இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, February 17, 2019

MORNING prayer 18-2-19

18-2-19

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 132

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

உரை:

ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும், அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

பழமொழி:

If you give an inch he will take all

இடத்தைக் கொடுத்தால் , மடத்தை பிடிப்பான்

பொன்மொழி:

வாழ்க்கையில் நாம் முன்னேற முன்னேறத்தான் நம் திறமைகளின் வரம்புகளைத் தெரிந்து கொள்கிறோம்.

- பிராய்டு

இரண்டொழுக்க பண்பாடு :

1) எனக்கு சிறு பணி கொடுக்கப் பட்டாலும் அவற்றை மிக செம்மையாக செய்து முடிப்பேன்.

2) பள்ளிச் சூழலை பசுமையாக பாதுகாப்பேன்.

பொது அறிவு :

1) மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
ஈரல்

2) மலேசியாவின் கரன்சி எது ?
ரிங்கிட்

நீதிக்கதை :

கடவுளின் கருணை

கோட்டையூர் என்ற ஊரில் அருணாச்சலம் என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் மிகுந்த கடவுள் பக்தி கொண்டவன். வாழ்க்கையில் இன்பமோ துன்பமோ எது நடந்தா லும் எல்லாம் கடவுள் செயல் என்று சொல்வான்.

இதனால் எதை பற்றியும் கவலைப்படமாட்டான். இறைவன் அருள் இன்றி ஒரு அணுவும் அசையாது என்பது இவனுடைய கொள்கை. அதே ஊரில் தங்கையா என்பவன் வாழ்ந்து வந்தான். இவன் அருணாச்சலத்திற்கு நேர் எதிர்.

கடவுளே இல்லை என்று சொல்லும் கொள்கையுடையவன். வசதிக்கு குறைவில்லை. எனவே, அருணாசலத்தை பார்க்கும் போதெல்லாம் மிகவும் கிண்டல் செய்வான். காரணம் அருணாச்சலம் ஏழை. அதனால் அவனது கிண்டலுக்கு கேட்கவேண்டுமா?

நீ நம்பி இருக்கிற கடவுள் உன்னை மட்டும் ஏழையாக வைத்துவிட்டு என்னை மட்டும் பணக்காரனாக படைத்திருக்கிறான் பார்த்தாயா? இப்படியெல்லாம் பேசி நக்கல் செய்வான்.

அதற்கு அருணாச்சலம் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அதை இறைவனை தவிர யார் அறிய முடியும் என்று சொல்வான். இப்படியாக தங்கையா கிண்டல் செய்வதும் அருணாச்சலம் பதில் சொல்வதுமாக இருந்தான்.

ஒரு நாள் உச்சி வெயில் மண்டையை பிளந்தது. அப்போது அந்த வழியாக குடை பிடித்து கொண்டு வந்து கொண்டிருந்தான் தங்கையா. குடை வாங்க வசதியில்லாத அருணாச்சலம் வெயிலில் வேர்வை வழிந்தோட வந்து கொண்டிருந்தான். அவனை கண்டதும் அருணாச்சலத்திற்கு ஏக குஷி.

வழக்கம் போல் அருணாச்சலத்தை வம்புக்கு இழுத்தான். “”என்ன அருணாச்சலம் வெயிலில் வேர்க்க விறுவிறுக்க எங்க போயிட்டு வர்ற? எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் உனக்கு ஒரு குடை கொடுக்க வேண்டும் என்று அந்த கடவுளுக்கு தெரியாதா! என்னய்யா சாமி?” என்று நக்கல் செய்தான்.

வெயில் கொடுமை ஒரு பக்கம்; அவனது தொடர் தொல்லை ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு அருணாச்சலத்தை எரிச்சல் படுத்தியது.

“”அந்த கடவுளின் கருணை இல்லையென்றால் உன் கையில் குடை இருந்தாலும் நீ அதை பிடித்து செல்ல முடியாது. அதை கையில் வைத்து கொண்டு தலை காய ஓடுவாய் என்பதை மட்டும் மறந்துவிடாதே. இறைவனது கருணையை எப்போதும்
கிண்டல் செய்யாதே,” என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.

