இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 30, 2018

மின் கட்டணம் செலுத்த புதிய செயலி அறிமுகம்


நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ அனைத்து விதமான கட்டணங்களையும் எளிதில் செலுத்த ‘பாரத் பில்பே’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக தமிழ்நாடு மின்சார வாரியம் கைகோர்த்து இருக்கிறது.

இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2.79 கோடி பேர் மிக எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்த முடியும். கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் பாரத் பில்பேயின் அடையாள முத்திரையுடன் கூடிய குறுஞ்செய்தி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அச்சிடப்பட்ட ரசீது மூலமாகவோ தகவல் அனுப்பப்படும்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இயக்குனர் மனோகரன் கூறுகையில், ‘பாரத் பில்பே மூலம் இனி மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்கள் மிகவும் எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்த முடியும். இது அவர்களது நேரத்தையும், கட்டணம் செலுத்த மேற்கொள்ளும் போக்குவரத்துக்கான செலவையும் மிச்சப்படுத்த உதவும்’ என்றார்.

பாதுகாப்பற்ற பள்ளிக்கூடங்களை மூட நடவடிக்கை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை உத்தரவு


தமிழகத்தில் 35 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 9,800 நடுநிலைப்பள்ளிகளும், 5,800 உயர் நிலைப்பள்ளிகளும், 7,300 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.

இந்தநிலையில் பள்ளிகளில் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதா? என்று அறிய கமிட்டி அமைக்கும்படி பள்ளிக் கல்வித்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதையொட்டி பள்ளிக்கல்வித்துறை 7 பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளது. அதில் முதன்மை கல்வி அதிகாரி, தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரி, தீயணைப்புத்துறை அதிகாரி, தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி, தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஒருவர் உள்பட மொத்தம் 7 பேர் அந்த கமிட்டியில் உள்ளனர்.

இதுபற்றி பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கூறியதாவது:-

ஐகோர்ட்டு உத்தரவுப்படி பள்ளிகளை ஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் உள்ள குழுவினர் தமிழகத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்யலாம்.

அரசு, தனியார்(சி.பி.எஸ்.இ. உள்பட) பள்ளிகளிலும் கூட ஆய்வு நடத்தலாம். இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த சுற்றறிக்கையின்படி கமிட்டி ஆய்வு செய்யலாம்.

ஆய்வின்போது பள்ளியின் பெயர், பள்ளி தொடங்கப்பட்ட வருடம், பள்ளிக்கூடத்தின் பரப்பளவு, கட்டிடத்தின் தன்மை அதாவது அது கான்கிரீட் கூரையா? கூரையில் ஓடு போடப்பட்டுள்ளதா? அல்லது எந்த வகை கூரை போடப்பட்டுள்ளது? அது எத்தனை வருடம் உறுதியாக இருக்கும்? பள்ளியில் தீத்தடுப்பு சாதனங்கள் உள்ளனவா? மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான கழிவறைகள் உள்ளதா? மின் இணைப்பு பாதுகாப்பானமுறையில் உள்ளதா? சுற்றுச்சுவர் பாதுகாப்பாக இருக்கிறதா? பள்ளிக்கூட வளாகம் மாணவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப தூய்மையாக உள்ளதா? என்று பார்க்கவேண்டும்.

அவ்வாறு ஆய்வு செய்யும்போது பள்ளிகளில் பாதுகாப்பு இல்லை என்றால் அந்த பள்ளிக்கூடத்தை மூடநடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதிய பாடத்திட்டம் நாளை வெளியீடு: செங்கோட்டையன்


ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான, புதிய பாடதிட்டம், மே, 2ல் முதல்வர் கையால் வெளியிடப்படும்,'' என, கல்வி அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், கோபி அருகே பா.வெள்ளாளபாளையத்தில், 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

