Monday, November 06, 2017
பள்ளி போட்டிகளில் சினிமா பாடலுக்கு தடை
பள்ளி கலையருவி திருவிழாவில், சினிமா பாடல்கள் கூடாது' என, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளது. தமிழக பள்ளிகளில், கலையருவி திருவிழா போட்டிகள் துவங்கியுள்ளன. பள்ளி அளவில், நேற்று போட்டிகள் நடத்தப்பட்டன. வட்டார அளவிலும், பின், மாவட்ட அளவிலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மதிப்பெண், தரம் எண் வழங்கப்படும். இதில், நடனம், ஓவியம், கலை, மாறுவேடம், கையெழுத்து, பழமொழி கூறல், பாடல், இசைக் கருவிகள் இசைத்தல், கதை, கட்டுரை எழுதுதல் என, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. 'இவற்றில், மாணவர், மாணவியர் மட்டுமே, கட்டாயம் பங்கேற்க வேண்டும். தனியார் இசைக் குழுவினரை அழைக்க கூடாது. திரைப்பட பாடல்கள், எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது' என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வாட்ஸ் ஆப்'பில் வதந்தி : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை
ஆசிரியைகள், அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகம் குறித்து, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்திகளை பரப்பினால், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் மற்றும் அதிகாரிகளை விமர்சிக்கும் வகையில், வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், கார்ட்டூன்கள், படங்கள், கேலி செய்யும் வீடியோக்கள், மீம்ஸ் படங்கள் என, அதிகளவில் பதிவுகள் வருகின்றன.
சம்பந்தப்பட்டோர் மீது, மாவட்ட போலீசார் வழியாக நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. போலீசார் விசாரணையில், சமூக வலைதள பதிவுகளை பரப்புவோரில், அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், 25 சதவீதம் பேர் உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து, போலீசாரும், கல்வி அதிகாரிகளும் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதில், வரம்பு மீறி, வாட்ஸ் ஆப்பில் தகவல்களை பரப்புவோர், ஒழுக்க கேடாக நடந்து கொள்ளும் ஆசிரியர்களை, 'சஸ்பெண்ட்' செய்ய, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.
இதன்படி, புகாருக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்கள், முதற்கட்டமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். வரும் காலங்களில், ஒழுக்க கேடான புகார்கள் வந்தால், விளக்கம் கேட்காமல், சஸ்பெண்ட் செய்யப்படுவதுடன், போலீசார் வழியாக, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Sunday, November 05, 2017
உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மாறுதல் கலந்தாய்வு
தமிழகத்தில் 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதல் வழங்குவதற்கான கலந்தாய்வுக்கு முன்னுரிமை பட்டியல் தயாரிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையில் 2017-18ம் கல்வி ஆண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் 350 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு பணி மாறுதல், அதனை தொடர்ந்து பொதுமாறுதல் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்காக அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களிடம் இருந்து இன்று (6ம் தேதி) முதல் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. 10ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பணி மாறுதல் வழங்குவதற்கான முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 11ம் தேதி மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலும், 12ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலும் வெளியிடப்பட இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக ஆசிரியர்களுக்கு சிறப்பு, 'டியூஷன்' : 'ஆன்லைன்' வகுப்பில் பங்கேற்க பயிற்சி
மத்திய அரசின், 'ஆன்லைன்' படிப்பில் சேர்ந்த, ௨௫ ஆயிரம் ஆசிரியர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வித்துறை வழியாக, 'டியூஷன்' என்ற, சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில், 'பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் எடுக்காதோர் மற்றும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாதோர். 'மேலும், மத்திய அரசின், என்.ஐ.ஓ.எஸ்., என்ற, தேசிய திறந்தவெளி பள்ளியில், இரண்டு ஆண்டு டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற்றால், பணியில் நீடிக்கலாம்' என, சலுகை வழங்கப்பட்டு உள்ளது. 'இச்சலுகையை பயன்படுத்தி, படிப்பை முடிக்காவிட்டால், 2019 மார்ச்சுக்கு பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியிலிருந்து நீக்கப்படுவர்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து, என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்புக்கு, அக்டோபரில், 'ஆன் - லைன்' பதிவு நடந்தது. இதில், நாடு முழுவதும், 15 லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இருந்து மட்டும், 2௫ ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அப்படி விண்ணப்பித்தோர், மத்திய அரசின், 'ஸ்வயம்' அமைப்பின், https://swayam.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து, புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய, உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல், ஆன்லைனில் நடத்தப்படும் வகுப்புகளில் பங்கேற்கவும், ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழகம் முழுவதும், ௩௦ இடங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் வழியாக, இரண்டு நாட்களாக டியூஷன் என்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பது எப்படி, இந்த படிப்புக்கான பாடங்கள் எவை என, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரி கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
