இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Saturday, February 03, 2018

ஜாக்டோ ஜியோ தொடர் மறியல்


ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்துக்கு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அ.மாயவன், மு.சுப்பிரமணியன், ஆர்.தாமோதரன், மோசஸ், இரா.தாஸ் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் குறித்தும், 7-வது சம்பள கமிஷனில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் மறியல் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.

கூட்ட முடிவில் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வல்லுனர் குழு அறிக்கை

ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எங்கள் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுத்துவருகிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்காக அரசால் ஒரு வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த வல்லுனர் குழு தனது அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. தொடர்ந்து காலநீட்டிப்பு மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே விரைவாக அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

ஊதிய முரண்பாடு

ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டு உள்ளது. எனவே இந்த ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், கல்லூரி-பல்கலைக்கழக பேராசிரியர்கள், அமைப்பு பணியாளர்கள்-கண்காணிப்பாளர்கள், தலைமை செயலக ஊழியர்கள் ஆகியோருக்கு மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும்.

சத்துணவு-அங்கன்வாடி பணியாளர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலக பகுதி ஆசிரியர்கள், தொகுப்பூதிய ஆசிரியர்கள் அனைவருக்கும் இதுவரை வழங்கப்பட்டுவரும் மதிப்பூதியம் மற்றும் தொகுப்பூதியத்தை ரத்துசெய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

தொடர் மறியல்

ஊதியக்குழுவுக்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஆகியோர் மட்டும் 1.1.16 முதல் புதிய ஊதியத்தை பெற்றுவருகின்றனர். ஆனால் தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டும் 1.10.17 முதல் ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டு உள்ளது. எனவே எங்களுக்கும் 1.1.16 முதல் ஊதியம் கணக்கிட்டு நிலுவைதொகை வழங்க வேண்டும்.

இந்த 4 அம்ச கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதுதொடர்பாக நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையென்றால் வருகிற 21-ந் தேதி முதல் சென்னையில் தலைமை செயலகம் உள்பட முக்கிய இடங்களை முற்றுகையிட்டு, தொடர் மறியல் போராட்டம் நடத்துவோம். போராட்டத்துக்கான ஆயத்தக்கூட்டம் தமிழகத்தில் 11 இடங்களில் வருகிற 11-ந் தேதி நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, February 01, 2018

சேதமடைந்த அரசு பள்ளி கட்டடம் : விபரங்களை அனுப்ப உத்தரவு


மாநிலத்தில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்கள் குறித்த விபரங்களை சேகரித்து மார்ச் 5க்குள் அனுப்ப அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் 30 மாவட்டங்களில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன. 40 ஆண்டிற்கும் மேல் பயன்பாட்டில் உள்ள அரசு பள்ளிக் கட்டடங்கள் விபரம் சேகரிக்கப்பட்டது.

அவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டது. இந்நிலையில் 2002 முதல் 2017 டிசம்பர் வரை மாநிலத்தில் இத்திட்டத்தில் கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ள கட்டடங்கள், மிக மோசமான நிலையில் சேதமடைந்த கட்டடங்கள் உள்ளிட்ட முழு விபரங்களை புகைப்படங்களுடன் மார்ச் 5க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என, அனைவருக்கும் கல்விதிட்ட உதவி திட்ட அலுவலர்களை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்பின் தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு


தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல், 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த, 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை, பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், பள்ளிகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Wednesday, January 31, 2018

