இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Friday, September 21, 2018

ஆண்டில் 42 நாட்கள் மட்டுமே கல்வி போதிக்கும் ஆசிரியர்கள்.கல்வி அல்லாத பிற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்


நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தங்கள் பணி நேரத்தில், ஆண்டுக்கு, 42 நாட்கள் மட்டுமே, மாணவ - மாணவியரின் கல்விக்கு செலவழிப்பதாக, மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அல்லாத பிற பணிகளில், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதே இதற்கு காரணம் என்றும், அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும், தேசிய கல்வி திட்டம் மற்றும் நிர்வாக மையம் சமர்ப்பித்துள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கல்வி உரிமை சட்டப்படி, அரசு பள்ளிகளில், 6 - 8 வரையுள்ள வகுப்புகளில், ஆசிரியர்கள், ஒரு ஆண்டுக்கு, 220 நாட்கள், கல்வி போதிக்க வேண்டும். ஆனால், 2015 - 16ம் ஆண்டில், 42 நாட்கள் மட்டுமே, கல்வி போதிக்கப்பட்டுள்ளது; இது, மொத்த கல்வி நாட்களில், 19 சதவீதம் மட்டுமே.

மீதமுள்ள நாட்களில், தேர்தல் பணி, அரசுக்கு தேவையான ஆய்வுகளை நடத்துதல், போலியோ சொட்டு மருந்து முகாம், மதிய உணவு திட்டத்துக்கான பதிவேடுகளை பராமரித்தல் ஆகியவற்றை, ஆசிரியர்கள் செய்ய வேண்டி உள்ளது.

அரசு ஆசிரியர்களின் பணி நேரத்தில், 81 சதவீதம், பிற பணிகளுக்காக செலவிடப்படுகிறது. இதில், 42.6 சதவீதம், தேர்தல் பணி போன்ற, கல்வி அல்லாத பணிகளில் செலவிடப்படுகிறது. 31.8 சதவீத நேரம், பள்ளி சார்ந்த, கல்வி அல்லாத பணிகளில் செலவிடப்படுகிறது.

தேர்தல் சார்ந்த பணிகளில், ஆசிரியர்கள் பெருவாரியாக ஈடுபடுத்தப்படுகின்றனர். உயர்நிலைப் பள்ளிகளை விட, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள், அதிக நேரம், கல்வி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு, குஜராத், மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது.

500 பள்ளிகளை இழுத்து மூடுது அரசு


தமிழகம் முழுவதும், 500 அரசு பள்ளிகளை குறைக்க, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளன. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைப்படி, 31 ஆயிரத்து, 266 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன.

இவற்றின் உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசிடமிருந்து, தமிழக அரசு, நிதியுதவி கேட்டுள்ளது.அப்போது, ஒரு ஆசிரியருக்குகுறைந்த பட்சம், 30 மாணவர்கள் என்ற விகிதத்தில், பள்ளிகளை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்படி கணக்கிட்டதில், 826 பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை விகிதத்தை விட, ஆசிரியர்களின் விகிதம் அதிகமாக உள்ளது. மாணவர் எண்ணிக்கை, 1,053 பள்ளிகளில், மிக குறைவாக உள்ளதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

மாணவர் குறைந்த, 1,053 பள்ளிகளையும், தலா இரண்டு அல்லது மூன்று பள்ளிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, தற்போது இயங்கும் பள்ளிகளில், 10க்கும் குறைவான மாணவர்கள் உள்ள, 500 பள்ளிகள் மூடப்படும் என, தெரிய வந்துள்ளது.

