TNPSC COUNSELLING FOR THE POST OF VAO - 2014-2015 | TNPSC VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள் 12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 முற்பகல் அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 01.07.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.08.2016 முதல் 08.08.2016 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான கலந்தாய்வு சென்னை–600003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.12.2016 முதல் 23.12.2016 நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணைய இணையத் தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையத் தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Thursday, December 15, 2016
ரூ.600ல் நவீன சிறுநீர் கழிப்பிடம்: அரசு பள்ளி மாணவர்களுக்கு விருது
பள்ளி வளாகத்தில், 600 ரூபாய் செலவில், நவீன சிறுநீர் கழிப்பிடத்தை ஏற்படுத்தி, அரசு பள்ளி மாணவர்கள் விருது பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே, ஏ.குரும்பப்பட்டியில் உள்ள யூனியன் நடுநிலைப்
பள்ளியில், 97 மாணவர்கள் படித்து வருகின்றனர்; ஏழு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இங்குள்ள சிறுநீர் கழிக்கும் இடம், சிறுநீர் வெளியேற வடிகால் இன்றி, சுகாதாரமற்ற முறையில் இருந்தது.
இந்நிலையில், அகில இந்திய அளவில், பள்ளிகளின் அடிப்படை தேவைகள் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு போட்டியை, 'டிசைன் பார் சேஞ்ச்' என்ற நிறுவனம் நடத்தியது.இந்த போட்டிக்காக, 'பாதுகாப்பான சிறுநீர் கழிப்பிடம்' என்ற தலைப்பில், பள்ளி ஆசிரியர் கேசவன் மற்றும் ஐந்து மாணவர்கள் இணைந்து களத்தில் இறங்கினர்.
இதன்படி, சுகாதாரமற்ற முறையில் இருந்த சிறுநீர் கழிப்பிடத்தை சுத்தம் செய்து, பெயின்ட் அடித்துள்ளனர். நவீன சிறுநீர் பேசின்கள் அமைக்க அதிக செலவாகும் என்பதால், பழைய, 20 லிட்டர் குடிநீர் கேன்களை வாங்கி, அதை பேசின்கள் போல் வெட்டி, அவற்றில் தண்ணீர் உள்ளே செல்லும் அளவுக்கும், சிறுநீர் வெளியே செல்லும் அளவுக்கும் குழாய்களை பதித்து, பள்ளியின் சிறுநீர் கழிப்பிடத்தில் பொருத்தியுள்ளனர்.
பார்ப்பதற்கு நவீன கழிப்பிடம் போலவே அமைக்கப்பட்ட இது, தற்போது பள்ளி மாணவர்களின் சுகாதார சிறுநீர் கழிப்பிடமாக மாறியுள்ளது. இதற்கு, 600 ரூபாய் மட்டுமே செலவாகியுள்ளது.
ஆசிரியர் கேசவன் கூறியதாவது: கடந்த, 3, 4ம் தேதிகளில் குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் நடந்த டி.எப்.சி., விழாவில், நாட்டின் சிறந்த, ஐந்து படைப்புகளில், இந்த சிறுநீர் கழிப்பிடமும்
ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபாயுடன், விருதும் வழங்கப்பட்டது.
மாணவர்களிடம் சிந்தித்து செயல்படும் திறன் அதிகம் உண்டு. அவற்றை துாண்டுவிடும் பணியை ஆசிரியர்கள் செய்தால் போதும்; அவர்கள் ஜொலிப்பர். இந்த சிறுநீர் கழிப்பிடம் அமைக்க குறைந்த செலவே ஆகும் என்பதால், எந்த இடத்திலும் இதை அமைக்கலாம்.
இதற்காக, எஸ்.எஸ்.ஏ., மூலம் மாணவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது, என்றார்.
இன்று நள்ளிரவு முதல் பழைய ரூ.500 நோட்டுகளைப் பயன்படுத்த முடியாது: நிதியமைச்சகம்
அத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த பழைய ரூ.500 நோட்டுகளை வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதித்துறைச் செயலர் சக்திகாந்த தாஸ் தனது சுட்டுரைப் பதிவில், "குறிப்பிட்ட சேவைகளுக்காக, தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்த பழைய ரூ.500 நோட்டுளின் பயன்பாடும் டிசம்பர் 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் முடிவுக்கு வருகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. இருந்தபோதிலும், அத்தியாவசியத் தேவைகளான சமையல் எரிவாயு, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றுக்கான சேவைக் கட்டணங்களை செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள், பெட்ரோல் - டீசல் ஆகியவற்றைப் பெறுவதற்கும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை குறிப்பிட்ட காலம் வரை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. பிறகு, இதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே, சில குறிப்பிட்ட சேவைகளுக்கு பழைய ரூ.1000 நோட்டுகளின் பயன்பாட்டினை மத்திய அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு நிறுத்தியது. அதேபோல், தற்போது அத்தியாவசியப் பொருள்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கும், மருந்துப் பொருள்கள் வாங்குவதற்கும் ஏற்கப்பட்டு வந்த பழைய ரூ.500 நோட்டுகளை வியாழக்கிழமை (டிச.15) நள்ளிரவு முதல் பயன்படுத்த முடியாது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு
சென்னை,
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும். 7 சதவீத உயர்வால் தற்போது உள்ள 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக அகவிலைப்படி உயரும்.
இந்த மாத ஊதியத்துடன் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்படும். ஜூலை 1 முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரையிலான அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். அரசின் அறிவிப்பால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அகவில்லைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதல் செலவு 1,833 கோடியே 33 லட்சம் தேராயமாக இருக்கும் என்று முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Wednesday, December 14, 2016
மாணவர்களிடம் போதை பொருளை தடுக்க புதிய திட்டம் தேவை : 6 மாதத்தில் தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
நோபல் பரிசு பெற்றவரான கைலாஷ் சத்யார்தி என்பவர் நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 2014ல் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக ஆய்வு நடத்தி, அதை தடுத்து நிறுத்த வேண்டும்.
போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி கிடக்கும் மாணவ-மாணவிகள் நலனுக்காக மறுவாழ்வு மையங்களை நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தொடங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இவ்வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதி சந்திராசூட் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
அதில், ‘‘போதைப்பொருள் பயன்பாட்டால் மாணவ-மாணவியருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக, 6 மாதங்களுக்குள் மத்திய அரசு நாடு தழுவிய ஆய்வை நடத்த வேண்டும். மேலும், மாணவ-மாணவியரிடையே போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தேசிய அளவிலான ஒரு செயல்திட்டத்தை அந்த காலத்திற்குள் தயாரிக்க வேண்டும். போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீயவிளைவுகள் தொடர்பான அறிவுரைகளை பள்ளிப் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மசோதா நிறைவேற்றம்
மாற்றுத்திறனாளிகளின் உரிமையை பாதுகாப்பது மற்றும் தேவையான சலுகைகளை வழங்க வழிவகுக்கும் சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.
இம்மசோதாவுக்கு கட்சி பாகுபாடின்றி அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு அளித்தனர். இதன் மூலம் மசோதா ஒருமனதாக நிறைவேறியது. மாற்றுத்திறனாளிகள் மீது பாகுபாடு காட்டுபவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் மற்றும் 2 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க மசோதா வழி செய்கிறது. அரசுப் பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை 3 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக அதிகரிக்கவும் இம்மசோதா வழிவகை செய்கிறது.
தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான வரையறைக்கு ஏழு வகை உடல் குறைபாடுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் நிலையில் அவற்றை 21 ஆக உயர்த்தப்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மன நல குறைபாடுகள், ஆட்டிசம், செரிப்ரல் பால்சி, தசை சிதைவு உள்ளிட்ட குறைபாடுகளும் மாற்றுத்திறனாளிகள் வரையறைக்குள் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை மூன்றில் இருந்து ஐந்து சதவிகிதமாக அதிகரிக்கும் இம்மசோதா வழி செய்கிறது, மேலும் மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையர்களுக்கான அதிகார வரம்பும் அதிகரிக்கப்பட உள்ளது.
Tuesday, December 13, 2016
'ஆல் பாஸ்' முறையில் திருத்தம் : விரைவில் வருகிறது மசோதா
எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி என்ற, 'ஆல் பாஸ்' முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில், கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். இது குறித்து அவர் கூறியதாவது:
எட்டாம் வகுப்பு வரை, அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கும் முறை தற்போது உள்ளது. இந்த கொள்கையில் மாற்றம் செய்யும அதிகாரம், மாநிலங்களுக்கு அளிக்கப்பட உள்ளது. இதற்காக, கல்வி உரிமை சட்டம், திருத்தம் செய்யப்பட உள்ளது.மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, பின், மசோதா தாக்கல் செய்யப்படும். ஒரு மாணவனுக்கு, ஓராண்டு காலம் வீணாகக் கூடாது. அதனால், ஆண்டு தேர்வில் தோல்வி அடையும் மாணவனுக்கு இடைப்பட்ட காலத்தில் மறுவாய்ப்பு அளித்து, கல்வியைத் தொடர வாய்ப்பு அளிக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மீண்டும் பொதுத் தேர்வு கொண்டு வருவது குறித்து, இம்மாத இறுதியில் நடக்கும் சி.பி.எஸ்.இ., கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அடுத்த கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இனி 'ஆன்லைனில்' கட்டணம் : பள்ளிகளுக்கு அரசு உத்தரவு
சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஜனவரி முதல், 'ஆன்லைன்' மூலம் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 'ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மக்கள் மாற வேண்டும்' என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது; மத்திய அரசு துறைகள், இந்த வசதியை ஏற்படுத்தி வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கு மாறுகின்றன. இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரிய செயலர் ஜோசப் இம்மானுவேல் அனுப்பியுள்ள சுற்றிக்கை: நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகள், அடுத்தாண்டு ஜனவரி முதல், கல்வி கட்டணம், தேர்வு கட்டணம் உள்ளிட்டவற்றை, ஆன்லைன் மூலம் பெற வேண்டும்; இதற்கான ஏற்பாடுகளை செய்வதுடன், பெற்றோர்களுக்கு இதுதொடர்பாக உரிய தகவல் அளிக்கப்பட வேண்டும். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு, வங்கி கணக்கு மூலமே சம்பளம் மற்றும் இதர பண உதவி கள் வழங்க வேண்டும்.