பிப்.15 முதல் பிளஸ் 1 வகுப்புக்கு செய்முறைத் தேர்வு நடத்த உத்தரவு


பிளஸ் 1 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிப். 15 முதல் பிப். 26-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என பள்ளிகளுக்கு தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பாடத்திட்ட மாணவர்கள், நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் இந்தாண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 200 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டிய தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. பிளஸ் 1 வகுப்புக்கு அக மதிப் பெண் வழங்க தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி ஆய்வகங்களில் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்குவது குறித்து எந்த வழிகாட்டுதலும் வழங்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் பிளஸ் 1 செய்முறை தேர்வுக்கான சுற்றறிக்கை பள்ளிகளுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு பிப். 14-ஆம் தேதி முதல், 26-ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளும், செய்முறை தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்; அகமதிப்பீடுக்கு, அதே பள்ளி ஆசிரியரும், செய்முறை தேர்வு கண்காணிப்புக்கு, மற்ற பள்ளி ஆசிரியரையும் பணியில் அமர்த்த, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது பிளஸ் 1 வகுப்புக்கு ஏற்கெனவே இருக்கும் பாடத்திட்டத்தின்படி செய்முறை தேர்வை நடத்த வேண்டும். பிளஸ் 2 வகுப்பில் பின்பற்றப்படுவது போன்று செய்முறை மதிப்பீடு வழங்க வேண்டும். தேர்வுகளில், எந்த முறைகேடுக்கும் இடம் தரக்கூடாது; மாணவர்களின் மதிப்பெண்களை ரகசியமாக பதிவுசெய்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். முதன்மை கல்வி அதிகாரிகள், ஆன்லைனில், தேர்வுத்துறைக்கு மதிப்பெண் பட்டியலை அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1 வகுப்புக்கு அறிவியல் பாடங்களுக்கு 30 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது. பிற பாடங்களுக்கு 10 மதிப்பெண்களுக்கு அகமதிப்பீட்டுத் தேர்வு நடைபெறும். பிளஸ் 2 வகுப்புக்கு நாளை தொடக்கம்: பிளஸ் 2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 1-ஆம் தேதி துவங்குகிறது. அதனையொட்டி செய்முறை தேர்வுகள் பிப்.2-ஆம் தேதி முதல் பிப்.8-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் பிப்.14-ஆம் தேதி வரையிலும் இரண்டு கட்டங்களாக செய்முறைத் தேர்வுகள் நடைபெறும்

10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது


நாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க, தேசிய கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர் . மாநில வாரியாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், மாநில வாரியாக, மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதிக்க, அடைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இத்தேர்வு நடத்தப்படுகிறது. 2015க்கு பின், வரும் 5ம் தேதி, தேசிய கற்றல் அடைவுத்தேர்வு, அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது. மாநில வாரியாக, ஒரு மாவட்டத்துக்கு, தலா, 80 பள்ளிகளில் இருந்து, அதிகபட்சம், 45 மாணவர்கள் மட்டுமே, இத்தேர்வை எழுதுகின்றனர். அனைத்து பாடங்களுக்கும், 'ரேண்டம்' முறையில், மாணவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று வகையான வினாத்தாள் வினியோகிக்கப்படும். ஒரு பாடத்தில் இருந்து, தலா 60 கேள்விகள் இடம்பெறும்.

குறைவான மதிப்பெண் இதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில், மாநிலத்தின் கல்வி குறியீடு தரவரிசைப்படுத்தப்படும். இதில், அந்தந்த மாநில பாடத்திட்டத்தின் படி, ஒவ்வொரு பாடத்தில் இருந்தும், 'அப்ஜெக்டிவ்' முறையில், 60 கேள்விகள் இடம்பெறும். ஓ.எம்.ஆர்., ஷீட்டில், விடைக்குறிப்புகள் அடையாளப்படுத்த வேண்டும்.

ஒரு மாணவன், ஒரு பாட வினாத்தாளுக்கு மட்டுமே விடையளிக்க முடியும். தமிழகத்தை பொறுத்தமட்டில், 2015ல், மாணவர்கள் சராசரியை விட, குறை வான மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்துள்ளது. மொழிப்பாடங்களில் சராசரியாக, 500க்கு 225 மதிப்பெண் மட்டுமே, மாணவர்கள் பெற்று இருந்தனர். கணிதத்தில், 226; அறிவியலில், 229 மற்றும் சமூக அறிவியலில், 500க்கு, 215 மதிப்பெண், சராசரியாக பெற்றிருந்தனர்

ஒழுக்க குறைவாய் பேசக்கூடாது

'மாணவ - மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

புகார் :

