இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Sunday, March 05, 2017

டெட்' தேர்வு விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்


ஆசிரியர் பதவி தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, இன்று முதல் விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., மூலம், ஏப்., 29, 30ல், 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், இன்று முதல் குறிப்பிட்ட பள்ளிகளில் வழங்கப்படுகின்றன.

தொடக்கப்பள்ளி, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு தனித்தனியாக, விண்ணப்பம் பெற வேண்டும். விண்ணப்பம் வழங்கும் இடங்கள், டி.ஆர்.பி.,யின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஒருவருக்கு ஒரு தேர்வுக்கு, ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படுகிறது.வரும், 22 வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, டி.ஆர்.பி., அறிவித்துள்ள விண்ணப்பம் பெறும் மையங்களில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

வரும், 23க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு : 1,000 ஆசிரியர்கள் கலக்கம்


டெட் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதனால், 1,000 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பின், தமிழகத்தில், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதித்தேர்வு, ஏப்., 29, 30ல் நடக்கிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், 'அரசு பள்ளிகள் மற்றும் சிறுபான்மை அங்கீகாரம் பெறாத பள்ளிகளில், 2010 ஆகஸ்டிற்குப் பின், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டோர், டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், இந்த தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறாதார், பணிநீக்கம் செய்யப்படுவர்' என, கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால், அரசு பள்ளிகளில் பணியாற்றும், 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். திடீரென தேர்வை அறிவித்துவிட்டு, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது, ஆசிரியர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: சிறுபான்மை அங்கீகாரம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்வுக்கு பதில், ஆண்டு தோறும் புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்த, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல, அரசு பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாமல் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு பயிற்சி முகாம் நடத்தலாம். மாறாக, திடீரென, 'டெட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கெடு விதிப்பது பிரச்னையை அதிகரிப்பதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு?


மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 முதல், 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி: விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும். அதன்படி, ''இந்த ஆண்டு ஜனவரி, 1 முதல், 2 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படியை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம்,'' என, மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர், கே.கே.என்.குட்டி தெரிவித்துள்ளார். எதிர்பார்ப்பு: நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டில், 4.95 சதவீதம் அளவுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும்.

ஆனால், தசம எண்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. மேலும், 2016 ஜூலை, 1 முதல் அகவிலைப்படியை, 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், தற்போது, 2 சதவீதம் அளவுக்கே உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 4 சதவீதம் வரை வழங்கப்பட வேண்டும் என, ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, March 04, 2017

டெட்' தேர்வு அறிவிக்கை தமிழில் வெளியிட கோரிக்கை


டெட் தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனையை, தமிழில் வெளியிட வேண்டும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி.,க்கு, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டி.ஆர்.பி., நடத்தும், 'டெட் ' என்ற ஆசிரியர் தகுதி தேர்வு, ஏப்., 29 மற்றும், 30ல், நடைபெற உள்ளது. இதற்கான அறிவிக்கை, கடந்த வாரம் வெளியானது.தேர்வுக்கான கட்டுப் பாடுகள், இரு தினங்களுக்கு முன், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின. இரு அறிவிக்கைகளும், ஆங்கிலத்தில் உள்ளன. அதனால், நிபந்தனைகளை முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல், தேர்வர்கள் தவிக்கின்றனர்.

இது குறித்து, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் கூறியதாவது:மூன்றாண்டு இடைவெளிக்கு பின், 'டெட்' தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. தேர்வுக்கான நிபந்தனைகள், ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. கிராமப்புறத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்து விட்டு, ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்கின்றனர்.ஆசிரியர் பணிக்கு வரும் பட்டதாரிகளில் பெரும்பாலானோர், கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம், பாடங்கள் குறித்து ஆங்கில அறிவை எதிர்பார்க்கலாம்; தொடர்புக்கான ஆங்கில மொழி புலமையை, எதிர்பார்க்க முடியாது. எனவே, 'டெட்' தேர்வுக்கான அறிவிக்கை மற்றும் நிபந்தனைகளை தமிழில் வெளியிட வேண்டும்.

அரசு விதிகளின்படி, அரசாணை மற்றும் அறிவிக்கைகளை தமிழில் வெளியிட வேண்டும். ஆண்டு முழுவதும், நுாற்றுக்கணக்கான தேர்வை நடத்தும், டி.என்.பி.எஸ்.சி., யும், தமிழில் தான், அறிவிக்கை வெளியிடுகிறது. எப்போதாவது தேர்வு நடத்தும், டி.ஆர்.பி., விதிகளை பின்பற்றவில்லை. டி.ஆர்.பி., தலைவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்பதால், தமிழை புறக்கணித்துள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

டெட்' தேர்வுக்கு குறைந்த அவகாசம்: 3,000 ஆசிரியர்கள் கலக்கம்


ஆசிரியர்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும், 'டெட்' தேர்வு அறிவிப்பால், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2010 ஆக., 23க்கு பின், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என, உத்தரவிடப்பட்டது.

அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்களும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அவர்களுக்கு மத்திய அரசின் மானிய உதவி கிடைக்கும் என, மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, 2016 நவம்பருக்குள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், வழக்கு காரணமாக, டெட் தேர்வு தள்ளிப்போனது.

இந்நிலையில், பிரச்னைகள் முடிவுக்கு வந்து, ஏப்ரலில் டெட் தேர்வு நடைபெற உள்ளது. இதில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் நீடிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால், தேர்வுக்கான அவகாசம் மிகவும் குறைவாக உள்ளதால், தேர்வில் தேர்ச்சி அடைய முடியுமா என, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மினிமம் பேலன்ஸ்! வாடிக்கையாளர்களை அதிரவைக்கும் எஸ்.பி.ஐ


ஏப்ரல் 1-ம் தேதி முதல் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காவிடின், அபராதம் விதிக்கப்படும் என்று அந்த வங்கி அறிவித்துள்ளது.

அதன்படி, பெருநகரங்களில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் 5,000 ரூபாயும், நகரப் பகுதிகளில் இருப்போர் 3,000 ரூபாயும், பகுதி நகரப்பகுதிகளில் 2,000 ரூபாயும், கிராமப்புறத்தில் 1,000 ரூபாயும் வைத்திருக்க வேண்டும் என்று எஸ்பிஐ கூறியுள்ளது.

அதன்படி, பெருநகரங்களில் மினிமம் பேலன்ஸை விட 75 சதவீதம் குறைவாக இருந்தால் 100 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். மினிமம் பேலன்ஸ் 50-75 சதவீதத்துக்கு குறைவாக இருந்தால் 75 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும். 50 சதவீதத்துக்கு கீழ் இருந்தால் 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும்.

நகரப் பகுதிகளில் மினிமம் பேலன்ஸைவிட குறைவாக இருந்தால் 20 முதல் 50 ரூபாய் மற்றும் சேவைக் கட்டணம் அபராதமாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Friday, March 03, 2017

வாக்காளர் பட்டியல் அனுப்பும் பணி தீவிரம்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தலைநகரங்களில் தயாராக உள்ள வாக்காளர் பட்டியல் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

தமிழக உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் நடத்த தற்காலிக தடை விதித்தது.

இந்நிலையில் வரும் மே மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட தலைநகரங்களில் தயார் நிலையில் உள்ள வாக்களார் பட்டியலை, அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களுக்கு அனுப்பி சரிபார்க்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கியுள்ளன. வாக்காளர் பட்டியலை வார்டு வாரியாக பிரிக்கும் பணியை துணை பிடிஓக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக உள்துறை செயலாளர் அதிரடி மாற்றம்: புதிய செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம்


தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள உத்தரவு: தமிழக உள்துறைச் செயலாளராக உள்ள அபூர்வ வர்மா மாற்றப்பட்டு, கடல்சார்வாரிய தலைவராக உள்ள நிரஞ்சன் மார்டி, புதிய உள்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

அபூர்வ வர்மா, சுற்றுலாத்துறை செயலாளராக நியமிக்கப்படுகிறார். அகதிகள் மறுவாழ்வுத்துறை கமிஷனராக உள்ள உமாநாத், மருத்துவ சேவை கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த அபூர்வா, சிறுதொழில் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. புதிய முதல்வராக எடப்பாடி அரசு பதவி ஏற்ற பிறகு, முதல் முறையாக பெரிய பதவியில் உள்ள ஒருவர் மாற்றப்படுவது இதுவே முதல் முறை. இனி தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் பல ஐஏஎஸ் அதிகாரிகளின் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று கூறப்படுகிறது.

பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.1ல் திருத்தம்


பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. இதில், 9.33 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மொத்தம், 2,434 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 4,000 பறக்கும் படைகள், தேர்வு நாட்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள், 31ல் முடிகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தமும் துவங்கியது. அதனால், ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். விடைத்தாள் திருத்துவதா; தேர்வு பணி பார்ப்பதா; பிளஸ் 1 மாணவர்களை கவனிப்பதா என, குழப்பம் ஏற்பட்டது. இதை தடுக்க, இந்த ஆண்டு தேர்வு முடிந்த பின், ஏப்., 1 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது.

