இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, December 09, 2018

10-12-18 morning prayer

10-12-18

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 100

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

உரை:

இனிய சொற்கள் இருக்கும் போது அவற்றை விட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும் போது அவற்றை விட்டு காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.

பழமொழி:

Empty vessels make the greatest noise

குறை குடம் கூத்தாடும்

பொன்மொழி:

பழி வாங்கும் எண்ணத்துடன் பிறருக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1) 100 சதுர மீட்டர் என்பது?
1 ஆர்

2)100 ஆர் சதுர மீட்டர் என்பது?
1 ஹெக்டேர்

நீதிக்கதை :

சிறியதே அழகு

தாய் யானையுடன் நடை பயின்றுகொண்டிருந்த குட்டி யானை, அருகில் இருந்த புல்வெளியில் புள்ளிமான் மேய்ந்துகொண்டிருப்பதைக் கண்டது.

“அம்மா, அந்தப் புள்ளிமானோடு கொஞ்ச நேரம் விளையாடிட்டு வரட்டுமா?”

“மானோடு விளையாடுவதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் கவனமாக விளையாட வேண்டும். கல்லில் தடுக்கி கீழே விழுந்து, காயப்படக் கூடாது” என்று எச்சரித்தது தாய் யானை.

குட்டி யானையைக் கண்டதும் புள்ளிமான் மகிழ்ச்சியோடு ஓடிவந்தது. இரண்டும் ஓடிப் பிடித்து விளையாடின.

“தினமும் வருகிறேன். நாம் இருவரும் ஜாலியாக விளையாடலாம்” என்றது குட்டி யானை.

“அது முடியாது. நீ பெரியவனாக வளர்ந்துவிட்டால், உன்னைப் பார்க்கவே எனக்குப் பயமா இருக்கும். அதனால் உங்க இனத்தினரோடு விளையாட ஆரம்பி” என்றது புள்ளிமான்.

“யார் சொன்னது? நான் பெரிசா எல்லாம் வளரவே மாட்டேன். எப்பவும் இப்படியே குட்டியா, அழகா இருப்பேன். இப்பவே அம்மா கிட்ட சொல்லி, என்னை வளர விடாமல் செய்துடறேன்” என்று சொல்லிவிட்டு, ஓடிவிட்டது குட்டி யானை.

“அம்மா, மான் அழகா சின்னதா இருப்பதுபோல நானும் சின்னதாவே இருந்துடறேன். உங்களை மாதிரி பெரிய உடம்பு எனக்கு வேண்டாம்மா” என்று அப்பாவியாகச் சொன்னது குட்டி யானை.

”மான் சின்னதா இருக்கிறதும் நாம் பெருசா வளர்றதும் இயற்கை. இதை நீயோ நானோ நினைத்தால் மாற்ற முடியாது. பெரிய உடம்புதான் நம் இனத்துக்குப் பலம்” என்று தும்பிக்கையால் குட்டி யானையைத் தடவிக் கொடுத்தபடியே சொன்னது அம்மா யானை.

குட்டி யானைக்கு இந்தப் பதிலில் திருப்தியில்லை. “அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வளர வேண்டாம்” என்று சொல்லிவிட்டுச் சாப்பிடச் சென்றுவிட்டது.

மறுநாள் புள்ளிமானைச் சந்தித்தது.

“என் அம்மாவிடம் நான் வளர வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இனி கவலை இல்லை” என்று சிரித்தது குட்டி யானை.

“நீ ரொம்பச் சின்னவன். உனக்கு இன்னும் புரிய மாட்டேங்குது. வளர்வதை யாராலும் தடுக்க முடியாது.”

இரண்டும் சற்று நேரம் விளையாடிக்கொண்டிருந்தன. அப்போது சிறுத்தை ஒன்று வந்தது. அதைக் கண்டதும் மானின் உடல் நடுங்கியது.

“குட்டி யானையே, வேகமாக ஓடிடு. சிறுத்தை வந்துகிட்டு இருக்கு. நானும் ஓடறேன்” என்று சொல்லிவிட்டு, வேகமாகப் பாய்ந்து சென்றது புள்ளிமான்.