பள்ளி, கல்லுாரிகளில் குருகுல கல்வி முறை காலம் மாறி, குருவையே மாணவர்கள் மிஞ்சும் அளவுக்கு, கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.பள்ளிகளில் பாடம் நடத்தும் முறை, மாணவர்களிடம் பழகும் தன்மை ஆகியவையும் மாறியுள்ளது. மாணவர்களை பிரம்பால் அடிப்பது, கடுமையான வார்த்தைகளால் பேசுவது போன்றவற்றுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. நண்பர்களாக பழகி, மாணவர்களை நல்வழிப்படுத்துமாறு, கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இந்நிலையில், அரசு பள்ளிகள் சிலவற்றில், ஆசிரியர்களே, மாணவர்களிடத்தில் கோஷ்டியை உருவாக்கி, தவறாக வழிநடத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, தங்களுக்கு வேண்டாத பெற்றோரின் பிள்ளைகள், தங்களுக்கு பணிவிடை செய்யாத மாணவ - மாணவியரை, குறிப்பிட்ட மாணவர்களுடன் இணைத்து, ஒழுக்க குறைவாக பேசுவதாகவும் கூறப்படுகிறது. சென்னை, கோடம்பாக்கம், பதிப்பகச் செம்மல் கணபதி அரசு மேல்நிலை பள்ளியில், பட்டதாரி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர், மாணவ - மாணவியர் சிலரை தவறாக பேசி, அடித்துள்ளனர்.

நடவடிக்கை :

தேர்வுகளில், அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் கூட, இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். மனதளவில் பாதிக்கப்பட்ட சில மாணவியர், தேர்வு துவங்க உள்ள நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்துள்ளனர். இதுகுறித்து, பெற்றோர், சில தினங்களுக்கு முன், பள்ளியில் முற்றுகையிட்டு, ஆசிரியர்கள் மீது புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டிய ஆசிரியர்கள் சிலர், தரக்குறைவாக நடந்து கொண்டது தெரிய வந்துள்ளது.இதையடுத்து, ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

'மாணவர்கள், இளம் வயதினர் என்பதால், அவர்களை பக்குவமாக கையாண்டு, திருத்த வேண்டும். அதை செய்ய முடியாத ஆசிரியர்கள், பாடம் நடத்தி விட்டு, பெற்றோருக்கோ, தலைமை ஆசிரியரிடமோ, மாணவர்களின் நடத்தை குறித்து தகவல் அளிக்கலாம். 'மாறாக, மாணவ - மாணவியரை கிண்டல் செய்வது, அவர்களின் மனம் புண்படும்படி, தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. 'மீறினால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.

Tuesday, January 30, 2018

70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'


'நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இலவசமாக, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன.'

டெண்டர்' விடுவதில், ஏற்பட்ட பிரச்னைகளால், 2016 - 17ம் கல்வியாண்டு முதல், லேப் - டாப்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்கள், பொதுத்தேர்வு எழுதிய பின், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' உள்ளிட்ட, பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளது. இத்தேர்வுகளில், தமிழக பாடத்திட்டத்தில் இல்லாத, பல்வேறு கேள்விகள் இடம் பெறுகின்றன.அதற்கேற்ப, அரசு பள்ளிகளில் பயில்வோர், தங்களை தயார்படுத்திக் கொள்ள, லேப் - டாப்கள் மிக அவசியம். அதற்காக, அவசர தேர்வாக கருதி, 70 ஆயிரம் பேருக்கு, இலவச லேப் - டாப்களை, விரைவில் வழங்க, அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

நீட் தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப் - டாப் தேவைப்படுவது தெரிய வந்துள்ளது. அதனால், இந்த கல்வியாண்டில் தரவேண்டிய, 5.43 லட்சம், லேப் - டாப்களில், முதல் கட்டமாக, 70 ஆயிரம் லேப் - டாப்களை, உடனடியாக கொள்முதல் செய்து, ஒரு மாதத்திற்குள் வழங்க முடிவு செய்துள்ளோம்.இதற்காக, புதிய, 'டெண்டர்' கோராமல், ஏற்கனவே, 'லேப் - டாப்'களை வினியோகித்துள்ள நிறுவனத்திடம், உடனடியாக கொள்முதல் செய்ய உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Monday, January 29, 2018

