இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Wednesday, February 06, 2019

128 அரசு பள்ளிகளுக்கு விருது வழங்க குழு தேர்வு


கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் செயல்படும், 128 அரசு பள்ளிகளுக்கு, 'புதுமை பள்ளி விருது' வழங்க, மாநில - மாவட்ட அளவில், குழு அமைக்கப்பட்டுள்ளது.பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு பள்ளிகள் இடையே, ஆரோக்கியமான கல்வி போட்டியை ஏற்படுத்தும் வகையில், பள்ளி கல்வி அமைச்சர் உத்தரவின்படி, புதுமை பள்ளி விருது வழங்கப்படுகிறது.

32 மாவட்டங்களிலும், தலா, ஒரு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி என, 128 பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன.தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிக்கு, தலா, 1 லட்சம் ரூபாய்; உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிக்கு, தலா, 2 லட்சம் ரூபாய் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.இதற்காக, மாவட்ட அளவில், தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு, அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பங்களை பெற்று, ஆய்வு செய்து, சமூக நல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் வழியே பெறப்படும் பரிந்துரைகளை பரிசீலித்து, மதிப்பெண் அளிக்க வேண்டும்.இவற்றில், அதிக மதிப்பெண் பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், தலா, மூன்று வீதம், 12 பள்ளிகளை, ஒவ்வொரு மாவட்ட குழுவும், மாநில குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

வரும், 28ம் தேதிக்குள், மாநில குழுவின் உறுப்பினர் செயலருக்கு கிடைக்கும் வகையில், மாவட்ட அளவிலான பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். அவற்றை, பள்ளி கல்வி இயக்குனர் தலைமையில், தொடக்க கல்வி, மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் ஆகியோர் அடங் கிய குழு பரிசீலித்து, 128 பள்ளிகளை தேர்வு செய்யும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

Tuesday, February 05, 2019

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி


மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு: கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது. 2019 ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆன்-லைன் விண்ணப்ப நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாளாகும். இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும். இதில் ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ. 700 கட்டணமும், இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ. 1200 கட்டணமும் செலுத்த வேண்டும்.

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ. 350 கட்டணமும், இரண்டு தாள்களுக்கு ரூ. 600 கட்டணமும் செலுத்தவேண்டும். மேலும் விவரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

Sunday, February 03, 2019

ஸ்டிரைக்' ஆசிரியர்களுக்கு இன்று புதிய சம்பள பட்டியல்


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' நடத்திய, வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு, புதிய சம்பள பட்டியல், இன்று தயாரிக்கப்படுகிறது. குடியரசு தினத்தன்று பணியில் சேர்ந்தவர்களுக்கும், சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.ஜாக்டோ - ஜியோ சார்பில், ஜன., 22 முதல், 30 வரை, காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, அவர்கள் வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும் என, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார்.ஆனால், பல இடங்களில், கருவூல துறை அதிகாரிகள் மற்றும் துறை தலைவர்கள் சேர்ந்து, 'ஸ்டிரைக்' நடந்த நாட்களுக்கும் சேர்த்து, அனைவருக்கும் சம்பளம் தரும் வகையில், பட்டியலை அங்கீகரித்தனர். இந்த முறைகேட்டை, உயர் அதிகாரிகள் கண்டறிந்து, உடனடியாக கருவூல துறையில் இருந்து, சம்பள பட்டியலை திருப்பி அனுப்ப உத்தரவிட்டனர். மேலும், வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட, 'ஆன்லைன்' பண பட்டுவாடாவுக்கான உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு, இன்று புதிய சம்பள பட்டியல் தயாரித்து அனுப்பப்பட உள்ளது. இதில், விதிமீறல் இன்றி வேலை நாட்களை பதிவிட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, பல்வேறு அறிவுரைகளை, துறை தலைவர்களுக்கு பள்ளி கல்வி மற்றும் அரசு துறை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர். அதன் விபரம்:அரசு வேலை நாட்களில், பகல், 12:00 மணிக்குள் பணிக்கு சேர்ந்தால் மட்டுமே, அந்த நாளுக்கான சம்பளத்தை பதிவிட வேண்டும்.