பள்ளிகளை தேடி புத்தக கண்காட்சி : கல்வித்துறையில் புதிய முயற்சி
பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்தால், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும், பள்ளிக்கல்வியில் தரத்தை உயர்த்த, அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை அறிவித்துஉள்ளார். நுாலக மேம்பாடு மற்றும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நுாலகங்களுக்கும், மாணவர்களுக்கும் அரிய வகை புத்தகங்களை வழங்கும் வகையில், புத்தக கொடை திட்டத்தையும், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த, புத்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வளாகங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு நாள் புத்தக கண்காட்சி நடத்தலாம். இதற்கு அதிகாரிகளை அணுகினால், புத்தக தலைப்புகள் மற்றும் தரத்தை பார்த்து, கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
கல்வி, ஒழுக்கம், தொழில்நுட்பம், சமூக சிந்தனை, வரலாறு போன்ற வற்றை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்கள் மட்டும், இந்த கண்காட்சியில் அனுமதிக்கப்படும். மாணவர்களின் எதிர்காலத்துக்கும், ஒழுக்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் எந்த புத்தகங்களையும், கண்காட்சியில் வைக்க முடியாது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Saturday, November 04, 2017
கணினிமயமாக்கியதில் அலட்சியம் 70% பணி பதிவேடுகளில் குளறுபடி அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணி பதிவேடுகளை கணினிமயமாக்கம் அவுட்சோர்சிங் முறையில் செய்யப்பட்டதில் 70 சதவீதம் குளறுபடி நடந்துள்ளது. இதனால் ஓய்வூதிய பலன்கள் பெறும் போது சிக்கல் ஏற்படும் என ஊழியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசுத்துறைகளில் அலுவலக உதவியாளர் முதல் உயர் அதிகாரிகள் வரை, 7 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களாக 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அரசு ஊழியர்களின் பணி பதிவேடு என்பது, அவர்களின் உயிர்நாடி என கருதப்படுகிறது. ஒவ்வொருவருடைய பணி நியமனம் முதல் அவர்கள் ஓய்வு பெறும் வரை உள்ள அனைத்து விவரங்களும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கும். பல்வேறு காரணங்களால் பேப்பரில் உள்ள பணி பதிவேட்டை பராமரிப்பதில், சிக்கல் இருந்து வருகிறது. குறிப்பாக, ஒருசில அலுவலகங்களில் உள்நோக்கத்தோடு பணி பதிவேடுகள் திருடப்படுவதுடன், திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இதுபோன்ற குறைபாடுகளை களைய, அனைத்து பதிவுகளும் ஆன்லைனுக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.
அதன் ஒருபகுதியாக, ஊழியர்களின் அனைத்து விவரங்களும் கணினிமயமாக்கும் நடவடிக்கை கடந்த சில மாதங்களாக கருவூலத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியானது அவுட்சோர்சிங் முறையில், தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட பதிவுகள் சரியாக உள்ளதா? என அரசு ஊழியர்களுக்கு அனுப்பி, சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கணினிமயமாக்கப்பட்ட 70 சதவீத பதிவுகள் குளறுபடிகளுடன் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் கூறியதாவது: பணி பதிவேடுகள் கணினிமயமாக்கும் பணிகள் முற்றிலும் அனுபவமில்லாத, கல்லூரி மாணவர்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எந்தெந்த விவரங்களை எங்கு குறிப்பது என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை. இருப்பதை அப்படியே காப்பியடிக்கும் வேலையை கூட, சரிவர மேற்கொள்ளவில்லை. கணினிமயமாக்கும் பணியை பலகோடி ரூபாய்க்கு அவுட்சோர்சிங் முறையில் மேற்கொண்டிருப்பது அபத்தமானது. அரசு ஊழியர்களையே தங்களது பதிவுகளை முறைப்படுத்தி கொடுக்க உத்தரவிட்டிருந்தால், ஒரு சில மணிநேரங்களில் பணிகள் முடிந்திருக்கும். துல்லியமாகவும் இருந்திருக்கும். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பதிவுகளில், பெரும்பாலான இடங்களில் தவறு நடந்துள்ளது. குறிப்பாக, ஊழியர்கள் பணியில் சேர்ந்த தேதி, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற தேதி, பயிற்சி மேற்கொண்ட நாள் போன்ற தேதிகள் தொடர்பான விவரங்கள் எதுவும் தகுந்த இடங்களில் குறிப்பிடப்படவில்லை.
கணினிமயமாக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு, பணி பதிவேட்டின் வரைமுறை கூட தெரிந்திருக்கவில்லை. கணினியில் ஏற்றி சரிபார்க்க அனுப்பப்பட்டதில் கூட, பலரது பதிவேடு காணாமல் போயிருந்தது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவரது விவரங்கள் அனைத்தும் கணக்கு தணிக்கை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். இதில், அவர்களின் பணி பதிவேடுகள் தான் முக்கிய இடம்பெறும். அவற்றில் குளறுபடிகள் இருந்தால், ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கவும் வாய்ப்புள்ளது.
