Thursday, February 16, 2017
புதிய அமைச்சரவை
தமிழக முதல்வராக பதவியேற்க உள்ள எடப்பாடி பழனிச்சாமியுடன் பதவியேற்க உள்ள தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கிறார். வனத்துறை அமைச்சராக திண்டுக்கல் சீனிவாசனும் கூட்டுறவு துறை அமைச்சராக செல்லூர் ராஜூவும், பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாஃபா பாண்டியராஜன், ஓ.பன்னீர் செல்வம் தவிர பழைய அமைச்சரவை பட்டியலில் இருந்தவர்கள் அதே இடத்தில் நீடிக்கின்றனர்.
Wednesday, February 15, 2017
பள்ளி மாணவர்களின் வில்லன்
பள்ளி மாணவர்களின் கூடவே வரும் வில்லன் இவர்தான்!
தலைவாரி, பூச்சூட்டி நம் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். திரும்பி கையசைக்கும் அவர்களது முதுகில் கணக்கும் புத்தகப் பையின் சுமை நம் மனதை வலிக்கச் செய்யும். இதற்கு ஒரு வழிபிறக்காதா என்ற கேள்வி தினந்தோறும் நமக்கு எழுகிறது. இந்த புத்தகப் பையிடம் இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கம் ஒவ்வொரு குழந்தையின் மனமும் நினைக்காத நாளில்லை. பள்ளிப் படிக்கும் வயதில், எடை அதிகமான புத்தகப் பையைச் சுமப்பதால் நம் குழந்தைகளின் உடல் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
"வீட்டுப் பாடம் எழுதுவதை என்றைக்கு கண்டு பிடிச்சாங்களோ அன்றிலிருந்து துவங்கினதுதான் இந்த அதிக எடை புத்தகப் பை பயணம், மரம், தோல், அலுமினியப் பெட்டி என பல கண்டங்கள் தாண்டி இப்போ நம் செல்லங்களின் முதுகில் அமர்ந்திருப்பது ‘எர்கோனோமிக் ஸ்கூல் பேக்’. ஸ்டைல் மாறினால் என்ன வெயிட் மாறவில்லையே. புத்தகச் சுமையைக் குறைக்க நமது முப்பருவக் கல்வி முறையில் மூன்று பருவங்களுக்கான புத்தகங்களை தனித்தனியாக பிரித்து கொடுத்துள்ளனர். ஆனாலும் அந்தந்த பருவத்துக்கு என்று புத்தகங்களும் நோட்டுகளுமாக புத்தகப் பை மூச்சுத் திணறும் அளவுக்கே உள்ளது.
இந்திய மாணவர்கள் 15 கிலோ எடை வரை புத்தகப் பையாக சுமக்கின்றனர். தனது உடல் எடையில் 30 முதல் 35 சதவிகிதத்தை புத்தக மூட்டையாக சுமக்கின்றனர். 68 சதவீத குழந்தைகள் தங்களது எடையில் இருந்து 10 சதவீதத்துக்கும் அதிகமான எடையை சுமப்பதால் உடல் ரீதியான தொல்லைகளுக்கு ஆளாகின்றனர்" என்கிறார் சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார்.
மேலும் இவர் கூறுகையில், “இந்தியக் குழந்தைகள் பள்ளி நாட்களில் புத்தகப் பையை நீண்ட தூரம் சுமக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 12 வயது முதல் 14 வயது வரை குழந்தைகளின் உடல் வளர்சிதை மாற்றங்கள் உச்சியில் இருக்கும். இந்தக் கட்டத்தில் அளவுக்கு அதிகமாக எடை தூக்குவதால் கூன், முதுகுவலி, கழுத்து வலி, இடுப்பு வலி போன்ற தொந்தரவுகளைச் சந்திக்கின்றனர். ஒரு பக்கம் மட்டும் பைகளை மாட்டிச் செயல்வதால் 29 சதவீதம் முதுகு தண்டுவட குருத்தெலும்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது
முதுகுத் தண்டில் 33 சிறிய எலும்புகள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கினாற் போல இருக்கும். இதன் இடையில் இருக்கும் குறுத்தெலும்புகள், அதன் உறுதித் தன்மையை மேம்படுத்தி உடலுக்கு கட்டமைப்பை கொடுக்கிறது. அதிகப்படியான அழுத்தம், புத்தகப் பையினால் தண்டுவடத்திலும், குறுத்தெலும்புகளிலும் சரிசெய்ய முடியாத மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. பின் வரும் ஆண்டுகளில் ஏற்படக்கூடிய எலும்பின் உறுதித் தன்மை சீர்குலைவு சிறு வயதில் இருந்தே ஆரம்பிக்கிறது.
அதிக எடை கொண்ட புத்தகப் பைகளை கீழ் முதுகில் குழந்தைகள் தூக்கிச் செல்வது இயல்பே. புத்தகப் பையை பேலன்ஸ் செய்ய அவர்கள் முன்னோக்கி குனிகின்றனர். இதனால் கழுத்துவலி, தோள்பட்டை வலி ஏற்படுகிறது. கழுத்து இறுக்கத்தையும் மாணவர்கள் சந்திக்கின்றனர்.
நீண்ட நேரம் தோள் பட்டையில் பையை மாட்டிக் கொண்டு நிற்கும் போது இரு கால்களில் சமமான எடையைப் போடாமல் ஒரு பக்கம் சாய்ந்தவாறு நிற்பதால் அனைத்து விதமான தசை வலிகளும் ஏற்படுகிறது. மேலும் அதிக வியர்வையால் தோள்பட்டை ஸ்ட்ராப் மாட்டும் இடங்களில் அரிப்பும் அலர்ஜியும் ஏற்படலாம் புத்தகப்பையின் எடையை குறைப்பதோடு அதன் ஸ்டைலையும் மாற்ற வேண்டும் என்கிறார் செந்தில்குமார்.
- யாழ் ஶ்ரீதேவி
நிமிடங்களில் 'பான்' கார்டு: வருகிறது 'மொபைல் ஆப்'
பான்' கார்டு எனப்படும் நிரந்தர கணக்கு எண் அட்டையை, சில நிமிடங்களிலேயே பெறும் வகையிலான புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யும் முயற்சி யில், வருமான வரித் துறை ஈடுபட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வருமான வரி செலுத்துவது, வருமான வரி கணக்கு விபரங்களை சரி பார்ப்பது போன்றவற்றுக்காக, விரைவில் புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதைத் தவிர, ஆதார் எண்ணை பயன்படுத்தி, புதிய பான் கார்டை, இந்த ஆப் மூலம், சில நிமிடங்களிலேயே பெறும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்கான பணிகள் ஆரம்ப நிலையில் உள்ளன. நிதியமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்ததும், இந்த, 'ஆப்' அறிமுகம் செய்யப்படும். நாடு முழுவதும், 111 கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, 25 கோடி பேருக்கு பான் கார்டு அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 2.5 கோடி பேர் பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அனைவருக்கும் பான் கார்டு வழங்குவதன் மூலம், வருமான வரி வசூலும் அதிகரிக்கும். இதற்காக, பான் கார்டு வழங்குவதை விரைவுபடுத்தும் வகையில், ஆதார் எண் அடிப்படையில், பான் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆதார் வைத்துள்ளவர்களின் விபரங்கள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதால், பான் கார்டுக்காக, தனியாக விபரங்களை கேட்டு அதை உறுதி செய்ய வேண்டிய அவசியமில்லை. இதனால், இந்த புதிய மொபைல் ஆப் மூலம், சில நிமிடங்களிலேயே, பான் கார்டு பெற முடியும்.தற்போது, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்தாலும், இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தாலும், பான் எண்ணை குறிப்பிட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதனால், இந்த புதிய மொபைல் ஆப் மூலம், ஒருவர் தன் வருமான வரியை செலுத்துவதுடன், வருமான வரி கணக்கு தாக்கல் விபரங்களையும் பார்க்க முடியும். மிக விரைவில், இந்த ஆப் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
CPS news
CPS NEWS:
புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாத ஓய்வூதியம் இல்லாததால் 01.04.2003க்கு பிறகு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பின்னர்
ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி (ரூ.50,000) ,
ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத்திட்டம் (ரூ.2,00,000)
பணிக்கொடை,
தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978
ஆகியவை CPS ல் உள்ளவர்களுக்குப் பொருந்தாது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.
Tuesday, February 14, 2017
10 ம் வகுப்பு தேர்வுக்கு தட்கலில் விண்ணப்பிக்கலாம்
பத்தாம் வகுப்பு தேர்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காத தனித் தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின்(தக்கல்) கீழ் 16ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்க வசதியாக ஏற்கெனவே தேதி அறிவிக்கப்பட்டது.
அந்த தேதியில் விண்ணப்பிக்க தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் 16 மற்றும் 17ம் தேதிகளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அந்தந்த கல்வி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு தனித் தேர்வர்கள் நேரில் சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். சேவை மையங்கள் தொடர்பான விவரங்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றவர்கள் மட்டுமே எழுத்து தேர்வு எழுத முடியும். அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்றுக் கொண்டு எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்காமல் இருந்த தனித் தேர்வர்கள் தட்கல் திட்டத்தின் கீழ் தற்போது விண்ணப்பிக்கலாம். தனித் தேர்வர்கள் தேர்வுக் கட்டணமாக ₹125, கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணம் ₹500, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ₹50, ஆகியவை சேர்த்து மொத்தம் ₹675 சேவை மையங்களில் பணமாக செலுத்த வேண்டும்.
இதற்காக பதிவு ரசீது வழங்கப்படும். அதை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதில் உள்ள எண்ணைக் கொண்டு ஹால்டிக்கெட் பின்னர் பதிவிறக்கம் செய்ய முடியும். ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்ய வேண்டிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். தக்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித் தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, கோவை, திருச்சி, கடலூர், வேலூர், சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.
Monday, February 13, 2017
பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 20க்குள் 'ஹால் டிக்கெட்'
பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்., 20க்குள் ஹால் டிக்கெட் வழங்கி, படிப்பு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 2ல் நடக்கிறது. அதனால், மாணவர்களுக்கு, பிப்., 20க்குள், ஹால் டிக்கெட்டுகளை வழங்கும்படி, அரசு தேர்வுத் துறையும், பள்ளிக்கல்வித் துறையும், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. தேர்வுத் துறையின், http://www.tndge.in/ என்ற இணையதளம் மூலம், கடந்த, 7 முதல், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி, அனைத்து பள்ளிகளும், தங்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, பிப்., 20க்குள் அவர்களிடம் வழங்க வேண்டும். தொடர்ந்து, தேர்வுக்கு தயாராவதற்கு, அவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
Sunday, February 12, 2017
உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு தேர்தல் அறிவை வளர்க்கணும்'
மாணவர்களுக்கு, உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் இருந்தே தேர்தல் அறிவை புகட்ட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையில், தலைமை தேர்தல் கமிஷனர், நசிம் ஜைதி, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், பள்ளிப் பாடத்தில் தேர்தல் அறிவை புகட்டும் வகையிலான பாடங்கள் சேர்க்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
உயர்நிலைப் பள்ளி மட்டத்திலும், அதற்கு மேற்பட்ட படிப்புகளின் போதும், தேர்தல் அறிவை வளர்க்கும் பாடங்கள் சேர்க்கப்படுவதால் சிறந்த பயன் கிடைக்கும் என, அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்டில், அந்த கடிதத்திற்கு பதில் அளித்திருந்த அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், 'நாட்டின் தேசிய பள்ளி பாடத் திட்டங்களை வடிவமைக்கும், என்.சி.இ.ஆர்.டி.,யுடன், தேர்தல் கமிஷன் கூறிய யோசனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்த பாடத்திட்ட ஆய்வின் போது தேர்தல் கமிஷனின் யோசனைகளை கருத்தில் கொள்ளலாம் என, முடிவு செய்யப்பட்டது' என்றார்.
இதற்கிடையே, பள்ளிகள் உதவியுடன் தேர்தல் அறிவை மாணவர்களுக்கு புகட்டும் வகையிலான சிறப்பு திட்டத்தை, தேர்தல் நிபுணர் குழு ஜனவரியில் துவக்கியது. இத்திட்டப்படி, 5,000 தேர்தல் பதிவு அதிகாரிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி கள், தலைமை தேர்தல் அதிகாரிகள், உயர்நிலைப் பள்ளிகளில், ஒன்பது முதல், பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில், 15 - 17 வயதுடைய மாணவர்களுடன் கலந்துரையாடினர். தேர்தல் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன. நாடு முழுவதும், 15 - 17 வயதினராக, 6.2 கோடி பேர் உள்ளனர். இவர்களை, வருங்கால வாக்காளர்களாக, தேர்தல் கமிஷன் வர்ணித்துள்ளது. இவர்களில் ஒவ்வொரு ஆண்டும், இரண்டு கோடி பேர், 18 வயது நிரம்பி, முதல் முறை ஓட்டளிக்க தகுதி பெறுபவராக உருவெடுக்கின்றனர். இதுகுறித்து, தேசிய வாக்காளர் தினமான, ஜன., 25ல், நடந்த நிகழ்ச்சியின் போது, தலைமை தேர்தல் ஆணையர், நசிம் ஜைதி கூறுகையில், 'தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், முதல் முறை ஓட்டளிக்கும் தகுதி பெறுவோர், தேர்தலில் கட்டாயம் பங்கு பெறுவதை ஊக்குவிக்கும்' என்றார். இதன் தொடர்ச்சியாக, மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளி மட்டத்தில் இருந்தே தேர்தல் அறிவை புகட்ட வேண்டும் என, தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.