பெரிய தத்துவம் சொல்றான் என்று சிரித்து கொண்டே நடந்தான் தங்கையா. சிறிது தூரம் கூட நடந்திருக்கமாட்டான் அதற்குள் வெறி நாய் ஒன்று அவனை துரத்த ஆரம்பித்தது. உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தான் தங்கையா. நாயோ பயங்ரமாக துரத்தியது.

குடையை பிடித்து கொண்டு ஓடுவதற்கு சிரமமாக இருந்தது. எனவே, குடையை மடக்கி கையில் வைத்து கொண்டு ஓட்டமாக ஓடி உயிர் தப்பிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.

அப்பொழுதுதான் அவன் மனதில் அருணாச்சலம் சொல்லிவிட்டு சென்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தது.

கடவுளின் கருணை இல்லாவிட்டால் கையில் குடை இருந்தாலும் பிடிக்கமுடியாது என்பதை உணர்ந்தான். அவனை அறியாமல் ஒருவித பயம் அவனை ஆட்கொண்டது. அன்றிலிருந்து கடவுளின் அருளை நம்ப ஆரம்பித்தான் தங்கையா

இன்றைய செய்தி துளிகள் :

1) ஒரு ஆண்டிற்குள் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படும். : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

2) நாடு முழுவதும் பள்ளிகள், கல்லுாரிகளில் வரும் 21-ம் தேதிதாய்மொழி தினம் கொண்டாடமத்திய மனிதவளத்துறை அமைச் சகம் உத்தரவிடப்பட்டுள்ளது.

3) வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதாருடன் பான் எண் இணைப்பது கட்டாயம்; மார்ச் 31 வரை காலக் கெடு

4) புல்வாமா தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் - பிரதமர்

5) தேசிய சீனியர் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சாய்னா நெஹ்வால் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன் தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார்.

Friday, February 15, 2019

தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவு

பள்ளிகள், கல்லுாரிகளில், வரும், 21ம் தேதி, தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், ஆங்கிலம் பொது மொழியாகவும், பல மாநிலங்களில் ஹிந்தியும், சில மாநிலங்களில் மாநில மொழியும், அலுவல் மொழியாக உள்ளன. மாநில மொழிகள் மற்றும் அவரவர் தாய்மொழியை கவுரவிக்கும் வகையில், தாய்மொழி தினத்தை விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு, மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது.இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ' அறிவித்த, பிப்., 21ல், தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் பள்ளிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தாய்மொழியை கவுரவிக்கும் வகையில், யுனெஸ்கோ அறிவித்துள்ளபடி, வரும், 21ல், தாய்மொழி தினத்தை, மாணவர்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும். அன்றைய தினம், அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அந்தந்த மாநில மொழிகளில், பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவியம், இசை உள்ளிட்ட போட்டிகளை நடத்த வேண்டும்.மாநில மற்றும், உள்ளூர் மொழி பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Saturday, February 09, 2019

ஆசிரியர்கள் வருகையை உடனுக்குடன் அனுப்பி வைக்க உத்தரவு


மாணவர்களைப் போன்று, ஆசிரியர்களின் வருகையையும் ஆன்லைனில் தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்து உடனுக்குடன் அனுப்ப பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு, 'வருகை பதிவு செயலி (டி.என். ஸ்கூல் அட்டெனென்ஸ் ஆப்)' மூலம் தினந்தோறும் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்களின் வருகையையும் இந்த செயலி மூலம் பதிவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை:

வருகை பதிவு செயலியை 'லாகின்' செய்த பின், பள்ளி விபரங்களுக்கு மேல் பகுதியில் 'டீச்சர் ஐகானை' தெரிவு செய்து ஆசிரியர்களின் பெயர் பட்டியலை பெற வேண்டும். அதை தொடர்ந்து ஆசிரியர்களின் பெயருக்கு எதிரே வருகையா (பி), விடுப்பா (எல் அல்லது ஏ) என்பது குறித்த விபரங்களை தேர்வு செய்ய வேண்டும். விடுமுறையாக இருப்பின் தற்செயல் விடுப்பா (சி.எல்.,), மருத்துவ விடுப்பா (எம்.எல்.,) என்பதை 'டிராப் டவுன் லிஸ்ட் பாக்சில்' இருக்கும் பட்டியலில் 'கிளிக்' செய்ய வேண்டும்.

