இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, January 07, 2015

டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு: கல்வித்துறை கலக்கம்

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.

மாநிலத்தில் 1307 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வை 400 மையங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வு பணிகள் ஒதுக்கீடு செய்வதில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், தலைமையாசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்குள் ஏற்பட்ட 'ஈகோ' கல்வித் துறையை கலங்க வைத்துள்ளது. உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது:

தேர்வு பணியில் முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கு வழங்கப்படுகிறது. துறை அலுவலர் மற்றம் கூடுதல் துறை அலுவலர் பொறுப்பை நிர்வாக பொறுப்பிலுள்ள உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஒவ்வொரு தேர்வின் போதும் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. அதிகாரிகள் பேசி அப்போதைக்கு பிரச்னையை முடிக்கின்றனர். இதில் கல்வித்துறை உரிய வழிகாட்ட வேண்டும்.

திருவண்ணாமலை, நாமக்கல் உட்பட சில மாவட்டங்களில் முதன்மை கல்வி அலுவலர்களின் தவறான அணுகுமுறையால் தேர்வுப் பணி நியமனத்தில் சில மாற்றங்கள் செய்து தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளி கல்வியின் முக்கிய அங்கமான உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களின் கவுரவத்தை காக்கும் வகையில் பணிகள் வழங்காவிட்டால் இனிவரும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் ஆசிரியர் தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளையும் புறக்கணிப்போம் என்றார். மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மாவட்ட தலைவர் சரவணமுருகன் கூறியதாவது: பள்ளிக் கல்வி சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் முதன்மை மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர் பணி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருக்கும், துறை அலுவலர்கள் பொறுப்பு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்களுக்கும், அறை கண்காணிப்பாளர் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்படும்.

இம்முறை துறை அலுவலர் பணியை உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மட்டும் ஒதுக்கி அதற்கு கீழ் உள்ள அறை கண்காணிப்பாளர் பணியை முதுகலை ஆசிரியர்களுக்கு ஒதுக்கியுள்ளனர். உரிய 'கேடர்'படி பணிகள் ஒதுக்காததால் டி.ஆர்.பி., தேர்வுப் பணிகளை புறக்கணிக்க உள்ளோம் என்றனர்.

திருவள்ளுவர் குறித்த கட்டுரை போட்டி

திருவள்ளுவர் குறித்த கட்டுரைப் போட்டியை இம்மாத மத்தியில் ஆன்லைன் மூலம் நடத்துமாறு சிபிஎஸ்இ பள்ளிகளை, மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி டெல்லியில் இதனைத் தெரிவித்தார். திருவள்ளுவர் தொடர்பாக பாரதிய ஜனதா எம்.பி. தருண் விஜய் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ஸ்மிருதி இராணி, இந்த கட்டுரைப் போட்டியின் மூலம், திருவள்ளுவரின் வாழ்க்கை குறித்தும் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார். மேலும் இந்த ஆன்லைன் கட்டுரைப் போட்டி, பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் நாடு முழுவதும் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளுவரின் படைப்புகள் தேசிய கல்விக் குழும பாடத்திட்டத்தில் சேர்க்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்மிருதி இராணி, புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவாதம் தற்போது தொடங்கியுள்ளதாகவும், அனைத்து மாநிலங்களின் பெருமிதங்களையும் கொண்டாட வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும் கூறினார்.

TETOJAC meeting

இன்று சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
1.உறுதியாகவும் இறுதி வரை போராடுவது எனவும்,

2.அடுத்த கூட்டம் பிப்ரவரி 4 ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் திரு.தாஸ் அவர்களின் தலைமையில் நடத்துவதெனவும்,

3.அதில் அனைத்து தலைவர்களும் மாண்புமிகு முதல்வருக்கு தபால் அனுப்புதல் எனவும்,

4.அன்றே போராட்ட வடிவம் மற்றும் தேதி அறிவித்தல்.

5.தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை அழைத்தல்.

