இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, March 31, 2018

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை


கோடை விடுமுறையின்போது தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது:

பொதுத் தேர்வுகள் நிறைவடைந்த பிறகு மதிப்பெண்கள் அடிப்படையில் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும். பத்தாம் வகுப்புத் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு 9 கல்லூரிகளில் தனிப் பயிற்சி வழங்கப்படும். இதன் மூலம் அவர்கள் எந்தத் தேர்வையும் சந்திக்கும் துணிவைப் பெறுவார்கள். பிளஸ் 2 முடித்த பிறகு எந்தப் பாடம் படிக்கலாம் என்பதில் மாணவர்களுக்கு குழப்பம் உள்ளது. மாணவர்கள் மேல்நிலைத் தேர்வுக்குப் பிறகு 286 வகையான பாடங்களில் மேற்படிப்பு படிக்கலாம்.

இது குறித்து விழிப்புணர்வு பெறுவதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும். மருத்துவம், பொறியியல் போன்ற சில குறிப்பிட்ட மேற்படிப்புகள் மட்டுமின்றி அனைத்து வகையான படிப்புகள் குறித்தும் மாணவர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

இலவச பயண அட்டை வைத்திருக்கும் மாணவர்கள் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதில் சிரமங்கள் இருப்பதாகப் புகார்கள் ஏதும் வந்தால் அது குறித்து உடனடியாகப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் பேசி பிரச்னைக்குத் தீர்வு காணப்படும். தமிழகத்தில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு அரசுப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும். இந்த உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகளை நடத்தும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஆதார் தகவல்கள்


ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன?: தனி நபர் அறிந்துகொள்ள யுஐடிஏஐ இணையதளத்தில் வசதி

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதா என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவும் வேளையில் தனி நபர், அவரது ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியும் வசதி யுஐடிஏஐ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் நிதி சார்ந்த சேவைகள், நலதிட்டங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றை உண்மையான பயனாளிகளிடம் சேர்ப்பதற்காக ஆதார் கொண்டுவரப்பட்டது. ஆதார் பதிவு மற்றும் அட்டை அச்சிட்டு வழங்கும் பணிகளை யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) மேற்கொண்டு வருகிறது. ஆனால் ஆதார் பதிவு பணிகளை யுஐடிஏஐ நிறுவனமே நேரடியாக மேற்கொள்ளாமல், தனியார் முகமைகள் மூலமாக மேற்கொண்டு வருகிறது. இதனால் தனி நபரின் ஆதார் விவரங்கள் வெளியில் கசிந்து விடுமோ என பொதுமக்கள் மத்தி யில் அச்சம் நிலவுகிறது.

இதற்கிடையில், வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறாமல், ஆதார் தரவுகளைப் பயன்படுத்தி பேமென்ட் வங்கிக் கணக்குகளைத் திறந்த தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது யுஐடிஏஐ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள், பொதுமக்களின் சந்தேகத்துக்கு வலு சேர்க்கிறது. இந்நிலையில், ஆதார் தரவுகள் திருடப்படும் வாய்ப்பு அறவே இல்லை என்று யுஐடிஏஐ தலைவர் அஜய் பூஷண் பாண்டே உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், பொதுமக்கள் மத்தியில் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக, தனி நபர்களின் ஆதார் விவரங்கள் எங்கெல்லாம் பயன் படுத்தப்பட்டுள்ளன என்பதை சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டும் தெரிந்துக்கொள்ளும் வசதியை, யுஐடிஏஐ நிறுவனம், அதன் இணையதளமான http://uidai.gov.in -ல் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக யுஐடிஏஐ நிறுவன அதிகாரிகள் கூறிய தாவது:

ஒரு நபர் சிம் கார்டு வாங்குவதற்காகவோ, குடும்ப அட்டை அல்லது வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தாலோ அது குறித்த விவரங்கள் மற்றும் நாள், தேதி, நேரம் உட்பட அனைத்து விவரங்களும் யுஐடிஏஐ இணையதளத்தில் பதிவாகிவிடுகிறது. அதை யுஐடிஏஐ இணையதள முகப்பு பக்கத்தில் Aadhaar Services என்பதன் கீழ் உள்ள Aadhaar Authentication History -ஐ கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். அதை கிளிக் செய்யும்போது, ஆதார் எண், பாதுகாப்பு குறியீடு ஆகியவை கேட்கப்படும். அதை கொடுத்தால், சம்பந்தப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஓடிபி எண் அனுப்பப்படும்.