உள்ளாட்சி மற்றும் வனத்துறை மூலமாக, இரண்டு கோடி மரங்களை நடுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.பள்ளிக்கல்வித் துறை மூலமும், மரங்கள் நடுவதற்கான பணி நடக்கிறது. மாணவர்கள் அத்தனை பேருக்கும், அவர்களது வீடு, தோட்டம் மற்றும் பொது இடங்களில் மரம் வளர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பரிசீலனைஓராண்டு காலம், அந்த மரங்களை வைத்து பராமரித்தால், அந்த மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்க, அரசு பரிசீலித்து கொண்டிருக்கிறது.மதிப்பெண் தந்தால் தான், ஓராண்டு காலம், அந்த மரங்களை மாணவர்கள் பராமரிக்க முடியும். இந்த பணிகளுக்கான கோப்புகள் நகர்ந்துகொண்டிருக்கின்றன. முதல்வரின் ஒப்புதல் பெற்ற பின், அந்த திட்டம் நிறைவேற்றப்படும்.ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு களுக்கான, புதிய பாடதிட்டம், மே, 2ல் முதல்வர் கையால் வெளியிடப்படும். மற்ற வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி அமைத்த பின், 'ஸ்கிள் லேப்' எனும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்.

தேர்வு முடிவுகள்மேல்நிலை வகுப்புகளுக்கு, விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கிறது. எந்த தேதியில் அரசு அறிவித்துள்ளதோ, அந்த குறிப்பிட்ட தேதியில், எஸ்.எம்.எஸ்., மூலம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்

Sunday, April 29, 2018

வாட்ஸ் அப்-மணி


வாட்ஸ் அப்பில் நடந்து வறுத்து எடுப்பது எப்படி?
*மணிகண்டபிரபு*

இன்றைய இளைஞர்கள் கூடு கட்டி  வாழும் கலைக்கூடம் இணையம்.நேரா நேரத்துக்கு சாப்பிடுறாங்களோ இல்லையோ நேரா நேரத்துக்கு நெட்டை மட்டும் ஆன் பன்னுவாங்க.
முகநூல்,ட்விட்டர் அனைத்தும் கடந்து போகும்.ஆனால் வாட்ஸ் அப்பை படித்தாலோ,பார்த்தாலோ மட்டும்தான் கடந்து போகும்.அப்பிடிப்பட்ட வாட்ஸ் அப்பில் நாள்தோறும் வற்றாத ஜீவநதியாய் பெருகிடும் தகவல்கள் பல.தனிமரம் தோப்பாகாது.ஆனால் குரூப்பில் சேர்த்து குதூகலிக்கும் நட்புகள் அதிகம்..

வாட்ஸ் அப்பில் நடந்து கொள்வது எப்படி?இதுதான்
  புதுசா குரூப்பில் சேரும்போது இப்பிடி சொல்லித்தான் சூடம் காட்டுவாங்க..
அப்புறம் போகப்போக ஏழ்ரை டன் வெயிட்டோட அடி விழும்..

#விதைத்தவன் உறங்கலாம் விதைகள் உறங்காது.இதை கார்ல்மார்க்ஸ்,அப்துல்கலாம்,நம்மாழ்வார் பிறந்தநாளுக்கு அவர்கள்.சொன்னதாக பதிவிடுவாங்க..அப்பவே தெரிஞ்சிடும் நாலு பேரும் நல்லா இருந்த வாட்ஸ் அப்பும் டைட்டில் வச்சிக்கலாம்

#தப்பித்தவறி விடுமுறை நாள் வந்துட்டா ஓயாம உடுக்கை அடிச்ச வண்ணம் நோட்டிபிகேசன் ஒலிச்சிக்கிட்டே இருக்கும்.வெளிமாநில டூர் அடிச்சி அத்தனை போட்டோவையும் அப்லோடுவாங்க.. அதுவும் கூலிங்கிளாஸ் போட்டு ஆனந்ததொல்லை பவர் ஸ்டாருக்கே 'டப்' கொடுக்கும் விதமா..