பி.எட்,எம்.எட் படிப்புகளின் காலஅளவு நீட்டிப்பு : ஒருங்கிணைந்த பாடதிட்டம் விரைவில் அறிமுகம்

பி.எட்,எம்.எட் ஆகிய படிப்புகளுக்கான காலஅளவு ஒருவருடத்தில் இருந்து இரண்டு வருடமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. +2 தேர்ச்சி பெற்றவர்கள் இளங்கலை படிப்புடன் பி.எட் படிப்பையும் சேர்த்து நான்கு ஆண்டுகளுக்கு படிக்ககூடிய வகையில், ஒருங்கிணைந்த பாடத்திட்ட முறையை நடப்பாண்டில் தொடங்க உள்ளதாக, மத்திய பள்ளி கல்வித்துறை செயலகம் தெரிவித்துள்ளது. பி.எட் பயில்பவர்கள் குறைந்தபட்சம் 20 வாரங்களாவது மாணவர்கள் மத்தியில் வகுப்பறையில் பாடம் எடுக்கவேண்டும் என்று, மத்திய பள்ளிகல்வித்துறை செயலாளர் விர்ந்தா சாரப் தெரிவித்தார். அஞ்சல் வழி மூலம் பி எட் வகுப்புகள் இனி இருக்காது என்று நேற்று புதுடில்லியில் நடைபெற்ற மாநில பள்ளிகல்வித்துறை அமைச்சர்கள் மாநாட்டில் விர்ந்தா தெரிவித்தார்.

Tuesday, January 06, 2015

பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல்

  அரசுக் கலை, அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வுப் பட்டியல் பொங்கலுக்குப் பிறகு வெளியாகும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்காக 1,093 உதவிப் பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 2013-ஆம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.

இந்தப் பணியிடங்களுக்கு 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பிறகு கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண்ணும், பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக 15 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டது. மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

நேர்காணலுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண் வழங்கப்பட்டது. நேர்காணல் ஆகஸ்ட் 8-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற்றது. இந்தப் பணியிடங்களுக்கான நேர்காணல் நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வுப் பட்டியல் வெளியிடுவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் கூறியது: உதவிப் பேராசிரியர் நியமனத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன. முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. பொங்கலுக்குப் பிறகு உதவிப் பேராசிரியர் தேர்வுப் பட்டியல் சம்பந்தப்பட்ட துறையிடம் வழங்கப்படும் எந்தவொரு பணியாளர் தேர்வு அமைப்பும் இதுவரை செய்யாத வகையில், இந்தப் பணி நியமனத்துக்கான நேர்காணல்கள் முடிந்ததும் உடனுக்குடன் தேர்வர்களின் மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

இதன்மூலம், உதவிப் பேராசிரியர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். பெரும்பாலும் அடுத்த மாதத்தில் உதவிப் பேராசிரியர் பணி நியமனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு அடிப்படையிலேயே அரசுப் பணி நியமனம் என்ற விதி செல்லாது: உயர் நீதிமன்றம் உத்தரவு


    வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-08-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம். அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது.

இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்கிறது. இந்த விதியால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். இந்த விதி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர். இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப் பட்டியல் பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம் படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும். அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதே போன்று, சென்னை உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசுப் பணி விதி 10 (ஏ) வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வகை செய்கிறது. எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் அமலாகுமா? அரசு ஒப்புதல் அளிக்காததால் குழப்பம்

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத் திட்டத்திற்கு அரசு இன்னும் ஒப்புதல் அளிக்காததால், வரும் கல்வி ஆண்டில் எந்த பாடத்திட்டம் பின்பற்றப்படும் என்ற குழப்பம், மாணவர் களிடம் ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, பள்ளி மாணவர் பாடத்திட்டம் மாற்றம் செய்யப் படும். புதிய தொழில்நுட்பம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டத்தை, கல்வித் துறை தயாரித்து வெளியிடுகிறது.

