இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, January 08, 2018

மாணவர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து...பசுமையாகும் பள்ளிகள்!  பள்ளியில் மரம் வளர்ப்பு திட்டம் துவக்கம்


மரம் வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கவும், பள்ளிகளில் பசுமையை மேம்படுத்த மரக்கன்று வளர்க்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும், 15 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 'மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்,' என பல்வேறு அமைப்புகள் சார்பில் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.

அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் விழாக்களின் போது மரக்கன்றுகள் நடப்படுகின்றன. ஆனால், அந்த மரக்கன்றுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறதா என்பதை ஆராய்ந்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. நடப்படுவதில், குறைந்த பட்ச மரங்கள் மட்டுமே காப்பாற்றப்படுகின்றன என்பதே நிதர்சனமான உண்மை. இந்நிலையில், தமிழக அரசு மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டத்தை ஆக்கப்பூர்வமாக செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அரசு நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது.தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும் பள்ளிகளை இத்திட்டத்துக்கு தேர்வு செய்ய அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், ஒரு கல்வி மாவட்டத்துக்கு, 15 பள்ளிகள் வீதம் மொத்தம், 960 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மாணவர்களிடம் மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்த மாணவர்களை, பள்ளியில் மரக்கன்று வளர்க்கும் திட்டத்தில் ஈடுபடுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு பள்ளிகளிலும், 50 மரக்கன்றுகள் கட்டாயமாக நட வேண்டும். நடவு செய்த மரக்கன்றுகளை பராமரிக்க ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு மாணவர் நியமிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பள்ளிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. முதற்கட்டமாக, ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த நிதியை பள்ளிக்கு தேவையான மரக்கன்று மற்றும் உரங்கள் வாங்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

பள்ளி ஆசிரியர்கள், அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு மரக்கன்றுகளை தேர்வு செய்து நட வேண்டும்.மரம் நடுவதற்குரிய குழியை தேவையான அளவு தோண்டி அதனை ஆறவிடுதல் அவசியமாகும். செடியை நடவு செய்த பின், அதற்கு தண்ணீர் மற்றும் உரமிட்டு பராமரிக்க வேண்டுமென கல்வி மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர் அறிவுரையும் வழங்கியுள்ளார். தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: பள்ளிகளில் நடப்படும் மரங்களை பாதுகாத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்றும், அதற்கான திட்டம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து சட்டசபையில் அமைச்சர் அறிவித்தார். அதன்படி, இத்திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சென்னையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்களுக்கு, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை இயக்குனர் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை உறுப்பினர், செயலர் வெங்கடாச்சலம் ஆகியோர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவுறுத்தியுள்ளார்.

முதல் கட்டமாக வழங்கப்பட்ட நிதியை கொண்டு பள்ளிக்கு தேவையான மரக்கன்று மற்றும் உரங்களை வாங்க வேண்டும். நடப்பட்ட மரக்கன்றுகள் வளர்ந்த பின், அதை புகைப்படம் எடுத்து அனுப்புவதோடு, மாணவர் பெயர் குறித்த அறிக்கை அனுப்ப வேண்டும். அதன் பின், பள்ளி ஒன்றுக்கு, மீதமுள்ள, பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். பள்ளிகளில் பசுமையை மேம்படுத்தும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு, ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். படிக்கும் போது மாணவர்களிடம் மரம் வளர்ப்பு என்ற எண்ணத்தை விதைக்கும் வகையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது வரவேற்கதக்கது. ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து மரம் வளர்த்து, அரசுப்பள்ளிகளை பசுமைப்பள்ளிகளாக மாறினால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். முழு மனதுடன் திட்டத்தை செயல்படுத்தினால், நிச்சயம் மாற்றம் ஏற்படும் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

TNPTF முற்றுகைப் போராட்ட அறிவிப்பு



TNPTF காத்திருக்கும் போராட்டம்






முதல் சந்திப்பே போராட்ட அறிவிப்பு........... . இன்றுTNPTF மாநில அமைப்பின் சார்பில் நமது தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களை சந்திப்பு...... பிப்ரவரி 9 2018ல் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிடக் கோரி காத்திருப்பு போராட்டம் நடத்துதல் முன் அறிவிப்பு சார்பாக இயக்குநர் அவர்களை மாநில பொறுப்பாளர்கள் சந்தித்த பொழுது....

