இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, July 29, 2019

அரசுப் பள்ளிகளில் ஆயிரம் நூல்கள் கொண்ட நூலகங்கள் கட்டாயம்: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 1,000 நூல்கள் கொண்ட நூலகங்களை கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்,  மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாணவர்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தால் அவர்களின் அறிவு வளரும். காலச் சூழ்நிலைக்கேற்ப கல்வி மாற்றமடைகிறது. அதனால் மாணவர்கள் பாடநூல்கள் மட்டுமல்லாது, பாடத்தோடு தொடர்புடைய நூல்களை கற்கும்போது மாணவர்களின் அறிவு பெருகும் என்பதால், பள்ளிகளில் நூலகங்கள் அமைத்து மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 1,000 நூல்கள்... பள்ளிக் கல்வித் துறையின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் நூலகம் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளது. நூலகம் இல்லாத பள்ளிகளில் மிகுதியாக உள்ள ஒரு அறையினை நூலக அறையாக மாற்றி,  பள்ளி நூலகம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு அரசு,  அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் குறைந்தது 1,000 புத்தகங்கள் உள்ள பள்ளி நூலகம் செயல்பட வேண்டும். இந்த நூலகத்துக்கு, தினமும் குறைந்தபட்சம் தமிழ் மற்றும் ஆங்கில தினசரி செய்தித்தாள் ஒன்றை வாங்கி, மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். இந்த நூலகப் பணியினை மேற்கொள்ள ஒரு ஆசிரியரை நியமித்து, மாணவர்கள் நூலகத்தைப் பயன்படுத்தும் திறனை அதிகரிக்கலாம். இதன் மூலம் மாணவர்களின் பேச்சுத் திறன், எழுத்துத்திறன்,
ஆங்கிலம் பேசும் திறன், வாசிப்புத் திறன் ஆகியவை மேம்படும்.

மிகையாக உள்ள நாற்காலி, மேஜைகளை...:  பள்ளிகளில் பயன்பாட்டுக்கு மிகையாக உள்ள நாற்காலி, மேஜை ஆகியவற்றை பள்ளி நூலகத்துக்குப் பயன்படுத்தலாம். ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் மூலம் கடந்த ஆண்டு பள்ளிகளுக்குத் தேவையான நூல்கள் வாங்கப்பட்டுள்ளன. நூலகத்தில் உள்ள நூல்களை படிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் படிக்கும் வாய்ப்பினை அளித்து மாணவர்களின் அறிவுக்கூர்மையை மேம்படுத்த வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை பார்வையிடும்போது பள்ளி நூலக செயல்பாட்டினை பார்வையிட்டு இந்தச் செயல்பாடுகள் அனைத்துப் பள்ளிகளிலும் முனைப்புடன் தினமும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Sunday, July 28, 2019

அரசு பள்ளி உட்கட்டமைப்பு வசதிக்கு நிதி


எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியில் அரசு பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கு தொகுதிக்கு தலா 25 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுஉள்ளது.

வறட்சியால் பெரும்பாலான அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை முழுமையாக மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதை நிவர்த்தி செய்ய அரசு உயர், மேல்நிலைப்பள்ளிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, சட்டசபை தொகுதிக்கு தலா 25 லட்ச ரூபாய் வீதம் எம்.எல்.ஏ.,க்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அடிப்படை உட்கட்டமைப்பு தேவைப்படும் தலைமை ஆசிரியர்கள் தொகுதி எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு, தங்கள் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.எம்.எல்.ஏ.,க்களும் பாரபட்சமின்றி அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கண்டறிந்து, நிதி ஒதுக்கி, பள்ளி வளர்ச்சிக்கு உதவ வேண்டுமென கல்வி ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Thursday, July 25, 2019

நடுநிலைப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவி பொருத்தும் பணி தொடங்கியது


தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைத் தொடர்ந்து 8,179 நடுநிலைப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் வருகையை முறைப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை நிகழ் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இரண்டாம் கட்டமாக தற்போது அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 413 வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு தூதஞ்சல் (கூரியர்) மூலமாக இந்தக் கருவிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. இவற்றை சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நிறுவி கணினி இயக்கத் தெரிந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஏற்கெனவே பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிதாகப் பயிற்சி பெறுபவர்கள் அனைத்துப் பள்ளிகளிலும் இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், அது தொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதையடுத்து அந்த அறிக்கை பள்ளிக் கல்வித் துறையில் தொழிற்கல்வி இணை இயக்குநரிடம் ஒப்படைக்கப்படும். இந்தப் பணிகளுக்குப் பிறகு 8,179 அரசு நடுநிலைப் பள்ளிகளிலும் ஒரே நாளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கன்வாடிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: செப்.30 வரை குழந்தைகளைச் சேர்க்கலாம்


தமிழகத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள 2, 381 அங்கன்வாடி மையங்களில் தொடங்கப்பட்டுள்ள எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பெற்றோர் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், அரசு நடுநிலைப் பள்ளிகளின் வளாகத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் மாண்டிசோரி முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்குவதற்கு அரசு முடிவெடுத்தது.

அதன்படி, முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் செயல்படும் 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் சோதனை அடிப்படையில் தொடங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 3-ஆம் தேதி முதல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. தொடக்கத்தில் குழந்தைகள் சேர்க்கையில் சற்று தொய்வு ஏற்பட்டது. இதையடுத்து கல்வித் துறை அதிகாரிகள் பெற்றோரிடம் ஏற்படுத்தி விழிப்புணர்வு காரணமாக தற்போது பெற்றோர் தங்களது குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். எல்கேஜி வகுப்பில் மூன்று வயது முதல் நான்கு வயது வரையிலான குழந்தைகளும், யுகேஜி வகுப்பில் நான்கு முதல் 5 வயது வரையிலான குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை நாமக்கல், கோவை, மதுரை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகளில் குழந்தைகள் சேர்க்கை இலக்கை நெருங்கியுள்ளது. அதே நேரத்தில் திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் சேர்க்கை சற்று குறைவாக உள்ளது. வகுப்பறைச் சூழலில் மாற்றம் தேவை: இது குறித்து கல்வியாளர்கள், பெற்றோர் கூறுகையில், அரசின் சார்பில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

இருப்பினும் சில இடங்களில் எல்கேஜி-யுகேஜி வகுப்புகள் அங்கன்வாடி மைய சூழலில்தான் செயல்படுகின்றன. வகுப்பறைகளுக்கு போதுமான அளவுக்கு கல்வி உபகரணங்கள், இருக்கைகள் வழங்கப்படவில்லை. இதனால் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். இந்த நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றனர். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியது: எல்கேஜி- யுகேஜி வகுப்புகள் இந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அதில் உள்ள குறைகள் சரிசெய்யப்படும். மழலையர் வகுப்புகளில் சேரும் மாணவர்களுக்கு கற்றல் திறன், பேசுதல் மற்றும் எழுத்துப் பயிற்சி, ஆங்கில மொழித்திறன் உள்ளிட்ட தரமான ஆரம்பக் கல்வி செலவில்லாமல் அளிக்கப்படவுள்ளது.

பெற்றோர் முன்வர வேண்டும்: அதே நேரத்தில், அங்கு சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, ஒரு ஜோடி காலணி, அவர்கள் பயிற்சி முடித்ததற்கான சான்றிதழ் ஆகியவை பள்ளிக் கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட உள்ளன. ஏழை பெற்றோரின் குழந்தைகள் இந்தத் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்பதற்காக வரும் செப்.30-ஆம் தேதி வரை குழந்தைகள் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, விஜயதசமி தினத்திலும் குழந்தைகளைச் சேர்க்கலாம். அனைத்து மையங்களிலும் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளைக் காட்டிலும் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கப்படும். எனவே பெற்றோர் எந்தவித தயக்கமும் இன்றி தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முன்வர வேண்டும் என்றனர்.

