இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, September 21, 2017

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மதுரையை சேர்ந்த வக்கீல் சேகரன்  மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு இடைக் கால தடை விதித்தனர். தடையை மீறி போராட்டம் தொடர்ந்ததால் கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கடந்த 15-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டனர். அதன் பேரில் நிர்வாகிகள் சுப்பிரமணியன்,  தாஸ், மோசஸ்  ஆஜரானார்கள். அவர்களிடம் போராட் டத்தை வாபஸ் பெற்று உடனடியாக வேலைக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நீதிபதிகள்  சசிதரன், சுவாமிநாதன் எச்சரித்தனர். அதைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது என அறிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்காக  தமிழக அரசின் தலைமைச்
செயலாளர் 21-ந்தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்று உத்தர விட்டனர். அதன்படி தலைமைச் செயலாளர்  கிரிஜா வைத்தியநாதன் இன்று மதுரை ஐகோர்ட்டில் ஆஜரானார்.

12.30 மணியளவில் வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணன், ஜாக்டோ-ஜியோ சார்பில் மூத்த வக்கீல் பிரசாத் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஊதியக்குழு அறிக்கையை அமல்படுத்த சரியான கால அளவு குறித்து ஆலோசனை நடத்தி தெரிவிக்குமாறு அரசு தரப்பிடம் கூறினர். 

வேலை நிறுத்ததில் ஈடுபட்ட  அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிறுத்திவைக்கவும்  என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு உள்ளது. வேலை நிறுத்த நாட்களை வேலை செய்து ஈடாக்கி கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்த நாட்களை சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்ய வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் 7ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்த எத்தனை நாட்களாகும் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அக். 13ஆம் தேதிக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. முடிவு எடுப்பதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கான இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு  உள்ளது.

இணைக்கப்பட்ட 6 வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30க்குப் பின் செல்லாது: எஸ்பிஐ அறிவிப்பு


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைந்த 6 துணை வங்கிகளின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த 6 வங்கிக் கிளைகளிலும் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இந்திய பினான்சியல் சிஸ்டம் (IFS) கோட் கொண்ட புதிய காசோலைப் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் எஸ்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

பாரதிய மகிலா வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் காசோலைகள் செப்டம்பர் 30ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்பதால் அதனை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதில்லாமல், ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ராய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆஃப் ஹைதராபாத் ஆகிய ஆறு வங்கிகளின் கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் புதிய காசோலைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த ஆறு வங்கிகளும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து விட்டதால், வங்கிகளின் பழைய காசோலைகளும், அதன் ஐஎஃப்எஸ் கோட் எண்களும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 20, 2017

ஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்


ஜாக்டோ -ஜியோ போராட்டம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை (செப்.21) ஆஜராகிறார். அப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடுகளை அவர் விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ -ஜியோ முன்வைத்துள்ளது. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில வாரங்களாக பல்வேறு கட்டப் போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தியது. இந்தப் போராட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பவும், இந்தப் பிரச்னை தொடர்பாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரும் 21 -ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமெனவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வியாழக்கிழமை ஆஜராகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்கிறார்.

அரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்ப்பு


தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழை சரிபார்க்க, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும், பட்டதாரி மற்றும் டிப்ளமா ஆசிரியர்கள், அரசின் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2009ல், இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தன.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுகளில், ஆசிரியர் தகுதித் தேர்வை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டது. 2014ல், அவகாசம் முடிந்தும், ஏராளமான ஆசிரியர்கள், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால், அவகாசத்தை, 2019 வரை, மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதன்படி, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்கள், மத்திய அரசின் தேசிய திறந்த நிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., அமைப்பில், டிப்ளமா கல்வியியல் படிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களில், பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெறாதோர், என்.ஐ.ஓ.எஸ்., டிப்ளமா படிப்பில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டுஉள்ளது.

எனவே, தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 65 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின், பிளஸ் 2 சான்றிதழ்களை சரிபார்க்குமாறு, மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதில், 50 சதவீத தேர்ச்சி பெறாதோர், மத்திய அரசின் படிப்பை, 2019 மார்ச், 31க்குள் முடிக்காவிட்டால், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி


தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாமல், பழைய நிலையில் உள்ள பாடத்திட்டத்தை புதுப்பிக்க, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. பள்ளிக்கல்வி செயலர், உதயசந்திரன் மேற்பார்வையில், பாடத்திட்ட தயாரிப்பு பணிகள் நடக்கின்றன.

