Friday, August 28, 2015
காலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்
கல்விக்கடன் வட்டி தள்ளுபடி! மாணவர்களுக்கு கடைசி வாய்ப்பு
வங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன. இந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கம், நேற்று(28-08-15) வெளியிட்டுள்ள அறிக்கை: 'கல்விக்கடனுக்கு, அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும்.
வட்டி தள்ளுபடி பெற, தகுதியுடைய மாணவர்களின் விவரங்களை, வங்கியின் இணையதளங்களில் வெளியிட வேண்டும்.இணையதளத்தில் விவரங்கள் வெளியிட்டுள்ளது குறித்தும் அறிவிக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கூறியுள்ளது. இதையேற்று, அனைத்து வங்கிகளும், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, வங்கிக்கடன் பெற்ற மாணவர்களுக்கு, வட்டி தள்ளுபடி அளிக்க வேண்டும். வட்டி தள்ளுபடி பெற மாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. மாணவர்களே வங்கிகளை அணுகி, வட்டி தள்ளுபடியைப் பெறலாம். இவ்வாறு, வங்கிகள் சங்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து, கல்விக்கடன் ஆலோசனைக் குழு அமைப்பாளர், 'பிரைம் பாயின்ட்' சீனிவாசன் கூறியதாவது: வட்டி தள்ளுபடி பெற, வங்கியில் மனு கொடுக்க வேண்டும். வட்டி தள்ளுபடி தர மறுக்கும் வங்கிகள் மீது சம்பந்தப்பட்ட வங்கியின் தலைவரிடம் புகார் செய்யலாம். புகாரின் பிரதியை, இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் அனுப்பலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
Thursday, August 27, 2015
செப்., 3 முதல்பி.எட்., விண்ணப்பம்
இடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி
பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில், அதிகபட்சம், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகமாக உள்ள அல்லது ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வின் இறுதிக் கட்டமாக, நேற்று முன்தினம் இந்த பணிநிரவல் கலந்தாய்வு துவங்கியது. ஆனால், 'இந்த பணி நிரவல் நடவடிக்கையில், தெளிவான அணுகுமுறை இல்லை. ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை, திடீரென ஒரு பள்ளியில் இருந்து, மற்றொரு பள்ளிக்கு மாற்றினால், மாணவர்கள் பாதிக்கப்படுவர். பிற மாவட்டங்களுக்கு, திடீரென ஆசிரியர்கள் பணி மாறுதலில் செல்வதும் கடினம்' என, ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, 'ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டில், மாணவர்கள் எண்ணிக்கை என்ற கணக்கை மாற்றி, இந்த ஆண்டு, ஆகஸ்ட், 1ம் தேதி, மாணவர்கள் எண்ணிக்கை நிலவரப்படி, ஆசிரியர்கள் பணியிடம் தீர்மானிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால், 3,000 ஆசிரியர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
Wednesday, August 26, 2015
மத்திய அரசு ஊழியர்களுக்கு 6% அகவிலைப்படி விரைவில்
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப் பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 113 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது 119 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. இதன் மூலம் சுமார் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அக விலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். அடுத்த மாதம் நடை பெறவுள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 6 சதவீத அகவிலைப்படி உயர்வு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மாணவர்களுக்கு மழைக்கால எச்சரிக்கை:பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்
மழைக்கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவ - மாணவியருக்கு தகுந்த ஆலோசனை வழங்குமாறு, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறு இருந்தால், உடனடியாக மூட வேண்டும். நீர்த்தேக்க தொட்டி, கழிவுநீர் தொட்டி மூடிய நிலையில் உள்ளதா என்பதை, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இடி, மின்னலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, மழை பெய்யும் நேரங்களில் மரங்கள் மற்றும் பழுதடைந்த வீடுகள், கட்டடங்கள் அருகே நிற்கக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
மழை பெய்த நாட்களில், பழுதடைந்த மின்கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது; அறுந்து கிடக்கும் மின்கம்பியை தொடுவதோ, மிதிக்கவோ கூடாது என எச்சரிக்க வேண்டும். மழைநீர் கால்வாய் பகுதிகளை, கவனமாக கடந்து செல்ல வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள மின்சார இணைப்பு, மின்சாதனங்கள் உள்ள பகுதிகள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்; மின்சாதனங்களை இயக்க மாணவர்களை அனுமதிக்கக் கூடாது. அறிவியல் ஆய்வகங்கள், கணினி அறைகள், வகுப்பறை சுவர் பகுதிகளில் அறுந்த நிலையில், துண்டித்த நிலையில், மின்சார ஒயர்கள் இருக்கக் கூடாது. சிதிலமடைந்த பள்ளி கட்டடம், வகுப்பறை, கழிப்பிடம், சுற்றுச்சுவர், பள்ளி நுழைவாயில் இருந்தால், உடனடியாக புதுப்பிக்க வேண்டும். வகுப்பு முடிந்ததும், மாணவ - மாணவியர் தங்களது வீடுகளுக்கு செல்ல வேண்டும்.