Sunday, January 07, 2018

வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்ட 94,000 பேருக்கு ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


கடந்த 2012 முதல் 2014ம் ஆண்டு வரை நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இதுவரை பணி நியமனம் பெறாமல் உள்ள 94 ஆயிரம் ஆசிரியர்களை பணி நியமனம் செய்வது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வின் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டு வரை அவர்களுக்கு பணி நியமனம் வழங்க முடியும் என்ற அடிப்படையில், ஆண்டுதோறும் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். அதே போன்று தற்போது 745 பள்ளிகள் கணினி மயமாக்கப்படுவதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. அந்த பணிகள் முடிவுற்ற பின்னர் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அதேபோன்று 6 மற்றும் 9 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினி மயமாக மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இறுதிக் கட்டத்தில் புதிய பாடத்திட்டப் பணிகள்


புதிய பாடத்திட்டப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வரும் கல்வி ஆண்டுக்கான 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு பாடநூல்கள் எழுதும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய கல்விச்சூழலுக்கு ஏற்ப தமிழகத்தில் பாடத் திட்டத்தை மாற்றியமைக்க மாநில அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் புதிய பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், இலக்கியவாதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் இடம்பெற்றனர். இந்தக் குழு, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடத்திட்டங்களை மட்டுமல்லாமல் அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளின் பள்ளி பாடத் திட்டங்களையும் ஆய்வு செய்தது. மேலும், கூட்டங்கள் நடத்தி பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளையும் கேட்டறிந்தது. அதனைத் தொடர்ந்து, ஒன்று முதல் பிளஸ் 2 வரையுள்ள வகுப்புகளுக்கான வரைவு பாடத்திட்டத்தை பாடத் திட்டக் குழு கடந்த நவம்பர் மாதம் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.

அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட வரைவு பாடத் திட்டம் பொதுமக்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. கல்வியாளர்கள், பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள், பெற்றோர் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாகவும், தபால் வழியாகவும் தங்கள் கருத்துகளை அனுப்பினர். அனைத்து கருத்துகளும் முறையாக தொகுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாடத்திட்டத்தை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும் பிப்ரவரியில் இந்தப் பணி முடிவடையும் எனவும் பாடத்திட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் எம்.ஆனந்தகிருஷ்ணன் கூறியது:

பாடத்திட்டம் குறித்து 17 நாடுகளைச் சேர்ந்த வல்லுநர்கள் உள்பட 2,000-க்கும் மேற்பட்டோர் இணையதளத்தில் கருத்துகளைத் தெரிவித்தனர். அதில் ஏற்புடைய கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு தேவையான மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதிய பாடத் திட்டத்தின்படி புத்தகங்கள் எழுதும் பணி சில நாள்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிற மொழி மாணவர்களுக்காக தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது உள்ளிட்ட மொழிகளில் பாடங்கள் மொழி பெயர்க்கப்படும். இறுதியாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சார்பில் 2018-2019 ஆம் கல்வியாண்டுக்கான 1,6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் பாட நூல்கள் அச்சடிக்கும் பணிகள் தொடங்கும் என்றார்.

EMIS க்கு நிதி ஒதுக்கீடு


2017ம் ஆண்டின் சொல்

ஒவ்வோர் ஆண்டும் சிறந்த சொல்லாக
முன்னணி ஆங்கில அகராதிகளால் ஒரு சொல் கடந்த சுமார் 10 ஆண்டுகளாகத் தெரிவுசெய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2016-ன் சிறந்த சொற்களாக முறையே ‘போஸ்ட்-ட்ரூத்’ (ஆக்ஸ்போர்டு அகராதி), ‘பிரெக்ஸிட்’ (காலின்ஸ் அகராதி), சர்ரியல் (மெரியம் வெப்ஸ்டர் அகராதி) தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ‘போஸ்ட்-ட்ரூத்’ எனும் வார்த்தைக்கு இணையாக, தமிழில் ‘உண்மை கடந்த’ எனும் வார்த்தையை ‘தி இந்து’ நாளிதழ் கடந்த ஆண்டு உருவாக்கியது. 2013-ன் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