இதன்படி, பிளஸ் 1, பிளஸ் 2க்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு, இந்தாண்டு பிளஸ் 1க்கு புதிய பாடப் புத்தகங்கள் வெளியாக வேண்டும். அடுத்த கல்வியாண்டில், பிளஸ் 2க்கு புதிய பாடத் திட்டம் அமலாக வேண்டும். இதற்காக, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பாட வாரியாக வல்லுனர் குழுவை அமைத்தது. அக்குழு, 25 பாடத் தலைப்பு களில் வரைவு பாடத் திட்டத்தை தயாரித்தது. கல்வியாளர் கள், ஆசிரியர்கள் என, பல தரப்பினரிடமும் கருத்துக் களை கேட்டு, தேவை யான மாற்றங்கள் செய்யப் பட்டு, வரைவு பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டது. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே, பாடப்புத்தகம் அச்சடிக்கப் பட்டு, வரும் கல்விஆண்டில் வழங்க முடியும். இதற்கான ஒப்புதல் கேட்டு, லோக்சபா தேர்தலுக்கு முன், அரசுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுவரை புதிய பாடத்திட்டத்திற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.

இதனால், புதிய பாடத்திட்டம் வருமா, பழைய பாடத்திட்டமே தொடருமா என்ற குழப்பம், மாணவர் கள், பெற்றோர், ஆசிரியர் களிடையே ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாவது: பிளஸ் 1, பிளஸ் 2 புதிய பாடத்திட்டம் குறித்து அரசு இன்னும் அறிவிக்கவில்லை. இதுவரை அறிவிப்பு ஏதும் இல்லாததால், பழைய பாடத்திட்டமே தொடரும் என தெரிகிறது. இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Monday, January 05, 2015

மாவட்ட வாரியாக வாக்காளர் விபரம்

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்களை விட 66 ஆயிரத்து 788 பெண்கள் அதிகமாக உள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அதிக வாக்காளர்களைக் கொண்ட முதல் மூன்று மாவட்டங்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் குறைந்த வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட வாரியாக தமிழக தேர்தல் துறை வெளியிட்ட மொத்த வாக்காளர்கள் விவரம்:

திருவள்ளுர் 29,86,383

சென்னை 38,34,388

காஞ்சிபுரம் 33,74,837

வேலூர் 29,44,562

கிருஷ்ணகிரி 14,05,866

தருமபுரி 11,32,351

திருவண்ணாமலை 18,75,557

விழுப்புரம் 26,02,971

சேலம் 27,29,548

நாமக்கல் 13,23,752

ஈரோடு 17,66,336

நீலகிரி 5,50,047

கோவை 26,87,303

திண்டுக்கல் 16,57,623

கரூர் 8,29,300

திருச்சி 20,93,136

பெரம்பலூர் 5,12,185

கடலூர் 19,28,644

நாகை 12,12,209

திருவாரூர் 9,53,352

தஞ்சாவூர் 18,17,605

புதுக்கோட்டை 11,83,784

சிவகங்கை 10,49,977

மதுரை 24,57,680

தேனி 9,90,559

விருதுநகர் 14,91,892

ராமநாதபுரம் 10,74,317

தூத்துக்குடி 13,37,317

நெல்லை 24,17,624

கன்னியாகுமரி 14,95,884

அரியலூர் 4,83,926

திருப்பூர் 20,04,953

மொத்தம் 5,62,05,868.

மூன்றாம் பருவம்-1 முதல் 8 வகுப்பபுகளுக்கான வாரவாரி பாடதிட்டம்-மீள்பதிவு

Click below

https://app.box.com/s/ej5h6ls007mi4fnis148

Sunday, January 04, 2015

பி.எப் நிதியில் இ.எம்.ஐ கட்டலாம்சந்தாதாரர்களுக்கு குறைந்த விலை வீடு திட்டம்...

