இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Thursday, May 04, 2017

அரசு பள்ளி மாணவர்களுக்கே இனி பரிசும் பதக்கமும் கிடைக்கும்


வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கே, பதக்கமும், பரிசும் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில், மதிப்பெண் அடிப்படையில், மாநில அளவில், 'ரேங்க்' வழங்கப்படும்.

மாநில மற்றும் மாவட்ட அளவில், முதல் மூன்று இடங்கள் பெறுவோருக்கு, பரிசு, ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வில், ரேங்க் பெறும் மாணவர்களுக்கு, முதல்வர் பரிசு வழங்கி பாராட்டுவார். தமிழ் வழி மாணவர்களுக்கு மட்டுமே, இந்த பரிசு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், 2011ல் அதில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதனால், பரிசு மற்றும் பதக்கத்துக்கு, தனியார் பள்ளி மாணவர்களும், ஆங்கில வழி மாணவர்களும், அதிக அளவில் தேர்வாகினர். அரசு பள்ளியில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள், பெரும்பாலும், மாநில, மாவட்ட ரேங்க் பெறுவதில்லை. மாநில அரசின் பரிசும், பதக்கமும், தனியார் பள்ளி மாணவர்களுக்கே கிடைக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த முறைக்கு, பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் எழுந்தன. அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழி மாணவர்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு முதல், மாநில, மாவட்ட ரேங்குக்கான பரிசுகளை, அரசு பள்ளியிலும், தமிழ் வழியிலும் படிக்கும் மாணவர்களுக்கே வழங்கலாம் என, அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அரசு பள்ளியில், தமிழ் வழி அல்லது ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், பரிசு வழங்குவதா; அரசு பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பரிசு தருவதா என, ஆய்வுகள் நடந்து வருகின்றன.

பள்ளி கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை: கல்வித்துறை


'அரசு தொடக்கப் பள்ளிகளில், கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்க முடியாது' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு ஆசிரியரும், ஆண்டுக்கு, 200 நாட்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் பணியாற்ற வேண்டும்.

உயர், மேல்நிலைப் பள்ளிகளில், ஏப்., 15 முதல் கோடை விடுமுறை துவங்கும். தொடக்கப் பள்ளிகளில், மே, 1ல் தான் விடுமுறை துவங்கும். ஆனால், வெயில் தாக்கம் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கும், ஏப்., 15 முதல் விடுமுறை விட வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம், ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர். அதை ஏற்க, பள்ளிக்கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தினமும், ஐந்தரை மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது. அதன்படி, 200 நாட்களுக்கு, மொத்தம், 1,100 மணி நேரம் பாடம் நடத்தப்படுகிறது.

ஆனால், தொடக்கப் பள்ளிகளில், தினமும், ஐந்து மணி நேரம் தான், பாடம் நடத்தப்படுகிறது. எனவே, 1,100 மணி நேரம் பாடம் நடத்த, 220 நாட்கள் தேவைப்படுகின்றன. எனவே, தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்கவோ, வேலை நாட்களை குறைக்கவோ வாய்ப்பில்லை என, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2-5-17 அன்று TNPTF சார்பில் கல்வியமைச்சரிடம் சமர்பித்த கோரிக்கைகள்

Click below

https://app.box.com/s/643vun8yhr02qxhnric1qtb6zmw1fqie

பி.எட் பயிற்சி பணிபுரியும் பள்ளியில் கற்பித்தல் பயிற்சிக்கு விடுப்பின்றி எடுத்துக்கொள்ளும் செயல்முறைகள்


INSPIRE AWARD 2017-18


மே-3 பத்திரிக்கை சுதந்திர தினம்

மே 3 - உலக பத்திரிக்கை சுதந்திர தினம்

உலகத்தில் வாழும் அத்தனை பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் பொருட்டு மார்ச் 3ந் தேதி உலக பத்திரிக்கை சுதந்திர நாளாள அறிவித்துள்ளது ஐக்கிய நாடுகள் சபையின் யுனஸ்க்கோ பிரிவு.

இந்த நாளை தேர்வு செய்யக்காரணம், 1986 ஆம் ஆண்டு டிசம்பர் 17ந் தேதி, கொலம்பியா அரச பயங்கரவாதிகளால் பிரபல பத்திரிக்கையாளரான எசுப்பட்டோ என்கிற பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த கிலேர்மா கானாசாசா என்பவர் பொகட்டோவில் உள்ள அவரது அலுவலகத்தின் வெளியே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஐ.நாவுடன் தொடர்பில் இருந்தவர். இவர் இறப்புக்கு பின் பத்திரிக்கையாளர்களுக்கான பாதுகாப்புக்கான குரல் உலகம் முழுவதும் எழுந்தது. இதனால் 1993 ஆம் ஆண்டு ஊடக சுதந்திரம் தொடர்பாக ஐ.நா சபை சட்டம் கொண்டு வந்தது. அதன்வழியாக உலக பத்திரிக்கை சுதந்திர தினம் உருவானது.

அதோடு, 1997 முதல், பத்திரிக்கையாளர் கிலேர்மா கானாசாசா பெயரில் ஐ.நா சபை, அநீதிகளை எதிர்த்தும், அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, சாமானிய மக்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு அந்த விருதை வழங்கி கவுரவிக்கிறது. இந்தியாவில் இருந்து இந்த விருதை இதுவரை யாரும் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. அதற்காக இந்தியாவில் யாரும் அதிகாரத்தை எதிர்த்து போராடவில்லை என்பதல்ல அர்த்தம். அதிகார வர்க்கத்தை நோக்கி தன் எழுத்து வழியாக அன்று முதல் இன்று வரை போராடிக்கொண்டு தான் இருக்கிறது இந்திய பத்திரிக்கையுலகம்.

1781ல் வங்காள் கெஜட் என்கிற பத்திரிக்கை அப்போது கவர்னராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸ்க்கு எதிராக பல கட்டுரைகளை எழுதியது. அதில் கோபமான அவர் அந்த பத்திரிக்கை நிர்வாகத்துக்கு பல தொல்லைகளை அரசு இயந்திரம் வழங்கினார். அதுவே இந்தியாவில் முதன் முதலாக பத்திரிக்கை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

கடந்த ஆண்டு ஐநாவின் யுனஸ்கோ அமைப்பு வெளியிட்ட கணிப்பின்படி, சிரியா, ஈரான், ஈராக், லிபியா போன்ற அரபு நாடுகளில் தான் அதிகளவில் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்கிறது. 2015 மற்றும் 2016 ல் மட்டும் 194 ஆண் பத்திரிக்கையாளர்கள், 18 பெண் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் 827 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றது. அதாவது 5 நாட்களுக்கு ஒரு பத்திரிக்கையாளர் வீதம் கொல்லப்பட்டுள்ளனர். போர் நடைபெற்ற சிரியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் போன்ற நாடுகளில் கொல்லப்படும் பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறது. போர் நடைபெறும் பகுதிகள் மட்டும்மல்ல இந்தியா போன்ற போர் நடைபெறாத நாடுகளிலும் பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல், கொலை செய்தல் அதிகரித்தபடியே உள்ளன.

கடந்த 2016 மே மாதம் மாதம் பீகாரில் ராஜீவ்ரஞ்சன் என்கிற பத்திரிக்கையாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார், அதே மாதத்தில் ஜார்கண்ட்டில் 35 வயதான அகிலேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இவர்கள் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் சுட்டுக்கொல்லப்படவில்லை. இவர்கள் எழுதிய செய்திகளால் பாதிக்கப்பட்ட குழுவால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். உத்தரபிரதேசத்தில் ஒரு பத்திரிக்கையாளர் உயிரோடு வைத்து எரிக்கப்பட்டார். இதனை செய்தவர்கள் அந்த மாநில காவல்துறையில் பணியாற்றுபவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

அரசாங்கத்தையும், அரசாங்க ஆதரவு பெற்ற மாபியா கும்பல், அதிகார துஷ்பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளையும், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகரிளையும், கார்ப்பரேட் நிறுவனங்களை எதிர்த்து தான் நேர்மையான பத்திரிக்கையாளர்கள் எழுதுகிறார்கள். எழுதப்படும் செய்தியில் தவறு என்றால் அதை சட்ட ரீதியாக எதிர்க்கொள்ள வழிகள் இருந்தும் மேற்கண்ட யாரும் அந்த வழிகளை தேர்ந்தெடுப்பதில்லை. சட்டத்துக்கு எதிரான வழிகளையே உலகம் முழுவதும் கையாள்கிறார்கள், இந்த நிலை அதிகரிக்கிறது, இதனால் பத்திரிக்கையாளர் சுதந்திரம் படிப்படியாக பறிக்கப்படுகிறது என்பதே உண்மை.

Wednesday, May 03, 2017

அலகு விட்டு அலகு மாறுதல் தடையில்லா சான்று பெற விண்ணப்பம்

ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம்

பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் செய்திக்குறிப்பு பள்ளி கல்வி மற்றும் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1997 முதல், 2,000 வரையிலான பின்னடைவு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களில், போதிய ஆட்கள் கிடைக்காததால், வேலை வாய்ப்பு பதிவு மூலம், புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு, உயர் கல்வி தகுதி பெற்றதற்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்


தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. தமிழகத்தில், மொத்தம், 57 ஆயிரம் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 37 ஆயிரம் அரசு பள்ளிகள், 8,402 அரசு உதவி பெறும் பள்ளிகள். இவற்றில், 86 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.

பள்ளி அருகில் உள்ளோர் நடந்தும், சைக்கிள்களிலும் வருகின்றனர். துாரத்தில் உள்ளோர், பஸ், ரயில், வேன் போன்ற வாகனங்களில் வருகின்றனர். இவர்களில், பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள். மாணவர்கள் ஏதேனும் விபத்தில் சிக்கினாலோ, திடீரென நோய் தாக்கினாலோ, அவர்களின் சிகிச்சைக்காக செலவிட, ஏழைப் பெற்றோர்களால் முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, மாணவர் மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்த, திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள் குழு, புதிய திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு, இலவச மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படுகிறது.

படிப்பு காலம் முழுவதும், மாணவர்கள், இலவசமாக, தரமான சிகிச்சை பெறும் வகையில், தமிழக அரசே, காப்பீடுக்கான பிரீமியம் தொகையை செலுத்த உள்ளது. 'சட்டசபையில் பட்ஜெட் மானிய கோரிக்கையின் போது, இதற்கான அறிவிப்பு வெளியாகும்' என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 1 சேர்க்கை இட ஒதுக்கீடு கட்டாயம்


பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், இட ஒதுக்கீட்டு விதியை மீறக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது. அனைத்து பள்ளிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

கடந்த, 1978 மற்றும் 1994ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளின் படி, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளும், இட ஒதுக்கீட்டு விதியை கடைபிடிக்க வேண்டும். பொதுப் பிரிவு, 31; பழங்குடியினர், 1; ஆதிதிராவிடர், 18; பிற்படுத்தப்பட்டோர், 20; முஸ்லிம், 3.5; பிற்படுத்தப்பட்டோர், 26.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, பொதுப்பிரிவு பட்டியலும் தயாரிக்கப்பட வேண்டும். இதில், எந்த விதிமீறலும் இருக்கக்கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையில் பயிற்சி : ஆசிரியைகள் கொந்தளிப்பு


கோடை விடுமுறையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி மே, 8 முதல், 12 வரை நடக்கிறது.

இதில், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, வருவாய் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தலா, 50 பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. தென் மண்டலத்தில் கணித பாடத்திற்கு திண்டுக்கல், அறிவியல் பாடத்திற்கு திருச்சியில் உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின், முதன்மை கருத்தாளர்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். கோடை விடுமுறையில், ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கப்படுவதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து ஆசிரியை ஒருவர் கூறியதாவது: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது எனக் கூறும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கலாமா. கோடை விடுமுறையில் பெண் ஆசிரியைகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று தங்குவதில் சிரமம் உள்ளது. கோடையில் பயிற்சி வகுப்பை கல்வித்துறை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

*DEE - NEW FORMS- MUTUAL TRANSFER AND UNIT TRANSFER APPLICATION*

Click below

https://app.box.com/s/wqva9wx5zyq52ye8edw41b42evlwcj3l

Tuesday, May 02, 2017

ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளின் விபரம்


கோரிக்கைகள் விவரம்:

பள்ளிகளின் கட்டமைப்பு வசதியை நவீன முறையில் மேம்படுத்துவதன் மூலம் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்தி அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க முடியும். அரசுப் பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறத்தை கவர்ச்சிகரமான வண்ணத்தில் வடிவமைக்க வேண்டும். தொகுப்பூதியம் பெறும் 16,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பரிந்துரைகளை உடனடியாகப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்கப் பள்ளிகளுக்கு அரசுப் பள்ளி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒரு துப்புரவாளர், காவலர், கணினி ஆசிரியர்களைப் பணியமர்த்த வேண்டும். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக மாதம் ரூ.3,000 மட்டுமே பெற்று வரும் அரசுப் பள்ளி துப்புரவுப் பணியாளர்களின் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். கல்வித் துறையில் ஊழலைத் தடுக்கும் வகையில் நிர்வாகச் சீர்திருத்த ஆணையத்தை உடனடியாக ஏற்படுத்த நடவடிக்கை தேவை.

பெற்றோர் ஆசிரியர் சங்கக் கட்டணம், தேசியக் கொடி, வினாத்தாளுக்கு வசூலிக்கும் தொகை ஆகியவற்றை அரசே ஏற்க வேண்டும். நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு சம ஊதியம் ஆகியவற்றைச் செயல்படுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் விருதுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

இது போன்ற ஆலோசனைக் கூட்டங்களை அடிக்கடி நடத்துவதன் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

8 ஆயிரம் ஆசிரியர்கள் பரிதவிப்பு


தமிழகம் முழுவதும் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில் 6,742 பட்டதாரி ஆசிரியர்கள், 1,590 முதுகலை ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களுக்கு மாதம்தோறும் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படும். அதனை கருவூலங்களில் சமர்ப்பித்த பின்பே சம்பளம் வழங்கப்படும். இந்த முறையால் ஆணை மற்றும் ஊதியம் வழங்குதலில் சில சமயங்களில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனால் முறையாக சம்பளம் கிடைக்காமல் ஆசிரியர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரலில் ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி சம்பளம் பெறுகின்றனர்.இந்த ஆண்டுக்கான ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கப்படாததால், ஏப்ரல் மாத சம்பளம் ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் 8,332 ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர். உட்கட்சி பிரச்னையால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இயலாமல் உள்ளதே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. உடனடியாக ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

5 மணி நேரமாக கோரிக்கை வைத்த ஆசிரியர்கள் : கலந்துரையாடலில் அதிகாரிகள் தவிப்பு


கலந்துரையாடல் நிகழ்ச்சியில், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பேசி, கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர். தமிழகத்தில், 2011ல், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனியாகவும், ஒன்றாக இணைந்தும் போராட்டங்கள் நடத்தினர்.

ஆனாலும், அமைச்சரையும், செயலரையும் சந்திக்க முடியாததால் அதிருப்தியடைந்தனர். ஆறு ஆண்டுகளுக்கு பின், பள்ளிக்கல்வி துறையின் புதிய அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, செங்கோட்டையன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை குளிர்விக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சென்னை, தி.நகரில், தன் சொந்த செலவில், நேற்று கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினார்.

இதில், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த, 200 பேர் பங்கேற்றனர். சங்க நிர்வாகிகளிடம், அதிகாரிகள் தனித்தனியே, கோரிக்கை மனுக்களை வாங்கினர். அமைச்சர் வந்ததும், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை பேச அனுமதித்தார். பல மூத்த நிர்வாகிகள், அரசியல்வாதிகள் போல, அமைச்சரையும், அரசையும் வாழ்த்தி பேசி, அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், 'ஐஸ்' வைத்தனர். சங்க நிர்வாகிகள் சுருக்கமாக கோரிக்கைகளை கூற அனுமதிக்கப்பட்டனர்.

பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன், இயக்குனர் இளங்கோவன், அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி பூஜா குல்கர்னி மற்றும் அதிகாரிகள், மேடையில் அமர்ந்து, கோரிக்கைகளை குறிப்பெடுத்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய நிர்வாகிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக, நுாற்றுக்கணக்கான கோரிக்கைகளை கொட்டியதால், அதிகாரிகள் தவித்தனர். ஆசிரியர்களுக்கு, மதிய உணவாக பிரிஞ்சி, தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவையும், இடைவேளையில், கேசரி, வடை, டீ மற்றும் காபியும் தரப்பட்டது. நிகழ்ச்சி முடியும் வரை, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், வெளியே அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி நடந்த வளாகத்தில், இரும்பு கேட்டுகள் பூட்டப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

புத்தகங்களை ஆசிரியர்கள் சுமக்க வேண்டாம் : இலவசங்களை வினியோகிக்க புது திட்டம்


பள்ளிகள் திறந்ததும், பாடப் புத்தக கட்டுகளை ஆசிரியர்கள் சுமக்கும் பிரச்னை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. 'புத்தகங்களை கல்வித் துறையே வினியோகிக்கும்' என, அமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த, ஆசிரியர் சங்க கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:

ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் கோரிக்கைகளை, நிதி நிலைமை, சூழலுக்கு ஏற்ப தீர்க்க முயற்சிப்போம். அரசு அறிவித்துள்ள, மாணவர்களுக்கான, 14 இலவச திட்டங்களின் பொருட்களை எடுத்து வந்து, வினியோகம் செய்வதில் சிரமம் இருப்பதாக, ஆசிரியர்கள் கூறினர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், 14 வகை இலவச திட்டங்களுக்கான பொருட்களை, அரசே நேரடியாக பள்ளிகளுக்கு வழங்கும்.

மாணவர்களுக்கு, அவர்கள் படிக்கும் பள்ளி, ரத்த வகை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் அடங்கிய, 'ஸ்மார்ட் கார்டு' திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். தேசிய, சர்வதேச அளவில் தரமான பாடத்திட்டம் கொண்டு வரப்படும். புதிய கல்வி ஆண்டில் பாடப் புத்தகங்களில் மாற்றம் இல்லை. பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பள்ளிகள் திறந்ததும், லேப் - டாப் வழங்கப்படும். தமிழ்நாடு பாடநுால் கழகத்தில் முறைகேடு நடந்திருந்தால், விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

நிதி இல்லை : அமைச்சர் வருத்தம்கலந்துரையாடல் கூட்டத்தில், 'அரசு பள்ளிகளில், யோகா பயிற்சிக்கு, 13 ஆயிரம் புதிய பயிற்சியாளர்களை நியமிப்பது ஏன்; பகுதி நேர ஆசிரியர்களை பயன்படுத்தலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் கூறினார். இதற்கு பதிலளித்த, அமைச்சர் செங்கோட்டையன், ''13 ஆயிரம் பேர், யோகா பயிற்சி முடித்து, இலவசமாக அரசு பள்ளி மாணவர்களுக்கு, யோகா கற்றுத்தர தயாராக உள்ளனர். அரசிடம் நிதி இல்லை; எனவே, கூடுதல் செலவின்றி, இந்த திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது,'' என்றார்.

Monday, May 01, 2017

எஸ்பிஐ டெபாசிட் வட்டி குறைப்பு


பாரத ‌ஸ்டேட் வங்கி பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டியை அரை ‌சத‌விகிதம் வரை‌ குறை‌த்துள்ளது.

2 முதல்‌ 3 ஆ‌ண்டு வரையிலான டெபாசிட்டுகளுக்கு வட்டி 6.75 சதவிகிதத்திலிருந்து 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. முதியோருக்கான டெபாசிட் வட்டியும் அரை சதவிகிதம் குறைக்கப்பட்டு 7.25 சதவிகிதத்தில் இருந்து 6.75 சதவிகிதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரையான பிக்சட் டெபாசிட்களுக்கு வட்டி கால் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 6.75 சதவிகிதமாக இருந்த வட்டி, 6.5 சதவிகிதமாக்கப்பட்டுள்ளது. 7 நாள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்குரிய வட்டியில் மாற்றமில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ஏப்ரல் 29-ம் தேதியிலிருந்து புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் முதல் எல்.இ.டி., பல்பு அரசு அலுவலகத்தில் கட்டாயம்


அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு பயன்படுத்துவதை, ஜூன் மாதம் முதல் கட்டாயமாக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில், மின் தேவை அதிகம் உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. ஆனால், தமிழகத்தில், குறைந்த எண்ணிக்கையில் தான், எல்.இ.டி., பல்புகள் பயன்பாடு உள்ளது.

மார்ச் முதல், செப்., வரை, மின் தேவை அதிகம் இருக்கிறது. இதனால், தொடர்ந்து அதிக மின் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. எல்.இ.டி., பல்பு பயன்படுத்தினால், இப்பிரச்னையின் தீவிரம் குறையும். எனவே, ஜூன் மாதம் முதல், அரசு அலுவலகங்களில், எல்.இ.டி., பல்பு கட்டாயமாக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அரசு உயரதிகாரி மூலம், அனைத்து துறைக்கும் கடிதம் எழுதப்படும். இவ்வாறு அவர் கூறினார். முறைகேடு? மத்திய அரசு, 'எனர்ஜி எபிசியன்ட்' என்ற நிறுவனம் மூலம், குறைந்த விலையில், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது.

இந்நிறுவனம் இதுவரை, 23 கோடி பல்புகளை விற்றுள்ளது. தற்போது, மின் வாரிய, மின் கட்டண மையங்களுக்கு அருகில், இந்நிறுவனம், எல்.இ.டி., பல்புகளை விற்கிறது. தமிழகத்தில், எல்.இ.டி., பல்பு வாங்குவதில், முறைகேட்டை தடுக்க, அரசு, மத்திய நிறுவனத்திடம் இருந்து வாங்க வேண்டும் என்ற வலியுறுத்தல் எழுந்துள்ளது.