Thursday, September 20, 2018

தேர்வுத்துறை அறிவிப்பு


வருகிற கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த 1911-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ம் ஆண்டு முதல் 12-ம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெறும் பொதுத்தேர்வில் தோல்வி அடையும் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்ச்சி அடையாத அனைத்து பாடங்களிலும் தேர்வு எழுதுவதற்காக ஜூன், ஜூலை மாதங்களில் உடனடி சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

உடனடி சிறப்பு துணைத்தேர்வின் மூலம் 10, 12-ம் வகுப்பில் தோல்வி அடைந்த பாடங்களை மாணவர்கள் எழுதி, தேர்ச்சி பெற்று உயர்கல்வியில் சேர்ந்தனர். அரசு பொதுத்தேர்வு, உடனடி சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், செப்டம்பர் மாதம் நடைபெறும் துணைத்தேர்வினை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தற்போது செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு வரும் பொது தேர்வினை வரும் கல்வியாண்டு (2019-2020) முதல் ரத்து செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அரசு தேர்வுத்துறை இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியுள்ளவாறு, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச், ஏப்ரல் மற்றும் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் ஆகிய 3 பருவங்களில் நடத்தப்படுகின்றன. மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஜூன், ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கி தேர்வுக்கு பின் அனைத்து பணிகளும் ஆகஸ்டு மாதத்தில் நிறைவடையும்.

இதைத்தொடர்ந்து செப்டம்பர், அக்டோபர் பருவத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு தேர்வுக்கு பின்னர் அனைத்து பணிகளும் நவம்பர் மாத இறுதியில் நிறைவடையும். மார்ச் பொதுத்தேர்வுக்காக புதிய தேர்வு மையம் அமைத்தல், பெயர் பட்டியல் தயாரித்தல் போன்ற பணிகள் ஆகஸ்டு மாதத்திலேயே தொடங்கிவிடும். மார்ச் பொதுத் தேர்வுக்கான முன்னிலை பணிகள் நடைபெறும் போதே செப்டம்பர் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

மேலும் ஜூன், ஜூலை உடனடி சிறப்பு துணைத் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர், செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. குறைவான தேர்வர்கள் விண்ணப்பித்தாலும் மார்ச் பருவத் தேர்வுகளை நடத்துவது போலவே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி மிகவும் பாதிக்கப்படுகிறது.

எனவே, செப்டம்பர் மாதம் நடத்தப்படும் துணை தேர்வினை ரத்து செய்துவிட்டு ஜூன், ஜூலை மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு துணைத் தேர்வு மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் பொதுத்தேர்வு மட்டும் நடத்திட அரசு அனுமதிக்க வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் அரசிடம் கேட்டுள்ளார்.

அதனை அரசு கவனமுடன் பரிசீலித்து, தமிழகத்தில் வரும் (2019-2020) கல்வி ஆண்டு முதல் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு மார்ச், ஏப்ரல் பொதுத்தேர்வு, ஜூன், ஜூலை சிறப்பு துணைத் தேர்வுகள் மட்டும் நடத்தப்படும். செப்டம்பர், அக்டோபர் துணைத்தேர்வுகளை ரத்து செய்யலாம் என அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் கடந்த 66 வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்த துணைத்தேர்வு முறை முடிவுக்கு வருகிறது.

3,003 தமிழக பள்ளிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி ரத்து


தமிழக பள்ளி கல்வி துறையின், இலவச திட்டங்கள் மற்றும் நிர்வாக பணிகளுக்கு, மத்திய அரசு, 1,422 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. இதில், 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதியுதவி ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்துக்கும், மத்திய அரசு நிதி அளிக்கிறது.தமிழகத்திலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் நியமனம், மாணவர் சேர்க்கை மற்றும் அடிப்படை வசதிகளுக்கு, நிதி உதவி அளிக்கப் படுகிறது.