பள்ளிகளுக்கான ஒப்பந்தங்களுக்கு, இனிமேல், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட வேண்டும்; ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படும் கூலிகள் கூட, ஆன்லைன் மூலமே வழங்க வேண்டும். 'பிரதமர் மோடியின் திட்டமான ரொக்கமற்ற பரிவர்த்தனை' என்ற இலக்கை எட்ட, கருத்தரங்குகள், நிகழ்ச்சிகள் மூலம், மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Monday, December 12, 2016
மத்திய அரசு அறிவிப்பு: கல்வி வரைவு கொள்கைக்கு மீண்டும் குழு அமைக்கப்படும்
புதிய தேசிய கல்வி வரைவு கொள்கையை டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி சமர்பித்த நிலையில், மீண்டும் புதிய குழு அமைக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய கல்வி அமைப்பில் சீர்திருத்தம் மேற்கொள்வதற்காக, கடந்தாண்டு டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான கமிட்டியை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நியமித்தது.
இக்கமிட்டி, பல்வேறு ஆலோசனைக்கு பிறகு, புதிய கல்வி வரைவு கொள்கையை கடந்த மே மாதம் சமர்ப்பித்தது. இதில் உள்ள பெரும்பாலான அம்சங்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், புதிய கல்வி வரைவு கொள்கையை தயாரிக்க மீண்டும் ஒரு புதிய கமிட்டி அமைக்க இருப்பதாக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று கூறி உள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், ‘‘சிறந்த கல்வியாளர்கள் கொண்ட புதிய குழு இன்னும் 10 நாட்களில் அமைக்கப்படும். இதற்காக சிலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன’’ என்றார். சுப்பிரமணியன் கமிட்டியின் வரைவில், ‘‘நமது கல்வி முறையில் அடிப்படையிலேயே சில மாற்றங்கள் செய்ய வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இவற்றை மேற்கொள்ள அரசு தயங்குவதாக ஏற்கனவே சுப்பிரமணியன் விமர்சித்திருந்தார். இதனால் புதிய குழு அமைக்கப்பட இருப்பதால் சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளை அரசு ஏற்காதா என அமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, ‘‘சுப்பிரமணியன் கமிட்டியின் பரிந்துரைகளும் ஏற்கப்படும். மேலும், அந்த கமிட்டியின் வரைவு கொள்கைகளையே இறுதி கொள்கையாக ஏற்க வேண்டுமென்ற கட்டாயமுமில்லை’’ என ஜவடேகர் கூறினார்.
Friday, December 09, 2016
முழு விபரங்களை தெரிவிக்க அறிவுறுத்தல் ரேஷன்கார்டு களஆய்வு டிசம்பர் 12ல் ஆரம்பம்
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் கடந்த நவம்பரில் அமல்படுத்தப்பட்டது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் பயனாளிகள் வகைப்படுத்த உள்ளனர்.
இவர்கள் முன்னுரிமை வீட்டுப்பட்டியல் எனவும் மற்ற குடும்ப அட்டைதாரர்கள் முன்னுரிமை அல்லாத வீட்டுப்பட்டியல் எனவும் குறிப்பிடப்படுவர்.தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறும் முன்னுரிமை வீட்டுப்பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களின் உண்மையான குடியிருப்பு விபரம் அறியவும், தகுதியான நபர்களை அடையாளம் கண்டு இப்பட்டியலில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கணக்கெடுக்கும் பணி நாளைமறுநாள் (டிச. 12) துவங்குகிறது. 15 நாட்கள் இப்பணி நடைபெறும். இதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள களஆய்வு பணியாளர்கள் வீடுவீடாக சென்று விசாரித்து பதிவுகள் மேற்கொள்ள உள்ளனர்.