குளம், குட்டை, ஆறு மற்றும் கடல் போன்ற நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது என எச்சரிக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள், பாதுகாப்பற்ற புதர்களை அகற்ற வேண்டும். மருந்து பொருட்களுடன் முதலுதவி பெட்டி, மற்றும் தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்கால முன்னெச்சரிக்கை குறித்து பள்ளியில் நடக்கும், பிரார்த்தனை கூட்டம் மற்றும் வகுப்பறைகளில் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பெற்றோர் 'ஆதார்' மூலம் குழந்தைகளுக்கும் பதிவு!
திறனறி தேர்வுக்கு கடைசி தேதி அறிவிப்பு
கிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.கிராமப்புற மாணவ, மாணவியரில், நன்றாக படிப்பவர்கள், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர். அவர்கள் கல்வியைத் தொடர, உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாவட்டத்துக்கு, 100 பேரை தேர்வு செய்து, ஆண்டுதோறும், 1,000 ரூபாய் என, நான்கு ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.இந்த உதவித் தொகையை பெற, மாவட்ட அளவிலான திறனாய்வு தேர்வு எழுத வேண்டும். இப்போது, எட்டாம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களில், 50 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வில் பங்கேற்கலாம்.
அவர்களுக்கு பள்ளிகளில் இருந்து விண்ணப்பம் அளிக்க, அரசுத் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர், தேர்வு விண்ணப்பத்தை, www.tndge.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும். வரும், 31ம் தேதி முதல் செப்., 3க்குள், விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அரசு வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்கள் 86இலட்சம் பேர்
தமிழகத்தில், வேலை வாய்ப்பு மையங்களில் பதிவு செய்து, அரசு வேலை வாய்ப்புக்காக, 86 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். வேலை வாய்ப்பு அலுவலகங்களில், அரசு வேலைக்காக மனுக்கள் குவிந்து வருகின்றன. தமிழகத்தில், அரசு வேலைக்கென தனி மவுசு இருந்து வருகிறது. படித்து, வேலை வாய்ப்புக்கு பதிவு செய்ய வசதியாக, மாநிலம் முழுவதும், 37 வேலை வாய்ப்பு பதிவு மையங்கள் உள்ளன. இங்கு பதிவு செய்வோர், பதிவு மூப்பு அடிப்படையில், வேலை வாய்ப்புக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
ஐ.டி., நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் கிளைகள் தமிழகத்தில் கால் பதித்து, சம்பளத்தை பல மடங்கு அள்ளிக் கொடுத்தாலும், அரசு வேலைக்காக பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறையவில்லை.ஆண்டுதோறும், எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. தற்போது, 86 லட்சம் பேருக்கு மேல், அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர். இந்த தகவல், சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. இதில், 44 லட்சம் பேர் பெண்கள்; இந்த எண்ணிக்கை ஆண்களை விட அதிகம்.
இதில், இடைநிலை ஆசிரியர்கள் - 81,800; பட்டதாரி ஆசிரியர் - 3.95 லட்சம்; இன்ஜினியரிங் பட்டதாரிகள் - 2 லட்சம்; அறிவியல் பட்டதாரிகள் - 3.25 லட்சம்; கலைப் பிரிவு பட்டதாரிகள் - 4.30 லட்சம்; வணிகவியல் பட்டதாரிகள் - 3.25 லட்சம். மாற்றுத்திறனாளிகள் - 1.12 லட்சம் பேர். இது தவிர, அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தில், 22,198 பேர்பதிவு செய்துள்ளனர். கடந்த, 2010ல், வேலை வாய்ப்புக்காக பதிவு செய்திருந்தோரின் எண்ணிக்கை, 67 லட்சமாக இருந்தது. ஐந்து ஆண்டுகளில், 20 லட்சம் அதிகரித்துள்ளது.