தமிழகம் மற்றும் புதுவையில், 150 விடை திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, திருத்த பணிகள் நடக்க உள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்., 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க, தேர்வுத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

ஆசிரியர் அல்லாத பணியிடம்.கருத்துரு


Thursday, March 02, 2017

ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் 3 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்; அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. சென்னை எழும்பூரில் உள்ள மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுவதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பிளஸ்-2 தேர்வை 9 லட்சத்து 30 ஆயிரம் பேர் எழுதி வருகிறார்கள்.

மொழித்தேர்வை தமிழ், உருது, இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் மாணவர்கள் எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தமிழகத்தில் கொண்டுவந்தார். இதன் காரணமாக கடந்த வருடத்தை விட இந்த வருடம் பிளஸ்-2 தேர்வை 65 ஆயிரம் பேர் கூடுதலாக எழுதுகிறார்கள்.

ஆய்வக உதவியாளர்கள்

பள்ளிக்கூடங்களில் நியமிக்கப்பட உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. அது குறித்து 10 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும். சிறுபான்மையினர் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் பணியாற்றுவார்கள்.

நீட் தேர்வை எழுத மாணவர்கள் தயாராக உள்ளனர். ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர்கள் ஏராளமானவர்கள் ஜெயலலிதா ஆட்சியில் நியமிக்கப்பட்டார்கள். இப்போது ஆசிரியர்கள் பணியிடம் காலி இல்லை. ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவார்கள். இதை கணக்கில் கொண்டால் 3 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் ஏற்படும். அந்த காலியிடங்கள் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம் நிரப்பப்படும்.

முன்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீத ஆசிரியர்களை நியமிப்பது குறித்து முதல் அமைச்சரிடம் கேட்டு முடிவு செய்து அறிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்ன?


ஹைட்ரோ  கார்பன் என்பது பொதுவான பெயர். மீத்தேன் உள்ளிட்ட வேறு பல இயற்கை  எரிவாயுக்களையும் பூமியிலிருந்து எடுக்கும் செயல் திட்டத்தை உள்ளடக்கியது.  இதை ‘ஷேல் கேஸ்’ என்கிறார்கள். ஹைட்ரோ கார்பனிலேயே 14 வகைகள் உண்டு. இவை  அனைத்தும்‘ மீத்தேன் வகை வாயுக்கள்’ என்றழைக்கப்படுகின்றன. இந்த வாயுக்கள்  பூமியின் அடி ஆழத்தில் பாறை இடுக்குகளில் பெருமளவில் இருப்பதாகக்  கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த வாயுக்களை அகழ்ந்து எடுத்து எரிபொருளாக  பயன்படுத்த முடியும்.

நோகாமல் நுங்கு
இந்தியாவில்  எண்ணெய் வளம்மிக்க நிலப்பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றன என்பதை பல ஆண்டு  ஆராய்ச்சி செய்து ஆயில் இந்தியா லிமிடெட், ஓ.என்.ஜி.சி., ஆகிய அரசு  நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன.   இப்படி அரசு நிறுவனங்கள் பட்டியலிட்ட  பகுதிகளைத்தான் அப்படியே சுளையாக எடுத்து மத்திய அரசு தனியாருக்கு தாரை  வார்க்கிறது. இதனால் அந்த நிறுவனங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி  வேலைகள் மிச்சம்!   நெடுவாசலை பொறுத்தவரை அடுத்த 15 ஆண்டுகளில்  நான்கு கோடி டன் எண்ணெய் மற்றும் 2,200 கோடி கன மீட்டர் எரிவாயு எடுக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தோண்டி எடுக்கப்படும் வாயுக்கள் மற்றும்  எண்ணெயின் விலையை அந்தந்த நிறுவனங்களே முடிவு செய்யலாம். அவர்களே  சந்தையும்படுத்தலாம்! இதுதான் ஒப்பந்தத்தின் சாரம்!

வளைகுடாவும் தமிழகமும்!
வளைகுடா  நாடுகளில் பூமியை அகழ்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுக்கிறார்கள்.  ஆனால், அவை பெரும்பாலும் மக்கள் வசிக்காத பகுதிகளாக இருக்கின்றன. பூமியின்  மேற்பரப்பில் அங்கு விவசாயம் நடைபெறவில்லை. எனவே பாதிப்பும் பெரிய அளவில்  இல்லை.   தமிழகம் அப்படியல்ல. இங்கு எரிவாயு எடுக்க தேர்வு  செய்யப்படும் அனைத்து இடங்களும் வளம் மிகுந்தவை. காவிரி டெல்டா என்பது  ஆசியாவின் மிக வளமான சமவெளி பரப்புகளில் ஒன்று. மக்கள் அடர்த்தி அதிகம்.  இங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் பாதிப்பு பெரும் அளவில்  இருக்கும்.