அந்த வகையில், தமிழக அரசின் சார்பில், உள்கட்டமைப்பு வசதிகள், இலவச திட்டங்களுக்கு, 2,838 கோடி ரூபாய் நிதி, மத்திய அரசிடம் கேட்கப்பட்டது.இதில், தமிழக பள்ளிகளில் உள்ள மாணவர் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில், 1,422 கோடி ரூபாய் நிதியை, முதற்கட்டமாக ஒதுக்கி, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த நிதியை பயன்படுத்தி, 32 மாவட்டங்களிலும் மாதிரி பள்ளிகள் அமைப்பது, மாணவ -மாணவியருக்கு, இலவசகல்வி உபகரணங்கள் வழங்குவது, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற பணிகளை, தமிழக பள்ளி கல்வி துறை மேற்கொள்ள வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வி ஆண்டில், குறைந்தபட்சம், 15 மாணவர்களுக்கு அதிகம் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே, நிதி வழங்கப்படும்என, மத்திய அரசுஅறிவித்தது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள, 31 ஆயிரத்து, 266 தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 15 மாணவர்களுக்கு அதிகம் உள்ளதாக, 28 ஆயிரத்து, 263 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.இந்த பள்ளிகளுக்கு மட்டும், மத்திய அரசின் நிதியை, தமிழக அரசு பெற்றுள்ளது. மீதமுள்ள, 3,003 பள்ளிகளுக்கு, நிதி உதவி ரத்து செய்யப்பட்டுள்ளது.

வருமானவரித்தொகை பிடித்தம் செய்வது சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்

Wednesday, September 19, 2018

ஊட்டச்சத்து மாதம்: பள்ளிகளுக்கு உத்தரவு


மத்திய அரசு சார்பில், இம்மாதம், ஊட்டசத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளில், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும், பள்ளி கல்வி துறை உத்தரவிட்டிருந்தது. ஆனால், பல பள்ளிகளில், ஊட்டச்சத்து மாத நிகழ்ச்சி நடத்தவில்லை.

இந்நிலையில், காலாண்டு தேர்வு விடுமுறை வருவதால், 'வரும், 22ம் தேதிக்குள், ஊட்ட சத்து மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி முடிக்க வேண்டும்' என, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

MORNING PRAYER 20-9-18

*_பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் : 20.09.2018_*

*_திருக்குறள்:55_*

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்!.

*_பழமொழி :_*

Blessings are not valued till they are gone

நிழலின் அருமை வெயிலில் தெரியும்

*_பொன்மொழி:_*

கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும், தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும் திறன்

-ராபர்ட் பிராஸ்ட்

*_இரண்டொழுக்க பண்பாடு :_*

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

*_பொது அறிவு :_*

1.இந்தியாவில் பொற்கோயில் எங்குள்ளது?
அமிர்தசரஸ் (பஞ்சாப்)

2.தமிழகத்தில் பொற்கோயில் எங்குள்ளது?
வேலூர்

*_நீதிக்கதை_*

*பொற்காசு*

முன்னொரு காலத்தில் பாரசீக நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனுக்கு மீன் என்றால் உயிர். ஒருநாள் மீனவன் ஒருவன் மிகவும் அழகான பெரிய மீன் ஒன்றை அரசவைக்குக் கொண்டு வந்து அரசனிடம் தந்தான்.  அந்த மீனைக் கண்டு மகிழ்ந்த அரசன் மீனவனுக்கு உடனே நூறு பொற்காசுகள் பரிசளிக்குமாறு கட்டளை இட்டான். பக்கத்திலே அமர்ந்திருந்த அரசிக்கு இந்தச் செயல் பிடிக்கவில்லை.

அரசனைப் பார்த்து, “நாளைக்கே நம் வீரர்கள் யாரேனும் செயற்கரிய வீரச் செயல் செய்து வந்தால், நீங்கள் வழக்கம் போல நூறு பொற்காசுகள் பரிசளிப்பீர்கள். ஆனால், பரிசு பெறுபவன், ஒரு மீனவனுக்குக் கொடுத்ததைத்தானே, அரசர் நமக்கும் தந்துள்ளார் என்று நினைப்பான். அதனால், அந்த மீனவனுக்குக் கொடுத்த பரிசை ஏதேனும் சொல்லித் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!”என்றாள்.

