்ள அகில இந்திய வேலைநிறுத்தத்தில் ஆரம்ப பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொள்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பி.எட் படிப்பில் சேர புதிய வழிமுறைகள்

தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் சார்பில், பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., போன்ற படிப்புகளுக்கு, புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டன. இந்த விதிகளின் படி, அனைத்து ஓராண்டு ஆசிரியர் பட்டப் படிப்புகளும், இரண்டு ஆண்டு படிப்பாக மாற்றப்பட்டுள்ளன. பாடத்திட்டமும் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கணினி அறிவியல், யோகா, விளையாட்டு போன்ற பல பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று, ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகள் சார்பில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளது.இந் நிலையில், மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் பிறப்பித்த உத்தரவில், அனைத்து மாநிலங்களும், புதிய விதிமுறைகளை, புதிய கல்வி ஆண்டில் கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என, எச்சரித்துள்ளது. இதன்படி, தமிழகத்தில் இந்த ஆண்டு, 690 கல்லுாரிகளுக்கு இரண்டாண்டு படிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளது. இரண்டாண்டு ஆசிரியர் படிப்பு, இந்தாண்டு முதல் அமலாகும்; புதிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டுமென்றும், தமிழக அரசு, தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து, அனைத்து கல்லுாரிகளுக்கும், ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன், அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 'வரும் புதிய கல்வி ஆண்டு முதல் அனைத்து கல்வியியல் கல்லுாரிகளும், மத்திய அரசின், 2014 புதிய விதிமுறைகளைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த உத்தரவு மாறுபடும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரமின்றி செயல்படும் பள்ளிகளை மூட வலியுறுத்தல்

விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் அங்கீகாரமின்றி இயங்கும் சுயநிதி மெட்ரிக் பள்ளிகளை மூட வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக்கல்லில் நடந்த இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் மோசஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் வரவேற்றனர்.

மோசஸ் கூறியதாவது: கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு துவங்கியது. ஏற்கனவே ஓராண்டு பணியில் உள்ள ஆசிரியர்களும் இதில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 3 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும் என தெரிவிப்பது வேதனையளிக்கிறது. அரசியல் தலையீடின்றி ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு நடத்த வேண்டும். தமிழகத்தில் 20 ஆண்டுகளாக பல பெற்றோரை ஏமாற்றி, அங்கீகாரமின்றி பலஆயிரம் சுயநிதி மெட்ரிக் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்தது 10 மாணவர்கள் விரும்பினால் ஆங்கிலவழி கல்வி கற்பிக்கப்படும் எனக்கூறி, அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி 3,500 பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி அறிமுகமானது. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியையும் பிறஆசிரியர்களே கற்பிக்கின்றனர். எனவே, ஆங்கில வழிக் கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், என்றார்.