இதுல பத்து பேர் நிற்க தோதான இடம் கிடச்சா எடுடா செல்ப்பி னு எடுத்து அவங்க பாப்பாங்களோ இல்லையோ நமக்கு முதல்ல காட்டிருவாங்க
(இதில செல்ப்பி கிளிக்கில் முதலில் யார் இருக்கிறாரோ அவர் அழகாய் இருந்தால் மட்டும் அப்லோடுவார்.பக்கத்திலிருப்பவர் கண் மூடி இருப்பது,அஞ்சாவது இருப்பவர் வேறிடத்தில் பார்ப்பதையெல்லாம் கவனத்தில் கொள்ள மாட்டார்.

#பட்ட காலிலே படும்,கெட்ட குடியே கெடும்கிற மாதிரி போட்ட நியூசை போட்டு தாளிப்பாங்க.அவரவர் எப்போது நெட் ஆன் செய்கிறாரோ அப்போதுதான் அவருக்கு அது ப்ளாஸ் நியூஷ்.அது எப்போது வந்திருந்தாலும் சரி

#இதை அஞ்சு குரூப்புக்கு அனுப்பினால் ஒரு மேஜிக் தெரியும் னு ஒரு இமேஜ் அனுப்புவாங்க..
உஸ்ஸப்பா.ஜாதுகர் ஆனந்த் மட்டும் உயிரோடு இருந்திருந்தா கையிலிருக்கிற மந்திரக்கோலை தூக்கி வீசிட்டு மட்டக்கோலை எடுத்து மண்டையில் அடிச்சு உங்களை காணாப் பொணம் ஆக்கியிருப்பாரு"!

#கொஞ்சம் குட்டிக்கதைனு சொல்லிட்டு வெண்முரசு லெவல்ல நீளக்கதை ஒன்று வரும்.ஸ்க்ரால் செய்து கட்டை விரலே குட்டி ஆனாலும் அந்தகதை கூட்ஸ்வண்டி மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும்.கதையின் கடைசி வரியில் கண்டிப்பா நீதி இருக்கும்.அதை படிச்சிட்டு திருந்துவாங்க னு நினைப்பில தாதுமணலை அள்ளிப்போடணும்.

#சில பேரு மாசக்கணக்கில நெட் கார்டு போடாம ஒரு நாள் நெட் ஆன் பன்னி..ஒரு மாசம் கழிச்சி படிச்ச அத்தனை பதிப்பையும் இந்தியா ஏழை நாடுன்னு யாரு சொன்னாங்க அறிவு னு அத்தனைசெய்தியையும்
"படியும் படித்துத் தொலையுங்கிற"
வைகைபுயல் ரேஞ்சில பதிவிடுவாங்க

#இன்னிக்கு ராத்திரி பன்னிரண்டு மணியிலிருந்து விடியற்காலையில் சூரிய புயல ஒன்னு வருது.இதனால் தமிழகத்தில் அநேக இடங்களில் செல்போன் சேதாரமாகும்.ஒரு சில இடங்களில் ஆன்ட்ராய்டு போனை தாக்கும் என எச்சரிக்கை அடிப்பாங்க.கடலுக்கு செல்லாத மீனவர்கள் மாதிரி  தனியா வச்சிட்டு வந்து படுக்க வச்சிருவாங்க.அவ்வ்வ்

#வேலைக்கு சென்ற இடத்தில் மதிய உணவு இடைவேளையில் நெட் ஆன் பன்னினால் நெஞ்சடைக்கிற மாதிரி 4200 நோட்டிபிகேசன் காண்பிக்கும்.எடுத்துபார்த்தால் மூன்றே பேர் உரையாடியிருப்பாங்க.உங்களையெல்லாம் அந்த ஆபிஸ் ஹெச்.ஆர்  தான் தண்டிப்பாரு

  #ராபின் சர்மா எழுதிய who cry you wil die ஒரு புத்தக விமர்சனம்.எனக்கு தெரிஞ்சு ராபின் சர்மாவை விட நாங்கதான் அதிகம் படிச்சிருப்போம். ஓஷோவோட குட்டிக்கதை செலக்டிவா ஒரு ஐந்து இருக்கு.அப்புறம் சுகி.சிவம் அவர்களின் ஆடியோ.இதையே ரிப்பீட்டு அடிச்சு அடிச்சு ரிவீட் அடிப்பாங்க.குரூப்பிலிருந்து வெளியேறினா.,சிவப்பு சட்டைக்காரன் வெளிய போறான்.ரத்தம் கக்கி சாவான்னு மீண்டும் சேர்த்துவிட்டு ஜல்லியடிப்பாங்க