குட்டி யானைக்கு ஒன்றும் புரியவில்லை. சிறுத்தையின் கவனம் புள்ளிமானின் மீது இருந்ததால், குட்டி யானையை அது கண்டுகொள்ளவில்லை.

சிறுத்தையின் ஆக்ரோஷமான துரத்தலையும் புள்ளிமானின் உயிர் பயத்தையும் கண்ட குட்டி யானைக்கு முதல் முறையாகப் பயம் வந்தது.

தன்னை அறியாமல் அம்மா, அம்மா என்று கத்தியது குட்டி யானை. புள்ளிமானைப் பிடிக்க முடியாத சிறுத்தை மிகவும் ஏமாற்றமடைந்தது. குட்டி யானையைக் கண்டவுடன் மீண்டும் மகிழ்ச்சியடைந்தது. ஓட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்தியது.

அதைப் பார்த்த குட்டி யானை, “அம்மா… அம்மா…” என்று அலறியது.

இலைகளைத் தின்றுகொண்டிருந்த அம்மா யானையின் காதில், குட்டியின் குரல் விழுந்தது. உடனே ஓடிவந்தது. அதற்குள் சிறுத்தை குட்டி யானையை நெருங்கிவிட்டது. சட்டென்று தன் தும்பிக்கையால் சிறுத்தையைப் பிடித்து, சுழற்றி வீசியது அம்மா யானை.

தூரத்தில் போய் விழுந்த சிறுத்தையால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை. வலியில் கதறியது.

“பொதுவா நம்மைக் கண்டால் சிறுத்தை பயப்படும். ஏனென்றால் நம் உருவம் அப்படி. தூக்கி வீசினால் ஒரு மாசத்துக்கு நடக்கக்கூட முடியாது. நீ சின்னவனாக இருப்பதால்தான் சிறுத்தை உன்னை நெருங்கியிருக்கிறது. நமது பலமே நமது பிரம்மாண்டமான உடல்தான். இப்பவாவது உனக்குப் புரியுதா?” என்று கேட்டது அம்மா யானை.

“நன்றாகப் புரிந்துவிட்டது அம்மா. புள்ளிமானுக்கு வேகமாக ஓடக் கூடிய கால்களும் நமக்கு பெரிய உருவமும் இயற்கை கொடுத்திருக்கு. நானும் நல்லா சாப்பிட்டு உங்களை மாதிரி பெரிய ஆளா வளரப் போறேன்” என்று சொல்லிவிட்டு, அம்மாவின் வயிற்றுக்கு அடியில் போய் நின்றுகொண்டது குட்டி யானை.

இன்றைய செய்தி துளிகள் :

1.பள்ளி மானிய தொகைகளில் 10% முழு சுகாதார பணிக்கே பயன்படுத்த வேண்டும் - புதிய கட்டுப்பாடுகள்: மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

2.மாணவர்களின் குழப்பத்தை தீர்க்க, பிளஸ் 1புதிய பாடத்திட்ட மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு

3.150 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மருத்துவமனை நர்சுகளின் சீருடைகள் மாறுகிறது

4.வருகிறது பேத்தாய் புயல்.. ஆனால் தமிழகத்துக்கு ஆபத்து இருக்காது

5.உலக கோப்பை ஹாக்கி: கால் இறுதியில் இந்தியா

Friday, December 07, 2018

அனைத்து வாகனங்களுக்கும் புதிய நம்பர் பிளேட் : பாதுகாப்பு அம்சங்களுடன் தர மத்திய அரசு உத்தரவு


அனைத்து வாகனங்களுக்கும், உயர் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய நம்பர் பிளேட்டுகளை, அடுத்த ஆண்டில் பொருத்த வேண்டும்' என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் நடக்கும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்துவது, வாகன திருட்டை தடுப்பது, சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டறிவது போன்றவை, போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளன.