Saturday, July 20, 2019

ஆசிரியர்கள் அதிருப்தி: தரமற்ற கல்வி உபகரணங்கள்


ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கு கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்கள் தரமின்றி இருப்பதாகவும், வாங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாகவும்' பள்ளி ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் 23 ஆயிரத்து 522 ஆரம்ப பள்ளிகள், 7 ஆயிரத்து 651 நடுநிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன.

இந்த பள்ளிகளில் 20 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு என ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட தொகை சிறப்பு நிதியாக பள்ளி வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்படும். தலைமையாசிரியர்கள் கல்வி உபகரணங்களை மேலாண்மை குழு மூலம் தீர்மானம் போட்டு வாங்கி வந்தனர்.அரசே கொள்முதல்நடுநிலை பள்ளி நுாலகங்களுக்கு புத்தகம் வாங்க ரூ.10 ஆயிரம், விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.6 ஆயிரம், ஆரம்ப பள்ளிகளில் விளையாட்டு உபகரணங்கள் வாங்க ரூ.4 ஆயிரம், ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் ஆங்கில உபகரண பெட்டி வாங்க ரூ.6 ஆயிரம் ஒதுக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில் அரசே சில தனியார் நிறுவனங்களை தேர்வு செய்து பள்ளிகளுக்கு தேவையான கல்வி, விளையாட்டு உபகரணங்களை கொள்முதல் செய்து அனுப்புகிறது. கால்பந்து, வாலிபால், கிரிக்கெட் பேட், டென்னிஸ் பந்து, வலை உட்பட 14 வகையான விளையாட்டு, கல்வி உபகரணங்களை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பள்ளிகளில் இறக்கி வைத்து விட்டு செல்கின்றனர். இவர்களுக்கு அரசு நேரடியாக பணத்தை செலுத்துகிறது. தனியார் நிறுவனங்கள் வழங்கிய தரமற்ற உபகரணங்களால் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தரமற்ற பொருள்தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில தலைவர் மோசஸ் கூறியது:

ரூ.4 ஆயிரம் என அரசு அறிவித்துள்ள விளையாட்டு உபகரணங்கள் ரூ.1,500 கூட பெறாது. மாணவர்கள் ஓரிரு முறை பயன்படுத்தியதுமே சேதமடைந்து விட்டது. ரூ.10 ஆயிரத்துக்கு நுாலகங்களுக்கு வாங்கிய புத்தகங்கள் ரூ.4 ஆயிரத்துக்குகூட தேறாது. இதேபோல் ரூ.6 ஆயிரத்துக்கான ஆங்கில உபகரண பெட்டி ரூ.1,000 கூட பெறாது. இதற்கு முன்பு தலைமையாசிரியர்களே மேலாண்மை குழு மூலம் தீர்மானம் போட்டு வாங்கும் பொருட்கள் தரமானதாக இருந்தது.அப்போது தலைமையாசிரியர்கள் வாங்கிய பொருட்கள் தரமானதா என அரசு கேள்வி கேட்டது. தற்போது அரசே தரமில்லாத பொருட்களை வாங்கி அனுப்புவது வேதனையாக இருக்கிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. லட்சக்கணக்கில் நிதி இழப்பு செய்யப்பட்டுள்ளது, என அவர் கூறினார்.

