இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Tuesday, September 10, 2019

சிறந்த ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது: மாவட்ட வாரியாக தேர்வு செய்ய குழு அமைப்பு


ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர்கள் வீதம் அனைத்து மாவட்டங்களிலும் கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் பரிந்துரைகள் மற்றும் விண்ணப்பங்களின் அடிப்படையில் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக,  பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள  சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு,  ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்,  உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சிறந்த முறையில் கணினியைப் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் சிறந்த ஆசிரியர்,  கல்வி இணைச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் ஆசிரியர்,  குழந்தைகள் சேர்க்கை, பள்ளி மேலாண்மையில் சிறந்து விளங்கும் ஆசிரியர் என ஒரு மாவட்டத்துக்கு ஆறு ஆசிரியர் வீதம் தேர்வு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆசிரியர் பாராட்டுச் சான்றுடன் ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்,  வினவுதல்,  பயன்படுத்துதல், புதிய விஷயங்களை உருவாக்குதல் என்ற நிலையில் வளர்த்தெடுப்பவராகவும்,  பள்ளி இணைச் செயல்பாடுகளான இசை, ஓவியம்,  தேசிய மாணவர் படை,  சாரண, சாரண இயக்கம், நாட்டு நலப்பணித் திட்டம்,  இளஞ்சிறார் செஞ்சிலுவை,  மாநிலமாவட்ட  அளவிலான விளையாட்டுப் போட்டிகளில்  பங்கு கொள்ளுதல், பரிசுகளை வெல்லுதல், தேசிய விழாக்களை நடத்துதல் மற்றும் மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்க கூடியவராக இருக்க வேண்டும். அதே வேளையில் தன்னுடைய தனித்திறமையால் பள்ளியின் வளர்ச்சிக்கும்,  முன்னேற்றத்துக்கும் உதவி செய்யக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

ஆசிரியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதிகளில் பயிலும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டவராகவும், மாணவர்களை உளவியல் அடிப்படையில் வழிநடத்துபவராகவும் இருக்க வேண்டும்.
  வகுப்பறை கற்பித்தலில்... இந்த விருது வகுப்பறையில் கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.  ஆசிரியர் பணியிலும், பகுதி நிர்வாகப் பணியிலும் ஈடுபடும் ஆசிரியர் பிரிவினருக்குப் பொருந்தாது.  மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய நல்லாசிரியர் விருது மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களைப் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர், மாவட்டக் கல்வி அலுவலர்கள்,  மூத்த வட்டாரக் கல்வி அலுவலர்,  தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற மூத்த தலைமையாசிரியர் ஆகியோரைக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவானது பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அதன் விவர அறிக்கையைப் புகைப்பட ஆதாரங்களுடன் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் பரிந்துரை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Friday, September 06, 2019

மாணவிகள் படங்களை வலை தளங்களில் பதிவிடக் கூடாது : பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டு விழா, விளையாட்டு விழா உள்ளிட்ட பல்ேவறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவ்விழாக்களில் பங்கு பெறும் பெண் ஆசிரியைகள், மாணவிகள் சார்ந்த புகைப்படங்களை சமூக வலை தளங்களில் பதிவிடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் இதுபோன்ற படங்களை பதிவிடுவதால் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பெண் ஆசிரியைகள், மாணவிகளின் புகைப்படத்தை பாதுகாப்பு கருதி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஆசிரியைகள், மாணவிகளின் அனுமதி இன்றி பதிவிடுவது சட்டப்படி குற்றமாகும்.

இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தக்க கட்டுப்பாடுகளுடன் சுய கோப்புகளாக சேமிக்கலாம். பதிவிறக்கம் செய்ய இயலாத பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பிளாக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