இதற்கு தீர்வு காணும் வகையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், வாகனங்களுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான நம்பர் பிளேட்டுகளை பொருத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி, மத்திய மோட்டார் வாகன சட்டம், 1989ல், மாற்றங்கள் செய்து, உயர் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக, இந்த நம்பர் பிளேட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த பிளேட்டுகள், வாகனத்துடன் இணைந்ததாக உருவாக்க, வாகன தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதில், வாகன விபரம், வரி, அபராதம், விபத்து விபரங்கள், உரிமையாளரின் விபரங்கள் மின்னணு முறையில் பதிவேற்றப்படும். சோதனையின் போது, நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்தால், அனைத்து விபரங்களும் தெரியவரும்.

இந்த நம்பர் பிளேட்டுகள் சேதமடைந்தால், அவற்றை அழித்து விட்டு, புதிய நம்பர் பிளேட்டுகளை, தயாரிப்பாளர்களோ, மத்திய சாலை ஆய்வு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களோ வழங்கலாம். உடைந்த நம்பர் பிளேட்டுகளை திரும்ப பெறாமல், வேறு நம்பர் பிளேட்டுகள் வழங்குவதும், உடைந்த நம்பர் பிளேட்டுகளை, வேறு வாகனங்களில் பொருத்துவதும் குற்றமாகும்.

புதிய வாகனங்களுக்கு, உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்டுகளை வழங்கும் போதும், பழைய நம்பர் பிளேட்டுகளை பெறும் போதும், இதற்கான பதிவேடுகளில், விபரங்களை பதிவேற்ற வேண்டும். இந்த விபரங்களை, நிபுணர் குழு, அடிக்கடி ஆய்வு செய்யும்

Wednesday, December 05, 2018

பள்ளி கல்வி துறையில் 45 துணை ஆய்வாளர்கள்


பள்ளி கல்வி நிர்வாக சீரமைப்பு திட்டத்தில், 45 துணை ஆய்வாளர் பணியிடங்கள், புதிதாக ஏற்படுத்தி உத்தரவிடப்பட்டுஉள்ளது.தமிழக பள்ளி கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு, புதிய கல்வி மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்த மாவட்டங்களில், பள்ளிகளின் நிர்வாகங்களை கவனிக்கவும், பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்யவும், துணை ஆய்வாளர்கள் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவை, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துள்ளார். இந்த பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை பணியிட மாறுதல் செய்யவும், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி கல்வி துறைக்கு, கூடுதல் செலவு ஏற்படாத வகையில், 45 புதிய பணியிடங்களுக்கு பதிலாக, அரசு பள்ளிகளில், மாணவர்கள் இன்றி காலியாக உள்ள, 45 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், அரசுக்கு, 'சரண்டர்' செய்யப்பட்டுள்ளது

Tuesday, December 04, 2018

மழை பெய்தால் `நோ லீவ்'! பள்ளிக் கல்வித் துறை புதிய கட்டுப்பாடு


சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் தமிழகத்தைப் புரட்டிப்போட்டது. புயல் வரும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், புயலுக்குப் பிறகு நிவாரணப் பணிகளின்போதும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு அதிக அளவு விடுமுறை அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, கஜா புயலால் அதிக சேதம் அடைந்த பகுதிகளான தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளின் பள்ளிகளுக்கு அதிக அளவு விடுமுறை  விடப்பட்டிருந்தது.

தொடர்ந்து, அடுத்த மாதம் பொங்கல் விடுமுறை வருகிறது. 10, 11 & 12-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நெருங்கும் பட்சத்தில், இந்த விடுமுறை மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கல்வியாளர்கள் எச்சரித்திருந்தனர்.

இதற்கிடையே, மழை விடுமுறைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``மழை பெய்தால், உடனே பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது

தூரல், மிதமான மழைக்கு விடுமுறை அளிக்கக் கூடாது. மழையால் வெள்ளம் ஏற்படும் சூழல் ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில் அல்லது ஊராட்சி, வருவாய் மாவட்ட அளவில் மட்டுமே விடுமுறை விடலாம். மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும்.