ஆய்வில் இணைப்பு விபரம் மற்றும் இதர பொருளாதார நிலை சம்பந்தப்பட்ட விபரங்கள் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து சேகரிக்கப்பட உள்ளது. மேலும் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் ஆதார் பதிவுகளும் செய்யப்பட உள்ளன. தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு 2017ல் ஸ்மார்ட்கார்டு வழங்கப்பட உள்ளது. இதற்கு அனைத்து உறுப்பினர்களின் ஆதார் பதிவுகளும் அவசியம். எனவே களஆய்வுப்பணிக்கு அலுவலர்கள் வரும்போது ஆதார்கார்டை பதிவு செய்யாமல் இருந்தால் அதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும். அவற்றை உடனடியாக பதிவு செய்து கொள்வதும் அவசியம். தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகள் தொடர்பாக கள விசாரணையின் போது சேகரிக்கப்படும் தகவல்களின் அடிப்படையிலேயே தேசிய உணவு பாதுகாப்பு சட்ட பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேவையில்லாத புத்தகங்கள் வேண்டாம் : மாணவர்களுக்கு கல்வித்துறை அறிவுரை
தேவையில்லாத புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது. பள்ளி மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்லும் போது, அனைத்து பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை சுமந்து செல்கின்றனர். அதனால், சிறு வயது குழந்தைகளின் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பாட புத்தகங்களின் அளவு குறைக்கப்பட்டு, அதற்கேற்ப பாட வேளைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இம்முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், 'மாணவர்களுக்கு, தினமும் என்ன பாடம் நடத்த வேண்டும் என, திட்டமிட வேண்டும். அதற்கேற்ப, பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை, அளவோடு கொண்டு வர, மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
'டிஜிட்டல்' முறையில் விடை திருத்தம் : சி.பி.எஸ்.இ., புது திட்டம்
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பொதுத்தேர்வு விடைத்தாள்கள், 'டிஜிட்டல்' முறையில் திருத்தப்பட உள்ளன. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளின் விடைத்தாள்கள், ஆங்காங்கே விடை திருத்தும் மையங்கள் அமைத்து, ஆசிரியர்கள் மூலம் திருத்தப்படுகின்றன.
இதில், அவ்வப்போது பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. மறுகூட்டல், மறுமதிப்பீடுக்கு, அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர். தாமதம் : இது போல, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட தேர்வுகளிலும், மையங்களில் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன. விடைத்தாள் அனுப்புதல், பிரித்தல், மறு ஆய்வு செய்தல் போன்றவற்றிற்கு, கூடுதல் நாட்கள் தேவைப்படுவதால், தேர்வு முடிவுகளை வெளியிட தாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில், டிஜிட்டல் முறையில் விடைத்தாள்கள் அனுப்புதல் மற்றும் திருத்தம் நடக்கும் என, சி.பி.எஸ்.இ., வாரிய தலைவர், ஆர்.கே.சதுர்வேதி அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: வரும் கல்வி ஆண்டில், தேர்வு மையத்திலிருந்து விடைத்தாள்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஆன்லைனில் விடை திருத்த ஒருங்கிணைந்த மையத்திற்கு அனுப்பப்படும். கணினி குறியீடு : பின், அவற்றில் கணினி குறியீடு கொண்ட, ஓ.எம்.ஆர்., விடைத்தாள்கள், கணினி மூலமும், மற்றவை கணினி வழியே பிரித்தும், திருத்த அனுப்பப்படும்.
இந்த, டிஜிட்டல் திருத்த முறையால், முறைகேடாக திருத்தும் வகையில், விடைத்தாள்கள், 'லீக்' ஆவது; காணாமல் போவது தடுக்கப்படும். மேலும், 25 நாட்களுக்கு முன், தேர்வு முடிவுகளை வெளியிடலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நீட் தேர்வு தமிழில் எழுதலாம்
நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் உள்ள இடங்களில் சேர விரும்பும் மாணவர்கள் அகில இந்திய மருத்துவ, பல் மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எழுத வேண்டும். தனியார் மருத்துவ, பல் மருத்துவக் கல்லூரிகளிலும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வை எழுத வேண்டும்.
இந்நிலையில் நீட் மருத்துவ பொதுநுழைவுத்தேர்வை தமிழிலும் எழுதலாம் என்று மக்களவையில் சுகாதாரத்துறை இணை மந்திரி அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:
2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு தமிழில் நடத்தப்படும்.அசாமி, குஜராத்தி, தெலுங்கு, பெங்காலி மொழிகளிலும் நீட் தேர்வை எழுதலாம். ஆங்கிலம்,ஹிந்தி தவிர்த்து பிற மாநில மொழிகளிலும் நீட் தேர்வு நடத்தப்படும். மேலும் மருத்துவ இளம், முதுகலை படிப்புகளுக்கான இடஒதுக்கீட்டை மாநில அரசு முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.