நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் என கடந்த ஏப்ரல் 29ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்தது. தமிழக அரசு இளநிலை, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் நுழைவுத்தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட மசோதாக்களை குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமாக்க மத்திய உள்துறைக்கு அனுப்பியது.
குடியரசு தலைவரிடம் ஒப்புதல் பெற்று தரவில்லை. இந்நிலையில், மே 7ம் தேதி நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு நடந்தது. ஜூன் 8ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என சிபிஎஸ்இ அறிவித்தது. தேர்வில் குளறுபடி உள்ளதாக மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், முடிவை வெளியிட சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்தது. அதில் ஜூன் 26ம் தேதிக்குள் சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவை வெளியிடலாம் என உத்தரவிட்டது. அதன்படி, சிபிஎஸ்இ நீட் தேர்வு முடிவுகளை நேற்று காலை சிபிஎஸ்இ வெளியிட்டது. www.cbseneet.nic.in, www.cbse.nic.in, www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை அளித்து நீட் தேர்வு முடிவை தெரிந்துகொள்ளலாம். நீட் தேர்வு முடிவுகள் தொடர்பாக நீட் தேர்வுக்கான சிபிஎஸ்இ இணை செயலாளர் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வு எழுத, இந்த ஆண்டு 11,38,890 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அதில் 4,97,043 பேர் மாணவர்கள், 6,41,839 பேர் மாணவிகள், 8 பேர் மூன்றாம் பாலினத்தவர். நாடு முழுவதும் 103 நகரங்களில், 1,921 மையங்களில் மே 7ம் தேதி நீட் தேர்வு நடந்தது. அதிகபட்சமாக 9,13,033 பேர் ஆங்கிலத்திலும் குறைந்தபட்சமாக 452 ஒரியா மொழியிலும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழில் நீட் தேர்வு எழுத 15,206 பேர் விண்ணப்பித்திருந்தனர். 10 மொழிகளில் 10,90,085 மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 6,11,739 பேர் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர்.
இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் அளித்த தகவலின்படி நாடு முழுவதும் 470 மருத்துவ கல்லூரிகளும், 308 பல் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அதில் உத்தேசமாக 65,170 எம்பிபிஎஸ் இடங்களும், 25,730 பிடிஎஸ் இடங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மாநில மருத்துவ கல்வி இயக்ககங்கள் தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து, அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையுடன் வௌியிடப்பட்டுள்ள முதல் 25 ரேங்க் பெற்ற மாணவர்கள் பட்டியலில் ஒரு தமிழக மாணவர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.