சந்தாதாரர்கள் வீடு வாங்க உதவுவதற்கு வருங்கால வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்டம் வரையறை செய்ய நிபுணர் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) 5 கோடிக்கு அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்களின் ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேலான நிதியை பிஎப் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பிஎப் சந்தாதாரர்களில் பெரும்பாலானோர் குறைந்த வருவாய் பிரிவினர்தான். அதாவது, மாதம் ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு குறைவாக சம்பளம் வாங்குவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக உள்ளது. இப்படிப்பட்ட குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்களுக்காகவே சொந்த வீடு வாங்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய தொழிலாளர் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் புதுடெல்லியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில் இந்த திட்டம் குறித்தும் இதை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பிஎப் நிதியை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது குறித்தும் ஆராயப்பட்டன. இதற்கான நிபுணர் குழுவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டிட கட்டுமான நிறுவனம் மற்றும் டிடிஏ, பியுடிஏ, எச்ஐடிஏ போன்று அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊரக மேம்பாட்டு அமைப்புகள் மற்றும் வீட்டு வசதி வாரியங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் குறைந்த விலையிலான வீடுகள் அரசு நிர்ணயித்த விலையின்படி கட்டித்தரலாம் என்று தொழிலாளர் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து சமீபத்தில் அளிக்கப்பட்ட குறிப்பேட்டின்படி, வருங்கால வைப்பு நிதியை வைத்து இதை செயல்படுத்த வேண்டும். குறிப்பாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உள்ள தொழிலாளர் நிதியில் சுமார் 15 சதவீதத்தை குறைந்த விலை வீடுகள் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சுமார் 70 ஆயிரம் கோடி நிதியின் மூலம் வீடுகள் கட்டப்படும். இதில் சுமார் 3.5 லட்சம் வீடுகள் கட்டித்தர முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பிஎப் நிதியில் ஆண்டுக்கு சுமார் ரூ.70,000 கோடி நிதி சேர்ந்து வருகிறது. எனவே, இதை தொழிலாளர் வீட்டு திட்டத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் நிதி பற்றாக்குறை எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

தற்போது வீடு வாங்கும் தொழிலாளர்கள் ஆயுள் காப்பீடு நிறுவனத்தின் மூலமும், வங்கிகளின் மூலமும் வீட்டுக்கடன் வாங்குகிறார்கள். வருவாய் ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் என்பதால், பெரும்பாலானவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் ஒப்புக்கொள்வதில்லை. தங்களது வருவாய்க்குள் வீடு வாங்கவேண்டுமானால் பெரிய தொகையை முன்பணமாக செலுத்தவேண்டிவரும். தற்போதுள்ள நடைமுறையின்படி ஐந்து ஆண்டு பணியாற்றிய பிறகு சந்தாதாரர்கள் வீட்டுக்கடன் வாங்கிக்கொள்ள முடியும். இத்தகைய வசதி இருந்தாலும், குறைந்த வருவாய் பிரிவில் உள்ள தொழிலாளர்களின் சொந்த வீடு கனவு நிறைவேறுவதில்லை. அதிலும் இஎம்ஐ தொகை பெரும் சுமையாக உள்ளது. எனவே, பிஎப் தொகையில் இருந்து இஎம்ஐ செலுத்துவதற்கு இந்த திட்டத்தில் வகை செய்யப்பட உள்ளது. இதை தொழிலாளர் அமைச்சகமும் பரிந்துரை செய்துள்ளது. தொழிலாளர் அமைச்சகம் சார்பில் இந்த திட்டத்துக்கு மானியம் அளிக்கப்படும் எனவும் தெரிகிறது. பிஎப் சந்தாதாரர்கள் குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர வருவாய் பிரிவினர், அதிக வருவாய் பிரிவினர் என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப தனித்தனியாக சலுகை அளிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. எனவே, ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கும், பாதுகாப்பு உத்தரவாதத்துக்கும் உறுதி அளிக்கும் வகையில் இந்த திட்டம் நிச்சயமாக அமையும் என்று தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை கட்ட நடவடிக்கை