#எல்.கே.ஜி யில படிச்ச மிஸ்ஸிங் லெட்டர்ஸ்சை கண்டுபிடிக்கிறது,கஷ்டமான ஒரு கேள்விக்கு விடை சொல்லு என்று சொன்னதோடு மட்டுமில்லாம இதை ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்டதாக டுமீல் விடுவாங்க.(அது எந்த வருசத்து கொஸ்டின் பேப்பர்னு சொல்லமாட்டாங்க..டேஞ்சரஸ் பெல்லோ)

#புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிச்சாச்சு,எய்ட்சுக்கு மருந்து ரெடி னு தட்டிவிடுறது.
இதைப்படிச்சா சர்க்கரையே வராது ன்னு ரேசன் கடை ஆபிசர் மாதிரி சொல்வது,
கவர்மென்ட்டிலீருந்து Flash news செய்தி வந்தா அடுத்த கவர்மென்ட் வரும்வரை அதையே அடித்து துவைப்பது

#சுடோக்கு, புதிர் கணக்கு போட்டு கணக்கு படிக்காத ஆர்ட்ஸ் குரூப் பசங்களை கடுப்பேற்றுவது

#நெல்லிக்காயின் நற்குணம்,சீரகத்தின் அருமை,மஞ்சளின் மகிமை என மருத்துவர் சிவராமனாகவே மாறிடுவாங்க.மேலும் வாக்கிங் போகும்போது செய்ய வேண்டியது செய்ய கூடாதது (நாங்க உன்ன செஞ்சிடுவோம்) பதிவை போடுறது

#உங்களுக்குத் தெரியுமா னு ஒரு டைட்டில் (உங்களுக்கே அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி தான் தெரியும் அட்மின்)
போட்டு பொது அறிவு தகவல்களை
அள்ளித்தெளித்து அணைக்கட்டுவது

#பிரபலங்களின் பிறந்தநாள் வந்தா போதும் அவங்க பிறந்தநாளை முன்னிட்டு ரிலையன்ஸ்,ஏர்டெல்,வோடபோன் நிறுவனங்கள் இலவச நெட் 5MB, 7MB கொடுக்கிறாங்க.நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இதை பத்து குரூப்புக்கு அனுப்பவும்.நான் அனுப்பி எனக்கு வந்திருச்சி.நீங்களும் ஹாரி அப் னு விரட்டுவாங்க.உங்களையெல்லாம் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாது.

#குரூப்பில் சில இயற்கை நேசர்கள்,இயற்கை சித்தர்கள் இருப்பார்கள்.இவர்கள் வேலையே காலை,மதியம்.,மாலை,இரவில் வணக்கம் சொல்வது.குழந்தை போட்டோ,இயற்கை போட்டோ என சகல ஜீவராசிகளின் பெயரால் வணக்கம் சொல்வது.எவரும் பதில் வணக்கம் சொல்லவில்லையெனில் அந்த புகைப்படத்திலேயே வணக்கத்தின் கீழேயே அவர் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கும்

  #தேசப்பற்று- இவுங்க தேசப்பற்று மட்டும் மற்றவருக்கு இருந்திருந்தால் இந்தியா எப்போதோ வீட்டோ பவர் வாங்கி விண்டோ சீட் ஐநாவில் கிடைச்சிருக்கிற ரேஞ்சுக்கு நம் ஜன கண மண தேசிய கீதம் யுனெஸ்கோவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்வார்.போங்க தம்பி போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க

#ஒவ்வொரு சாதிக்கும் சங்கம் இருந்தது அந்தக்காலம்.இப்போது வாட்ஸ் குரூப் இருப்பது இந்தக்காலம்.குறிப்பா அலைஞ்சு திரிஞ்சு வரன் தேடுவது குறைந்துள்ளது

#ஹைதராபாத்தில ஒரு மாணவியின் சான்றிதழ் தொலைந்து,அச்சான்றிதழை மீட்டெடுத்த அந்த மாணவியே நன்றி சொன்னபிறகும் சான்றிதழ் தொலைந்ததாக பதிவிட்டுக்கொண்டிருக்கும் மக்களின் அறியாமை,கடமையை என்ன சொல்வது.