2017-ன் சிறந்த சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை: ‘யூத்க்வேக்’ (youthquake) - ஆக்ஸ்போர்டு அகராதி, ‘ஃபேக் நியூஸ்’ (fake news) -காலின்ஸ் அகராதி, ‘ஃபெமினிசம்’ (feminism) -மெரியம் வெப்ஸ்டர் அகராதி. இந்தச் சொற்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணங்களையும் அந்த அகராதிகள் விவாதிக்கின்றன.

Saturday, January 06, 2018

ஆசிரியர் கவுன்சிலிங் குழப்பம் தவிர்க்க ஆன்லைனில் காலி பணியிட விபரம்


தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் குழப்பத்தை தவிர்க்க, காலியிடங்கள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்ற, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு, கடந்த ஆண்டு முதல், ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் களுக்கு, மாநில அளவிலான கலந்தாய்வும், தொடக்கப் பள்ளி ஆசிரி யர்களுக்கு, மாவட்ட அளவிலான கலந்தாய்வும் நடக்கிறது. கடந்த ஆண்டு, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, ஆன்லைன் கலந்தாய்வில், பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. பல இடங்கள் மறைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.இதை போக்கும் வகையில், தொடக்கக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்...பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் பிற ஆசிரியர்களின் விபரங்கள் மற்றும் காலி பணியிட விபரங்களை, www.tndse.com என்ற இணையதளத்தில், அனைத்து தலைமை ஆசிரியர்களும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு பள்ளிக்கும் வழங்கப்பட்டுள்ள, 'யூசர் நேம், பாஸ்வேர்டு' மூலம், 9க்குள் பதிவு செய்யவும். இதை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: ஏற்கனவே, ஆசிரியர்கள் விபரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. மீண்டும் பதிவேற்றம் செய்ய சொல்வதால், வேலைப்பளு தான் அதிகரிக்கிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் உள்ளவர்கள், கவுன்சிலிங்கில் பங்கேற்க மாட்டார்கள். அவர்களின் விபரங்களை, தற்போது சேகரித்து வருவதால், உபரி ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தொலைந்த சான்றிதழ் பெற எளிய முறை அறிமுகம்


அரசு தரப்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தாக்கல் செய்து, தொலைந்த கல்வி சான்றிதழ்களின் நகல்களை பெறலாம்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைக கழகங்களின் மாணவர்கள், தங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலை தொலைத்தால், போலீசில் புகார் அளித்து, அதற்கான உறுதி சான்று பெற வேண்டும்.

அந்த சான்றுடன், பல்கலை மற்றும் கல்லுாரிகளில் விண்ணப்பித்து, சான்றிதழ் நகல்களை பெறலாம். போலீசில் புகார் அளித்து சான்றிதழ் பெறுவதில், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. அதனால், பலர் சான்றிதழ் நகல் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தொலைந்த சான்றிதழின் நகல்களை பெற, எளிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஆதார் எண், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில், ஏதாவது ஒன்றை காட்டினால், மாணவர்களுக்கு சான்றிதழ் நகல் தரலாம் என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது. இந்த திட்டம், பாரதியார் பல்கலை, பாரதிதாசன் பல்கலை, பெரியார் பல்கலை உள்ளிட்ட, பல பல்கலைகளில் நடைமுறைக்கு வந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையதளத்தில் ஆசிரியர்கள் விபரம் பதிவு செய்தல் சார்பு

TNPTF போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக


Friday, January 05, 2018

பள்ளிப்பார்வை-team visit


2018ம் ஆண்டிற்கான TNPSC அட்டவணை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 3 ஆயிரத்து 325 பணி யிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

2018-ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2015-ம் ஆண்டில் 12 தேர்வுகள் நடத்தப்பட்டு 5 ஆயிரத்து 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

2016-ம் ஆண்டில் 17 தேர்வுகளை நடத்தி 6 ஆயிரத்து 383 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.