தமிழக பள்ளிகளின் 'அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை


பள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது. 'பேஸ் பயோமெட்ரிக்' முறைப்படி, பள்ளி வாசலில் உள்ள, கேமராவில் பதிவாகும் முகத்தால், 'பிரசென்ட்' பதிவாகி விடும். 'உள்ளேன் அய்யா'வுக்கு பதிலாக, கம்ப்யூட்டரில் பதிவாகும் இந்த வசதி, முதற்கட்டமாக, சென்னை அரசு பள்ளியில் அறிமுகம் செய்யப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், ஊழியர்கள் வருகைப் பதிவில் முறைகேடுகளை தடுக்கவும், நிர்வாக வசதிக்காகவும், 'பயோமெட்ரிக்' வருகைப்பதிவு பின்பற்றப்படுகிறது. 'கார்ப்பரேட்' நிறுவனங்களில் மட்டுமின்றி, சிறிய கடைகளிலும், இந்த முறை பயன்பாட்டில் உள்ளது. ஊழியர்களின் விரல் ரேகை அடிப்படையில், வருகை விபரம் பதிவு செய்யப்படுகிறது.இந்த பயோமெட்ரிக் வருகைப்பதிவு திட்டம், விழுப்புரம் மாவட்டத்திலும், மற்ற மாவட்டங்களில் சில பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த
திட்டம் அமலானதால், அரசின் நலத் திட்டங்களை தவறாகக் கணக்கிடுவது, மாணவர்களின் எண்ணிக்கையில் போலிகளை சேர்த்து, ஆசிரியர்கள் நியமனத்தை தக்க வைப்பது, ஆசிரியர்களின்காலதாமதமான வருகை போன்ற பிரச்னைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சோதனை முறையில்

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால், சமீபகாலமாக, முகத்தை படம் பிடித்து, வருகையை பதிவு செய்யும் முறை அறிமுகம் ஆகியுள்ளது.பேஸ் பயோமெட்ரிக் என்ற, இந்த நவீன முறையில், விரல் ரேகைக்கு பதில், முகத்தை படம் பிடித்து, வருகைப் பதிவு செய்யப்படும்.
பல நவீன மொபைல் போன்களிலும், வெளிநாட்டு, 'சாப்ட்வேர்' நிறுவனங்களிலும், இந்த தொழில்நுட்பம், தற்போது அறிமுகமாகிஉள்ளது.இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவன உதவியுடன், பேஸ் பயோமெட்ரிக் தொழில்நுட்பம், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளிலும் சோதனை முறையில் அறிமுகமாகிறது. முதற்கட்டமாக, சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், இந்த திட்டம் சோதனை முறையில் அமலாகிறது; 600 மாணவியருக்கு, பேஸ் பயோமெட்ரிக் முறை பயன்படுத்தப்படும்.

திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஏற்ப, மற்ற பள்ளிகளுக்கும், பேஸ் பயோமெட்ரிக் வருகைப் பதிவை விரிவுபடுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் அறிமுகமாகாத, நவீன தொழில்நுட்ப திட்டம், தமிழக அரசு பள்ளிகளில் அமலாவது,
மாணவர்களையும், பெற்றோரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

வருகைப்பதிவு எப்படி?

புதிய வருகைப்பதிவு திட்டத்தின்படி, ஒவ்வொரு மாணவியின் புகைப்படமும், கணினியில் ஏற்றப்படும். பள்ளியின் நுழைவாயில் அருகே, மாணவியர் வரும் வழியில், மின்னணு நுழைவாயில் வைக்கப்படும். அதை படம் பிடிக்கும் வகையில், உயர்தர கேமரா வைக்கப்படும்.இந்த கேமரா, நுழைவாயிலில் வரும், அனைத்து மாணவியரின் முகங்களையும் படம் பிடிக்கும். அந்த முகங்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட மாணவியரின் முகத்துடன்,
ஒரே வினாடியில் கணினியில் தானாக சரிபார்க்கப்பட்டு, வருகைப்பதிவாக மாறும்.எனவே, எந்த மாணவி எப்போது வந்தார்; அவருடன் வந்த மற்ற மாணவியர் யார் என்பது போன்ற விபரங்கள், கணினியில் பதிவாகும். இந்த விபரங்களை, பள்ளி தலைமை ஆசிரியை, தன் கணினியில் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Sunday, January 28, 2018

2013ல் நடந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி


ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி: கடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு பணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