இணையத்தில் ஃபைல்களை அனுப்ப,மேலாளருக்காக வடிவமைத்த படத்தை அனுப்பி ஒப்புதல் வாங்க மிகவும் பயனுள்ளது.புத்தகத்திற்கெனவும்,வாசித்ததை பகிரவும் ஆரம்பிக்கப்பட்டு உபயோகமுள்ள பல குழுக்கள் ஆரோக்யமாக தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.இரத்தம் கேட்டு வரும் தகவல்கள் பலரின் உயிரை காப்பாற்றியதில் வாட்ஸ் அப்புக்கு மிகப்பெரிய பங்குண்டு.கடலூர்,சென்னை வாசிகள் தண்ணீரில் மிதந்தபோது துயர் துடைக்க நீண்டகரங்கள் கருணைமிக்கது.இருப்பினும் இதுபோன்ற குப்பைகள் நாள்தோறும் பெருகி வருவதும் விசமத்தை வெளிப்படுத்தும்  கருத்து வெளியிடுவதும் நல்லதல்ல.

இணையம் நல்லது.பயனுள்ளவற்றை பகிர்ந்தால்..

-மணிகண்டபிரபு

6,000 ஆசிரியர் பணியிடம் குறைப்பு : சிக்கலில் அரசு நடுநிலைப்பள்ளிகள்


ஆறாயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதால் அரசு நடுநிலைப் பள்ளிகளை மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது,'' என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலர் பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தற்போது 6,7,8 ம் வகுப்புகளில் 100 மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர், மூன்று பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளனர்.

உபரி என கணக்கிட்டு ஒரு ஆசிரியரை குறைப்பதால், மூன்று ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து பாடங்களை நடத்துவது சாத்தியம் ஆகாது. ஏற்கனவே ஆங்கிலம், கணிதம், அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் தங்கள் பாடத்துடன் தமிழ், சமூக அறிவியல் பாடத்தை கூடுதலாக எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உபரி என கூறி மேலும் ஒரு பாட ஆசிரியர் குறையும் போது மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள்.உபரி என கணக்கிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் 200 பேர், கோவையில் 173 என ஆறாயிரம் ஆசிரியர் பணியிடம் குறைக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்ஜி., கவுன்சிலிங் விதிகள் வரும் 2ல் வெளியாகுது விபரம்


அண்ணா பல்கலையின், இன்ஜினியரிங், 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள், மே, 2ல், அறிவிக்கப்பட உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை.

கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன் பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்' என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்

தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகள்

Saturday, April 28, 2018

பாரதிதாசன்

1.தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என்
தாய் தடுத்தாலும் விடேன்.

2.பூனைகள் அல்லர், அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்.

3.சாகச் செய்வானை சாகச் செய்யாமல்
சாகின்றாய் தமிழா சாகின்றாயே!

4.அஞ்சாமை வேண்டும் தமிழர்க்கே - பகையின்
அழிவுக்கடலின் ஆழத்தில் மகிழ!

5.தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம்
தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினோம்.

6.தமிழர்களைக் காட்டிக் கொடுக்கும் தமிழன்
தமிழன் எனப்படுதல் தப்பு

7.செந்தமிழ் நாட்டைத் தில்லி ஒழிக்குமுன்
தில்லி தன்னை ஒழிக்க வேண்டும் நாம்.

8 மீள்வது நோக்கம் - இந்த
மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல்
மாள்வது நோக்கம்

9.தமிழ் எங்கள் இளமைக்குப் பால்

10.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே!

11.சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென்றூதூது சங்கே!