விடுமுறை காரணமாக பாடத்திட்டம் பாதிக்காத வண்ணம் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அதேநேரம்,  திருவிழா காலங்களில் உள்ளூர் விடுமுறை விடும்போது, பணிநாள் குறித்தும் அறிவிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Sunday, December 02, 2018

பிளஸ் 2 வரை பொது தேர்வு வினாத்தாள் தயார் : நுண்ணறிவு கேள்விகளுக்கு அதிக முக்கியத்துவம்


பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான பொது தேர்வுகளுக்கு, வினாத்தாள் பட்டியல் தயாராகி உள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள், இறுதி வினாத்தாள் முடிவு செய்யப்பட உள்ளது.அரசு பாட திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இதில், பிளஸ் 1 தேர்வை பொறுத்தவரை, மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் போதும். 10ம் வகுப்பில், அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே, அந்த மதிப்பெண் படி, பிளஸ் 1ல், உரிய பாட பிரிவுகளைப் பெற முடியும்.

பிளஸ் 2வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், உயர்கல்விக்கு செல்ல முடியும்.நடப்பு கல்வி ஆண்டில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் பணி முடிவுக்கு வந்துள்ளது. இனி, தனி தேர்வர்களுக்கான விண்ணப்ப பதிவுகள் துவங்க உள்ளன. இந்த ஆண்டு முதல், தனி தேர்வர்களுக்கு மார்ச் மற்றும் ஜூனில் மட்டுமே தேர்வு நடத்தப்பட உள்ளது. அக்டோபர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான, வினாத்தாள் பட்டியலை, அரசு தேர்வு துறை தயாரித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் திறமையான ஆசிரியர்கள், பாட வாரியாக வினாத்தாள்களை தயார் செய்து கொடுத்துள்ளனர்.ஒவ்வொரு பாடத்திற்குள், 10க்கும் மேற்பட்ட வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் உள்ள வினாக்களை எடுத்தோ அல்லது ஏதாவது ஒரு வினாத்தாளையோ, தேர்வு துறை இறுதி செய்யும். இன்னும் ஒரு மாதத்திற்குள் இறுதி வினாத்தாள் தயார் செய்யப்பட்டு, அவை, அரசு அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு, ரகசியமாக வைக்கப்படும் என, பள்ளி கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த ஆண்டு, 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மிக கடினமான கேள்விகள் இன்றி, மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் கேள்விகள் அதிகம் இடம்பெறும் என, தெரிகிறது.

மாணவர்களை பொறுத்தவரை, புத்தகத்தில் உள்ள மாதிரி கேள்விகள் மற்றும் பாடத்தின் பின்பக்க கேள்விகளை மட்டுமின்றி, பாடங்களின் அனைத்து அம்சங்களையும் படிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில், பாடங்களின் எந்த பகுதியில் இருந்தும், புதிய கேள்விகள் இடம் பெறும் என, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Saturday, December 01, 2018

32 மாவட்டங்களிலும் தேர்வுத் துறை அலுவலகங்கள்: பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை


மாணவர்களின் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள தேர்வுத்துறை அலுவலகங்கள் விரைவில் திறக்கப்படவுள்ளன.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும்அரசு தேர்வுத் துறைக்கு சென்னையில் இயக்குநர் அலுவலகமும், மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, வேலூர் மற்றும் கடலுôரில் மண்டல அலுவலகங்களும் உள்ளன.

தமிழகத்தில் கல்வி ஆண்டப இறுதியில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின் பொதுத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதுதவிர 8-ஆம் வகுப்பு தேர்வு, தொழில்நுட்பத் தேர்வு என 40 தேர்வுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது.
பள்ளி மாணவர்கள் தவிர தனித்தேர்வர்கள் என பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அந்தந்த மண்டல அலுவலகங்களிலும் விண்ணப்பிக்க வசதி இருந்தாலும் சில நேரங்களில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் உள்ள மாணவ, மாணவியர் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.