பிற்பகலில் சேர்ந்தால், அவர்கள் அடுத்த வேலை நாளில் இருந்தே, பணியில் சேர்ந்ததாக கருதப்படும்.குடியரசு தினத்தில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து, தேசிய கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்க வேண்டியது அவர்களின் கடமை. குடியரசு தினம், பள்ளி மற்றும் அலுவலக வேலை நாள் கிடையாது. இந்த ஆண்டு, சனிக்கிழமை குடியரசு தினம் வந்ததால், சனிக்கிழமைக்கு முந்தைய வேலை நாளில், பகல், 12:00 மணிக்குள் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, குடியரசு தினத்திற்கும் சம்பளம் கிடைக்கும்.குடியரசு தினத்தில் பணிக்கு சேர்ந்ததாக, யாரையும் கணக்கில் சேர்க்கக் கூடாது. அவர்கள், ஜன., 28 முதல், எந்த வேலை நாளில் பணிக்கு வந்தனரோ, அன்று முதல் மட்டுமே, சம்பள கணக்கில் சேர்க்க வேண்டும்.இதில், முறைகேடு செய்தால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள், அந்த பட்டியலை அங்கீகரிக்கும் கருவூல துறை அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு உதவி பள்ளிகளில் தில்லுமுல்லுஅரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும், சில தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்றது, பள்ளி கல்வி துறைக்கு தெரியவந்துள்ளது. அவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யாமல், பள்ளிகளின் செயலர்கள், தாளாளர்கள், சம்பள பட்டியலை கருவூல துறைக்கு அளிப்பதாக புகார் எழுந்துள்ளது.இந்த வகையில், பள்ளி நிர்வாகத்தினரே விதிமீறலில் ஈடுபடுவதாக, பள்ளி கல்வி துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, போலி வருகை பதிவேடு தயாரிப்பது போன்ற முறைகேட்டில் பள்ளிகள் சிக்கினால், அவர்களுக்கு, அடுத்தடுத்த மாதங்களில் சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். சட்டரீதியாக பள்ளி நிர்வாகத்தினர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Friday, February 01, 2019

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த தொடக்க கல்வி இயக்குநர் ஆணை


தொடக்க கல்வி துறை சார்பில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது, எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாண்டிசோரி அல்லது கிண்டர் கார்டன் பயிற்சி பெற்றவர்களையே நியமிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இடைநிலை ஆசிரியர்களை எந்த அடிப்படையில் பணியமர்த்துகிறீர்கள்? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கும் அரசாணையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தை நிறுத்த தொடக்க கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி நியமனத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Thursday, January 31, 2019

5, 8 வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு


ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்தத்தை அண்மையில் கொண்டுவந்தது.

இந்த திருத்தச் சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இது குறித்த அறிவிப்பையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த நடைமுறையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன. அதே நேரத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை நடைமுறையில் கொண்டுள்ள தமிழகம், இந்த புதிய மாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும், 8-ஆம் வகுப்பு வரையில் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறிவந்தது. இருப்பினும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

அதனால், 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும்.

அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பிப்.4-இல் ஊதியம்


ஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கருவூலத் துறையிலிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாத ஊதியத்தை 31-ஆம் தேதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் அனுப்பப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படும்.

Tuesday, January 22, 2019

பி.எப்., வட்டி அரசு அறிவிப்பு


வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி, 8 சதவீதமாக தொடரும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பி.எப்., என்ற, வருங்கால வைப்பு நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதை பின்பற்றி, தமிழகத்திலும், வருங்கால வைப்பு நிதிக்கு, 8 சதவீதம் வட்டி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, 2018 அக்., 1 முதல், டிச., 31 வரையிலான காலத்திற்கு, 8 சதவீத வட்டி வழங்கப்பட்டது.

Monday, January 21, 2019

பதிவுமூப்பு ஆசிரியர்கள் 30ல் உண்ணாவிரதம்


வரும், 30ம் தேதி முதல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்' என, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.சங்கத்தின் பொதுச்செயலர், ராபர்ட் வெளியிட்ட அறிக்கை:இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி, பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகிறோம். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில், எங்களின் நியாயமான கோரிக்கையை, அரசு ஏற்காமல் உள்ளது.

எங்கள் போராட்டத்தின் போது, மூன்று முறை, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 10 ஆண்டுகளாக, அரசு தரப்பு ஏமாற்றுகிறது. எனவே, 30ம் தேதி முதல், சென்னை, தேனாம்பேட்டை, டி.பி.ஐ., கல்வி வளாகத்தில், காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து உள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, January 20, 2019

கோரிக்கை

பேச்சுவார்த்தை மூலம் அரசு தீர்வுகாண வேண்டும்: அரசு ஊழியர், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தல்

ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டத்துக்கு தமிழக அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த கூட்டமைப்பின் நிறுவனர் அருணன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  

கடந்த 1.1.2004 முதல் பழைய ஓய்வூதியத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஊதியத்தை மத்திய அரசுகொண்டுவந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
புதிய பங்களிப்பு ஊதியத்தை பங்குச் சந்தையில் செலுத்தும் போது, பங்குச் சந்தைலாபம் ஈட்டினால் மட்டுமே ஒரு குறிப்பிட்ட தொகையானது கிடைக்கும்.  பங்குசந்தை நஷ்டத்தில் சென்றால் எங்களின் நிலை என்னவாகும் என்பதைஅரசு புரிந்து கொள்ள வேண்டும். 