மாணவர்களின் விபரங்களை பதிவு செய்யும்போது 'ஆப்லைன்' மூலம் பதிவு செய்ய வசதி கொடுக்கப்பட்டது. ஆசிரியர்களின் வருகையை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். வருகை பதிவில் தவறு இருப்பின் அப்பள்ளியின் தலைமை ஆசிரியரே அதற்கான பொறுப்பு. ஒவ்வொரு நாளும் வருகை பதிவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், கல்வி மாவட்ட அலுவலர், வட்டார கல்வி அலுவலர், எமிஸ் ஒருங்கிணைப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும்,என கூறப்பட்டுள்ளது.

Thursday, February 07, 2019

புதிய பாடத் திட்டத்தின் கீழ் நெட்' தேர்வு': தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு


தேசிய தகுதித் தேர்வு (நெட்) புதிய பாடத் திட்டத்தின் கீழ் வரும் ஜூன் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறுவதற்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்கும் -நெட்- தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் இந்தத் தேர்வில், வரும் ஜூன் மாதத் தேர்வுக்கான அறிவிப்பை என்.டி.ஏ. இப்போது வெளியிட்டுள்ளது. புதிய பாடத் திட்டம்:

இந்தத் தேர்வானது புதிய பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும். புதிய பாடத் திட்ட விவரங்களை www.ugcnetonline.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தேர்வு எப்போது? இந்தத் தேர்வானது ஜூன் 20, 21, 24, 25, 26, 27, 28-ஆம் தேதிகளில் முழுவதும் கணினி அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.

தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு செய்யலாம். பதிவு செய்ய மார்ச் 30 கடைசி நாளாகும். தேர்வறை நுழைவுச் சீட்டை மே 15 முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்தத் தேர்வு முடிவுகள் ஜூலை 15-ஆம் தேதி வெளியிடப்படும்.

Wednesday, February 06, 2019

128 அரசு பள்ளிகளுக்கு விருது வழங்க குழு தேர்வு


கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் செயல்படும், 128 அரசு பள்ளிகளுக்கு, 'புதுமை பள்ளி விருது' வழங்க, மாநில - மாவட்ட அளவில், குழு அமைக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகள் இடையே, ஆரோக்கியமான கல்வி போட்டியை ஏற்படுத்தும் வகையில், பள்ளி கல்வி அமைச்சர் உத்தரவின்படி, புதுமை பள்ளி விருது வழங்கப்படுகிறது.

32 மாவட்டங்களிலும், தலா, ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என, 128 பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன.தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிக்கு, தலா, 1 லட்சம் ரூபாய்; உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.இதற்காக, மாவட்ட அளவில், தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்று, ஆய்வு செய்து, சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வழியே பெறப்படும் பரிந்துரைகளை பரிசீலித்து, மதிப்பெண் அளிக்க வேண்டும்.இவற்றில், அதிக மதிப்பெண் பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலா, மூன்று வீதம், 12 பள்ளிகளை, ஒவ்வொரு மாவட்ட குழுவும், மாநில குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

வரும், 28ம் தேதிக்குள், மாநில குழுவின் உறுப்பினர் செயலருக்கு கிடைக்கும் வகையில், மாவட்ட அளவிலான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், தொடக்க கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் ஆகியோர் அடங் கிய குழு பரிசீலித்து, 128 பள்ளிகளை தேர்வு செய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Tuesday, February 05, 2019

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு: கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்-லைன் விண்ணப்ப நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாளாகும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும். இதில் ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ. 700 கட்டணமும், இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ. 1200 கட்டணமும் செலுத்த வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ. 350 கட்டணமும், இரண்டு தாள்களுக்கு ரூ. 600 கட்டணமும் செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Sunday, February 03, 2019