“நீ சொல்வது சரிதான். ஆனால், கொடுத்த பரிசை மற்றவர் குறை சொல்லாதபடி எப்படித் திரும்ப வாங்குவது?”என்று கேட்டான் அரசன்.

“அந்த மீன் ஆணா? பெண்ணா? என்று கேளுங்கள். அவன் ஆண் என்று சொன்னால் பெண் மீன் வேண்டும் என்று மீனைத் திருப்பித் தந்து விடுங்கள். பெண் என்று சொன்னால் ஆண் மீன் வேண்டும் என்று சொல்லுங்கள்!”என்றாள் அவள்.

அரசனுக்கு தன் மனைவியின் அறிவுரை மிக நல்லதாகப்பட்டது.

மீனவனைப் பார்த்து, “நீ கொண்டு வந்த மீன் ஆண் மீனா, பெண் மீனா?”என்று கேட்டான்.

அதற்கு அந்த மீனவன் பணிவாக, “அரசே! இது ஆணுமல்ல, பெண்ணும் அல்ல, பொதுவான மீன்!”என்றான்.

மீனவனிடமிருந்து தான் சற்றும் எதிர்பாராத பதில் வந்ததைக் கண்டு அரசன் பெரிதும் மகிழ்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவனுக்கு மேலும் நூறு பொற்காசுகள் தரும்படி கட்டளை இட்டான்.

“ஐயோ! நூறு பொற்காசுகள் கொடுத்ததே அதிகம். அதைத் திரும்ப வாங்குங்கள் என்றால், மேலும் நூறு பொற்காசுகள் தந்துவிட்டீர்களே!”என்று கோபத்துடன் சொன்னாள் அரசி.

“நான் மகிழ்ச்சி அடையும் போதெல்லாம் நூறு பொற்காசுகள் பரிசு தருவது வழக்கம். இப்போது அவன் சொன்ன பதிலால் மகிழ்ச்சியடைந்து அவனுக்குப் பரிசு தந்தேன். என்ன செய்வது?”என்றான் அரசன்.

இரண்டு பொற்காசுப் பைகளையும் பெற்றுக் கொண்ட மீனவன், அரசனை வணங்கி விடைபெற்றான்.

பையில் ஓட்டை இருந்ததால் திரும்பிச்செல்லும் போது ஒரு பொற்காசு கீழே விழுந்தது. இதைப் பார்த்த மீனவன் அந்தக் காசு எங்கே உள்ளது என்று தேடிக் கண்டுபிடித்துப் பையில் போட்டுக் கொண்டான்.

இதை அரசனும், அரசியும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

உடனே அரசி, “நீங்கள் அவனுக்கு இருநூறு பொற்காசுகள் பரிசு தந்தீர்கள். ஓர் பொற்காசு கீழே விழுந்தால் என்ன? நம் வீரர்கள் யாரேனும் எடுத்துக் கொள்ள மாட்டார்களா? எவ்வளவு பேராசை அவனுக்கு. இதையே காரணமாகக் காட்டி அவனுக்குக் கொடுத்த பரிசைத் திரும்ப வாங்கிக் கொள்ளுங்கள்!”என்றாள்.

அரசனுக்கும் தன் மனைவி சொன்னது சரி என்றே பட்டது.

மீனவனை அழைத்து, “கீழே விழந்த ஒரே ஒரு காசை ஏன் அவ்வளவு கடினப்பட்டுத் தேடினாய்? இருநூறு பொற்காசுகள் கிடைத்தும் உனக்கு நிறைவில்லையா?”என்று கோபத்துடன் கேட்டான்.

