Friday, January 22, 2016
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, நடைமுறையிலுள்ள பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை உடனே வழங்க வேண்டும், குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்த வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன. இதுகுறித்து ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
கோரிக்கைகள் அடங்கிய மனுவை தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனை நேரடியாகச் சந்தித்து அளித்தோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-இல் வேலைநிறுத்தம்: இருப்பினும் திட்டமிட்டபடி பிப்ரவரி 10-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெறும் என்றார்.
சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வி, துணைத் தலைவர் கிருஷ்ணசாமி,தலைமை செயலக தலைவர் கணேசன்,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் எஸ்.மோசஸ் உள்பட பல்வேறு பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், தமிழகம் முழுவதும் வந்திருந்த அரசு ஊழியர்களும் பங்கேற்றனர்.
10ம் வகுப்பு தேர்வு ரூ.115 கட்டணம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு, 115 ரூபாய் தேர்வு கட்டணம் வசூலிக்க, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், உயர் பிரிவு மாணவர்கள் தவிர, மற்றவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இன மாணவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம், இரண்டு லட்சத்துக்கு அதிகமாக இருந்தால், அவர்களுக்கு தேர்வு கட்டணம் உண்டு. மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.
7 ஆசிரியர்களுக்கு 'ஆப்சென்ட்'
பள்ளிக்கு தாமதமாக வந்த ஏழு ஆசிரியர்களுக்கு, ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, திருவண்ணாமலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்.திருவண்ணாமலை மாவட்டத்தில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, கல்வித் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக, சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தி.மலை முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார், கடந்த 20ம் தேதி, போளூர் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளிகளில், அதிரடி ஆய்வு நடத்தினார்.
அப்போது, சந்தவாசல் பள்ளியில், ஐந்து ஆசிரியர்கள், கஸ்தம்பாடி பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள், பள்ளிக்கு தாமதமாக வந்தது தெரிவந்தது. அவர்களுக்கு ஒருநாள், 'ஆப்சென்ட்' போட்டு, முதன்மைக்கல்வி அலுவலர் பொன்குமார் நடவடிக்கை எடுத்தார்.
பி.எப்., வட்டி 9 சதவீதம்?
இ.பி.எப்.ஓ., எனப்படும், வருங்கால வைப்பு நிதி அமைப்பு, நடப்பு, 2015 - 16ம் நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 9 சதவீத வட்டி வழங்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இ.பி.எப்.ஓ., அறக்கட்டளை நிர்வாகியும், பாரதிய தொழிலாளர் சங்க செயலருமான பானுசுரே, டில்லியில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: இ.பி.எப்.ஓ.,வின் நிதித் தணிக்கை மற்றும் முதலீட்டுக்குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், நடப்பு நிதியாண்டில், பி.எப்., முதலீடுகளுக்கு, 8.95 சதவீதம் வட்டி வழங்கலாம் என, பரிந்துரைத்தது. இம்மாத முடிவில், தணிக்கைக் குழு, மீண்டும் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளது. அப்போது, சமீபத்திய நிலவரப்படி, வருவாய் மதிப்பீடு செய்யப்படும்.
அப்போது, பி.எப்., மீதான வட்டி, 9 சதவீதமாக அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது. குழு பரிந்துரைக்கும் வட்டி வீதம், பி.எப்.ஓ.,வின் மத்திய அறக்கட்டளை நிர்வாகிகள் குழுவால் அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன்பின், நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.
Thursday, January 21, 2016
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க அரசு பள்ளி மாணவர்களுக்கு தடை
தனியார் நிறுவனம் நடத்தும் நடைபயண நிகழ்ச்சிகளில், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.மதுரையைச் சேர்ந்த, 'டான்' அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம், 'பசுமை மற்றும் துாய்மை' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களை கொண்டு, 14 மாவட்டங்களில் நடைபயணம் நடத்த, பள்ளிக்கல்வி துறையில் அனுமதி கேட்டுஉள்ளது.
இதையடுத்து, மதுரை, ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, கடலுார், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், சென்னை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், 'டான் அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், எந்த காரணம் கொண்டும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது' என, தெரிவித்து உள்ளார்.
சி.இ.ஓ., - டி.இ.ஓ., பணியிடங்கள் 57 காலி: பொதுத்தேர்வு பணிகள் பாதிக்கும் அபாயம்
பள்ளிக் கல்வித் துறையில், 57 உயர் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், பொதுத் தேர்வு மற்றும் தேர்தல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில், 32 வருவாய் மாவட்டங்களில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான, சி.இ.ஓ., பணியிடங்கள் உள்ளன. இவர்கள், பள்ளி நிர்வாகம், ஆசிரியர் நியமனம் மற்றும் தேர்வு பணிகள்; மற்ற அரசு துறை சார்ந்த ஆசிரியர்களின் பணிகளை கவனிக்கின்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர் கட்டுப்பாட்டில், 32 மாவட்டங்களுக்கு தனியாக, 32 சி.இ.ஓ.,க்கள் உள்ளனர். இதன்படி, மொத்தமுள்ள, 64 சி.இ.ஓ., பணி யிடங்களில், 22 இடங்கள் காலியாக உள்ளன.மேலும், சி.இ.ஓ., கட்டுப்பாட்டில், கல்வி மாவட்டம் வாரியாக, 125 மாவட்ட கல்வி அதிகாரி இடங்கள் உள்ளன. இவற்றில், 35 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.பல இடங்களில், சி.இ.ஓ.,க்கள் இல்லாததால், மத்திய அரசின் எஸ்.எஸ்.ஏ., நிதியை கையாள்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளின் ஆயத்தப் பணிகளை கவனிக்க, கண்காணிப்பு அதிகாரிகளாக, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ.,க்கள் வேண்டும். ஆனால், 57 காலியிடங்கள் உள்ளதால், யாரை தேர்வு பணிக்கு அமர்த்துவது என, குழப்பம் ஏற்பட்டுஉள்ளது. பட்டியல் தயார் காலியிடங்களை நிரப்ப, தகுதியான ஆசிரியர்கள் பதிவு மூப்பு பட்டியலில் தயாராக உள்ளனர். அந்த பட்டியலை ஆய்வு செய்து, சி.இ.ஓ., மற்றும் டி.இ.ஓ., காலியிடங்களை நிரப்ப வேண்டும். அதற்கு தாமதமானால், தேர்வு மற்றும் தேர்தல் பணிகளில், நிர்வாக அளவில் சிக்கல் ஏற்படும். விடைத்தாள் திருத்தம், வினாத்தாள் மற்றும் விடைத்தாள் மையங்களை கண்காணித்தல் போன்ற பணிகளும் பாதிக்கப்படும்.
Wednesday, January 20, 2016
பெயரில்லாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: ராஜேஷ் லக்கானி
நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, தமிழகத்தில், 5.79 கோடி வாக்காளர்கள், வரும் சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்கவுள்ளனர். புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவர்களில், எட்டு லட்சம் பேருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, நேற்று கூறியதாவது:
தமிழகம் முழுவதும், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இந்த ஆண்டு புதிதாக, 12.33 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில், எட்டு லட்சம் பேர், அலைபேசி எண்ணை கொடுத்திருந்தனர். அவர்களுக்கு, பெயர் சேர்க்கப்பட்ட விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாக்காளர்களுக்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளது.
இவை, பிப்., 10 முதல், ஓட்டுச்சாவடி அலுவலர் மூலம், வீடு வீடாக வழங்கப்படும். வாக்காளர் பட்டியல், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும், பார்வைக்கு வைக்கப்படும். பட்டியலில், பெயர் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.இளம் வயது வாக்காளர்கள்நேற்று வெளியான வாக்காளர் பட்டியலில், 6.14 லட்சம் பேர், 18 - 19 வயதிற்குட்பட்டவர்கள். இவர்கள், முதன் முறையாக, தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.