அதன் பின்னர், திரையில் எந்த வகையான விவரங்கள் தேவை என கேட்கும். அதாவது, ஆதார் விவரங்களுக்காக ஓடிபி பெற்றது, பெயர், முகவரி (டெமோகிராபிக்) போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டது, கருவிழி படலம், கை ரேகை (பயோமெட்ரிக்) போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டது அல்லது அவை அனைத்தையும் பயன்படுத்தியது தொடர்பானதைத் தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால், தனி நபரின் ஆதார் விவரங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான விவரங்கள் தெரியும். ஒருவேளை ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்க முற்பட்டு, தோல்வி அடைந்தால், அது குறித்த விவரங்களையும் அதில் பார்க்க முடியும். இதுபோன்ற விவரங்களைக் கடைசி 6 மாதங்கள் வரையிலான, 50 பதிவுகள் மட்டுமே கிடைக்கும்.

இதில் சந்தேகத்துக்கு இடமான வகையில், ஆதார் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்தால் யுஐடிஏஐ நிறுவனத்திடம் புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Friday, March 30, 2018

சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு ரூ.75ஆயிரம் கோடி ஒதுக்கீடு


மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது. அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்


தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.

இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.

அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.

மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்

ரிலையன்ஸ் ஜியோ அதிரடி அறிவிப்பு… பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி….


ரிலையன்ஸ் ஜியோ பிரைம் உறுப்பினர் திட்டத்தில் ஏற்கனவே ரூ.99 செலுத்தி உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு கூடுதலாக ஒரு ஆண்டு சந்தா நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரிலையனஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜியோவின் கட்டண சேவை ஆரம்பித்தது. அதில் ஜியோ வாடிக்கையாளர்கள் பிரைம் வாடிக்கையாளராக ரூ. 99 கட்டி இணைந்தனர். இந்நிலையில், பிரைம் உறுப்பினர் சேவை வரும் 31-ம் தேதியோடு முடிய உள்ளது. இதையடுத்து, அடுத்து உறுப்பினர் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என்பதுகுறித்த கேள்வி எழுந்தது.

அது குறித்து ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இன்று அறிவி்ப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

ஜியோ பிரைமில் ரூ99 செலுத்தி ஏற்கனவே வாடிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு சேவை நீட்டிக்கப்படுகிறது. இந்த சலுகை வரும் 31-ம்தேதிக்குள் ரூ.99 செலுத்தி பிரைம் திட்டத்தில் சேர்பவர்களுக்கும் பொருந்தும்.

ஏற்கனவே ரூ99 செலுத்தி உறுப்பினர்கள் மார்ச்31-ம்தேதிக்கு பின் மீண்டும் ரூ.99 செலுத்தத் தேவையில்லை. அதேசமயம், ஏப்ரல் 1-ம் தேதிக்கு பின் ஜியோ பிரைமில் இணையும் வாடிக்கையாளர்கள் மட்டும் ரூ.99 உறுப்பினர் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவைகள் அடுத்த 12 மாதங்களுக்கு தொடரும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மறு தேர்வு: பிளஸ் 2 பொருளாதாரப் பாடத்துக்கு நாடு முழுவதும் ஏப்ரல் 25-ம் தேதி தேர்வு: 10-ம் வகுப்புக்கு முடிவாகவில்லை


சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், நாடு முழுவதும் பிளஸ் 2 பொருளாதாரப் பாடத்துக்கு ஏப்ரல் 25-ம்தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 10-ம்வகுப்பு கணிதம் பாடத்துக்கு மறுதேர்வு டெல்லி என்சிஆர் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் மட்டும் ஜூலை மாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ 10-ம்வகுப்பு கணிதம், பிளஸ் 2 பொருளாதாரம் பாடத்தின் கேள்வித்தாள் கடந்த செவ்வாய்க்கிழமை வாட்ஸ் அப்பில் வெளியானது. இதையடுத்து, சிபிஎஸ்இ அமைப்பு மறு தேர்வு நடத்தப்படும் என அறிவித்தது.

சிபிஎஸ்இ அமைப்பின் அறிவிப்பை எதிர்த்து மாணவர்கள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினார்கள். சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற செயலுக்கு மாணவர்கள் ஏன் பொறுப்பேற்க வேண்டும், மீண்டும் மறு தேர்வு ஏன் எழுதவேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்கள்.

இதனால், பிளஸ் 2, 10-ம் வகுப்புக்கு எப்போது தேர்வு நடக்கும் என்ற தெளிவில்லாத சூழல் நீடித்து வந்தது.

இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அனில் ஸ்வரூப் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சிபிஎஸ்இ தேர்வு நடத்திய விதத்தில் தவறு நடந்துவிட்டது. 10-வகுப்பு கணிதம்(கோட் 041) பாடத்துக்கான கேள்வித்தாள் டெல்லி, ஹரியாணா, என்சிஆர் பகுதிகளில் மட்டுமே வெளியாகி இருக்கிறது. நாடு முழுவதும் வெளியாகி இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை.