தமிழகம் முழுவதும் கற்றல் குறைபாடுள்ள 1 லட்சம் மாணவர்களுக்கு, பிப்ரவரி 20ம் தேதி வரை சிறப்பு பயிற்சி வழங்கப்படும். தமிழக மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. இருப்பினும், மத்திய அரசின் நிலைப்பாட்டின்படி, மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள ஏற்கனவே 100 மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 312 மையங்கள் பிப்ரவரி 4ம் தேதிக்குள் திறக்கப்படும். பிளஸ் 2 தேர்வுக்கு பின், 2,000 மாணவர்களை தேர்வு செய்து, சென்னையில் உள்ள 4 கல்லூரிகளில் கூடுதல் கவனம் செலுத்தி ‘நீட்’ தேர்வு பயிற்சி வழங்கப்படும். அம்மாணவர்கள் தங்கவும், உணவுக்கும் அரசு ஏற்பாடு செய்யும். வரும் காலங்களில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மாணவர்கள் போட்டி தேர்வுகளை சந்திக்கும் வகையில் பாடத்திட்டம் வகுக்கப்படும் என்றார்.

புதிய கல்விக்கொள்கை: போலியோ சொட்டு மருந்து முகாமை கோபியில் நேற்று அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், லண்டனில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை மாநாட்டில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் புதிய கல்விக்கொள்கை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு


பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும். சிறப்பு பயிற்சி தனியார் பள்ளிகளில், நுழைவு தேர்வுக்கு, ஒன்பதாம் வகுப்பு முதல், மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.

ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் கிடைப்பது இல்லை. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில், 412 மையங் களில், இலவச நீட் பயிற்சி அறிவிக்கப்பட்டது; 100 மையங்களில் மட்டுமே, பயிற்சி அளிக்கப்படுகிறது. வினாத்தாள் எனவே, மற்ற பள்ளிகளின் மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங்கில் சேர வசதியாக, அவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து, சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பயிற்சி நிறுவனங் களிடம், மாதிரி வினாத்தாள்களை பெற்று, தங்கள் பள்ளி மாணவர்களுக்கு, பயிற்சி தேர்வுகள் நடத்த, நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆதார் எண் பெற சிறப்பு முகாம் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் பெற, சான்றிதழ் விபரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், போலி மாணவர்கள் பட்டியலை தடுப்பது, நலத்திட்டங்களை உரிய மாணவர்களுக்கு வழங்குவது, மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை சரியாக நிர்ணயிப்பது போன்றவற்றுக்கு, ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில், ஆதார் எண் இல்லாத மாணவர்கள், ஆதார் பதிவு செய்ய, இன்று முதல் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் மாணவர்கள், வீட்டு முகவரியுடன் கூடிய பள்ளி அடையாள அட்டை, பள்ளிகள் வழங்கிய அங்கீகார சான்றிதழ், பிறப்பு சான்றிதழ், ரேஷன் அட்டை, பாஸ்போர்ட் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றில், ஏதேனும் ஒன்றை ஆவணமாக பயன்படுத்தலாம் என, வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.

போலியை நீக்க உத்தரவு பள்ளிகளில், மாற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் இருந்து நீக்கும்படி, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் சரியான விபரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்குனரகங்கள் உத்தரவிட்டுள்ளன. இதன்படி, மாணவர்களின் பெயர், ஆதார் எண், பெற்றோர் பெயர், மாணவர்களின் மொபைல் எண், ரத்தப்பிரிவு உள்ளிட்ட விபரங்களை, கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பான, 'எமிஸ்' இணையதள தொகுப்பில் சேகரிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து மாணவர்களின் விபரங்களை, எமிஸ் இணையதளத்தில் சேகரித்து வருகின்றனர்.

இந்த தகவல் தொகுப்பில், பல பள்ளிகளில், மாற்று சான்றிதழ் வாங்கி சென்ற மாணவர்களின் விபரங்கள், போலியாக இடம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.எனவே, அனைத்து பள்ளிகளும், எமிஸ் விபரங்களை சரிபார்த்து, பள்ளிகளில் இருந்து வேறு இடங்களுக்கு சென்ற, மாணவர் விபரங்களை உடனே நீக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

TNPTF மாநில(28.1.18) செயற்குழு முடிவுகள்...


நாளை முதல் (29.1.18) முதல் மாற்றியமைக்கப்பட உள்ள பேருந்து கட்டணம்