குறிப்பிட்ட தொகைக்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ‘பான்’ எண் கட்டாயம் என்ற நடைமுறை இன்று அமலுக்கு வருகிறது. ‘பான்’ எண் இல்லாதவர்கள், தவறான தகவலை அளித்தால், 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.பான் எண் கட்டாயம் வருமான வரித்துறை சார்பில் பொதுமக்களுக்கு நிரந்தர கணக்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமின்றி, சொத்து பரிவர்த்தனைகளுக்கும் இந்த எண் கேட்கப்படுகிறது.உள்நாட்டில் கருப்பு பண புழக்கத்தை கட்டுப்படுத்தவும், வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இதில் மேலும் பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. ஓட்டல் பில்தொகை, வெளிநாட்டு விமான பயண டிக்கெட் ஆகியவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தினால், ‘பான்’ எண்ணை கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
இன்று அமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்கினாலோ, ரூ.10 லட்சத்துக்கு மேல் அசையா சொத்துகள் வாங்கினாலோ, கேஷ் கார்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலுத்தினாலோ, பட்டியலிடப்படாத கம்பெனிகளின் பங்குகளை ரூ.1 லட்சத்துக்கு மேல் வாங்கினாலோ ‘பான்’ எண்ணை குறிப்பிடுவது கட்டாயம் என்று அறிவித்தது. இவை உள்பட மொத்தம் 20 பரிவர்த்தனைகளுக்கு ‘பான்’ எண் கட்டாயம் ஆக்கப்பட்டது.இந்த நடைமுறை, இன்று அமலுக்கு வருகிறது.படிவம் இந்நிலையில், ‘பான்’ எண் இல்லாதவர்கள், தவறான தகவலை அளித்தால், 7 ஆண்டுவரை ஜெயில் தண்டனை அளிக்க வருமான வரி சட்டத்தில் வழிமுறை இருப்பது தெரியவந்துள்ளது.‘பான்’ எண் இல்லாதவர்கள், ‘பான்’ எண் கட்டாய வரம்புக்குள் பரிவர்த்தனை செய்தால், அவர்கள் ‘படிவம் எண்–60’–ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.
ஒரே பக்கம் கொண்ட அந்த படிவத்தில், அந்த நபரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, செல்போன் எண் போன்ற தனிப்பட்ட விவரங்களையும், ரொக்கம், காசோலை, கார்டு, வரைவோலை, ஆன்லைன் பரிமாற்றம் போன்றவற்றில் எந்த வழிமுறையில் அவர் பரிவர்த்தனை செய்தார் என்ற விவரத்தையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும்.அவரது மொத்த வருமான விவரமும், படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும். விவசாய வருமானமும், விவசாயம் அல்லாத வருமானமும் பூர்த்தி செய்யும்வகையில், தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும். ‘ஆதார்’ எண் நிரப்ப தனிஇடம் இருக்கும்.அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆதாரத்தையும் (ஆதார், வாக்காளர் அட்டை போன்றவை) இணைக்க வேண்டும்.7 ஆண்டுவரை ஜெயில் இப்படி ‘பான்’ எண் இல்லாதவர்கள் பூர்த்தி செய்த படிவம் எண் 60–ல் ஏதேனும் தவறான, பொய்யான விவரங்கள் இடம்பெற்று இருந்தால், அவர்கள் மீது வருமான வரி சட்டம் 277–வது பிரிவின்கீழ் வழக்கு தொடர வருமான வரித்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. பொய் தகவல்கள் இடம்பெற்றது நிரூபணமானால், அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய இருந்த தொகை ரூ.25 லட்சத்துக்கு மேல் இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 6 மாதம் முதல் 7 ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.அவர்கள் வரி ஏய்ப்பு செய்ய நினைத்த தொகை, ரூ.25 லட்சத்துக்கு உட்பட்டு இருந்தால், அவர்களுக்கு அபராதத்துடன் 3 மாதம் முதல் 2 ஆண்டுவரை கடுங்கால் தண்டனை விதிக்கப்படும்.இத்தகவல்களை வருமான வரித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.