மீண்டும் அரசனைப் பணிவுடன் வணங்கிய மீனவன், “அரசே! அந்தப் பொற்காசு கிடைக்கவேண்டும் என்ற பேராசையால் நான் தேடவில்லை. இக்காசின் ஒரு பக்கத்தில் உங்கள் உருவமும், மற்றொரு பக்கத்தில் நம் அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டு உள்ளது. யார் காலிலேனும் இக்காசுபட்டுவிட்டால் பெருமை மிகுந்த தங்களை அவமதித்ததாக ஆகுமே என்பதற்காகத்தான் தேடினேன்!”என்று பதில் தந்தான்.

சாமர்த்தியமான இந்த பதிலைக் கேட்டு மகிழ்ந்த அரசன் அவனுக்கு மேலும் நாறு பொற்காசுகள் பரிசளிக்கக் கட்டளை இட்டான்.

இதைக் கண்ட அரசி, இதற்குமேல் ஏதாவது யோசனை கூறினால், மேலும் பல பொற்காசுகளை இழக்க வேண்டியிருக்கும் என்று எண்ணி வாயை மூடிக்கொண்டாள்.

இன்றைய செய்தி துளிகள்:

1.மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு சைகைமொழி, பிரெய்ல்களை பாடமாக்க சிபிஎஸ்இ திட்டம்

2.ஆய்வக உதவியாளர் உள்ளிட்ட எழுத்து தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

3.ஒரு நாள் பயணமாக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அதிபா் அஷ்ரப் கானி, பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்தாா்.

4.62 நாள்களாக 100 அடிக்கும் மேலாக நீடிக்கும் மேட்டூா் அணை நீா்மட்டம்!

5.இலங்கையுடனான முதல் டி20 போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Sunday, September 16, 2018

வீட்டுப் பாடம் தொடர்பான உத்தரவு மாநிலப் பாடத் திட்ட மாணவர்களுக்கும் பொருந்தும்: உயர் நீதிமன்றம்


சிபிஎஸ்இ பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் வழங்கக் கூடாது என பிறப்பிக்கப்பட்ட உத்தரவு மாநிலப் பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் புருஷோத்தமன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு என்சிஇஆர்டி விதிகளை மீறி 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
மேலும் 1, 2 -ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தனியாரிடமிருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் இந்த பாடங்களை திணித்து வருகின்றனர்.

அதிகமான சுமையை சுமக்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே சிபிஎஸ்இ பள்ளிகள் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே பின்பற்ற உத்தரவிட வேண்டும்' எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "சிபிஎஸ்இ பள்ளிகளில் 1, 2 -ஆம் வகுப்புகளுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்றும், என்சிஇஆர்டி பாடத் திட்டத்தை மட்டுமே கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டது. மேலும், இரண்டாம் வகுப்பு வரை இரண்டு பாடங்களும், 3 முதல் 5 -ஆம் வகுப்பு வரை நான்கு பாடங்கள் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும்' என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை எந்த மாநில அரசும் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தார்.
மேலும் இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மட்டுமல்ல, மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் பொருந்தும்.

இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாடத் திட்ட பள்ளிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த சுற்றறிக்கையை அனுப்ப தவறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை ஒத்திவைத்தார்.

MORNING PRAYER-17-9-18

Morning prayer
17-9-18

திருக்குறள்:52

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.

உரை:
இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

பழமொழி :

Better go to bed sleepless than rise in debt

கடனில்ல சோறு கால் வயிறு போதும்


பொன்மொழி:

நாம் எப்போதுமே வாழ்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கிறோம்; ஆனால் வாழ்வதில்லை

-எமர்சன்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஒடிசா அரசின் கோனார்க் சம்மான் விருது பெற்ற தமிழ் கலைஞர்?
பத்மா சுப்ரமணியம்

2.ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாள்?
செப்டம்பர் 5

நீதிக்கதை


இரண்டு பாறைகள் - Two Rocks

ஒரு காட்டில் இரண்டு பெரிய பாறைகள் அருகருகே கிடந்தன.