இதற்கான வரைவு கலை திட்ட அறிக்கை தயாரித்து, ஆய்வு பணிகள், இறுதி கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தில், 3 - 10ம் வகுப்பு வரை, கணினி பாடத்தை கட்டாயமாக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. கணினி பாடத்தை, அறிவியல் பாடத்துடன், தகவல் தொழில்நுட்ப கல்வியாக இணைத்து வழங்கலாமா அல்லது துணை புத்தகமாக வழங்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டம் வந்தால், கணினி பாடத்தை நடத்த, அறிவியல் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் ஊதிய பிடித்தம்,ஒழுங்கு நடவடிக்கை செயல்முறைகள்

Tuesday, September 19, 2017

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை


மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.

ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர்.

இப்படி, மாணவர் விகிதத்தை விட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. உத்தரவு : இது குறித்து, 22ம் தேதி, சென்னையில், மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாணவர் சேர்க்கை விபரம், மூடப்பட்ட, செயல்படாத பள்ளிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மின் வசதியில்லாத பள்ளிகள், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை, 'ஸ்மார்ட்' பள்ளி தேர்வு பட்டியல் என, ௩௬ வகை அம்சங்களுடன் கூட்டத்தில் பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்


'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், ௩,௦௦௦ அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரை, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நுாலகங்கள் மேம்பாடு மற்றும் புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுதோறும், ௨௫ ஆயிரம் ரூபாய் நிதி தரப்படுகிறது. இந்த நிதியில், நுாலகங்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கப்படும். ஐந்து ஆண்டுகளாக, மாணவர்களுக்கு எந்தவித பயன்பாடும் இல்லாத புத்தகங்களை, தனியாரிடம் வாங்கி கொடுத்ததால், பண விரயம் ஏற்பட்டதுடன், மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி சரியாக கிடைக்கவில்லை.

இந்த முறைகேடுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த ஆண்டு, அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளிகளிலும், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி புத்தகங்கள் வழங்க, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, நுழைவுத் தேர்வு பயிற்சி புத்தகங்களை வழங்க, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட இயக்குனரகம், பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை டிராய் குறைத்து உள்ளது. இதன்படி மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணத்தை 14 காசுகளில் இருந்து 6 காசுகளாக குறைத்துள்ளது. இந்தகட்டண குறைப்பு வரும் அக்.,1-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 2020 ஆண்டு முதல் அழைப்பு துண்டிப்பிற்கு கட்டணம் இல்லை எனவும் டிராய் தெரிவித்துள்ளது.

Monday, September 18, 2017

முதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்


அரசு மற்றும் நகராட்சி மேனிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி தேர்தல் முடிவு வெளியானது. அதில் 2538 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 29ம் தேதி சான்று சரிபார்ப்பு நடந்தது. தற்போது பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான கவுன்சலிங் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடக்கிறது.

மேற்கண்ட பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கள் முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு அசல் கல்விச் சான்றுகளுடன் செல்ல வேண்டும். முதுநிலை ஆசிரியர்களை பொறுத்தவரையில் முதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான கவுன்சலிங்கும், பின்னர் வேறு மாவட்டங்களில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களுக்கான கவுன்சலிங்கும் நடத்தப்படும். பணி நியமன உத்தரவுகள், சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு அரங்கில் 21ம் தேதி நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குவார்.

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கான 18,000 கோடி உடனடியாக தரப்படும்


அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் அரசின் பங்கு தொகை செலுத்தப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்,” புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு தன்னுடைய பங்களிப்பு தொகை செலுத்துகிறதா? செலுத்தவில்லை என்றால் ஏன் செலுத்துவதில்லை? எப்போது செலுத்தப்படும்? 2003ம் ஆண்டிற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியம் வழங்கப்பட்டதா? அப்படி வழங்கப்படவில்லை என்றால் எப்போது கொடுக்கப்படும்? ஆகிய கேள்விகளுக்கு தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 18ம் தேதி நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், நிதித்துறை செயலாளர் சித்திக் சார்பில் அரசு கூடுதல் பிளீடர் சஞ்சய் காந்தி நீதிமன்ற கேள்விகளுக்கு பதிலளித்து நேற்று அறிக்கை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2004 ஆகஸ்ட் 4ம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவின்படி அரசு ஊழியர்களின் மாதாந்திர ஊதியத்தில் 10 சதவீதம் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்படுகிறது. இத்துடன் அரசின் பங்களிப்பாக 10 சதவீதம் சேர்த்து பொது கணக்கில் செலுத்தப்படுகிறது. மார்ச் 2017 வரை வட்டியுடன் சேர்ந்து ரூ.18,016 கோடி இருப்பு உள்ளது. 2016-17 கணக்கு சீட்டு அவரவர்களுக்கு கொடுக்கப்பட்டு, இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பங்களிப்பு ஓய்வூதியம் தொடர்பாக 2016 பிப்ரவரி 22 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு, மரணம், பணி நீக்கம் செய்யப்பட்டால் அந்த தொகை உடனடியாக கொடுக்கிறோம். கருவூலம், கணக்கு துறை ஆணையர் அறிக்கைபடி 2017 ஆகஸ்ட் 31 வரை பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் கணக்கை முடிக்க கேட்டு 7450 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 3,288 ஊழியர்களுக்கு ரூ.125,24,24,317 வழங்குவதற்கான இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கான ஆவணங்கள் கிடைத்தபிறகு ஒப்புதல் வழங்கப்படும். அரசு தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு (இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.

தன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசு தரப்பில் பதில் மனு


பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்காக ஒவ்வோர் அரசு ஊழியரும் தனது மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் இருந்து 10 சதவீதத்தை பங்களிப்பாகச் செலுத்தி வருகின்றனர். ஊழியர்களின் பங்களிப்புத் தொகையோடு, அரசும் தன் பங்களிப்பை தவறாமல் பொதுக் கணக்கில் செலுத்தி வருகிறது. கடந்த 2017 மார்ச் 31-ஆம் தேதி வரை இந்தத் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ. 18 ஆயிரத்து 16 கோடியாக உள்ளது. 2016-2017 ஆம் ஆண்டுக்கான கணக்கு விவரங்களும் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவல்கள் இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பணி ஓய்வு, திடீர் மரணம், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு உடனடியாக அவர்களின் கணக்கு முடிக்கப்பட்டு ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.கருவூல கணக்குத்துறை அறிக்கையின்படி கடந்த ஆக. 31-ஆம் தேதி வரை தன் பங்களிப்பு ஓய்வூதியக் கணக்கை முடித்து வழங்கக்கோரி 7,409 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி ஓய்வுபெற்ற, ராஜினாமா செய்த மற்றும் இறந்த ஊழியர்களின் சார்பில் 3,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டு ரூ.125 கோடியே 24 லட்சத்து 24 ஆயிரத்து 317-க்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இந்த திட்டத்தின் கீழ் தொய்வின்றி தனது பங்களிப்பை வழங்கி வருகிறது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதி, வரும் செப்.22-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்


ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பேச்சு நடத்தியும், சுமுக முடிவு கிடைக்கவில்லை.

பின், நீதிமன்ற தலையீட்டால், செப்., 15ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில், போராட்டம் நடந்த போது, அரசு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், விளக்கம் கேட்டு, ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்கபட்டு வந்தது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, 'மெமோ' அனுப்பும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிறுத்தி உள்ளனர். பதிவு தபாலில் அனுப்பப்பட்ட மெமோக்களையும், ஆசிரியர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்

ஜாக்டோ ஜியோ 19-9-17 விளக்க கூட்டம்





நவோதயா பள்ளிகளை ஏன் எதிர்க்க வேண்டும்: கல்வியாளர்கள் கூறும் காரணங்கள்


காரணம் ஒன்று: ஒவ்வொரு ஆண்டும் நவோதயா பள்ளிகளில்,நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு, ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மற்றும் 11-ஆம்வகுப்புகளில் அதிகபட்சமாக 80 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் போது அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது. இதைமீறும் நடவடிக்கையாக நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. இதன் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.