இப்படிப்பட்ட அதிமுக்கியமான பதிவேடுகளை குளறுபடிகளுடன் மேற்கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து, குளறுபடிகளை முழுமையாக சரிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஊதியக்குழு அறிவிப்பில் அதிருப்தி: போராட்டம் நடத்த ஆசிரியர் கூட்டணி முடிவு
ஊதியக்குழுவால் பலன் இல்லை. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின் 'ஜாக்டோ -ஜியோ' போராடாவிட்டால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் மோசஸ் தெரிவித்தார் திண்டுக்கல்லில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் மோசஸ் தலைமையில் நடந்தது. மாநில பொதுச்செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதன்பின் மாநில தலைவர் மோசஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 1.1.2006ல் அறிவிக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவில் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மறுக்கப்பட்டது. ஜாக்டோ -ஜியோ தொடர் போராட்டம் நடத்தியும், எட்டாவது ஊதியக்குழுவிலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இந்த ஊதியக்குழு அறிவிப்பால் எந்த பலனும் இல்லை. அறிவிக்கப்பட்டுள்ள ஊதியக்குழு குறித்து ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மிகுந்த வேதனையை தெரிவிக்கிறது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு இப்பிரச்னைக்கு நீதிமன்ற தீர்ப்பு வழிகாட்ட வேண்டும். வழிகாட்டவில்லை என்றால் ஜாக்டோ -ஜியோ இக் கோரிக்கையை முன்னிலைப்படுத்தி உடனே போராட்டம் அறிவிக்க வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டம் அறிவிக்காவிட்டால் தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி அடுத்த நாளே தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.
Friday, November 03, 2017
பி.எஸ்சி., நர்சிங் 9ல் கவுன்சிலிங்
தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில், 759 இடங்கள் காலியாக உள்ளன. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எஸ்சி., நர்சிங்., - பி.பார்ம்., உட்பட, ஒன்பது துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு ஒதுக்கீட்டிற்கு, 8,381 இடங்கள் உள்ளன. இதற்கு, இரண்டு கட்ட கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில், 759 காலி இடங்கள் உள்ளன. இதற்கான, மூன்றாம் கட்ட கவுன்சிலிங், சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நவ., 9, 10ல், நடக்கும் என, மருத்து கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
நகைகளுக்கு, 'ஹால்மார்க்': மத்திய அரசு அதிரடி
'பொதுமக்கள் வாங்கும் தங்க நகைகளின் தரத்தை உறுதி செய்யும் வகையில், கடைகளில் விற்கப்படும் நகைகளில், தங்கத்தின் தரம் குறித்த, 'ஹால்மார்க்' முத்திரை இடம் பெறுவது கட்டாயம் ஆக்கப்படும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, லோக் ஜனசக்தியைச் சேர்ந்த, மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் கூறியதாவது:
மக்கள் வாங்கும் தங்கத்தின் தரத்தை உறுதி செய்வது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. நகை கடைகளில் விற்கப்படும் தங்க நகைகளின் தரம் குறித்து, வாடிக்கையாளர்கள் அறிவது அவசியம்.எனவே, அனைத்து நகை கடைகளிலும், ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட நகைகளை மட்டுமே, விற்பனை செய்ய வேண்டும் என, விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தற்போது, சில கடைகளில், பி.ஐ.எஸ்., முத்திரையிட்ட நகைகள் விற்கப்படுகின்றன. எனினும், அவற்றில், தங்கத்தின் தரம் குறித்த போதுமான அம்சங்கள் இல்லை. எனவே, ஹால்மார்க் முத்திரை பெற்று விற்பனை செய்வது அவசியம். நகைகளின் தரத்திற்கு ஏற்ப, 14, 18, 22 காரட் தங்க நகைகளுக்கு, ஹால்மார்க் முத்திரை வழங்கப்படும். இந்த நடைமுறையை, 2018 ஜனவரிக்குள் அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
படைப்புகள்
💐💐💐💐💐💐💐💐💐💐
*படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.*
💐💐💐💐💐💐💐💐💐💐
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின்
*இருமாத கல்வி இதழ் : புது விழுது*
அன்புமிக்க நண்பர்களுக்கு வணக்கம்..
புது விழுது (நவ.-டிச.) இதழுக்கு படைப்புகள் வரவேற்கப்படுகின்றன..
👉🏼நீங்கள் வாசித்த.. உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய..
வகுப்பறை செயல்பாடுகளில் மாற்றத்தை உருவாக்க உந்து சக்தியாக இருந்த கல்வி சார்ந்த நூல்களை அறிமுகம் செய்யலாம்..
👉🏼உங்கள் வகுப்பறையில் கற்றல் கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்..
👉🏼கற்பித்தலில் புதிய உத்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
👉🏼நீங்கள் பார்த்து ரசித்த கல்வி சார்ந்த குறும்படங்கள் குறித்து எழுதலாம்..
👉🏼தங்கள் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்..
👉🏼வகுப்பறை செயல்பாடுகளில் உதவக் கூடிய ஆண்டிராய்டு செயலிகளின் பயன்பாடு குறித்து பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்களது சிறந்த அனுபவங்கள் ஆசிரிய சமூகம் முழுமைக்கும் பயன்பட வேண்டும்..👍🏽
🎤எனவே தான்
ஆசியர்களாகிய
உங்கள் படைப்புகளுக்கு ஒரு மேடை அமைத்து தருகிறது தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
உங்கள் படைப்புகள்..
*""ஏ4 தாளில் இரண்டு பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்..""*
*புதியதாகவும் தங்களது சொந்த படைப்பாகவும் இருப்பது அவசியம்..*
*அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்*
tnsf.vizhuthu@gmail.com
வாட்ஸ்அப்: 9047140584
*படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்* நவம்பர், 15
*இதழ் வெளியாகும் நாள்*
டிசம்பர் 3
அன்புடன்
✍🏼 தேனி சுந்தர்
இதழாசிரியர்
*புது விழுது*
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
9047140584
Thursday, November 02, 2017
வி.ஏ.ஓ., பதவிக்கு தனி தேர்வு இல்லை : டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு
'வி.ஏ.ஓ., எனப்படும் கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான தேர்வு, குரூப் - ௪ தேர்விலேயே இணைத்து நடத்தப்படும்' என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் அறிவிப்பு:
டி.என்.பி.எஸ்.சி.,யால் நடத்தப்படும், குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளுக்கும், வி.ஏ.ஓ., பதவிக்கும், பத்தாம் வகுப்பு தான் கல்வித் தகுதி.இரண்டு பதவிகளுக்கும், தனியாக தேர்வு நடத்தும்போது, குரூப் - 4 பணிகளுக்கு, 15லட்சம் பேரும், வி.ஏ.ஓ., பதவிக்கு 12 லட்சம் பேரும் விண்ணப்பிக்கின்றனர். வி.ஏ.ஓ., பதவிக்கு விண்ணப்பிக்கும், 60 சதவீதம் பேர், குரூப் - ௪ தேர்வுக்கும் விண்ணப்பிக்கின்றனர். தனியாக நடத்தும்போது, ஒவ்வொரு தேர்வுக்கும், 15 கோடி ரூபாய் செலவாகிறது. இரண்டு தேர்வுக்கும், தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க, அதிக செலவாகிறது. இதுவரை நடந்த தேர்வுகளை ஆய்வு செய்ததில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், 20 சதவீதம் பேர், மறு பதவிக்கு, மற்றொரு தேர்வு எழுதுவது தெரிகிறது. எனவே, குரூப் - ௪ல் அடங்கிய பதவிகளில், வி.ஏ.ஓ., தேர்வையும் இணைத்து.
ஒரே தேர்வாக நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. குரூப் - 4ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அந்தந்த பதவிக்கு, தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல், வி.ஏ.ஓ., தேர்விலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.எனவே, பயிற்சி குறித்த பகுதி, தேர்வுக்கான பாடத் திட்டத்தில் தேவை இல்லை என, டி.என்.பி.எஸ்.சி., முடிவு செய்து உள்ளது.
தேசிய திறனாய்வு தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' பெற வசதி
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், வரும் ஆண்டுகளில் கல்வியை தொடர, மத்திய அரசு உதவித்தொகை வழங்குகிறது. இதை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வு, நாளை நடக்கிறது. தமிழகத்தில், ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வை எழுத உள்ளனர். இதற்கான ஹால் டிக்கெட்டை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் கல்வி செலவு படி அதிகரிப்பு
மத்திய அரசு ஊழியர்களின், மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக வழங்கப்படும் படியை உயர்த்தி, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின், குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஒரு குறிப்பிட்ட தொகை, சிறப்பு படியாக வழங்கப்படுகிறது.
அரசு ஊழியர்களின் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்வி செலவுக்காக, ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அந்த தொகையை, 54 ஆயிரம் ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது; இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள், தங்கள் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்த தொகையில், 54 ஆயிரம் ரூபாய் வரை திரும்ப பெற முடியும். மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவரும், மத்திய அரசு ஊழியராக இருந்தால், அவர்களில் யாரேனும் ஒருவர் மட்டுமே இந்த தொகை கோரி விண்ணப்பிக்க முடியும்.