Saturday, February 11, 2017
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீப காலங்களில் சில பள்ளிகளில் அசாதாரண நிகழ்வுகளினால் மாணவர்கள் உயிர் இழக்கும் சூழ்நிலைகள் ஏற்பட்டுள்ளது. இதை முற்றிலும் தவிர்க்க ஆய்வு அலுவலர்களுக்கு கீழ்க்கண்ட வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
* பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்து மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.
* பள்ளிகளில் மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா, சுவிட்சுகள் சரியாக உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்து வைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
* மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக்கூடாது.
* கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
* பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணவர்கள் செல்ல தடைவிதிக்கவும், பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும். மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திலும், மாணவர்களின் பாதுகாப்பு குறித்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும்.
அரசு பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை ஓய்வூதியதாரர் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணம் தர வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு
காப்பீட்டு திட்ட அங்கீகார பட்டியலில் இடம்பெறாத தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஓய்வூதியரின் மருத்துவ செலவுக்கு காப்பீட்டு பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ஏ.முனியாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றினேன். 31.5.1996ல் ஓய்வு பெற்றேன். எனது பென்ஷன் பணத்திலிருந்து மாதம் ₹150 புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்காக பிடித்தம் செய்யப்படுகிறது. நடந்து சென்றபோது திடீெரன மயங்கி விழுந்தேன். நினைவிழந்து சிவகங்கை ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ₹92,535க்கு மருத்துவ செலவு ஏற்பட்டது. இதை வழங்கக்கோரி விண்ணப்பித்தேன்.
நான், சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையில், அங்கீகார பட்டியலில் இல்லையெனக்கூறி என் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து மாநில அளவிலான குழுவிடம் விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பத்தை கடந்த 26.10.2016ல் நிராகரித்து நிதித்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார். அதை ரத்து செய்து, பணத்தை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ்.விமலா விசாரித்து பிறப்பித்த உத்தரவு: காப்பீட்டு திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி ஊழியர்களுக்கு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்குவதில்லை.
காப்பீட்டு திட்டங்களில் தனியார் மருத்துவமனைகள் காட்சி பொருளாக இருக்கக்கூடாது. எனவே, மனுதாரரின் மருத்துவ செலவை வழங்க மறுத்த நிதித்துறை (பென்ஷன்) செயலர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கோரும் மருத்துவ செலவுக்கான பணத்தை ஒரு மாதத்திற்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
Friday, February 10, 2017
டி.ஆர்.பி., தேர்வு அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகிறது
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகிறது. தமிழகத்தில், நான்கு ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, நடத்தப்படவில்லை. நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதால், இத்தேர்வை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 15 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இந்நிலையில், சி.இ.ஓ.,க்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக, டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். தேர்வு தொடர்பாக, அடுத்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.
Thursday, February 09, 2017
டி.ஆர்.பி தலைவர் திடீர் மாற்றம்
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரி விபு நய்யார் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து தற்போது விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்க உள்ளது. தேர்வு நடத்துவது ெதாடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யாருக்கும், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடுவதை விபுநய்யார் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார். இதையடுத்து, விபுநய்யாரை டான்சிக்கு மாற்றி அரசு நேற்று உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக உள்ளாட்சி நிர்வாகத்துறையின் பொறுப்பு அதிகாரியாக உள்ள காகர்லா உஷா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று மாலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், உள்ளாட்சித் துறையுடன் தொழில் துறையின் பொறுப்பை கவனித்து வந்தார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் பொறுப்புடன் சேர்த்து 3 துறைகளை இனி கவனிப்பார்.