ஸ்டிரைக்' ஆசிரியர்களுக்கு இன்று புதிய சம்பள பட்டியல்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள பட்டியல், இன்று தயாரிக்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று பணியில் சேர்ந்தவர்களுக்கும், சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஜாக்டோ - ஜியோ சார்பில், ஜன., 22 முதல், 30 வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார்.ஆனால், பல இடங்களில், கருவூல துறை அதிகாரிகள் மற்றும் துறை தலைவர்கள் சேர்ந்து, 'ஸ்டிரைக்' நடந்த நாட்களுக்கும் சேர்த்து, அனைவருக்கும் சம்பளம் தரும் வகையில், பட்டியலை அங்கீகரித்தனர். இந்த முறைகேட்டை, உயர் அதிகாரிகள் கண்டறிந்து, உடனடியாக கருவூல துறையில் இருந்து, சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட, 'ஆன்லைன்' பண பட்டுவாடாவுக்கான உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, இன்று புதிய சம்பள பட்டியல் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இதில், விதிமீறல் இன்றி வேலை நாட்களை பதிவிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பல்வேறு அறிவுரைகளை, துறை தலைவர்களுக்கு பள்ளி கல்வி மற்றும் அரசு துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். அதன் விபரம்:அரசு வேலை நாட்களில், பகல், 12:00 மணிக்குள் பணிக்கு சேர்ந்தால் மட்டுமே, அந்த நாளுக்கான சம்பளத்தை பதிவிட வேண்டும்.

பிற்பகலில் சேர்ந்தால், அவர்கள் அடுத்த வேலை நாளில் இருந்தே, பணியில் சேர்ந்ததாக கருதப்படும்.குடியரசு தினத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து, தேசிய கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்க வேண்டியது அவர்களின் கடமை. குடியரசு தினம், பள்ளி மற்றும் அலுவலக வேலை நாள் கிடையாது. இந்த ஆண்டு, சனிக்கிழமை குடியரசு தினம் வந்ததால், சனிக்கிழமைக்கு முந்தைய வேலை நாளில், பகல், 12:00 மணிக்குள் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, குடியரசு தினத்திற்கும் சம்பளம் கிடைக்கும்.குடியரசு தினத்தில் பணிக்கு சேர்ந்ததாக, யாரையும் கணக்கில் சேர்க்கக் கூடாது. அவர்கள், ஜன., 28 முதல், எந்த வேலை நாளில் பணிக்கு வந்தனரோ, அன்று முதல் மட்டுமே, சம்பள கணக்கில் சேர்க்க வேண்டும்.இதில், முறைகேடு செய்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், அந்த பட்டியலை அங்கீகரிக்கும் கருவூல துறை அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு உதவி பள்ளிகளில் தில்லுமுல்லுஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், சில தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றது, பள்ளி கல்வி துறைக்கு தெரியவந்துள்ளது. அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யாமல், பள்ளிகளின் செயலர்கள், தாளாளர்கள், சம்பள பட்டியலை கருவூல துறைக்கு அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.இந்த வகையில், பள்ளி நிர்வாகத்தினரே விதிமீறலில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வி துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, போலி வருகை பதிவேடு தயாரிப்பது போன்ற முறைகேட்டில் பள்ளிகள் சிக்கினால், அவர்களுக்கு, அடுத்தடுத்த மாதங்களில் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். சட்டரீதியாக பள்ளி நிர்வாகத்தினர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Friday, February 01, 2019

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த தொடக்க கல்வி இயக்குநர் ஆணை


தொடக்க கல்வி துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாண்டிசோரி அல்லது கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இடைநிலை ஆசிரியர்களை எந்த அடிப்படையில் பணியமர்த்துகிறீர்கள்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசாணையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த தொடக்க கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Thursday, January 31, 2019

5, 8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு


ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்தத்தை அண்மையில் கொண்டுவந்தது.

இந்த திருத்தச் சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இது குறித்த அறிவிப்பையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த நடைமுறையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன. அதே நேரத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை நடைமுறையில் கொண்டுள்ள தமிழகம், இந்த புதிய மாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும், 8-ஆம் வகுப்பு வரையில் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறிவந்தது. இருப்பினும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

அதனால், 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும்.

அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பிப்.4-இல் ஊதியம்


ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கருவூலத் துறையிலிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாத ஊதியத்தை 31-ஆம் தேதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் அனுப்பப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படும்.

Tuesday, January 22, 2019

பி.எப்., வட்டி அரசு அறிவிப்பு


வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8 சதவீதமாக தொடரும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., என்ற, வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதை பின்பற்றி, தமிழகத்திலும், வருங்கால வைப்பு நிதிக்கு, 8 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 2018 அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது.

Monday, January 21, 2019

பதிவுமூப்பு ஆசிரியர்கள் 30ல் உண்ணாவிரதம்


வரும், 30ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.சங்கத்தின் பொதுச்செயலர், ராபர்ட் வெளியிட்ட அறிக்கை:இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி, பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், எங்களின் நியாயமான கோரிக்கையை, அரசு ஏற்காமல் உள்ளது.

எங்கள் போராட்டத்தின் போது, மூன்று முறை, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக, அரசு தரப்பு ஏமாற்றுகிறது. எனவே, 30ம் தேதி முதல், சென்னை, தேனாம்பேட்டை, டி.பி.ஐ., கல்வி வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, January 20, 2019

கோரிக்கை

பேச்சுவார்த்தை மூலம் அரசு தீர்வுகாண வேண்டும்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் நிறுவனர் அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

கடந்த 1.1.2004 முதல் பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஊதியத்தை மத்திய அரசுகொண்டுவந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
புதிய பங்களிப்பு ஊதியத்தை பங்குச் சந்தையில் செலுத்தும் போது, பங்குச் சந்தைலாபம் ஈட்டினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையானது கிடைக்கும்.  பங்குசந்தை நஷ்டத்தில் சென்றால் எங்களின் நிலை என்னவாகும் என்பதைஅரசு புரிந்து கொள்ள வேண்டும். 

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் அனைத்து துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பல கோரிக்கைகள் வைத்தும் போராடியும் அரசு செவிசாய்க்க மறுக்கிறது. மாறாக அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நசுக்க நினைத்து, பிரிவு 56- ஐ பயன்படுத்தி, அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தி ஆள்குறைப்பு செய்து வருங்கால சந்ததியினரின் வேலைவாய்பை கேள்விக்குறியாக்கி விட்டது.

மேலும் அங்கன்வாடி மையங்களை மூடி, தொடக்க நடுநிலைப்பள்ளிகளோடு அவற்றை இணைத்து பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பவும், இடைநிலை ஆசிரியர்களை தகுதி இழக்க செய்து அங்கன்வாடி மையங்களுக்கு அவர்களை பணியமர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை பாதிக்கும் செயல்பாடுகளை விடுத்து உடனடியாக அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி, நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப்  போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்படி அழைத்து பேசி தீர்வு காணா விட்டால்   செவ்வாய்க்கிழமை முதல் ஜாக்டோ ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவளித்து அதில் பங்கு பெறும் என அதில் கூறியுள்ளார்.

Friday, January 18, 2019

பள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி


அரசு பள்ளிகளில், வரும், 22ம் தேதி, கலையருவி போட்டிகள் நடத்துமாறு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய கலை மற்றும் பண்பாட்டை மாணவர்கள் அறியும் வகையில், மத்திய மனித வள அமைச்சகம் சார்பில், 'கலா உத்சவ்' நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.

அதேபோல், தமிழகத்திலும், இரண்டாம் ஆண்டாக, வரும், 22 முதல், கலையருவி போட்டிகள் நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 22ல், பள்ளி அளவிலான போட்டி; 24ல், கல்வி மாவட்ட போட்டி; 28ம் தேதி, வருவாய் மாவட்ட போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், தேர்வாகும் மாணவர்கள், மாநில போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவியம் வரைதல், பேச்சு, கட்டுரை, வண்ணம் தீட்டுதல், மெல்லிசை, குழு நடனம் உட்பட, 21 வகை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 25 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன