இலவச SMS களை உடனுக்குடன் பெற ON tnptfmani என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை(SMS) பெறுங்கள். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். plz call 1909

Monday, April 25, 2016

அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் அனைத்து மொபைல்களிலும் அவசர உதவி பட்டன் கட்டாயம்


புதிதாக தயாரிக்கப்படும் அனைத்து மொபைல் போன்களிலும் எச்சரிக்கை பட்டன் வசதி அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் கட்டாயம் என மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தொழில் நுட்பம் மனித வாழ்க்கையை மேம்படுத்துகிறது. அதேநேரத்தில் மகளிர் பாதுகாப்புக்கு இது எந்த வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் உறுதி செய்ய வேண்டும். இந்த வகையில், 2017 ஜனவரி 1ம் தேதி முதல், அவசர உதவி பட்டன் இல்லாமல் எந்த மொபைலும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட கூடாது. இதுபோல் 2018 ஜனவரி 1ம் தேதியில் இருந்து விற்கப்படும் மொபைல் போன்களில் ஜிபிஎஸ் வசதி இருப்பதும் கட்டாயம் ஆக்கப்படுகிறது.

ஜிபிஎஸ் வசதி அல்லாத சாதாரண போன்களாக இருந்தாலும் அவற்றில் 5 அல்லது 9ம் எண் பட்டன்கள் அவசர உதவி அழைப்புக்கானதாக ஒதுக்கப்பட வேண்டும். மொபைல் போன்களை ஆன் அல்லது ஆஃப் செய்ய சில நொடிகளுக்கு நீண்ட நேரம் அழுத்துவதுபோல, இந்த அவசர உதவி பட்டன்களை நீண்ட நேரம் அழுத்துவதன் மூலம் அழைப்பு செல்வதுபோல் அமைக்க வேண்டும். அல்லது அதே பட்டனை மூன்று முறை தொடர்ந்து அழுத்துவதன் மூலமாகவும் அழைப்பு செல்வதுபோல் அமைக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை 10 சதவீதம் அதிகரிக்க உத்தரவு


வரும் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை 10 சதவீதம் அதிகரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அரசுப்பள்ளிகளில் கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் 10 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளிகள் திறக்கும் நாளில் மாணவர், ஆசிரியர் வருகையை பதிவு செய்யும் வகையில் வருகை பதிவேடு பராமரிக்க வேண்டும்.

பள்ளி திறக்கும் நாளிலேயே இலவச பஸ் பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், ஆங்கில வழிக் கல்வித்தரம், வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள், கடந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம், வளர்ச்சி குறித்து பெற்றோருக்கு எடுத்துக்கூறி மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு வரை தொடர்ந்து அதே பள்ளியில் படித்த மாணவர்களை மதிப்பெண் குறைவை காரணம் காட்டி வேறு பள்ளிகளுக்கு அனுப்ப கூடாது. அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பில் சேர்க்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 2 லட்சம் மத்திய அரசுப் பணிகள்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்


அடுத்த ஆண்டுக்குள் (2017) புதிதாக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். தில்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு திங்கள்கிழமை பேட்டியளித்த அவர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:

சிறப்பான நிர்வாகத்தை அளிக்கும் வகையிலும், அரசின் பல்வேறு துறைகளை வலுப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக புதிதாக 2.18 லட்சம் மத்திய அரசுப் பணியிடங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கியமாக, மத்திய உள்துறை அமைச்சகத்தில் 5,635 பணிடங்களும், மத்திய பாதுகாப்புப் படைகளில் 47,264 பணியிடங்களும், பாதுகாப்புத் துறை அமைச்சகத்தில் 10,894 பணிடங்களும், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் 1,080 பணியிடங்களும், அணுசக்தித் துறை அமைச்சகத்தில் 6,353 பணியிடங்களும், வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் 2,072 பணியிடங்களும், சுரங்கத்துறையில் 12,902 பணியிடங்களும் பணியாளர் நலத்துறை அமைச்சகத்தில் 1,796 பணிடங்களும் உருவாக்கப்பட்ட உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Sunday, April 24, 2016

தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் அவதி:அடிப்படை வசதிகள் செய்யப்படாததால் புலம்பல்


சட்டசபை தேர்தல் தொடர்பாக, ஆசிரியர்களுக்கான, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், எந்த அடிப்படை வசதியையும் செய்யாததால், ஆசிரியர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

சட்டசபை தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடி மையத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், ஓட்டுப்பதிவு முடிந்ததும், ஓட்டுப் பதிவு இயந்திரங்களை ஒருங்கிணைத்து, ஓட்டு எண்ணும் மையத்துக்கு அனுப்புதல்; ஓட்டு எண்ணிக்கை போன்ற பணிகளிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக, ஒவ்வொரு தேர்தலிலும், ஆசிரியர்களுக்கு, நான்கு கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்படும். முதல் கட்ட பயிற்சி வகுப்பு, நேற்று தமிழகம் முழுவதும் நடந்தது; இதில், 1.5 லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வைத்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் விதிமுறைகள் மற்றும் பணிகள் குறித்து விளக்கம் அளித்தனர். நாள் முழுவதும் நடந்த இந்த பயிற்சி வகுப்பில், பயிற்சி மையங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. பல இடங்களில், மைக் மற்றும் ஒலிபெருக்கி வசதி செய்யப்படவில்லை. அதனால், தேர்தல் அதிகாரி கூறிய விஷயங்கள் ஆசிரியர்களுக்கு தெளிவாக விளங்கவில்லை. ஆசிரியர்கள் அமர சரியான இட வசதி செய்யப்படவில்லை. கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசியது. மதிய உணவு வழங்கியதில் பற்றாக்குறை ஏற்பட்டது; குடிநீர் வசதியும் சரிவர செய்யப்படவில்லை. இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, 'பயிற்சி வகுப்பை திட்டமிட்டு செய்யவில்லை. பயிற்சி வகுப்பை நடத்திய வருவாய்த்துறை அலுவலர்கள், அடிப்படை வசதிகளை செய்யாமல், ஆசிரியர்களை மரியாதையின்றி தரக்குறைவாக நடத்தினர். இதே நிலை நீடித்தால், தேர்தல் பணிகளை புறக்கணிப்போம்' என்றனர்

இறுதி வாக்காளர் பட்டியல்29ம் தேதி வெளியீடு


''இறுதி வாக்காளர் பட்டியல், 29ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.தமிழகத்தில், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஜன., 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதன்பின், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த வாக்காளர்களின் பெயர், இறந்தவர்களின் பெயர், என, ஆறு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

சட்டசபை தேர்தலையொட்டி, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டது. இதன் காரணமாக, பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய, முகவரி மாற்ற, 6.55 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.இவ்விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி, 22ம் தேதிக்குள் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சில மாவட்டங்களில், இன்னமும் பணி நிறைவு பெறவில்லை.எனவே, 29ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

மதிய உணவுக்கு பதில் ரூ.150 :தேர்தல் கமிஷன் உத்தரவு


தேர்தல் பணி தொடர்பான பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவுக்கு பதிலாக, உணவுப்படி வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், மே, 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில், 1.97 லட்சம் பெண்கள் உட்பட, 3.29 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சி முகாம், நேற்று தமிழகம் முழுவதும் துவங்கியது.