பல வருடங்களாக ஒரே இடத்தில் மழையில் ஊறி, வெய்யிலில் வாடிக் கிடந்த அந்தக் கற்களுக்கு ரொம்பச் சலிப்பாக இருந்தது. ‘நாம் எப்போதாவது இங்கிருந்து நகர்வோமா?’ என்று மிகவும் ஏக்கத்தோடு பேசிக்கொண்டன.

அந்தக் காட்டுக்குப் பக்கத்தில் ஒரு நகரம். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோவில் கட்டத் தீர்மானித்தார்கள்.

புதுக் கோவிலுக்கு மூலவர், உற்சவர், மற்ற சிலைகள் எல்லாம் வேண்டுமல்லவா? அதற்காக ஏழெட்டு சிற்பிகள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் சிற்பங்களைச் செதுக்குவதற்கான கற்களைத் தேடிக் காட்டுக்குள் வந்தார்கள்.

அவர்களில் ஒரு சிற்பி இந்தப் பாறைகளைக் கவனித்தார். மற்றவர்களிடம் அவற்றைக் காண்பித்துச் சொன்னார். ‘இந்தப் பாறைங்க ரெண்டும் சரியான அளவில இருக்கறமாதிரி தெரியுது. நாளைக்கே ஆள் வெச்சுத் தூக்கிட்டுப் போயிடலாம்!’

சிற்பிகள் திரும்பிச் சென்றபிறகு முதல் பாறை பேசியது. ‘ஹையா ஜாலி ஜாலி! நம்ம பல நாள் கனவு நிறைவேறப் போகுது! நாளைக்கு நாம நகரத்துக்குப் போறோம்!’

இரண்டாவது பாறை கோபமாகச் சீறியது. ‘அட மக்குப் பயலே! அவங்க உனக்கு நகரத்தைச் சுத்திக்காட்டறதுக்கா கூட்டிகிட்டுப் போறாங்கன்னு நினைச்சே? உன்னை அடிச்சு உடைச்சு செதுக்கி, சிலையா மாத்திப்புடுவாங்க. தெரியுமா?’


‘அதுக்கு என்ன பண்றது? ஒண்ணைப் பெறணும்ன்னா இன்னொண்ணை இழந்துதானே ஆகணும்?’ என்றது முதல் பாறை. ‘நான் வலியைப் பொறுத்துக்குவேன். பிரச்னையில்லை!’

‘என்னால அது முடியாது!’ தீர்மானமாகச் சொன்னது இரண்டாவது பாறை.

‘நாளைக்கு அவங்க வரும்போது நான் இன்னும் ஆழமாப் போய் உட்கார்ந்துக்குவேன். அவங்க எல்லோரும் சேர்ந்து எவ்ளோ கஷ்டப்பட்டாலும் என்னைத் தூக்கமுடியாது.’

மறுநாள் அந்தச் சிற்பிகள் மீண்டும் வந்தார்கள். முதல் பாறையைக் கட்டித் தூக்கி வண்டியில் வைத்தார்கள். இரண்டாவது பாறையை அவர்களால் அசைக்கக்கூட முடியவில்லை.

‘சரி விடுங்க. அதான் ஒரு பாறை கிடைச்சுடுச்சே. அதுவே போதும்.’ அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள்.

இப்போது அந்த முதல் பாறை அற்புதமான கடவுள் சிலையாக எல்லோராலும் வணங்கப்படுகிறது. இரண்டாவது பாறை இன்னும் காட்டுக்குள்தான் கிடக்கிறது.

இன்றைய செய்தி துளிகள்:

1.வாரணாசியில் நாளை பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாளை கொண்டாடுகிறார் பிரதமர் மோடி

2.வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

3.கல்லூரி படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண்களே போதுமானது! பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

4.அமைச்சர் என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்னை பாதிக்கவில்லை - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே

5.போலந்து குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை சரிதா தேவி வெண்கலம் வென்றார்.