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு மற்றும் அனைத்து துறை ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய பல கோரிக்கைகள் வைத்தும் போராடியும் அரசு செவிசாய்க்க மறுக்கிறது. மாறாக அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நசுக்க நினைத்து, பிரிவு 56- ஐ பயன்படுத்தி, அரசு உத்தரவை நடைமுறைப்படுத்தி ஆள்குறைப்பு செய்து வருங்கால சந்ததியினரின் வேலைவாய்பை கேள்விக்குறியாக்கி விட்டது.

மேலும் அங்கன்வாடி மையங்களை மூடி, தொடக்க நடுநிலைப்பள்ளிகளோடு அவற்றை இணைத்து பணியாளர்களை வீட்டிற்கு அனுப்பவும், இடைநிலை ஆசிரியர்களை தகுதி இழக்க செய்து அங்கன்வாடி மையங்களுக்கு அவர்களை பணியமர்த்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

ஒட்டுமொத்தமாக அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை பாதிக்கும் செயல்பாடுகளை விடுத்து உடனடியாக அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து, கோரிக்கைகளை நிறைவேற்றி, நடைபெறவிருக்கும் வேலைநிறுத்தப்  போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அப்படி அழைத்து பேசி தீர்வு காணா விட்டால்   செவ்வாய்க்கிழமை முதல் ஜாக்டோ ஜியோ நடத்தும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவளித்து அதில் பங்கு பெறும் என அதில் கூறியுள்ளார்.

Friday, January 18, 2019

பள்ளி மாணவர்களுக்கு கலையருவி போட்டி


அரசு பள்ளிகளில், வரும், 22ம் தேதி, கலையருவி போட்டிகள் நடத்துமாறு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.இந்திய கலை மற்றும் பண்பாட்டை மாணவர்கள் அறியும் வகையில், மத்திய மனித வள அமைச்சகம் சார்பில், 'கலா உத்சவ்' நிகழ்ச்சி, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம்.

அதேபோல், தமிழகத்திலும், இரண்டாம் ஆண்டாக, வரும், 22 முதல், கலையருவி போட்டிகள் நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 22ல், பள்ளி அளவிலான போட்டி; 24ல், கல்வி மாவட்ட போட்டி; 28ம் தேதி, வருவாய் மாவட்ட போட்டிகளை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், தேர்வாகும் மாணவர்கள், மாநில போட்டியில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஓவியம் வரைதல், பேச்சு, கட்டுரை, வண்ணம் தீட்டுதல், மெல்லிசை, குழு நடனம் உட்பட, 21 வகை போட்டிகள் நடத்தப்பட உள்ளன.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, 25 வகை போட்டிகள் நடத்தப்படுகின்றன

Thursday, January 17, 2019

தமிழக கிராமப்புற 5-ம்வகுப்பு மாணவர்கள் 59 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடத்தை படிக்க இயலவில்லை: ஆய்வில் தகவல்


தமிழகத்தில் கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு பயிலும் 59 சதவீதம் மாணவர்கள், 3-ம் வகுப்பு பயிலும் 89 சதவீத மாணவர்கள் 2-ம் வகுப்பு பாடப் புத்தகங்களை படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள் என்று ஆண்டு கல்வி அறிக்கை 2018-ல்(ஏஎஸ்இஆர்) தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட அறிக்கையில், திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கிராமப்புறங்களில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் 50 சதவீதம் பேர் 2-ம் வகுப்பு பாடங்களைப் படிக்க சிரமப்படுகின்றனர். 2-ம் வகுப்பு பிலும் 96 சதவீத மாணவ, மாணவிகள் தங்களுக்கு உரிய பாடங்களை தெளிவாகப் படிக்க முடியாமல் இருக்கிறார்கள்.