Tuesday, September 03, 2019

தலைமை வட்டார வள மையமாகும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு


மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எஸ்சிஆர்டியின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் மாவட்ட தலைமை வட்டார வள மையங்களாக மாற்றம் பெறுகின்றன. அதன்படி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் ஆகியவற்றில் பணிபுரியும் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கற்றல் கற்பித்தல் பணிகளை கண்காணிக்க வேண்டும்.அதில் குறைகள் இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சி நிறுவன முதல்வரும், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்களுக்கு ஒரு ஒன்றியத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் நான்கு வேலைநாட்கள் அல்லது மாதத்தில் 16 பள்ளிகளை ஆய்வு செய்ய வேண்டும். கற்றல் உள்ளிட்ட பணிகளில் குறைகள் இருந்தால் வேறு ஆட்களை அனுப்பி, தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் நிறுவன முதல்வர்கள் பள்ளி ஆய்வின் தொகுப்பு அறிக்கை மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதோடு பாடப்புத்தகங்களில் பிழைகள் ஏதேனும் இருந்தால் அதுபற்றி ஆசிரியர்களிடம் கலந்தாலோசித்து இம்மாத இறுதிக்குள் இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் தமிழகத்தில் லட்சக்கணக்கானவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே, ஆசிரியர் பள்ளி நிறுவனங்களின் தரத்தை உயர்த்துவதற்காக பள்ளிக்கல்வித்துறை இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Wednesday, August 28, 2019

ஓய்வூதிய விதிகள் ஒண்ணுமே இல்லை' தகவல் சட்டத்தில் தமிழக அரசு ஒப்புதல்


பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் அளிப்பது குறித்து, விதிகள் உருவாக்கப்படவில்லை' என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்துள்ளது. தமிழகத்தில், 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்த, அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்பின், பணியில் சேர்ந்த, 5 லட்சத்து, 42 ஆயிரம் அரசு ஊழியர்களில், ஓய்வு பெற்றவர்கள், பணியின் போது, இறந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.

இது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், திண்டுக்கல்லைச் சேர்ந்த ஆசிரியர் ஏங்கல்ஸ் கேள்விகள் கேட்டிருந்தார். இதற்கு அரசு அளித்த பதில்: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஓய்வூதியம் வழங்குவது குறித்த விதிகள் உருவாக்கப்படவில்லை. பணிக்கொடை வழங்குவது குறித்தும், பங்களிப்பு தொகையை, 2019 ஏப்., 1 முதல், 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்தி வழங்குவது குறித்தும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பதில் அளிக்கப்பட்டுள்ளது. ஏங்கல்ஸ் கூறியதாவது:

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து, தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு, அறிக்கையை அரசிடம் வழங்கி, 10 மாதங்கள் ஆகின்றன. அரசு எந்த முடிவும் எடுக்காமல், காலம் தாழ்த்துவது, அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2016 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அளித்த வாக்குறுதிப்படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பி.எட்., செமஸ்டர் தேர்வு அறிவிப்பு


பி.எட். கல்வியியல் படிப்புக்கான 'செமஸ்டர்' தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் பி.எட். எனும் ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் இரண்டு ஆண்டு பி.எட். வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த கல்வி ஆண்டின் முதல் செமஸ்டர் தேர்வை ஆசிரியர் கல்வியியல் பல்கலை நேற்று அறிவித்தது. இதன்படி செப்டம்பர் 12ம் தேதி தேர்வு துவங்க உள்ளது. பாட வாரியாக தேர்வு நடக்கும் தேதி விபரங்களை கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ளது.அந்த விபரங்களை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து தேர்வுக்கு தயார்படுத்துமாறு கல்லுாரிகளுக்கு பல்கலை உத்தரவிட்டுள்ளது.

Tuesday, August 27, 2019

குறைவான மாணவர்களைக் கொண்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


தமிழகத்தில் 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2019-2020-ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அதில், கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு காரணமாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 1.70 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

அதேவேளையில் 10-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1, 238-ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 1, 531 ஆக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் 293 பள்ளிகள் 10-க்கும் குறைவான மாணவர்களை கொண்டதாக மாறியுள்ளன. அதேநேரம் 70 சதவீத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 50 ஆக உயர்ந்துள்ளது.

விருதுநகர், கரூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் தலா 3 பள்ளிகளிலும், நீலகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தலா 4 பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை இல்லை. இதற்கிடையே, ஒரு மாணவர் கூட இல்லாத 46 அரசுப் பள்ளிகள் நூலகங்களாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Monday, August 26, 2019

பணிப் பதிவேடு மாற்றங்கள் ஊதிய மென்பொருள் மூலம் மேம்படுத்தப்படும்: அரசின் முதன்மைச் செயலர்


தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினிமயமாக்கல் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியது: அரசுத் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான ஊதியமும், ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியமும் கருவூலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் அனைத்து அரசுத் திட்டங்கள், நிவாரணத் தொகை மற்றும் அனைத்து பண செலவினங்களுக்கும் கருவூலத்துறையின் மூலம் நிதி வழங்கப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்களின் பணிப் பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்ற முறையைப் பயன்படுத்தி கணினி வாயிலாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து சரிசெய்து கொள்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணிப் பதிவேட்டில் புதிதாக பதியப்படும் பதிவுகள் குறித்த விவரம் உரிய பணியாளருக்கு குறுந்தகவல் மூலமாக தெரிவிக்கப்படும். இம்முறையில் அரசுப் பணியாளர் அவரது சம்பளப் பிடித்தங்கள் கடன், முன்பணம், விடுப்பு தொடர்பான விவரப் பதிவுகளை எளிதாக அறிந்து கொள்ளலாம். மேலும், விடுப்பினை இணைய வழிக் கோரிக்கையாக விடுப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணுப் பணிப் பதிவேடு, ஊதிய மென்பொருள் பதிவுகள் ஒருங்கிணைக்கப்படுவதால் மின்னணுப் பணிப் பதிவேட்டில் செய்யப்படும் அனைத்து பதிவுகளும் உடனுக்குடன் ஊதிய மென்பொருளில் தானாகவே மேம்படுத்தப்படும். இதனால் அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தை சரி பார்க்க முடியும். மேலும், நினைவூட்டுத் தகவல்களின் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றுக்கான பணப் பலன்களை பணியாளர்கள் உரிய நேரத்தில் பெற முடியும் என்றார்.

Sunday, August 25, 2019

ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்


ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, ஆசிரியர்கள் பணியில் சேர, ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூன், 8, 9ம் தேதிகளில் நடந்தது. இதற்கான முடிவுகள், ஆகஸ்ட், 20ல் வெளியிடப்பட்டன.

முதல் தாளை, 1.62 லட்சம் பேர் எழுதியதில், 0.33 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாள் தேர்வில், அதை விட குறைந்த தேர்வர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.முதல் தாளுக்கான மதிப்பெண் பட்டியல், ஆகஸ்ட், 23ல் வழங்கப்பட்டது. இரண்டாம்தாளுக்கு, இன்று மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. அப்போது, சரியாக எவ்வளவு பேர், தேர்ச்சி மதிப்பெண் பெற்றனர் என்ற விபரத்தை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட உள்ளது.

செப்., 12ல் காலாண்டு தேர்வு


தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு, அடுத்த மாதம், 12ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாட திட்டத்தில், அனைத்து மாணவர்களுக்கும், ஒரே தேர்வு முறை பின்பற்றப்படுகிறது. இந்த ஆண்டு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை, அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதில், ஒன்று முதல் ஒன்பது வரையிலும், முப்பருவ தேர்வு முறை திட்டமும், மற்ற வகுப்புகளுக்கு, ஒருங்கிணைந்த தேர்வு திட்டமும் நடைமுறையில் உள்ளது. அதன்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான, முதல் பருவ தேர்வு, செப்டம்பரில் நடக்க உள்ளது. பருவ தேர்வுகளுக்கான தேதியை, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களே முடிவு செய்து நடத்தலாம் என, அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, செப்., 12ல் துவங்கும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, செப்டம்பர், 23வரை தேர்வு நடத்தப்படுகிறது. செப்., 24 முதல், 30ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது

Wednesday, August 21, 2019

உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பு

10,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தையடுத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆபத்து : உபரி பணியிடங்கள் கணக்கெடுப்பு