மீண்டும் உடைந்தது ஆசிரியர் கூட்டுக்குழு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை, அரசிடம் முன்னெடுத்து வைக்கவும், அவர்களை ஒருங்கிணைக்கவும், ஜாக்டோ, ஜாக்டா என்ற அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது, 'டேக்டோ' என்ற புதிய அமைப்பு உருவாகிஉள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைக்காக, ஆசிரியர் சங்க கூட்டுக் குழுவினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதில், 'ஜாக்டோ' என்ற சங்கம், பல ஆண்டுகளாக, அரசு ஊழியர் சங்கங்களின், 'ஜியோ' அமைப்புடன் கை கோர்த்து, பல போராட்டங்களை நடத்தி வருகிறது. இதில், 24 முக்கிய சங்கங்கள் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன், 18 ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டா' என்ற கூட்டு நடவடிக்கைக் குழு துவங்கப்பட்டது. இந்த குழுவும், போராட்டம் மற்றும் கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது மூன்றாவதாக, அ.தி.மு.க., அரசுக்கு ஆதரவாக, புதிய கூட்டு நடவடிக்கைக் குழு துவங்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்ற சங்க பேரவை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியதாஸ், 11 சங்கங்களை சேர்த்து,
'தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு - டேக்டோ' என, தனி அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். அதன் உயர்மட்டக் கூட்டம், 19ம் தேதி, சென்னையில் நடந்தது. இதில் பேசிய சிலர், முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இரு அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக, டேக்டோ உதயமாகியுள்ளது, புது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.-
Tuesday, January 19, 2016
Monday, January 18, 2016
மக்கள்தொகை தகவல் சரிபார்ப்புப் பணி தொடக்கம்: பிப்ரவரி 5 வரை நடைபெறும்
தமிழகம் முழுவதும் தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான தகவல் சேகரிப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து, மக்கள் கணக்கெடுப்புத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தகவல் சேகரிப்புப் பணிக்காக நியமனம் செய்யப்பட்ட அரசு அலுவலர் (கணக்கெடுப்பாளர்) ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, குடும்பத்தினர் பற்றிய தகவலை சேகரிப்பார். விவரங்களை உறுதி செய்து கொள்ள...
: கணக்கெடுப்பாளர் அச்சிடப்பட்ட மக்கள்தொகை பதிவேடு புத்தகத்தையும் தன்னுடன் எடுத்து வருவார். புத்தகத்தில், குடும்ப நபர்களின் பெயர், பாலினம், பிறந்த தேதி, தந்தையின் பெயர், தாய் பெயர், பிறந்த இடம், தற்போதைய முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்கும். மேலும், வீட்டிலுள்ளவர்களுக்கு ஏற்கெனவே ஆதார் எண் வழங்கப்பட்டிருந்தால், அதுபற்றிய தகவலும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும்.
பொதுமக்கள் தங்களின் விவரங்களை சரிபார்ப்பதோடு, முழுமையான தகவல்களையும் அளிக்க வேண்டும். மேலும், செல்லிடப்பேசி எண், குடும்ப அட்டை எண் உள்ளிட்ட விவரங்களையும் கட்டாயம் அளிக்க வேண்டும். மக்கள் தொகை பதிவேடு புத்தகத்தில் அச்சிடப்பட்ட விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா, இறந்த நபர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதா, புதிய உறுப்பினர் (பிறந்த குழந்தை) விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா போன்ற விவரங்களையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். ஒத்துழைக்க வேண்டுகோள்:
புதிதாக குடியேறியவர்களும் விவரங்களையும் கணக்கெடுப்பாளரிடம் தவறாமல் தெரிவித்து, தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பொதுமக்கள் குடும்ப நபர்களின் அனைத்து ஆவணங்களையும் தயாராக வைத்திருந்து, சரிபார்த்து பதிவு செய்ய ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Sunday, January 17, 2016
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் கோரும் ஆசிரியர்கள்: ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படாததால் எதிர்பார்ப்பு
தமிழகத்தில் ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்படாததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள்.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரி யர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் களுக்கும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவு கடந்த 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தாலும் தமிழ கத்தில் அது தொடர்பான அர சாணை 15.11.2011 அன்றுதான் வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் உத்தரவு அம லுக்கு வருவதற்கு முன்பாக அரசுப் பள்ளியிலோ, அரசு உதவி பெறும் பள்ளியிலோ பணி நியமன முன்னேற்பாடுகள் தொடங்கியிருப் பின் அத்தகைய ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு தேர்ச்சியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் 23.8.2010 முதல் 23.8.2012 வரையிலான காலகட்டத்தில் நிய மிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 5 ஆண்டுகள் அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டது. தகுதித் தேர்வு தொடர்பான அரசாணை வெளியிடப்பட்ட 15.11.2011 முதல் இந்த 5 ஆண்டு கால அவகாசம் கணக்கிடப்படும் என்றும் அறிவிக் கப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதியுடன் ஐந்தாண்டு காலக்கெடு முடிவடை கிறது.