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டிற்குள், அரசு பள்ளிகளில் போதுமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த, பள்ளிக் கல்வித்துறை முடிவெடுத்து உள்ளது.பிரதமர் மோடியின், 'துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல், மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், சுகாதாரத்தை பேணும் வகையில், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பொறுத்த வரையில், அதிகளவு அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை என்பதால், மத்திய அரசின் அறிவுறுத்தல் படி, கழிப்பறை கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இதன் படி, அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களின் பங்களிப்பில், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு தனித்தனியான, கழிப்பறை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில், இந்த ஆண்டில், 474 பள்ளிகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளன. மேலும், 495 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை கட்ட, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, இடைநிலை கல்வித்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள, 495 உயர், மேல்நிலைப் பள்ளிகளில், 4.95 கோடி ரூபாய் செலவில், கழிப்பறை கட்டும் பணிகள் துவக்கப்பட்டு உள்ளன. 'நபார்டு' உதவி:கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், 656 மேல், உயர்நிலை பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியான, கழிப்பறை, 'நபார்டு' வங்கி உதவியுடன் கட்ட, அரசு ஒப்புதல் கோரப்பட்டு உள்ளது. மேலும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான, என்.எல்.சி., பாரத மிகுமின் நிறுவனமான, 'பெல்' மற்றும் ஸ்டேட் வங்கி ஆகியவை, 1,000 பள்ளிகளுக்கு கழிப்பறைகள் கட்ட இசைவு தெரிவித்து உள்ளன. இது தவிர, அனைவருக்கும் கல்வித்திட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமும், கழிப்பறை கட்டும் பணிகள் துவக்கப்பட்டு வருகின்றன.

அடுத்த கல்வியாண்டில், அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இருக்கும், என்றார்.

Saturday, January 03, 2015

தமிழகம் முழுவதும் வாக்காளர் இறுதி பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. மாநகராட்சி, தாலுகா அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் பார்க்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் 1–1–15 தேதியை வாக்காளர் தகுதிக்கான (18 வயது பூர்த்தி அடைந்த) நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான வரைவுப் பட்டியல் 1–10–14 அன்று வெளியிடப்பட்டது. 1–1–15 அன்று 18 வயது பூர்த்தி அடையக்கூடிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்ப்பதற்காக 31–10–14 அன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும், வரைவு வாக்காளர் பட்டியலைப் பார்த்துவிட்டு, அதில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை அக்டோபர் 31–ந்தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. சிறப்பு முகாம்கள் அதன் பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தங்கள், பெயர் இடமாற்றம் போன்றவற்றுக்காக வாக்குச்சாவடிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டன.

விண்ணப்பங்களை கொடுப்பதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. ஏராளமானோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். இதற்காக தனியார் கம்ப்யூட்டர் மையங்களிலும் தேர்தல் கமிஷன் மூலம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. நாளை வெளியாகிறது கடந்த அக்டோபர் 31–ந்தேதியுடன் விண்ணப்பங்களை பெறும் பணி நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவற்றை சரிபார்க்கும் பணி நடைபெற்றது. தகுதியான விண்ணப்பங்களை ஏற்று, அந்த விண்ணப்பதாரர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டன.

மேலும் பெயர்த் திருத்தங்கள், பெயர் நீக்கம் போன்ற பணிகள் நடந்தன. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து இறுதிப் பட்டியல் தயாரித்து முடிக்கப்பட்டுவிட்டது. ஏற்கனவே திட்டமிட்டபடி வாக்காளர் இறுதிப் பட்டியல் நாளை காலை வெளியிடப்படுகிறது. பொதுமக்கள் பார்ப்பதற்காக இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:–

இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 5 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். புதிய வாக்காளர்களும் ஏராளமான அளவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல் 5–ந்தேதி (நாளை) மாநகராட்சி மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலை மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, தாலுகா மற்றும் தபால் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். புதிய வாக்காளர்கள் அனைவருக்கும் ஜனவரி 25–ந்தேதி முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.