Wednesday, July 17, 2019

பி.எட். கலந்தாய்வு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்


இரண்டு ஆண்டுகள் பி.எட். (கல்வியியல் கல்வி) படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் இந்தக் கலந்தாய்வை நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்த உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள 2,040 பி.எட். படிப்பு இடங்களில் 2019-20 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாக உள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கான விண்ணப்ப விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்க உள்ளது. ஜூலை 29-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூலை 29 கடைசி நாளாகும். விண்ணப்பக் கட்டணத்தைப் பொருத்தவரை பொதுப் பிரிவினருக்கு ரூ. 500 என்ற அளவிலும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் விவரங்களை www.ladywillingdon.com என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Friday, July 12, 2019

பி.எட். விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடக்கம்

பி.எட். (ஆசிரியர் கல்வியியல் கல்வி) சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடங்கப்பட உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அல்லது சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயராய்வு நிறுவனம் நடத்தி வருகின்றன

. நிகழாண்டுக்கான (2019-20) கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் உயராய்வு நிறுவனம் நடத்த உள்ளது. கலந்தாய்வானது வழக்கம் போல ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் அடுத்த வாரம் தொடங்குகிறது. விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ. 500-ஆகவும், எஸ்.சி., எஸ்.டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ. 250 என்ற அளவிலும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்ப விநியோக தேதி உள்ளிட்ட விவரங்கள் உயராய்வு நிறுவனத்தின் புதிய இணையதளத்தில் ஓரிரு நாள்களில் வெளியிடப்பட உள்ளன. உயராய்வு நிறுவனத்தின் வழக்கமான இணையதளம் முடங்கியிருப்பதால், புதிய இணையதளத்தை கல்வி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய இணையதள விவரம் திங்கள்கிழமை வெளியிடப்படும் என உயராய்வு நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Wednesday, July 03, 2019

1,848 தொடக்க பள்ளிகளுக்கு 'பூட்டு'

   தமிழகத்தில் மாணவர்கள் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ள 1,848 தொடக்கப்பள்ளிகளை மூட கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி துறையின் கீழ் 30 ஆயிரத்து 597 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகள் இயங்குகின்றன. ஆனால், ஆங்கில வழிக்கல்வி மோகத்தால் கிராமப்புற குழந்தைகளையும் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் சில பள்ளிகள் 10 க்கும் குறைவான மாணவர்களை கொண்டு பள்ளிகள் நடப்பதாக கண்டறிந்துள்ளனர். இங்கு தலா ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியர் பணிபுரிகின்றனர்.

மாணவர் எண்ணிக்கை 10 க்கும் குறைவாக உள்ள 1,848 தொடக்க பள்ளிகளை அரசு கண்டறிந்துள்ளது. இவற்றை மூடிவிட்டு அங்கிருக்கும் தலைமை ஆசிரியர், ஆசிரியர், மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. பள்ளிகள் விபரம் சேகரிப்பு : தொடக்க கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

10 க்கும் குறைவான மாணவர் உள்ள தொடக்க பள்ளி, அருகில் உள்ள பள்ளி விபரம், துாரம், குறுக்கே ஆறு, தேசிய சாலை, ரயில் தண்டவாளங்கள் உள்ளனவா உள்ளிட்ட விபரம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் கடைசியாக தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை பணியிறக்கம் செய்து இடைநிலை ஆசிரியராக நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது, என்றார்.

Tuesday, June 25, 2019

ஆசிரியர்கள் சிறப்புநிலை: கல்வித் துறை அறிவிப்பு


ஆசிரியர்கள் தேர்வுநிலை, சிறப்புநிலை பெறுவதற்கு கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெற தேவையில்லை என தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10 மற்றும் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களின் உண்மைத்தன்மை பெறவில்லை என்பதால் தேர்வுநிலை, சிறப்பு நிலை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்கள் கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மை பெறவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அதிகாரிகளிடமிருந்து தேர்வுநிலை, சிறப்புநிலை கருத்துருக்களை பெற்று முகாம் நடத்தி முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகாம் நடைபெறும் நாளிலேயே சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆணை வழங்க வேண்டும். இதுதவிர முகாம்கள் மூலம் தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் இதுவரை சிறப்புநிலை பெறாமல் இருப்பவர்களின் விவரங்களை அறிக்கையாக வரும் ஜூலை 1-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இனி தேர்வுநிலை, சிறப்பு நிலை அடைய 10, 12-ஆம் வகுப்புகளுக்கான கல்விச் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சமர்ப்பிக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, June 22, 2019

உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்கள்: கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவு


தமிழக பள்ளிக் கல்வித் துறையில் 19,426 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். இந்த ஆசிரியர்களுக்கு கட்டாய பணி மாறுதல் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் பொது மாறுதல், பணி நிரவல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் அதற்கான விண்ணப்பங்களை வெள்ளிக்கிழமை முதல், வரும் 28-ஆம் தேதிக்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்டத்திற்குள் மாறுதல் பெற விரும்பும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 8-ஆம் தேதி காலையிலும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. ஜூலை 9-ஆம் தேதியன்று காலை, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வும், அன்று மாலையில் அவர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.

ஒன்றியத்திற்குள் பணி நிரவல் கோரி விண்ணப்பித்துள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூலை 10-ஆம் தேதி காலையிலும், வருவாய் மாவட்ட அளவில் பணி நிரவல் கோரியவர்களுக்கு அன்று மாலையிலும் கலந்தாய்வு நடக்கிறது. பொதுமாறுதல்கள் வழங்குவதற்கான நெறிமுறைகள் கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் (எமிஸ்) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் ஆசிரியர் - மாணவர் விகிதாசாரத்தின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர்களின் பட்டியலை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதன்படி, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2, 279 இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 17,147 பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உபரியாக உள்ள 19,426 ஆசிரியர்களை வரும் ஜூலை 9-இல் தொடங்க உள்ள கலந்தாய்வில் கட்டாய பணி மாறுதல் வழங்கி ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பள்ளிகளில் பணியமர்த்துவதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களுக்கு அவரவர் பணியாற்றும் மாவட்டத்துக்குள்ளேயே கட்டாய பணி மாறுதல் வழங்கப்படவுள்ளது.

தமிழ்வழிக் கல்வியைப் பொருத்தவரையில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 6 முதல் 8 வரை 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும், 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்திலும் ஆசிரியர் பணியிடங்கள் மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலவழிக் கல்வியைப் பொருத்தவரையில்15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் பணி நிரவல் மேற்கொள்ளப்பட உள்ளது.

Friday, June 21, 2019

2020 மார்ச்சில் புதிய பாடத்திட்டபடி தேர்வு


''மார்ச் 2020ல் நடக்கும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொது தேர்வுகள் புதிய பாடத்திட்டப்படி தான் நடக்கும்,'' என அரசு தேர்வுகள் இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 1-க்கு புதிய பாடத்திட்டப்படி வகுப்புகள் நடந்தது. இக்கல்வி ஆண்டில் (2019-- 2020) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2விற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.எனவே பத்து, பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் 2020 மார்ச்சில் நடக்கும் அரசு பொது தேர்வை புதிய பாடத்திட்டத்தின்படியே எழுத வேண்டும். பழைய பாடத்திட்டத்தில் தேர்ச்சி பெறாத, தேர்வில் பங்கேற்காத மாணவர்களும், அந்தந்த பாடத்தினை புதிய பாடத்திட்டப்படியே தேர்வுகள் எழுத வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, June 19, 2019

மழை வேண்டி பள்ளிகளில் பிரார்த்தனை


தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், கோடைக் காலம் முடிந்தும், வெயிலின் உக்கிரம் தணியாத நிலையில், தண்ணீர் பஞ்சம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. குடிநீரும், நிலத்தடி நீரும் இல்லாமல், மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.சென்னை போன்ற பெருநகரங்களில், தண்ணீர் தட்டுப்பாட்டால், பொது மக்கள், வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மழை வேண்டி பிரார்த்தனை நடத்துமாறு, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மத அடிப்படையில் இல்லாமல், பொதுவான பிரார்த்தனை கூட்டமாக நடத்தும்படி கூறப்பட்டுள்ளது.

மேலும், இக்கூட்டங்களில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் சேமிப்பு குறித்து, மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி எடுக்கவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாக, பள்ளிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.