* காத்திருப்பு உயர்வது ஏன்? தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: ஆண்டுதோறும், 20 ஆயிரம் என, 4.5 ஆண்டுகளில், ஒரு லட்சம் அரசு ஊழியர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், ஆண்டுக்கு, 5,000 பேர் என, நான்கு ஆண்டுகளில், 20 ஆயிரம் பேருக்குத் தான், அரசு துறைகளில் வேலை தரப்பட்டுள்ளது. ஏற்கனவே, காலி பணியிடங்கள் அதிகம் உள்ள நிலையில், ஓய்வு பெறுவோரின் இடங்களையும் நிரப்பாததால், காலி பணியிடங்களின் எண்ணிக்கை, நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது. மின் ஆளுமைத் திட்டத்தைக் கொண்டு வந்து, குறைந்த ஆட்களை வைத்து பணியாற்றலாம் என்ற கணக்கில், அரசு காலியிடங்களைநிரப்பாமல் இருந்து வருகின்றன. 15 ஆண்டுகளாக, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும், அரசின் இயலாமையால், மின் ஆளுமைத் திட்டத்தில் வெற்றி பெற முடியவில்லை. வேலை வாய்ப்பு அளிப்பது பல ஆண்டுகளாக குறைந்து வருவதால், பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இன்னும், இரண்டு, மூன்று ஆண்டுகளில், ஒரு லட்சம் அரசு ஊழியர் ஓய்வு பெறுவர். அப்போது நிலைமை இன்னும் சிக்கலாகும். எனவே, காலி பணியிடங்களை நிரப்புவதில், அரசு கவனம் செலுத்தினால் மட்டுமே, இந்த சிக்கல் தீரும்.இவ்வாறு அவர் கூறினார். 1.81 லட்சம் பேருக்கு அரசு வேலை: தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் மோகன் சட்டசபையில் கூறிய தாவது:மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், தனியார் துறை பணியமர்த்தல் உதவிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் துறை சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தி, நான்கு ஆண்டுகளில், 87,737 பேருக்கு வேலை கிடைத்துள்ளது. நான்கு ஆண்டுகளில், 1.81 லட்சம் பேர், அரசு துறையில் பணி நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டுகளில், 5.42 லட்சம் பேருக்கு, 94.39 கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Tuesday, August 25, 2015
7th pay commission report submit september
♨TNPTF MANI♨
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷனின் பரிந்துரை அறிக்கை வரும் செப்டம்பர் மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது.
7வது சம்பள கமிஷனின் தலைவர் ஏ.கே.மாத்தூர் இத்தகவலை தெரிவித்தார். நீதிபதி மாத்தூர் தலைமையிலான 7வது சம்பள கமிஷன் கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது.
48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம், மற்றும் 55 லட்சம் ஓய்வூதிய தாரர்களின் ஓய்வூதியத்தை இந்த கமிஷன் திருத்தியமைத்து வருகிறது. இதன் பரிந்துரைகள் வரும் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வரும்
மாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு
அனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது.
பள்ளிகளில்...:
தமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழில் மாணவர்களை வாசிக்க வைத்தால், தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.இதன்படி, தொடக்கப் பள்ளிகளில், 4, 5ம் வகுப்பு; நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6, 7, 8ம் வகுப்பு மாணவர்கள், தமிழில் நன்றாக வாசிக்க வேண்டும்.ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு மாணவரையும் தமிழில் பிழையின்றி, நிறுத்தி வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். பாடப்புத்தகங்கள், பத்திரிகை போன்றவற்றை மாணவர்கள் வாசிக்க வேண்டும்.
எழுத்துக்களின்நடைக்கேற்ப, குறியீடுகளுக்கு ஏற்றவாறு, நிறுத்தி, நிதானமாக வாசித்தாக வேண்டும். நுாலக வசதி: இதில், 50 மாணவர்களை உடைய பள்ளிக்கு, 20 ஆயிரம்; 100 மாணவர் வரை, 30 ஆயிரம்; 150 மாணவர் வரை, 40 ஆயிரம்; 151க்கு மேல் மாணவர்களை கொண்டுள்ள பள்ளிகளுக்கு, 50 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும். இந்த தொகையில், பள்ளி உள்கட்டமைப்பு, நுாலகம் போன்ற வசதிகளை ஏற்படுத்தலாம். இந்த பரிசு தொகையை பெற, அனைத்து அரசு பள்ளிகளும், வரும், 7ம் தேதிக்குள், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் வழியே, எஸ்.எஸ்.ஏ., மாநில தலைமை அலுவலகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். மூன்று மாதம் மாணவர்களுக்கு தமிழ் வாசிப்பு பயிற்சி அளித்த பின், டிசம்பரில் ஆய்வு நடத்தப்படும்.அதைத் தொடர்ந்து, வெற்றி பெறும் பள்ளிகளுக்கு, பரிசுத் தொகை வழங்கப்படும் என, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
Monday, August 24, 2015
பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித் துறை உத்தரவு
பள்ளிகளில் மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது என, பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பள்ளிகளில் திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் நீர்தேக்கப் பள்ளங்கள் இருந்தால் அவற்றை பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும். பள்ளி வளாகத்தில் நீர்த்தேக்கத் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி ஆகியவை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்பதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்திலுள்ள மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன், குறையிருந்தால் உடனடியாக அதைச் சீரமைக்க வேண்டும்.
மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது. சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் அறிவியல், கணினி ஆய்வகங்களில் அறுந்த நிலையில் அல்லது பாதுகாப்பற்ற நிலையில் மின்சார வயர்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். பயன்பாடற்ற, சிதிலமடைந்த கட்டடங்கள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தில் உயரழுத்த மின் கம்பிகள் சென்றால் அதனை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தலைமையாசிரியர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளி வளாகத்தில் விழும் நிலையிலுள்ள மரங்களை அப்புறப்படுத்துவதுடன், புதர்களையும் அகற்ற வேண்டும். முக்கியமாக பள்ளிகளில் முதலுதவிப் பெடடி பயன்படுத்தக்கூடிய வகையில் தயாராக இருக்க வேண்டும்.
மாணவர்களுக்கு அறிவுரை: மழைக் காலங்களில் இடி, மின்னல் போன்றவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக் கூடாது. பள்ளிகளுக்கு வெளியே உள்ள நீர்நிலைகளுக்கு மாணவர்கள் செல்லக் கூடாது. பள்ளியைவிட்டுச் செல்லும்போது அறுந்து கிடக்கும் மின்கம்பி அருகே செல்லக் கூடாது. குளம், குட்டை, கடல் போன்றவற்றில் குளிக்கக் கூடாது என மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும் எனவும் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு
முதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையுள்ள ஆசிரியர்கள், பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டு பெற்றுள்ளது.
அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 25 முதல் 50 பணியிடங்கள் தேவையுள்ளதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு சட்டசபையில் கல்வித்துறை மானியக் கோரிக்கையில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பணியிடங்கள் டி.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன. நேற்று பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங் நடந்தது. இதில் திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில் முதுநிலை ஆசிரியர் காலியிடங்கள் குறைவாகவே இருந்தன. இதனால் பெரும்பாலானோருக்கு வடமாவட்டங்களில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.
சிலர் வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் பதவி உயர்வை மறுத்துள்ளனர். இதையடுத்து புதிய பணியிடங்கள் அறிவிக்கும் போது மீண்டும் கவுன்சிலிங் நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: முதுநிலை ஆசிரியர் புதிய பணியிடங்களை அறிவிக்காமல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தியதால் பல ஆண்டுகளாக பணிபுரிந்தோர் வெளிமாவட்டங்களுக்கு மாற்றப்பட்டனர். எனவே புதிய பணியிடங்கள் அறிவித்ததும் பாதிக்கப்பட்டோருக்காக மீண்டும் கவுன்சிலிங் நடத்த வேண்டும், என்றார்.
How to install vanavil avvaiyar font
How to instal Vanavil Avvaiyar Font in Android Phone
How to instal Vanavil Avvaiyar Font in Android Phone
1.முதலில் WPS Office with PDF மென்பொருளை Google Play Store க்கு சென்று Install செய்துகொள்ளவும்.
2.பின்னர் Vanavil Avvaiyar Font ஐ தரவிறக்கம் செய்யவும் அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font ஐ தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
3.WPS Office with PDF மென்பொருள் தங்களின் Android Phone ல் எந்த நினைவகத்தில் Install செய்யப்பட்டுள்ளது (Internal Memory / Memory Card ) என்பதை உறுதிசெய்து கொள்ளவும்.
3.பின்னர் File Manager ஐ Open செய்யவேண்டும். அதில் உள்ள Settings ல் Show Hidden Files என்பதை On செய்யவேண்டும்.
4.Vanavil Avvaiyar Font அல்லது உங்களுக்குத் தேவையான தமிழ் Font உள்ள Folder ஐ Open செய்து பிறகு Font ஐ Copy செய்து கொள்ளவும்.
5.WPS Office with PDF மென்பொருள் எங்கு Install செய்யப்பட்டுள்ளதோ (Internal Memory / Memory Card ) அதைத் திறக்கவும். கீழே குறிப்பிட்டுள்ள அனைத்து Folder களை ஒன்றன்பின் ஒன்றாகத் திறக்கவும்.