கடந்த ஆண்டில் 12 ஆயிரத்து 218 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர் கூடுதலாக அட்டவணையில் தெரிவிக்காத பதவிகளுக்கும் சேர்த்து அறிவிக்கை வெளியிடப்பட்டன. அவற்றில் 18 தேர்வுகள் நடத்தப்பட்டன. மீதமுள்ள 6 தேர்வுகள் இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளன.

மேலும் கடந்த 2 ஆண்டு காலத்தில் பல்வேறு போட்டி தேர்வுகள் தொடர்பான, 99 பாடத்திட்டங்கள் வல்லுனர் குழு கொண்டு மேம்படுத்தப்பட்டன. கடந்த 5 ஆண்டில் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படாமல் இருந்த தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் பல்வேறு வகையான 23 பதவிகளில் 3 ஆயிரத்து 325 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வு மூலம் 1,547 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. குரூப்-1 தேர்வில் 57 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இந்த காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வுக்கு பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.

6,029 பள்ளிகளில் 'ஹைடெக்' ஆய்வகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


மாநிலம் முழுவதும், 6,029 அரசு பள்ளிகளில், 429 கோடி ரூபாய் செலவில், உயர்தர கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், புதிய பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை காட்டிலும் சிறப்பாக இருக்கும்.

மாநிலம் முழுவதும், 3,000 அரசு பள்ளிகளில், 60 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படும். பள்ளிகளில் கட்டமைப்பு மேம்படுத்த, மத்திய அரசிடம், 500 கோடி ரூபாய் கூடுதலாக கேட்டுள்ளோம். புதிய பாடத்திட்டத்தில், 72 தொழிற்கல்வி பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன்படி, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும். கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, தனியார் நிறுவனத்தின் ஐந்து கோடி ரூபாய் பங்களிப்புடன், சிறப்பு பயிற்சிகள் தர உள்ளோம். மேலும், 6,029 பள்ளிகளில், 429 கோடி ரூபாய் செலவில், உயர்தர, 'ஹைடெக்' கணினி ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் குறித்து, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி பிளஸ் 2 மாணவர்களில், போட்டி தேர்வுக்கு பயிற்சி பெறுவோருக்கு, ஒரு லட்சம் லேப்டாப்கள், பொது தேர்வுக்கு முன்பே வழங்கப்பட உள்ளன. தமிழக பட்ஜெட்டில், பள்ளிக்கல்விக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். மத்திய அரசிடமிருந்து, 2,200 கோடி ரூபாய், தமிழகத்துக்கு வரவேண்டி உள்ளது; அதை பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

வடமாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில், மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில், 2013 முதல் தேர்ச்சி பெற்றவர்கள், 92 ஆயிரத்து, 620 பேர் உள்ளனர். அவர்கள் தேர்ச்சி பெற்றது முதல், ஏழு ஆண்டுகள், அதாவது, 2020 வரை அரசு பணியில் சேர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, January 04, 2018

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத்தேர்வு: இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 துணைத் தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வெள்ளிக்கிழமை (ஜன.5) வழங்கப்படவுள்ளது. இதுகுறித்து அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அக்.31- ஆம் தேதியிலிருந்தும், பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தேர்வர்களுக்கு அக்.26-ஆம் தேதியிலிருந்தும் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வர்கள் தாங்களே ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த மார்ச் 2016-ஆம் பருவம் முதல் நிரந்தர பதிவெண் ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வெழுதி, அதில் தேர்ச்சி பெறாமல் செப்டம்பர், அக்டோபர் 2017-இல் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுகளை எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழ்களை வெள்ளிக்கிழமை (ஜன.5) காலை 10 மணி முதல் தேர்வர்கள் அவர்கள் எழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம்


தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தங்கள் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கிராம நிர்வாக அலுவலர் பதவி உள்பட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான 9351 காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 20 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கான இணையவழி விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதி உள்ளிட்ட சில விவரங்களை அவர்களே மாற்றிக் கொள்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்தது. இதற்கும் டிசம்பர் 20-ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது.