காரணம் இரண்டு: நவோதயா பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் 80 மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்பது விதி.  ஒரு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உள்ளபோது அவர்களுள் 80 மாணவர்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுக்கு தரமானக் கல்வியைத் தருகிறோம் என்பது மாணவர்களுக்கு மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்துவதாக உள்ளது என்கிறார்கள்.

விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கடந்த பிறகும், கிராமப்புறங்களில் உள்ள ஏழை குடும்பத்தைச் சார்ந்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் அதிநவீன வசதிகளைக் கொண்ட உயர்தர கல்வி, மற்றவர்கள் வசதிகளற்ற பள்ளிகளில் பயிலட்டும் என்பது குழந்தைகளிடையே தாழ்வு மனப்பான்மையை உருவாக்காதா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

காரணம் மூன்று: ஒரு மாவட்டத்திற்கு ஒரு கல்விக்கூடம் என்ற அளவில் நவீன வசதிகளுடன் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும். இந்தியா முழுவதும் குழந்தைகளின் இருப்பிடங்களுக்கு அருகில் முழுமையான கட்டமைப்பு வசதிகள் கொண்ட அருகாமைப் பள்ளிகள் உருவாக்கப்படவேண்டும் என்று 1966ல் கோத்தாரி குழு பரிந்துரை செய்தது. ஆனால் மாவட்ட தலைமையிடத்தில் நவோதயா பள்ளிக்கூடம் அமைக்கப்பட்டால், கற்பதற்காக குழந்தைகள் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெகுதூரம் உள்ள உண்டுஉறைவிடப் பள்ளியில் படிக்கவேண்டியுள்ளது.

தமிழகத்தில் 1950 முதல் 1960 வரை காமராஜர் ஆட்சிக்காலத்தில், மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு தொடக்கப்பள்ளி, 5 கிலோ மீட்டருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி என தமிழ்நாடு அரசே பள்ளிகளைத் திறந்துள்ளது. இந்த பள்ளிகளின் தரத்தை உயர்த்தி அனைத்துக் குழந்தைகளும் அருகாமையில்,சிறப்பான கல்வியைப் பெற உதவவேண்டும்.

காரணம் நான்கு: நவோதயா பள்ளிகளை தொடங்க ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் முப்பது ஏக்கர் நிலத்தை மாநில அரசு அளிக்க வேண்டும். ஒரு பள்ளியில் ஒரு மாணவருக்கு ஒரு ஆண்டிற்கு சுமார் ரூ.70,000 முதல் 80,000வரை என்ற அளவில், தமிழகத்திற்கு சுமார் ரூ.600 கோடி நிதி அளித்து, 32 மாவட்டங்களில் மத்திய அரசு நவோதயா பள்ளிகளை திறக்கவுள்ளது.

ஒரு பள்ளிக்கு பல கோடி செலவு என்பதற்குப் பதிலாக சமச்சீராக அனைத்துப் பள்ளிகளுக்கும் அனைத்து வசதிகளையும் செய்து தர அரசு முன்வந்தால் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பயன்பெறுவர். சமத்துவமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் ஏற்படுத்தித் தருவதே இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் என்று அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 கூறுகிறது. ஆனால், நவோதயா பள்ளி ஒரு இடத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மாணவர்களுக்குக் கல்வி அளிப்பது சரியா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அனைவருக்கும் தரமான கல்வி என்பதற்கு பதிலாக குறிப்பிட்ட மாணவர்களுக்கு தரமான கல்வி அளித்தால், அது ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் என்ற கருத்து எழுந்துள்ளது.

காரணம் ஐந்து: நவோதயா பள்ளியில் அளிக்கப்படும் கல்வி தமிழகத்தில் வழங்கப்படும் சமச்சீர் கல்வியைக் காட்டிலும் தரமானது என்ற கற்பிதம் நிலவுகிறது. தமிழகத்தில் ஆரம்ப பள்ளியில் இருந்து உயர்கல்விவரை தாய்மொழி வழியில் அரசுப்பள்ளிகளில் கற்பிக்கப்படும் சமச்சீர் கல்வி எந்தவிதத்திலும் தரம் குறைவானது அல்ல.

கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவில், பள்ளிக் கல்வி பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அவர்களை பதில் எழுதி மதிப்பெண் பெறும் மாணவர்களாக இல்லாமல், அவர்களின் தனித்திறனை அறியவும் பாடத்திட்டங்கள் ஏற்படுத்தப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்