Android
data
cn.wps.moffice_eng
.cache
KinsoftOffice
.fonts
பின்னர் Copy செய்த Font ஐ Paste (CLICK PASTE HERE BUTTON)செய்யவும்.
Paste செய்த Font ஐ இரண்டு முறை Tap செய்யவும்.
கடைசியாக தங்களுடைய Phone ஐ Reboot செய்யவும்.
பின்னர் தங்களுடைய அனைத்து ஆவணங்களை WPS Office கொண்டு Open செய்யவும்.
Android Lollipop (Version 5.0)ல் இயங்கவில்லை அதற்கான Solution விரைவில்...
Sunday, August 23, 2015
சுமார் 800 விஏஓ பணியிடங்களுக்கான அறிவிப்பு செப்டம்பரில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குரூப் 2 பணியிடக் கலந்தாய்வின் நிலவரத்தை டிஎன்பிஎஸ்சி இணையத்தில் அறிந்து கொள்ளும் வசதி அறிந்து அறிமுகப்படுத்தப்படும். யார், யார் எந்த துறையை தேர்ந்தெடுத்தனர், காலி இடம் குறித்து இணையத்தில் அறியலாம்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரேசன் கார்டு கட்டாயம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ரேஷன் அட்டை நகல்களை பள்ளியில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 2016ல் தொடங்க உள்ளது. இதையடுத்து, தமிழகம், புதுச்சேரியில் பள்ளிகள் மூலம் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டுள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான சான்றுகள் தயாரிக்கும்போது அதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருக்க பெயர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதற்கான படிவங்கள் பள்ளிகளில் வழங்கப்பட்டு அதை பெற்றோரே நேரில் வந்து பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். மேலும், தேர்வு எழுத உள்ள மாணவரின் பெயர் ரேஷன் அட்டையில் இடம் பெற்றிருந்தால் அதையும் கொண்டு வர வேண்டும் என்று பள்ளி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பள்ளி கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது, தமிழகம் முழுவதும், பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல்கள் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. ரேஷன் அட்டை கொண்டு வந்து அதன் நகல் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், ரேஷன் அட்டையின் எண்ணை கணினியில் பதிவு செய்து கொள்ளுவார்கள்.
அத்துடன் மாணவரின் தேர்வு விவரங்களும் அதில் பதிவு செய்யப்படும். அப்படி செய்த பிறகு தேர்வு முடிவுகள் வெளியான ஒரு வாரத்தில் ஆன்லைன் மூலம் அந்தந்த மாணவர்களின் ரேஷன் எண்களை ஆன்லைன் மூலம் வருவாய் துறைக்கு அனுப்பி சாதிச் சான்று, வருவாய் சான்று, இருப்பிட சான்று ஆகியவற்றை பள்ளிகளே பெற்றுத் தரும். தவிரவும், பொதுத் தேர்வுக்கு பிறகு அதே ரேஷன் அட்டை எண்ணைப் பயன்படுத்தி அந்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவையும் பள்ளிகளில் செய்து கொடுப்பார்கள் என்றனர். இது குறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது, ‘ சில பெற்றோரிடம் ரேஷன் கார்ட் இல்லை. சில இடங்களில் ரேஷன் அட்டையில் மாணவர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை.
எனவே, எந்த அடிப்படையில் ரேஷன் கார்டை தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோருகின்றனர் என தெரியவில்லை என்றனர். இது குறித்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: ரேஷன் அட்டையின் நகல்களை இப்போது வாங்கி வைத்துக் கொள்வோம். தேர்வுக்கு பிறகு ஆன்லைனில் ரேஷன் எண்ணை கணினியில் பதிவு செய்து மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு பதிவு செய்வோம். இதனால் பல நன்மைகள் உள்ளன. குறிப்பாக, தமிழக எல்லையோரங்களில் இருக்கும் அண்மை மாநில மாணவர்கள் தமிழகத்தில் படித்து அவர்களின் ரேஷன் அட்டைகள் வேறு மாநிலத்தில் இருந்தால் அந்த வகை மாணவர்கள் தமிழகத்தில்வேலை வாய்ப்பு பதிவு செய்ய முடியாது. வெளி மாநிலத்தில் அந்த மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தால் தமிழகத்தில் அவர்களுக்கு மற்ற பிரிவினர் என்றுதான் சான்று தருவார்கள். ஆனால் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அதே பிரிவிலேயே வழங்குவார்கள். எனவே ரேஷன் அட்டை முக்கியமாக வேண்டும். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.