12.நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப் படி
காலையிற்படி கடும்பகல் படி
மாலை, இரவு பொருள்படும்படி
நூலைப்படி
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
அறம்படி பொருளைப்படி
அப்படியே இன்பம்படி
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை ஒப்புவ தெப்படி?

- புரட்சிக்கவி பாரதிதாசன்

புதிய பாடத்திட்டம்; பயிற்சி ஒத்திவைப்பு


புதிய பாடத்திட்டம் குறித்த பயிற்சி, ஜூன் மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கடந்த, 2007 க்கு பின் பாடத்திட்டம் மாற்றப்படாத நிலையில், நடப்பு ஆண்டு (2018--19) ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை கல்வித்துறை உருவாக்கியுள்ளது.

மத்திய, மாநில அரசின் போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் 'க்யூ.ஆர்.,கோடு, '3டி' தொழில்நுட்பத்தில் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.ஜூன் முதல் வாரம் பள்ளி திறக்கும் போது, மாணவர்களுக்கு வழங்க, தமிழ்நாடு பாடநுால் கழகம், 4.30 கோடி புத்தகம் தயாராக வைத்துள்ளது. பாடத்திட்டத்தை பரிந்துரைத்த ஆனந்தகிருஷ்ணன் குழுவினர், புதிய பாடத்திட்டம், புத்தகம் குறித்து ஆசிரியருக்கு பயிற்சி வழங்க, கல்வித்துறைக்கு முன்மொழிந்தனர். இதனால், மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், பாடம் நடத்துவது குறித்து ஆசிரியருக்கு பத்து நாள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி நடப்பதாலும், கோடை விடுமுறை அளிக்கப்பட்டதாலும், பயிற்சியை தள்ளி வைக்க வேண்டுமென, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின.வரும், 25ம் தேதி பயிற்சி துவங்குவதாக இருந்த நிலையில், கல்வித்துறை தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. எனவே, கோடை விடுமுறைக்கு பின், ஜூன் முதல் வாரத்தில் பயிற்சி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது


பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும் திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வை யும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது.

முயற்சி

தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார்.இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் திட்டம், நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டுள்ளது.அதேபோல், தேர்வுத் துறையிலும் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பொது தேர்வில், 'ரேங்கிங்' முறை ஒழிக்கப்பட்டுள்ளது.மொபைல் போனில் தேர்வு முடிவுகள், எஸ்.எம்.எஸ்., ஆக அனுப்பும் திட்டம், 2017ல் அமலானது.இந்நிலையில், மாணவர்களுக்கான தேர்வு சுமையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், தமிழ் அல்லது விருப்ப மொழிப் பாடம் மற்றும் ஆங்கில பாடங்களில், தலா இரண்டு தாள்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதை, ஒவ்வொரு மொழிப் பாடத்துக்கும், ஒரு தாளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுமை குறையும்

இந்த முடிவால், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, தற்போது நடத்தப்படும் எட்டு தேர்வுகள், ஆறு தேர்வுகளாக குறையும். இதனால், மாணவர்களுக்கும், தேர்வுத் துறைக்கும் சுமை குறையும் என, கல்வியாளர்கள் தரப்பில், பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதன்படி, வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு மட்டும், மொழி பாட தேர்வின் எண்ணிக்கையை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கு தமிழக அரசின் ஒப்புதல் கிடைத்ததும், விரைவில் அரசாணையாக, மொழிப் பாடத் தாள் குறைப்புக்கான அறிவிப்பு, வெளியாக உள்ளது.அதேபோல், மொழி பாடங்கள் மட்டுமின்றி, முக்கிய பாடங்களின் தேர்வு எண்ணிக்கையை குறைக்கவும், ஆலோசிக்கப்பட்டு வருகிறது.'முக்கிய பாடங்களை குறைக்க, கல்வியாளர்கள் தரப்பில், முரண்பாடான கருத்துகள் உள்ளதால், விரிவான ஆலோசனை நடத்தி, முடிவு எடுக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.