தமிழகத்தில் கடந்த 2012 ஜூலை மாதம் நடைபெற்ற முதல் தகுதித் தேர்வுக்கு அளிக்கப்பட்ட நேரம் போதாது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து மறு தேர்வு அதே ஆண்டு அக்டோபர் மாதமும், கடைசியாக 2013 ஆகஸ்ட் மாதமும் என கடந்த 4 ஆண்டு களில் 3 தேர்வுகள் மட்டுமே நடத் தப்பட்டுள்ளன. ஆண்டுக்கு 2 தகு தித் தேர்வுகள் நடத்தப்பட வேண் டும் என்பது விதிமுறை. ஆனால், அதுபோன்று தகுதித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதேநேரத் தில் சிபிஎஸ்இ-யின் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வானது இது வரை 8 முறை நடத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முழு அளவில் நடைபெற்ற 2 தகுதித் தேர்வுகளிலும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்கள் கணிசமான எண்ணிக் கையில் தேர்ச்சி பெற்ற போதிலும் இன்னும் 3 ஆயிரம் பேர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணி யில் இருந்து வருகின்றனர். தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத காரணத் தால் அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்திவைக் கப்பட்டிருப்பதுடன் தகுதிகாண் பருவம் முடிந்தும் அவர்கள் இன் னும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறும்போது, “ஆண்டுதோறும் தகுதித் தேர்வு நடத்தப்பட்டிருந்தால் தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகள் கிடைத் திருக்கும். எனவே, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை அரசு நீட்டிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.
இன்னொரு தரப்பு ஆசிரியர்கள் கூறும்போது, “தகுதித்தேர்வு தொடர் பான மத்திய அரசின் உத்தரவு வருவதற்கு முன்பு பணி நியமன பணிகள் தொடங்கி அதன்பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளித்தது போல எங்க ளுக்கும் தகுதித் தேர்வு தேர்ச்சியி லிருந்து விலக்கு அளிக்க வேண் டும்” என்று வேண்டு கோள் விடுத் தனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “இந்தப் பிரச்சினை தொடர்பாக அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மக்கள் தொகை விவரம் உறுதிபடுத்தும் பணி இன்று துவக்கம்
மக்கள் தொகை விவரங்களை உறுதிபடுத்தும் பணியை ஆசிரியர்கள் இன்று துவக்குகின்றனர். இந்தியாவில் கடந்த 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தமிழகத்தில் மக்கள் தொகை விபரங்களை உறுதிப்படுத்தும் விதமாக, 2ம் கட்டமாக ஆசிரியர்களை கொண்டு வீடுகள் தோறும் கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
2011ல் கணக்கெடுப்பு நடத்திய அதே ஆசிரியர்களே இப்பணிகளில் ஈடுபட வேண்டும். இப்பணியை இன்று (ஜனவரி. 18) துவக்கி பிப்ரவரி 5க்குள் முடிக்க வேண்டும். 2011ல் எடுத்த கணக்கெடுப்பு விவரத்துடன் கூடிய விண்ணப்பம் ஆசிரியர்களுக்கு ‘பிரின்ட் அவுட்’ செய்து வழங்கப்படும். அந்த விண்ணப்பத்துடன் வீடுகளுக்குச் சென்று, வீட்டில் உள்ள குடும்ப தலைவர், தலைவி பெயர்கள், குழந்தைகள் மற்றும் இதர விபரம் சரியாக உள்ளதா என சரிபார்க்க வேண்டும். இதில் கூடுதலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, செல்போன் எண்களை கண்டிப்பாக கேட்டு பெற்று விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