பிரதம் கல்வி அமைப்பு சார்பில் ஆண்டு கல்வி அறிக்கை 2018 தயார் செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 20 ஆயிரத்து 435 மாணவர்களிடம்  படிக்கும் திறன், கணிதப்பாடங்களில் கணக்குளை தீர்வு செய்யும் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து பிரதம் கல்வி அமைப்பின் மாநிலத் தலைவர் டி. ஆலிவர் கூறியதாவது:

''தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் மத்தியில் சாதகமான முன்னேற்றம் பள்ளிக்கூடத்துக்கு தவறாமல் வருவதில் காணப்படுகிறது. தமிழக பள்ளிக்கூடங்களில் உள்ள வசதிகள் தேசிய அளவில் வகுக்கப்பட்டு மாணவர்களுக்கான சராசரி வசதிகளைக் காட்டிலும் அதிகமாகவே இருக்கிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் 10 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்திய நிலையில், 2018-ம் ஆண்டில் இது 2.3 சதவீதமாகக் குறைந்துவிட்டது. இது தேசிய அளவில் 15 முதல் 16 வயதுடைய பருவத்தினர் 13 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பைக் கைவிடுகின்றனர்.

இந்த ஆய்வின் முடிவில், ஒட்டுமொத்தமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி கற்றலின் திறன் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் 5-ம் வகுப்பு பயிலும் 59 சதவீதம் மாணவர்கள், 3-ம் வகுப்பு பயிலும் 89 சதவீத மாணவர்கள் 2-ம் வகுப்பு பாடப்புத்தகங்களைப் படிக்க இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளாக அரசுப் பள்ளிக்கூடம் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் வாசிக்கும், கணிதம் போடும் திறன் மாறுபட்டு அமைந்துள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களில் 72.9 சதவீதம் பேருக்கு 5-ம் வகுப்பு கணிதத்தில் வகுத்தல் கணக்குகளைச் செய்ய முடியவில்லை. இந்த அளவீடு தனியார் பள்ளிகளில் அதிகமாக இருக்கிறது. தனியார் பள்ளிகளில் 77 சதவீத மாணவர்களால் கணிதத்தைச் செய்ய முடியவில்லை.

அரசுப் பள்ளிகளில் பயிலும் 5-ம் வகுப்பு மாணவர்களில் 53.7 சதவீதம் பேருக்கு 2-ம் வகுப்பு பாடங்களை வாசிக்க முடியவில்லை. இது தனியார் பள்ளிக்கூடங்களில் 71.2 சதவீதமாக இருக்கிறது''.

இவ்வாறு ஆலிவர் தெரிவித்தார்.

சமகல்வி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்துராஜ் கூறுகையில், ''செயல்பாட்டு முறையிலான கற்றலின் முறையைப் பள்ளிக் கல்வித்துறை ஊக்குவிப்பது நல்ல விஷயம். ஆனால், இதை அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். பாடப்புத்தங்களைக் தவிர்த்து, பல்வேறு வெளிவிஷயங்களில் இருந்து மாணவர்களுக்கு சில பள்ளிகள் கற்றுத் தருகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

Wednesday, January 16, 2019

ஓய்வுபெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்


கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் சாந்தி தாக்கல் செய்த மனுவில், நான் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நடுநிலைப் பள்ளியில் கடந்த 1973-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். கடந்த 32 ஆண்டுகளாக பணியாற்றிய பின் கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றேன்.

இதனையடுத்து 2005-2006 கல்வி ஆண்டு முழுவதும் அதாவது 2006-ஆம் ஆண்டு மே மாதம் இறுதி வரை பணிநீட்டிப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். ஆனால் எனது பணி திருப்திகரமாக இல்லை என்ற காரணத்தைக் கூறி, எனது கோரிக்கையை பள்ளியின் தாளாளர் நிராகரித்து விட்டார். எனவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.வி. முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கடந்த 32 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி உள்ளார்.அவர் மீது பணி தொடர்பாக ஒரு குற்றச்சாட்டுக்கூட இல்லை. ஆனாலும், பணி திருப்திகரமாக இல்லை எனக்கூறி பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டுள்ளது.

கல்வியாண்டின் நடுவில் ஓர் ஆசிரியர் பணி ஓய்வு பெற்றால் அந்தப் பள்ளியில் படிக்கின்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவேதான் அந்த ஆசிரியர் விரும்பும்பட்சத்தில் கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற பொதுவான நடைமுறை உள்ளது. இந்த நடைமுறை மனுதாரர் விவகாரத்தில் மறுக்கப்பட்டுள்ளது. எனவே மனுதாரருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்து பள்ளியின் தாளாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன். மேலும், கல்வியாண்டின் நடுவில் ஒய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலன்கருதி அந்த கல்வியாண்டு முடியும் வரை பணியாற்ற பள்ளி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.