Wednesday, March 01, 2017

TET TET Application Sales Centres and Application Receiving Centres District wise

Click below

http://trb.tn.nic.in/TET2017/02032017/msg.htm

டெட்' தேர்வு விண்ணப்பம்: டி.ஆர்.பி., புதிய கட்டுப்பாடு


ஆசிரியர் தகுதிக்கான டெட் தேர்வில், ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா வெளியிட்ட செய்திக்குறிப்பு: 'டெட்' தேர்வின் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாளுக்கு, ஏப்., 29, 30ல், தேர்வு நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட மையங்களில், மார்ச், 6 முதல், 22 காலை, 6:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வழங்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மார்ச், 23 மாலை, 5:00 மணிக்குள் பெறப்படும்.மையங்கள் குறித்த விபரங்கள், www.trb.tn.nic.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியாகும். விண்ணப்ப கட்டணமாக, 50 ரூபாய் வசூலிக்கப்படும். ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். ஒவ்வொரு தாள் தேர்வுக்கும், தனியாக விண்ணப்பம் பெற வேண்டும். ஒரு மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும், பூர்த்தி செய்து தரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம் : அடுத்த வாரம்


பள்ளி பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள். மாணவர்கள், நம்பிக்கையோடும், தளராத மனதோடும், தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கல்வியிலும், சமூக விழிப்புணர்ச்சியிலும், தமிழகம் முதல் மாநிலமாக வருவதற்கு, ஜெ., காட்டிய நல்வழியில், அரசு பாடுபடும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள, 'கேரியர் கைடன்ஸ் கவுன்சிலிங்' என்ற பெயரில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த உள்ளோம். இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என, ஆலோசனை வழங்கப்படும். 32 மாவட்டத் தலைநகரங்கள்; 124 நகராட்சிகள்; 385 ஊராட்சி ஒன்றியங்கள் என, 541 இடங்களில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படும். ஏப்., 6, 7 ஆகிய நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் நிகழ்ச்சி நடத்தப்படும்.

மருத்துவம், பொறியியல், அறிவியல் பிரிவுகள் குறித்தும், போட்டித்தேர்வு குறித்தும், மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆலோசனைகள் வழங்கப்படும்.அரசை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் திகழ வேண்டும் என்பதற்காக, ஜெ., ஆட்சியில் சிறப்பான முறையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். தமிழகம், கல்வித் துறையில், இந்தியாவில் முதன் மாநிலமாக திகழ்வதற்காக, புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம்.பாடத்திட்டங்களை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஒரு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும். தேர்வுத் துறையில் காலியிடங்களை நிரப்புவது குறித்து, பரிசீலனை செய்யப்படும்.மாணவ, மாணவியர் எதிர்காலத்திற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம். ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்கள், நிதி நிலைக்கேற்ப நிரப்பப்படும்.

விர்ச்சுவல்' வகுப்புகள் திட்டம் தமிழகத்தை பின்பற்றும் குஜராத்


அரசு பள்ளிகளில், மெய்நிகர் வகுப்பறைகள் என்ற, 'விர்ச்சுவல்' வகுப்புகளுக்கான திட்டத்தை, குஜராத் மாநிலமும் பின்பற்ற துவங்கி உள்ளது. அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், சமச்சீர் கல்வி கிடைக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துகின்றன. அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் போன்ற திட்டங்கள் மூலமும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமும், ஸ்மார்ட் வகுப்பு, கணினி வகுப்பறை, மெய்நிகர் வகுப்பறைகள் போன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதில், மெய்நிகர் வகுப்பறைகள் என்ற, 'விர்ச்சுவல்' வகுப்பு திட்டத்தின் மூலம், தமிழகத்தில், 770 பள்ளிகளில், கணினி திரை கொண்ட வகுப்பறைகள், கணினி உபகரணங்கள், 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' வசதி, வீடியோ கான்பரன்ஸ் வசதி போன்றவை ஏற்படுத்தப்படுகின்றன. இதில், 485 பள்ளிகளுக்கு தற்போது பணிகள் முடிந்துள்ளன.இந்த திட்டத்தின் செயல்பாடுகளை, மத்திய அரசு ஆய்வு செய்தது. இதில், விர்ச்சுவல் வகுப்புகள் செயல்பாட்டில், தமிழகத்தின் நடைமுறைகள் சிறப்பாக உள்ளதை கண்டறிந்துள்ளனர்.

அதனால், குஜராத், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு, தமிழக நடைமுறையை பரிந்துரை செய்துள்ளனர். இதேபோல், மற்ற மாநிலங்களின் சிறப்பான நடவடிக்கைகளை, தமிழகமும் பின்பற்றலாம் என, கல்வியாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.