2011க்கு பின் பிறந்த குழந்தை இருந்தால், அவர்களது விபரம், மாறுதலாகி சென்ற குடும்பத்தினர், புதியதாக திருமணம் முடித்தோர் விபரத்தை சேகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில், தாலுகாவிற்கு குறைந்தது 100 ஆசிரியர்கள் வீதம், மக்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பத்து தாலுகாக்களில் கிட்டத்தட்ட 1000 ஆசிரியர்கள் வரை ஈடுபடுவர். இப்பணியை பிப்ரவரி 5ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கான பூர்த்தி செய்யப்பட்ட ‘பிரின்ட் அவுட்’ விண்ணப்பங்கள், கலெக்டர் அலுவலகம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, வீடுகளுக்கு வரும் ஆசிரியர்களிடம் உண்மையான தகவலை வழங்கி ஒத்துழைப்பு தரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பங்களிப்பு ஓய்வூதியம்'அம்போ' கணக்குகளுக்கு விடிவு
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் விடுபட்ட, பழைய கணக்குகளுக்கான பல கோடி ரூபாயை, ஆசிரியர்களின் புதிய கணக்கில் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிதாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மத்திய அரசில், 2004 முதலும்; தமிழக அரசில், 2003 முதலும், சி.பி.எஸ்., என்ற, பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்காக, 50 ஆயிரம் ஆசிரியர்கள் உட்பட, ஒரு லட்சம் அரசு ஊழியர்களின் ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இவர்களில், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டில் உள்ள ஆசிரியர்களுக்கு, பொது கணக்கு அலுவலகத்திலும்; தொடக்க பள்ளி மற்றும் உள்ளாட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு தகவல் தொகுப்பு மையத்திலும் சி.பி.எஸ்., கணக்கு பராமரிக்கப்பட்டது.
அதேநேரம், பதவி உயர்வால், பள்ளிக்கல்வி இயக்குனரக கட்டுப்பாட்டின் கீழ் வரும் ஆசிரியர்களுக்கு, அவர்களின் பழைய சி.பி.எஸ்., கணக்கு கைவிடப்பட்டு, பொது கணக்கு அலுவலகத்தில் புதிய கணக்கு துவங்கப்பட்டது. அதனால், பல ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட, பல கோடி ரூபாயின் நிலை என்னவாகும் என, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையில், சி.பி.எஸ்., மற்றும் நிரந்தர பென்ஷன் திட்டமான பி.எப்., ஆகிய, இரண்டு கணக்கு நிர்வாகத்திலும் பெரும் குழப்பம் ஏற்பட்டது. எனவே, சி.பி.எஸ்., கணக்குகள், அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கும், பி.எப்., கணக்குகள், பொது கணக்கு அலுவலக நிர்வாகத்துக்கும் சமீபத்தில் பிரிக்கப்பட்டன. அதனால், ஒரு குழப்பம் தீர்ந்தது.
ஆனாலும், ஒவ்வொரு ஆசிரியருக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட சி.பி.எஸ்., கணக்குகளால் ஏற்பட்ட குழப்பம் மட்டும் தீரவில்லை. இது குறித்து, ஆசிரியர் சங்கங்கள் சார்பில் தொடர்ந்து மனுக்கள் அளிக்கப்பட்டன. எனவே, இந்த பிரச்னைக்கு தற்காலிக முடிவு கட்டப்பட்டுள்ளது. 'இரு கணக்கு வேண்டாம்' தகவல் தொகுப்பு மைய கமிஷனரகம் பிறப்பித்துள்ள உத்தரவில்,
'ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு பிந்தைய புதிய சி.பி.எஸ்., கணக்குடன், பழைய கணக்கு நிதியை இணைத்து கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இனி நீடிக்க கூடாது. இதற்கு, கல்வி அதிகாரிகள், மாவட்ட கருவூல அதிகாரிகள் மற்றும் சம்பளக் கணக்கு அலுவலர்கள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ்., கணக்குகள் ஒன்றாக இணைக்கப்படுவதன் மூலம், ஆயிரக்கணக்கான ஆசிரியர்களின் பல கோடி ரூபாய் குழப்பம் தீர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம், சி.பி.எஸ்., திட்டத்தில் ஊதிய பிடித்தம் செய்யப்பட்டு, உயிரிழந்த, ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கான நிதி பங்களிப்பையும், தாமதமின்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.