அலைச்சலைத் தவிர்க்க... தேர்வுத்துறை சார்ந்த பணிகளுக்கான பிற மாவட்ட மாணவர்கள் சென்னைக்கும், நீண்ட தொலைவில் உள்ள மண்டல அலுவலகங்களுக்கும் சென்று வருவதைத் தவிர்க்க, அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறையின் அலுவலகங்களைத் திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வுத்துறை அலுவலகங்கள் விரைவில் செயல்படவுள்ளன.

அனைத்து சான்றிதழ்களையும் பெறலாம்: இதன் மூலம் மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள், தேர்வு மற்றும் சான்றிதழ் தொடர்பாக சென்னைக்கு வரத் தேவையில்லை. அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திலேயே அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், பெயர் மாற்றம், தேர்வு விவகாரங்கள் தொடர்பாகவும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம். இந்த அலுவலகங்களுக்கு அதிகாரிகளாக உதவி இயக்குநர்கள் நியமிக்கப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, November 30, 2018

மழலையர் வகுப்புக்கு மார்ச்சில் அட்மிஷன் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு


தேர்வு செய்யப்பட்டுள்ள அரசு மாதிரி பள்ளிகளில், 'கே.ஜி.,' வகுப்புகள், 2019 ஜூனில் துவங்க உள்ளதால், மார்ச்சில், குழந்தைகளை சேர்க்க வேண்டுமென, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அனைத்து தரப்பு குழந்தைகளும், பிரி.கே.ஜி., - எல்.கே.ஜி., படிக்க வைக்க தேவையான வசதி ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும், மேற்கண்ட வகுப்புகள் துவங்கும் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்ட பின் அட்மிஷன், ஆசிரியர் நியமனம் குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அனைத்து வசதிகளுடன் கூடிய முன்மாதிரியான பள்ளிகளை உருவாக்க, தரமான கல்வியை அளிக்க, சமீபத்தில், 32 மாவட்டங்களுக்கு தலா ஒரு மாதிரி பள்ளி தேர்வு செய்யப்பட்டது. பள்ளிக்கு, 50 லட்சம் வீதம், 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. 2019 ஜூனில், வகுப்பு துவங்கப்பட உள்ளது. இதற்கான அட்மிஷன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ளது

பள்ளிகளில் பிற மொழி பயிற்சி மத்திய அரசு உத்தரவு


பள்ளிகளில், தமிழ், ஹிந்தி உள்பட, ஐந்து மொழிகளில் பயிற்சி தர வேண்டும்' என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை உத்தரவிட் டுள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, இந்திய அலுவல் மொழிகளாக, 22 மொழிகள் தேர்வு செய்யப்பட்டு, அவை அட்டவணைபடுத்தப் பட்டுள்ளன. தமிழ், ஹிந்தி, கன்னடம், உருது, காஷ்மீரி, தெலுங்கு உள்ளிட்ட, இந்த மொழிகள், மாநில ஆட்சி மொழியாகவும் திகழ்கின்றன.

இந்த மொழிகளை, நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் வகையில், மத்திய அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், அனைத்து பள்ளிகளிலும், ஏதாவது ஐந்து அலுவல் மொழிகளை, ஒவ்வொரு வாரமும் பயிற்றுவித்து, மாணவர்களுக்கு பிறமொழிகளையும் பரிட்சயமாக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக, 'பாஷா சங்கம்' என்ற, மொழி மேம்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில், சி.பி.எஸ்.இ., மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கும், மாநில பள்ளி கல்வி துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட் டுள்ளது. அதில், மாணவர்களிடையே பிறமொழி அறிவையும் வளர்க்கும் வகையில், குறைந்தபட்சம், ஐந்து மொழிகளில், முக்கிய வார்த்தைகளை கற்றுத் தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும், ஒரு மொழியை தேர்வு செய்து, அதில் உள்ள முக்கியமான, ஐந்து சொற்றொடர்களை, பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில் வாசிக்க வேண்டும். இந்த வழக்கத்தை பின்பற்றி, சாதனை செய்யும் பள்ளிகளுக்கு, விருதுகள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மொழி பயிற்சி கையேடுகள், மத்திய அரசின்,epathshala.gov.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன

Thursday, November 29, 2018

ஒரு மாணவர் படித்தாலும் மானியம் அரசு ஆசிரியர்கள் நிம்மதி


ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தில், ஒரு மாணவர் படிக்கும் பள்ளிக்கு கூட மானியம் ஒதுக்கப்பட்டதால், 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர்.அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளை மேம்படுத்த, அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் ஆண்டுதோறும் மானியம் வழங்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி ஒருங்கிணைக்கப்பட்டு 'ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம்' 2018-19 முதல் செயல்படுத்தப்பட்டது.

இத் திட்டத்தில் தமிழகத்தில் பள்ளி மானியமாக 31,266 அரசு துவக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு 97 கோடியே 18 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வரைவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டது.இதில் 15 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே மானியம் வழங்க செப்டம்பரில் ஒப்புதல் கிடைத்தது. இதனால் 28,263 பள்ளிகளுக்கே 89 கோடியே 67 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்பட்டது. இதில் 15 முதல் 100 மாணவர்கள் பயிலும் 21,378 பள்ளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், 101 முதல் 250 பேர் பயிலும் 6,167 பள்ளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய், 251 முதல் ஆயிரம் பேர் வரை பயிலும் 714 பள்ளிகளுக்கு தலா 75 ஆயிரம் ரூபாய், ஆயிரம் பேர் மேல் பயிலும் 4 பள்ளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டன.

15 மாணவர்களுக்கு கீழேயுள்ள 3,003 பள்ளிகள் மானியம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டன. தற்போது ஒன்று முதல் 14 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளுக்கு தலா 12,500 ரூபாய் ஒதுக்கப்பட்டது.இதனால் 3,003 பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால் உதவிபெறும் பள்ளிகளுக்கு ஒதுக்கவில்லை

4 ஆண்டு பி.எட்., படிப்பு அறிமுகம் பிளஸ் 2 முடித்ததும் சேரலாம்!


பி.எட்., படிப்பில், வரும் கல்வி ஆண்டு முதல், நான்கு ஆண்டு படிப்புகள் அறிமுகமாகின்றன. இந்த படிப்பை நடத்த, வரும், 3ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.நாடு முழுவதும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் வழியாக, பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட கல்வியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழகத்தில், ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கு, இரண்டு ஆண்டு கால வகுப்பு நடத்தப்படுகிறது.இந்நிலையில், பிளஸ் 2 படித்து முடித்ததும், பி.எட்., சேரும் வகையில், புதிய திட்டத்தை, தேசிய கல்வியியல் கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்கள், நேரடியாக இளநிலை பட்டம் மற்றும் பி.எட்., இரண்டையும் சேர்த்து படிக்கும் வகையில், நான்கு ஆண்டு, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது.இதுகுறித்து, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணை வேந்தர், தங்கசாமி அளித்த பேட்டி:

பள்ளிப் படிப்பை முடித்ததும், ஆசிரியர் படிப்பை மேற்கொள்ளும் வகையில், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த, பி.எட்., படிப்பு, வரும் கல்வி ஆண்டில் அறிமுகமாகிறது. இந்த படிப்பை நடத்த விரும்பும் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகள், டிச., 3 முதல், 31க்குள், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலுக்கு, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பல்கலையிலும், கல்லுாரியிலும், இயற்பியல், மெக்கானிக்கல், தமிழ், ஆங்கிலம், தத்துவவியல் என, பல்வேறு துறைகள் இருப்பது போன்று, கல்வியியல் படிப்புக்கும், தனி துறை உருவாக்கப்படும்.

இதற்கும், தேசிய கல்வியியல் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.தமிழக அரசின் சார்பில், கல்வியியல் பல்கலையின், ஐந்து உறுப்பு கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், விழுப்புரம் - மருதுார் மற்றும் சேலம் - எடப்பாடியில், இரண்டு கல்லுாரிகள், விரைவில் திறக்கப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.