தமிழகத்தில் 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிறக்கத்தை தொடர்ந்து உபரியாக இருக்கும் இடைநிலை ஆசிரியர்களை காலி செய்யும் நடவடிக்கையில் தொடக்கக்கல்வித்துறை இறங்கியுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நாடு முழுவதும் கல்வித்துறையில் ஏற்படும் அநாவசிய செலவினங்களை குறைக்கும்படி மாநில அரசுகளை வலியுறுத்தி வருவதுடன், கல்வித்துறைக்காக செலவிடப்படும் செலவினங்களையும் கண்காணிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ள தமிழக அரசு, மத்திய அரசின் அழுத்தம் காரணமாக செலவினங்களை குறைக்கும் வழிவகைகளை கண்டறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பது,  காலியாகும் அரசுப்பள்ளி கட்டிடங்களை நூலகங்களாக மாற்றுவது என பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேநேரத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் மாணவர் எண்ணிக்கை எதிர்பார்ப்புக்கு ஏற்ப அரசுப்பள்ளிகளில் உயராததால் வேறுவழியின்றி உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசு கையில் எடுத்தது. தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23,928, நடுநிலைப் பள்ளிகள் 7,260, உயர்நிலைப் பள்ளிகள் 3,044, மேல்நிலைப்பள்ளிகள் 2,727 ஆகியவை உள்ளன. இதில் ஆரம்ப பள்ளிகளில் 64,855 ஆசிரியர்களும், நடுநிலைப் பள்ளிகளில் 50,508 ஆசிரியர்களும், உயர்நிலைப் பள்ளிகளில் 27,891 ஆசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் 73,616 ஆசிரியர்களும் பணியாற்றுகின்றனர். இவர்களில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 16 ஆயிரத்து 110 உபரி ஆசிரியர்கள் இருப்பது தெரிய வந்தது. இவர்களில் 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் 4 ஆயிரம் பேர் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளனர். மீதமுள்ள 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களை அவர்கள் தற்போது பெறும் அதே ஊதிய விகிதத்தில் இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக தொடக்க, நடுநிலைப்பள்ளிகளிலும் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பை அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி, 1.08.2019ம் தேதி நிலவரப்படி 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பணியிடம் உபரி பணியிடமாக கருத்தில் கொள்ள அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேபோல் பள்ளிகளில் 75 மாணவர்கள் இருந்தால் மட்டுமே 3 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். 105 மாணவர்களும், அதற்கு மேலும் இருந்தால் மட்டுமே 4ம் பணியிடம் கருத்தில் கொள்ளப்படும் என்றும் தொடக்கக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதற்கான முறையான அறிவிப்பு வெளியானதும் உபரி ஆசிரியர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் நிலை குறித்து வேறு முடிவு எடுக்கப்படலாம். இந்த தகவல் இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘பட்டதாரி ஆசிரியர்களை தொடர்ந்து அரசு இடைநிலை ஆசிரியர்கள் பக்கம்  கவனத்தை திருப்பியுள்ளது. இதற்கு மத்திய அரசின் கடும் அழுத்தமே காரணம். வேறு துறைகளில் சிக்கனத்தையும், ஆட்குறைப்பையும் மேற்கொள்ளலாம். கல்வித்துறையில் இந்த நடவடிக்கை நாட்டின் முன்னேற்றத்தையே பாதிக்க செய்து விடும். காமராஜர் காலத்தில் அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு அரசாணை 250ன்படி 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 1996-2000ம் காலக்கட்டத்தில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று ஆனது. இதன் மூலம் 2 லட்சம் ஆசிரியர்கள் என்பது 1 லட்சம் ஆசிரியர்கள் என்று குறைந்தது. தற்போது அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கை மூலம் இன்னும் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு ஆசிரியர்கள் நியமனம் என்பதே இருக்காது என்பதுடன், டெட் தேர்வு மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களின் நிலையும் கேள்விக்குறியாகும். எனவே, காமராஜர் காலத்து நடைமுறையை மீண்டும் பின்பற்றினால் உபரி ஆசிரியர்கள் என்ற நிலை இருக்காது. புதிய பணியிடங்களும் உருவாகும். ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும். அதோடு தமிழகத்தில் அடிப்படை கல்வியுடன், பள்ளிக்கல்வியும் மேம்படும்’ என்று தெரிவித்தனர்

தமிழகத்தில் அடுத்த மாதம் வாக்காளர் சரிபார்ப்பு பணி


தமிழகத்தில், வாக்காளர் சரிபார்ப்பு பணி, அடுத்த மாதம் நடக்க உள்ளது.தவறுகள் இல்லாத, வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்காக, வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தை, தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி உள்ளது. \ இத்திட்டத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி, செப்., 1 முதல், 30 வரை நடக்க உள்ளது.

அப்போது, வாக்காளர்களை சரி பார்ப்பதற்காக, ஓட்டுச்சாவடி அலுவலர்கள், வீடு வீடாக வருவர். அவர்களிடம், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது, தங்களுடைய பெயர் என்பதை உறுதிப்படுத்த, வாக்காளர்கள் உரிய ஆவணத்தை அளிக்க வேண்டும். பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், ஆதார், ரேஷன் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், தபால் கணக்கு புத்தகம், வருமான வரி அறிக்கை, குடிநீர், தொலைபேசி, மின் கட்டணம், காஸ் பில், பிறரிடமிருந்து வந்த தபால் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை காண்பிக்கலாம்.வாக்காளர்கள், தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை, பொது சேவை மையத்திற்கு சென்று, சரிபார்த்து கொள்ளலாம்.

மேலும், '1950' என்ற தொலைபேசி எண்ணில் பேசியும், www.nvsp.in என்ற இணையதளத்திலும் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.