இவர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, மதிய உணவு வழங்க, ஒருவருக்கு, 150 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. ஆனால், பயிற்சி முகாமிற்கு ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், அந்தத் தொகையை, முறையாக செலவழிப்பதில்லை; தரமான உணவு வழங்குவதில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண, பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு, அவர்கள் கையில், 150 ரூபாயை வழங்கி விடுங்கள். பயிற்சி முகாம் நடைபெறும் இடத்தில், ஏதேனும் ஓட்டல் நிறுவனத்தை ஸ்டால் அமைக்க சொல்லுங்கள். பயிற்சிக்கு வருவோர் விரும்பிய உணவை வாங்கி சாப்பிடட்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Friday, April 22, 2016

புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண்களால் குழப்பம் சீரமைக்கும் கருவூலத்துறை


புதிய பென்ஷன் திட்டத்தில் சில அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரு கணக்கு எண் இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.தமிழகத்தில் 2003 ஏப்., 1ல் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் 4,23,441 அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் வசூலித்த சந்தா மற்றும் அரசு பங்குத்தொகை ரூ.8,543 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை.

இதனால் ஓய்வு பெற்ற மற்றும் இறந்த அரசு ஊழியர், ஆசிரியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது. இதில் சிலருக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் இரு கணக்கு எண் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த குழப்பத்தை தவிர்க்க பழைய கணக்கை, புதிய கணக்கு எண்களுடன் சேர்க்க கருவூலத்துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பணிமாறுதல், பதவி உயர்வில் செல்லும் ஊழியர்களுக்கு, அவர்களது பழைய கணக்கு எண்ணில் சந்தா பிடித்தம் செய்யாமல், புதிய கணக்கு துவங்கப்படுகிறது. இதனால் சிலருக்கு இரு கணக்கு எண் உள்ளது. அவற்றை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

மேலும் இதுவரை சந்தா செலுத்தாத கணக்குகளும் ரத்து செய்யப்படும், என்றார். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் செய்தனர். தற்போது புதிய பென்ஷன் திட்டத்தை சீரமைக்கும் பணியில் கருவூலத்துறை ஈடுபட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெறுவோர்க்கு, பதவி உயர்வில் ஊதிய நிர்ணயம் செய்தல்- தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரை:

Thursday, April 21, 2016

பகுதி நேர பி.இ., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு


அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லுாரிகளில், 2016 - 17ம் கல்வியாண்டில், பகுதி நேர, பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தொழில்நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி விடுத்துள்ள அறிக்கை: கோவை, சேலம், திருநெல்வேலி, வேலுார், பர்கூர், அரசு பொறியியல் கல்லுாரி; காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லுாரி; கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ஆகியவற்றில், பகுதி நேர பி.இ., - பி.டெக்., பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

* விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அன்று, பட்டயப் படிப்பு முடித்து, இரண்டு ஆண்டுகள் முழுமையாக நிறைவு பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்கலாம்

* விண்ணப்பதாரர் பணிபுரிபவராகவும், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்திருக்கவும் வேண்டும்

* www. ptbe-tnea.com என்ற இணையதளம் வாயிலாக, விண்ணப்பிக்க வேண்டும். 'ஆன்லைன்' மூலமாக விண்ணப்பித்த பின், அதை பிரதி எடுத்து, உரிய ஆவணங்கள் மற்றும் பதிவுக் கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு, www.ptbe-tnea.com இணையதள முகவரியில், 'Information and Instructions to Candidates' என்ற பக்கத்தில் பார்க்கவும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Wednesday, April 20, 2016

வாக்காளர் பெயர் வரிசை எண் ,தொகுதி பட்டியல் எண் அறிய !!!

Click below

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx

தபால் ஓட்டு போடும் கடைசி தேதி 18ஏப்ரல்


தமிழகத்தில், 4.73 லட்சம் வாக்காளர்கள், தபால் ஓட்டு போட உள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தல் பணியில், 3 லட்சத்து 3 ஆயிரம் அரசு ஊழியர்கள்; ஒரு லட்சம் போலீசார்; 70 ஆயிரம் டிரைவர், வீடியோகிராபர் மற்றும் பிற ஊழியர்கள் என, மொத்தம் 4.73 லட்சம் ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு, மே 5ம் தேதி, தபால் ஓட்டு சீட்டு வழங்கப்படும். அவர்கள், மே 6ம் தேதியில் இருந்து, மே 18ம் தேதி வரை, தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது உதவி அலுவலர் அறை முன் வைக்கப்பட்டிருக்கும், ஓட்டுப் பெட்டியில், தபால் ஓட்டுகளைப் போடலாம்.
தபால் மூலமாகவும், தபால் ஓட்டுகளை, சம்பந்தப்பட்ட தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பலாம்.

