தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள 9 ரெயில்வே பள்ளிகளை மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதனால் அப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தெற்கு ரெயில்வே சார்பில் பெரம்பூர், ஜோலார்ப்பேட்டை, அரக்கோணம், மதுரை, திருச்சி பொன்மலை, விழுப்புரம், போத்தனூர், ஈரோடு, மற்றும் பாலக்காடு (கேரளா) ஆகிய 9 இடங்களில் ரெயில்வே பள்ளிகள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. இதில் சென்னையில் உள்ள பெரம்பூர், மதுரை, திருச்சி பொன்மலை மற்றும் பாலக்காட்டில் உள்ள ரெயில்வே பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகும்.
குறைந்த கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் இந்த பள்ளிகளில் ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் ரெயில்வே ஊழியர் அல்லாதவர்களின் குழந்தைகள் என 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மதுரை மற்றும் பெரம்பூர் ரெயில்வே பள்ளிகளில் மட்டும் தலா ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்தநிலையில் தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள 9 ரெயில்வே பள்ளிகளையும் மூடுவதற்கு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது. நடப்பு கல்வி ஆண்டில் எந்த மாணவர் சேர்க்கையும் கூடாது என்று ரெயில்வே பள்ளி முதல்வர்களுக்கு ரெயில்வே நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் ரெயில்வே பள்ளிகளில் தற்போது படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளுமாறு, பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்கள் வாயிலாக மாணவர்களின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதேபோல ரெயில்வே பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ரெயில்வேயின் பிற பணிகளில் மறுபணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு கடந்த 30-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.
ரெயில்வே பள்ளிகள் மூடப்படும் உத்தரவு மத்திய அரசின் நிதி ஆயோக் குழுவின் விவேக் தேப்ராய் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டு உள்ளது. இந்த ‘திடீர்’ முடிவு காரணமாக ரெயில்வே பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு செல்ல இருக்கும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். புதிய பள்ளியில் எந்த அணுகுமுறையுடன் கல்வியை தொடருவது? பிற பள்ளிகளில் இடம் கிடைக்குமா? என்ற கலக்கம் அடைந்து உள்ளனர். ரெயில்வே பள்ளிகளை மூடும் இந்த நடைமுறைக்கு அங்கீகரிக்கப்பட்ட ரெயில்வே தொழிற்சங்கமான சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்து அத்தொழிற்சங்கத்தின் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கூறியதாவது:-
2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரெயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைந்தது. தவிர ரெயில்வே ஊழியர் அல்லாதவர்களின் குழந்தைகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களாலும் ரெயில்வே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
இதனால் ரெயில்வே பள்ளிகளை ஏன் நடத்தவேண்டும்? என்று கேள்வி எழுந்துவந்த சூழ்நிலையில், விவேக் தேப்ராயின் பரிந்துரையை காரணம் காட்டி ரெயில்வே பள்ளிகளுக்கு முழுக்கு போட ரெயில்வே நிர்வாகம் முயற்சி எடுத்து இருக்கிறது.
விவேக் தேப்ராய் பரிந்துரைகளில் ரெயில்வே பள்ளிகள், ரெயில்வே ஆஸ்பத்திரிகள் போன்றவற்றை ஏன் நடத்தவேண்டும்? என்று கேள்வி எழுப்பப்பட்டு இருக்கிறது. ஆக ரெயில்வே துறையை தனியார் மயமாக்கவே இதுபோன்ற நடவடிக்கைகளில் ரெயில்வே நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இது மிகவும் தவறான முடிவு ஆகும்.
ஏற்கனவே ரெயில்வே பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும், சி.பி.எஸ்.இ. பாடமுறையை அனைத்து ரெயில்வே பள்ளிகளிலும் அமல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே சூழ்நிலைகளையும், மாணவர்-பெற்றோர் நலனையும் முன்னிறுத்தி ரெயில்வே பள்ளிகள் மூடும் முடிவை கைவிடவேண்டும். ரெயில்வே பள்ளிகள் தொடர்ந்து செயல்பட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரெயில்வே நிர்வாகத்தின் ஒருமித்த கொள்கை முடிவுகள் எனும் அடிப்படையில் வடக்கு மற்றும் கிழக்கு ரெயில்வே மண்டலங்களில் உள்ள ரெயில்வே பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.
தற்போது தெற்கு ரெயில்வே கட்டுப்பாட்டில் உள்ள ரெயில்வே பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதின் மூலம் ரெயில்வே பள்ளிகள் மூடப்படுவது உறுதியாகி உள்ளது