எனினும், சில விண்ணப்பதாரர்கள் தங்களது பிறந்த தேதி, பாலினம், ஜாதி, ஆதரவற்ற விதவை, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகளுக்கான தகவல் ஆகியவற்றை விண்ணப்பத்தில் தவறுதலாக தெரிவித்துள்ளதாகத் தெரிவித்து அதனை மாற்றக் கோரி மனு அனுப்பியுள்ளனர். எனவே, தகவல் விவரங்களில் மட்டும் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில், இணையதளத்திலிருந்து படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கையொப்பமிட்டு ஜனவரி 10-ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் மட்டுமே தேர்தவாணைய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மின்னஞ்சல் மூலம் பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் தனிநபர் கைவிரல் ரேகை பாதுகாப்பு

ஆதார்' பதிவேட்டில் உள்ள, தனி நபர் கைவிரல் ரேகையை பாதுகாக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், வங்கிக் கணக்கு, அலைபேசி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது. எனினும், தனிப்பட்ட விஷயங்கள், ஆதாருக்காக சேகரிக்கப்படுகின்றன. அவை கசிந்தால், பெரும் பாதிப்புகள் ஏற்படும் என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், 500 ரூபாய் கொடுத்தால், தனிநபரின் ஆதார் குறித்த அனைத்து விபரங்களையும், சிலர் விற்பதாக புகார் எழுந்துள்ளது. அதை, அரசு மறுத்துள்ளது. ஆதாரில், 'பயோமெட்ரிக் டேட்டா' என்ற, தகவல் தொகுப்பில், தனிநபர் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. அதை, யாரேனும் போலியாக தயாரித்து, அதன் வாயிலாக பயனடைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் கிளப்பப்படுகிறது. அதைப் போக்க, ஒரு வழி உள்ளது.

ஆதார் அமைப்பின், www.uidai.gov.in என்ற, வலைதளத்திற்குள் நுழைந்ததும், 'ஆதார் சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'செக்யூர் பயோமெட்ரிக்ஸ்' என்ற வார்த்தையை பார்க்கலாம். அதன் அருகில், 'லாக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ்' என்ற இடத்தில், 'கிளிக்' செய்ய வேண்டும். பின், உரிய இடத்தில், ஆதார் எண்ணை பதிவிட்டால், அலைபேசிக்கு, 'பாஸ்வேர்டு' வரும். அதை பதிவிட்டால், உங்கள், பயோமெட்ரிக் கைவிரல் ரேகை, 'லாக்' ஆகிவிடும்.

அதாவது, யாருமே அதை பார்க்க முடியாததாகி விடும். அதை நீங்களே கூட, எங்கும் பயன்படுத்த முடியாது. அதை, மீண்டும் செயல்படுத்த, இணையதளத்தில், அதே வழிமுறையை பின்பற்றி, 'அன்லாக்' செய்தால் மட்டுமே முடியும்.

அண்ணாமலை பல்கலையில் நிலுவைச் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்


Wednesday, January 03, 2018

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வர வேண்டும்


தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்தே பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் பணியின் போது கட்டாயம் அடையாள அட்டையை அணிந்து கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி புகைப்படம், பணியில் சேர்ந்த தேதி, பெயர், முகவரி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய அடையாள அட்டை தயாரித்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு சில பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் மட்டுமே அடையாள அட்டையை அணிந்து வந்தனர். பெரும்பாலான பள்ளிகளில் தமிழக அரசின் உத்தரவை கடைபிடிக்கவில்லை என்று பள்ளிக் கல்வித்துறைக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் வரும் 8ம் தேதி முதல் அடையாள அட்டை அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி முதல் அனைத்து வருவாய் மாவட்டங்களிலுள்ள அனைத்து வகை தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் நிழற்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பணியின்போது அணிய வேண்டும். அப்படி அடையாள அட்டை அணியாமல் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணிக்கு வந்தால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவுப்படி கல்வி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.