நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.55 லட்சம் அரசு தொடக்கப்பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்காக அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கேட்டுள்ளது.
நாட்டில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், ஆசிரியர் கல்வித்திட்டம் என்று பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக ஆண்டுக்கு ₹75 ஆயிரம் கோடி வரை செலவிடவும் திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பல பள்ளிகள், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக ஆண்டுதோறும் மூடப்பட்டு வருவதாகவும், இதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததும், தரமான கல்வி இல்லாததும் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகள் ஒவ்வொரு நிதியாண்டும் கல்விக்காக செலவிடும் நிதி அரசு, அரசு நிதியுதவி பள்ளி மாணவர்களை முழுமையாக சேருவதில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அதோடு தேசிய அளவில் மாணவர்களின் கல்வித்தரம் குறைந்துள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.இத்தகைய சூழலில் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அரசு, அரசு நிதியுதவி தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை மற்ற அரசுப்பள்ளிகளுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறைகளிடமும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கருத்து கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இந்த பள்ளிகள் இணைப்புப்பட்டியலில் இனி புதிதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகள், போதிய ஆசிரியர்கள் இல்லாத 2.55 லட்சம் பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவ்வாறு இணைக்கப்படும் பள்ளிகளுக்கு தேவையான இடவசதியை ஏற்படுத்துவதுடன், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும், அதற்கேற்ப ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கும் வகையில் பள்ளிகளில் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும். மேலும், அடித்தட்டு மக்களின் குழந்தைகளுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படும். மாநிலங்கள் தரும் கருத்துக்களின் அடிப்படையில் அதற்கான மசோதா இறுதி செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்படும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.