ஆதலால், டெல்லி, என்சிஆர், ஹரியாணா மாநிலங்களில் மட்டும் வரும் ஜூலை மாதம் 10-ம் வகுப்பு கணிதம் பாடத்துக்கு மறுதேர்வு நடத்தப்படும். இதற்கான தேதிகள் அடுத்த 15 நாட்களில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

ஆனால், பிளஸ் 2 பொருளாதாரம் (கோட் 030) பாடத்துக்கான வினாத்தாள் நாடு முழுவதும் வெளியாகி இருக்கிறது. ஆதலால், இந்தப் பாடத்துக்கான மறு தேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடைபெறும். இந்தியாவுக்கு வெளியே அதாவது வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தத் தேர்வுகள் நடைபெறாது. ஏற்கெனவே தேர்வு மையம் எங்கு இருந்ததோ அதே இடத்திலேயே இந்த தேர்வு நடைபெறும், பழைய அனுமதிச்சீட்டையே பயன்படுத்திக்கொள்ளலாம்.

மற்ற தேர்வுகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. அது வழக்கம் போல் நடைபெறும் மறு தேர்வுகளால், தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் எந்தவிதமான தாமதமும் ஏற்படாது. வழக்கம் போல் மே மாதம் இறுதியில் நடைபெறும்.

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியானது தொடர்பாக சிபிஎஸ்இ தலைவர் அனிதா அகர்வால் மீது விசாரணை நடத்தப்படும். இதற்கு காரணமானவர்கள் மீதும், பொறுப்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த விதமான விசாரணையில்லாமல் இப்போது யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது.

இந்த கேள்வித்தாள்கள் எப்படி வெளியாகின என்பது குறித்து இன்னும் தெளிவான விடை இன்னும் கிடைக்கவில்லை. முதல்கட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் இனி விசாரணை நடத்தப்படும். எங்களுடைய கவலை மாணவர்கள் எந்த சூழலிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான். குழந்தைகளின் நலனே முக்கியம்'' அனில் ஸ்வரூப் தெரிவித்தார்.

Thursday, March 29, 2018

கவுன்டர்களில் விண்ணப்பிப்பவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கும் திட்டம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு


தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்வே டிக்கெட் கவுன்டர்களில் முன்பதிவு செய்ய விண்ணப்பிப்பவர்களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 5 சதவீதம் தள்ளுபடி அளிக்கும் ‘பயணிகள் முன்பதிவு திட்டம்’ வரும் ஏப்ரல் 2ம்தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டம் 3 மாதத்துக்கு பரீட்சார்த்த முறையில் செயல்படுத்தப்படும்.

ரயில்வே டிக்கெட் முன்பதிவு மையங்களில் மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் கட்டணத்தில் 5 சதவீதம் தள்ளுபடி பெற முன்பதிவு செய்யும் ரயில் கட்டணம் ரூ.100க்கும் மேல் இருக்க வேண்டும். இந்த தள்ளுபடி திட்டம் சீசன் டிக்கெட் எடுப்பவர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு பொருந்தாது. புறநகர் ரயில்களில் பயணம் செய்ய சீசன் டிக்கெட் எடுப்பவர்களுக்கு 0.05 சதவீதம் தள்ளுபடி வழங்கும் முறை ஏற்கனவே உள்ளது. முன்பதிவு மையங்களில் முதல் பட்டியலில் வருபர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு: மாணவர் சேர்க்கைக்கு ஏப்.20 முதல் விண்ணப்பிக்கலாம்


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் ஏழை மாணவர்களைச் சேர்க்க ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே மாதம் 18 -ஆம் தேதி வரை பெற்றோர் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்டப் பள்ளிகளுக்கும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள செய்தி:

2017-18 -ஆம் கல்வியாண்டு முதல், தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ், நுழைவுநிலை வகுப்பில் ஏழை மாணவர்களுக்கான சேர்க்கைக்கு இணைய வழியில் (ஆன்-லைன்) விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கான வசதி ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் உள்ளது. இதற்கு வரும் ஏப்ரல் 20 -ஆம் தேதி முதல் மே 18 -ஆம் தேதி வரை மாணவர்களின் பெற்றோர் விண்ணப்பிக்கலாம்.

அறிவிப்பு அவசியம்: சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் தொடக்கநிலை வகுப்புகளில் (எல்.கே.ஜி. அல்லது ஒன்றாம் வகுப்பு) பள்ளி வாரியாக உள்ள மொத்த இடங்கள், 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளம், உள்ளூர் செய்தித்தாள்கள், மாவட்டக் கல்வி அலுவலகம், தொடக்கக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றின் தகவல் பலகைகள், தொடர்புடைய பள்ளி தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்ய வேண்டும்.

பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இடங்களின் எண்ணிக்கையை அந்தந்த பள்ளியின் தகவல் பலகையில் ஏப்ரல் 10 -ஆம் தேதி வெளியிட வேண்டும்.
விண்ணப்பிக்க ஏற்பாடு: மாவட்டக் கல்வி அலுவலகங்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மையங்களிலும் மாணவர் சேர்கைக்கான இணைய வழி விண்ணப்பித்தலுக்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
கட்டணம் பெறக்கூடாது: தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களின் பட்டியல், தகுதி இல்லாத விண்ணப்பதாரர் (நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன்) பட்டியல் ஆகியவை பள்ளித் தகவல் பலகையில் மே 21 -ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்பட வேண்டும்.

தேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் மே 29 -ஆம் தேதிக்குள் தொடர்புடைய பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டதை அந்தந்த பள்ளிகளின் நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். இவர்களிடமிருந்து கல்விக் கட்டணம் ஏதும் பெறக்கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை

புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 1, 6, 9, 11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்ய அரசு ஆலோசனை செய்துவருவதாக அதிகாரி தெரிவித்தார்.

தமிழகத்தில் பள்ளி பாடத்திட்டம் பல ஆண்டுகளாக மாற்றப்படாததால், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் புதிய பாடத்திட்டத்தை தயாரித்தனர். அதன்படி 2018-2019-ம் கல்வி ஆண்டு முதல் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனர் க.அறிவொளி புதிய பாடப்புத்தகங்களின் சி.டி.யை அனுப்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்தில் அச்சடிக்கப்பட்டு வருகிறது. அதன் நிர்வாக இயக்குனர் ஜெகன்நாதன் மற்றும் செயலாளர் பழனிசாமி இந்த பணிகளை கவனித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வருகிற கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கும் நாளில் பாடப்புத்தகங்களை வழங்க ஏதுவாக 2, 3, 4, 5, 7, 8, 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்படுகிறது. இதில் ஏற்கனவே உள்ள புத்தகத்தைவிட அதிக பக்கங்கள் இருக்கும். நிறைய படங்கள் சேர்க்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம். 9 மற்றும் 11-ம் வகுப்பில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலான பாடங்கள் உள்ளன. பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகள் திறக்கும் முன்பாக அனுப்பப்பட்டுவிடும்.

பக்கங்கள் அதிகமாக இருப்பதால் புத்தகங்கள் பிரிந்துபோகாமல் இருக்க முன்பைவிட கனமான, பளபளப்பான அட்டையால் பைண்டிங் செய்யப்படுகிறது. புத்தகங்களை ‘லேமினேசன்’ செய்தால் பக்கங்கள் பிரிந்துபோகாது என்பதால் லேமினேசன் செய்து வழங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது.

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது


வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

2018-19-ம் ஆண்டுக்கு இருசக்கர வாகனம் மற்றும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை, இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் கடுமையாக உயர்த்தி நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டண உயர்வு 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, 151 சி.சி. முதல் 350 சி.சி. இழுவைத்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ரூ.985 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.98 அதிகம் ஆகும். அதாவது 11 சதவீத உயர்வு.

350 சி.சி. இழுவைத்திறனுக்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2,323 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.1,304 அதிகம் ஆகும். அதாவது 128 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

7,500 முதல் 12 ஆயிரம் கிலோ எடை வரை உள்ள சிறிய சரக்கு லாரிகளுக்கு ரூ.24 ஆயிரத்து 190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரத்து 523 அதிகம். அதாவது 23 சதவீத உயர்வு ஆகும்.

12 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை எடையுள்ள(6 சக்கர லாரி) வாகனங்களுக்கு ரூ.32 ஆயிரம் 367 நிர்ணயம். இது கடந்த ஆண்டை விட ரூ.3,468 அதிகம். அதாவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை எடையுள்ள (10, 12, 14 சக்கரம்) வாகனங்களுக்கு ரூ.39 ஆயிரத்து 849 ஆகும். கடந்த ஆண்டை விட ரூ.8 ஆயிரத்து 223 அதிகம் ஆகும். இது 26 சதவீத உயர்வு ஆகும். 40 ஆயிரத்திற்கு மேல் எடையுள்ள வாகனங்களுக்கு ரூ.38 ஆயிரத்து 308 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.5,284 அதிகம். அதாவது 16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோல பயணிகள் சவாரி ஆட்டோ, 17 பயணிகள் செல்லக்கூடிய வாகனம் ஆகியவற்றுக்கும் 17 சதவீதம் வரை இன்சூரன்ஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.