TNPSC group 1 results released


குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) இன்று வெளியிட்டது.

இதன்படி, 4 ஆயிரத்து 33 பேர் பிரதானத் தேர்வினை எழுதுவதர்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரதானத் தேர்வு ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து, தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:

குரூப் 1 தொகுதியில் 74 காலிப் பணியிடங்கள் இருந்தன. இந்த இடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 8 இல் முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வில், ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 696 பேர் கலந்து கொண்டனர்.

இந்தத் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதிலிருந்து முதன்மைத் தேர்வுக்கு 4 ஆயிரத்து 33 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு வரும் ஜூலை 29 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 31 ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும்.

இதேபோன்று உதவி புள்ளியியல் ஆய்வாளர், நூலகர்-உதவி நூலகர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன. புள்ளியியல் பணிக்கு 54 பேரும், நூலகர் பணிக்கு 71 பேரும் தாற்காலிமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Tuesday, April 19, 2016

பி.எஃப். புதிய விதிமுறைகளை ரத்து செய்தது மத்திய அரசு


பி.எஃப். புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு ரத்து செய்தது. 58 வயதுக்கு முன் பி.எஃப். பணத்தை எடுக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு ரத்து செய்யப்பட்டது. புதிய கட்டுபாட்டு அமலாக்கத்தை ஏற்கனவே மூன்று மாதம் மத்திய அரசு ஒத்திவைத்திருந்தது.

நாடு முழுவதும் தொழிலாளர்கள் எதிர்ப்பை அடுத்து பி.எஃப். அறிக்கையை மத்திய அரசு தற்போது ரத்து செய்துள்ளது. அரசு அறிவிக்கை ரத்தானதை தொடர்ந்து பி.எஃப். நிதியை திரும்ப எடுப்பதற்கான கட்டுப்பாடு நீங்கியதாக மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார்.

Monday, April 18, 2016

ப்ளஸ் 1 பாடபுத்தகத்தில் மாற்றம் இல்லை


பத்து ஆண்டுகள் கடந்த பிறகும் பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் இந்த ஆண்டும்  தொடரும் என்று பள்ளிக் கல்வி துறை தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் கீழ் உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளிகள் வருகின்றன. ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் தொடக்க  கல்வித்துறையின் கீழ் வருகின்றன. மேற்கண்ட பள்ளிகளில் மொத்தம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களுக்கான  புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்  மாணவ மாணவியருக்கான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

ஒவ்ெ்வாரு ஆண்டும் இதற்காக 52 தலைப்புகளில் 6 கோடி புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படுகிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான  புத்தகங்கள் விலைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில், பாடத்திட்டங்களை வகுத்து அதற்கேற்ப பாடங்களை எழுதும் பொறுப்பு மாநில கல்வி ஆராய்ச்சி  மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த முறை ஆட்சியில் இருந்த திமுக அரசு 1 முதல் 9ம் வகுப்பு வரை சமச்சீர்  கல்வியை அறிமுகம் செய்தது. அது படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்கு அறிமுகமானது.

இதற்கு முன்னதாக ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் ஒரு முறை பாடத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வழங்குவார்கள்.  இதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 புத்தகங்கள் கடந்த 2005ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டு அச்சிட்டு வழங்கினர். அதில் கணக்கு, அறிவியல் பாடங்களில்  கடினமான பகுதிகள் அதிக அளவில் இடம் பெற்று இருந்ததால் மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகரித்தது. இதை கருத்தில் கொண்டு கடந்த முறை  ஆட்சியில்  இருந்த திமுக அரசு கடினப் பகுதிகளை நீக்கியது. அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு, புதிய பாடத்திட்டத்தின்படி புதிய  பாடப்புத்தகங்களை அச்சிட்டு வழங்கி இருக்க வேண்டும்.

மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் என்சிஇஆர்டி(தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின்) வரைவு பாடத்திட்டத்தின்படி  புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு பிளஸ் 1 பிளஸ் 2 பாடப்புத்தகம் தயாரிக்கப்பட்டது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த புதியபாடப்புத்தகம் அச்சிட  அரசு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் தற்போது அடுத்த சட்டப் பேரவைத் தேர்தலும் அறிவிக்கப்பட்டு விட்டது. அடுத்த கல்வி  ஆண்டு தொடங்க  இன்னும் 40 நாட்கள் உள்ள நிலையில் புதிய பாடப்புத்தகம் அச்சிட்டு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், வரும் கல்வி ஆண்டில் பிளஸ் 1,  பிளஸ் 2 வகுப்புகளுக்கு பழைய பாடப்புத்தகங்களே தொடரும் என்று பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை கருத்தில் கொண்டு, தனியார்  பள்ளிகளில் இப்போதே பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை நடத்த தொடங்கிவிட்டனர்.

ஏப்.30 வரை வகுப்புகள் : அரசு தொடக்க பள்ளி மாணவர்கள் கொளுத்தும் வெயிலால் அவதி


அரசு தொடக்க பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 வரை வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ெகாளுத்தும் வெயிலால் மாணவ மாணவியர் அவதிப்பட்டு வருகின்றனர். பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் 2015-16ம் கல்வி ஆண்டில் ஏப்ரல் 21 வரை செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிவடைந்து ஏப்ரல் 22 முதல் பள்ளிளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமாகிறது. அதே போன்று தொடக்க, நடுநிலை பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை செயல்பட்டு பள்ளி வேலை நாட்கள் முடிந்து மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை ஆரம்பமாகிறது.

2016-17ம் கல்வியாண்டில் ஜூன் 1ம் புதன் கிழமை அன்று அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் தொடக்க பள்ளிகளில் கொளுத்தும் வெயிலிலும் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மாணவ மாணவியரை அவதிப்பட வைத்துள்ளது.

Wednesday, April 13, 2016

பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்


2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது. இதன்படி, வெள்ளிக்கிழமை முதல் பதிவு செய்யலாம்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 7 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது. முதல் முறையாக இந்த வசதியை அண்ணா பல்கலைக்கழகம் ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்ப விநியோகம் கிடையாது. பிளஸ்-2 மதிப்பெண் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தேவையான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து -"செயலர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை' என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானதற்குப் பிறகு 10 நாள்கள் வரை கால அவகாசம் அளிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த அவகாசம் நீட்டிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதுகுறித்து பதிவாளர் கணேசன் கூறியது: பதிவு செய்யும் முறையில் சந்தேகம் எழும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில், அரசு பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 60 உதவி மையங்கள் செயல்படும். இங்கு சந்தேகங்களை அறிவதோடு, விவரங்களை பதிவையும் செய்து கொள்ள முடியும். இதுதவிர, அரசு இ-சேவை மையங்கள் மூலம் விவரங்களைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்டணம்: கலந்தாய்வுக்கான விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாக எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பலாம். அல்லது கடன் அட்டை, பற்று அட்டைகள் மூலமாக ஆன்-லைனிலும் கட்டணத்தைச் செலுத்தலாம் என்றார். 486 இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க வசதிக்காக ஆன்-லைன் விவரங்கள் பதிவை அரசு இ-சேவை மையங்களில் மூலமும் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைமைச் செயலகம், மாநகராட்சி அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், பகுதி அலுவலகங்கள், கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நான்கு மாவட்டங்களில் அமைந்துள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகங்கள் ஆகியவற்றில் 486 இடங்களில் அரசு இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் விண்ணப்பிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.